“சரி வா… வேலையை பார்ப்போம்.” என்றபடி கணினியை இயக்கினான்.
ஆய்வகத்தை விட்டு வெளியேறிய திவ்யா, நேராகச் சென்றது ராஜாராம் அறைக்கு.
அவள் உள்ளே சென்றதும் ராஜாராம், “என்னடா, இந்த நேரத்தில் வந்திருக்க?”
“என்னை ஸ்டுடென்ட் மாதிரி பாருங்க.”
“ராகவன் பத்தி தெரிந்துமா, இப்படி பேசுற?”
“அவர் தப்பானவர் தான்… அதுக்காக உங்க மனைவி செய்தது சரியாகிடாது.”
“அவ எதுவும் செய்யலை… அவ…”
“எனக்கு அது தேவை இல்லை… நான் இப்போ வந்தது ஒரு ஹெல்ப் கேட்டு தான்.”
“ஒரு ஸ்டுடென்ட்டாவா, என் மகளாவா?”
அவள் முறைக்கவும்.
“நீ தானே ஸ்டுடென்ட்டா பார்க்கச் சொன்ன…”
“நான் சொல்றதை எல்லாம் அப்படியே செஞ்சுட்டு தான் இருக்கிறீங்களா?”
“இப்போ நான் என்ன செய்யணும்? உன்னை ஸ்டுடென்ட்டா பார்க்கணுமா? இல்லை, மகளா பார்க்கணுமா?”
அவள் கோபத்துடன் திரும்பி கதவை நோக்கிச் செல்ல, அவர் விளையாட்டை கை விட்டவராக, “சொல்லுடா, என்ன செய்யணும்?”
அவள் நிற்காமல் செல்லவும்,
அவர் அவசரமாக, “சாரிடா… சும்மா விளையாடினேன்… நான் உன் கூட விளையாடக் கூடாதா?” என்றவரின் குரலில் கட்டுண்டவளாகத் திரும்பினாள்.
அவர் அன்புடன், “சொல்லுடா”
அவள் அமைதியாக இருக்கவும்,
“நான் தான் சாரி சொல்….”
“சாரி.”
“எதுக்குடா” என்று அவர் பதறினார்.
அவள் சிறிது கலங்கிய விழிகளுடன், “உங்க தூய்மையான அன்புக்கு நான் தகுதியானவளே இல்ல…”
“அப்படியெல்லாம் இல்லடா” என்று பதறியபடி, அவர் எழுந்து அவள் அருகே வர,
கையை நீட்டியபடி, “அங்கேயே இருங்க… நான் முடிச்சுக்கிறேன்… உங்க தூய்மையான அன்புக்கு நான் தகுதியானவள் இல்லை தான், ஆனா, உங்க அன்பு என்னை கட்டுப் படுத்துவதையோ, உங்களுக்காக உங்களிடம் கொண்ட நன்றிக்கடனுக்காக ஹரீஷ் என் காதலை ஏற்பதையோ நான் விரும்பல…! இருங்க, நான் பேசி முடிச்சுக்கிறேன். தெரியாதது மாதிரி எதுவும் கேட்க வேணாம்… நீங்க என்னை சரியா கணிப்பது போல், நானும் ஓரளவிற்காவது உங்களை புரிந்து கொண்டிருக்கிறேன்.
என் காதல் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்… ஹரீஷ் மனசும் ஓரளவுக்கு தெரிந்து இருக்கும். ஏன்? இப்போ நீங்க ரெண்டு பேரும் கூட்டா கூட இருக்கலாம். ப்ளீஸ், என்னை விட்டுருங்க… இதுக்கு மேல என்னால் முடியல… இன்னொரு அதிர்ச்சியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை. நான் மொத்தமா விலகிப் போய்டுறேன். என்னை வேற காலேஜ்ஜில் சேர்த்து விட்டுருங்க.”
“ஏன்டா இப்படியெல்லாம் பேசுற! நீ என் பொண்ணுடா.”
அவள் கலங்கிய விழிகளுடன் விரக்தியாகச் சிரிக்கவும், அவருக்கு நெஞ்சை பிசைவது போல் வலித்தது. அவர் வேகமாக வந்து அவளை தோளோடு அணைத்து, “வேணாம்டா… இப்படி பார்க்காத… என்னால் தாங்கிக்க முடியல… நான் எப்பவும் உன்னுடன் இருக்கிறேன். நீ என்னை ஏத்துக்கிட்டாலும், இல்லைனாலும்.. நீ என் மகள் தான்டா. அப்பா கிட்ட வந்திருடா… அப்பா உன்னை சந்தோசமா பார்த்துக்கிறேன்.”
அவளது கலங்கிய விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்தது. அவர் வருந்துவது பொறுக்காமல், அவரைப் பார்த்து புன்னகைத்தவள் மெல்ல விலகியபடி, “நீங்க ரொம்ப நல்லவர் சார்.” என்றாள்.
‘இன்னமும் சார் தானா!’ என்பது போல் அவர் வலியுடன் பார்க்க..
“அடுத்த ஜென்மத்திலாவது உங்க அன்பு மொத்தத்தையும் எனக்கு மட்டும் தாங்க.”
“இப்பவும்…”
“இப்போ உங்க அன்புக்கு உரியவங்க, உங்க காதல் மனைவியும் உங்க காதல் பரிசான மகளும்.”
“நீயும், என் மகள் தான்டா”
மறுப்பாக தலையை அசைத்தவள் கிளம்பப் பார்க்க…
“நீ வேற காலேஜ் போனா, அங்க ஹரீஷ் வரமாட்டாரா?”
“ஸோ நீங்களே அதையும் செய்வீங்க!”
