
விலகல் – 26
ஹரீஷை காதலிப்பதில் திவ்யா எவ்வளவு தீவிரமாக இருந்தாளோ, அதே தீவிரத்தை அவனை விட்டு விலகி இருப்பதிலும் காட்டினாள்.
தனிமையில் அவளை அணுக முடியாமல் திண்டாடிய ஹரீஷ், அரவிந்த்தின் உதவியை நாடினான்.
தங்ககுமார் வகுப்பின் நடுவே, ஒரு மாணவன் வந்து திவ்யாவை அரவிந்த் அழைப்பதாகக் கூறினான்.
திவ்யா கணினி ஆய்வுக் கூடத்திற்கு சென்றபோது, அங்கே ஹரீஷ் மட்டுமே இருந்தான். அவன் புன்னகையுடன் அவளை வரவேற்றான்.
அவள் அவனை முறைத்து விட்டுக் கிளம்ப, அப்பொழுது உள்ளே வந்த அரவிந்த், “YYY காலேஜ்ஜில் பேப்பர் ப்ரெசன்ட் செய்யனும் சொன்னியே… அதை பத்தி பேச தான் கூப்பிட்டேன்.” என்றான்.
“கிளாஸ் நடுவில் கூப்பிட மாட்டீங்களே சார்.”
“அது… இப்போ தான் நான் ஃப்ரீயா இருந்தேன்.”
“நீங்க ஃப்ரீயா… இல்ல உங்க பிரெண்ட் ஃப்ரீயா?”
“அதுவும் சரி தான்… அவன் தான் உன்னை கைட் பண்ணப் போறான்.”
“அப்போ, இந்த பேப்