“உன் நல்லதுக்காக தேவைனா செய்வேன்.”
“ஸோ நான் சொன்னது சரி… ரெண்டு பேரும் கூட்டு.” என்றவள், “தேங்க்ஸ்” என்று கோபத்துடன் கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.
ஹரீஷும் அரவிந்தும் கணினியில் வேலையை பார்க்க ஆரம்பித்த சில நிமிடங்களில், ஹரீஷின் கைபேசி அலறியது. அழைத்தது சேர்மன். எடுத்துப் பேசி முடித்தவன்,
‘இவளை எப்படி தான் வழிக்கு கொண்டு வரது!’ என்று முணுமுணுத்தான்.
ராஜாராம் திவ்யா வருத்தத்தில் இருப்பதாகவும், வேறு கல்லூரிக்கு போக விரும்புவதாக மட்டும் கூறியிருந்தார்.
அரவிந்த், “என்னடா! யாரு போன்?”
“சேர்மன்.”
“ஓ! மாரியாத்தா அங்கே போய் ஆடியிருக்கா!”
ஹரீஷின் முறைப்பில், “சரி சரி… என்ன சொன்னார் சொல்லு.”
“வேற காலேஜ்ஜில் சேர்த்து விடணுமாம்.”
அரவிந்த் வாய் விட்டு சிரிக்கவும், ஹரீஷ் பேனாவை அவன் மீது எறிந்தான்.
அரவிந்த் ஏதோ சொல்ல வாய் திறக்க,
ஹரீஷ் கடுப்புடன், “என்ன! நீ சொன்னதை ஒழுங்கா கேட்டிருக்கனுமா?”
“ஹும்ம்”
“ஓடிப் போய்டு… இல்ல கொலை செஞ்சிடுவேன்”
சட்டென்று சிரிப்பதை நிறுத்தியவன், “என்னடா?”
“நொண்ணடா… போடா!”
“ஹரி”
“ப்ச்… முடிலடா… எப்படி அணுகுறதுனே தெரியலை…! அவளை சுற்றி வளையத்தைப் போட்டு இருக்கா… உள்ள நுழையவே முடியல..! தனியா பேச முடிஞ்சா தானே, தனியா சிக்கவே மாட்டிக்கிறா! நான் கூப்பிட்டு விட்டா, கிளாஸ் விட்டு வெளியே வந்துட்டு எங்கேயாவது போய்டுறா. இன்னைக்கு தான் சிக்கினா, அதுவும் நான் சொல்றதை கொஞ்சம் கூட நம்பாம போய்ட்டா… !
போன் செஞ்சா எடுக்கிறதே இல்ல. புது நம்பர்களில் இருந்து கூப்பிட்டா, உஷாரா ஹலோ கூட சொல்ல மாட்டிக்கிறா… நான் ஹலோ சொன்னதும் கட் பண்ணிடுறா… வாட்ஸ்-அப்-பில் நான் அனுப்புறதை பார்க்கிறது கூட இல்லை. சந்தோஷப் படுற ஒரே விஷயம், புது நம்பரை மட்டும் ப்ளாக் பண்றா. என் ஒரிஜினல் நம்பரை ப்ளாக் பண்ணல…
ஹ்ம்ம்… வீட்டில் இருந்தா கூட பரவாயில்லை… ஹாஸ்டல் வேற! என்ன செய்ய!”
“லேப் நேரத்தில் கூப்பிட்டு பேச வேண்டியது தானே!”
“நான் கூப்பிட்டதும் வந்துட்டு தான் மறுவேலை பார்ப்பா! போடா”
“ஏன் டா!”
“அதெல்லாம் முடியாமயா இன்னைக்கு உன் கிட்ட வந்து நின்னேன்… நான் கூப்பிட்டா திரும்பிக் கூட பார்க்க மாட்டா… அவளுடைய அடாவடி தான் எல்லாருக்கும் தெரியுமே! அதனால அவ கண்டுக்காததை ஸ்டுடென்ட்ஸ் யாரும் கண்டுக்கிறது இல்லை.”
“அவுட்-புட் காமிக்க கூப்பிடுவா தானே!”
ஹரீஷ் முறைக்கவும்,
“என்னடா!”
“நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கிறேன்”
“சரி சரி… டென்ஷன் ஆகாத… இதில் என்ன செஞ்சா?”
“அவுட்-புட் காமிக்கவே மாட்டா… லேப் முடிஞ்சு போகும் போது நோட்டை என் டேபிளில் வச்சிட்டு போய்டுவா.”
“சைன் பண்ணாத…”
“அதையும் தான் செய்துப் பார்த்துட்டேனே! என் காதுபட இந்த லேபில் பெயில் ஆனா கூட கவலை இல்லைனு சொல்லிட்டு போறா.”
“ஸோ நல்லா தண்ணி காட்டுறா!” என்று மென்னகையுடன் கூற, அடுத்த நொடி, ஒரு கனமான புத்தகம் அவனை நோக்கிப் பறந்து வந்தது.
அதை பிடித்த அரவிந்த், “நிஜமாவே என்னை நீ கொன்னுடுவ போலடா” என்று அலறினான்.
“என் புலம்பலும் கஷ்டமும் உனக்கு கிண்டலா இருக்குதா?”
“இல்லடா உன்னையும் சுத்தலில் விட…” என்று பேசிக் கொண்டு இருந்தவன், ஹரீஷ் கோபத்துடன் எழவும்,
“ஆத்தாடி ஆம்பளை சந்திரமுகி டோய்!” என்று அலறியபடி வெளியே ஓடினான்.
இணைய காத்திருப்போம்…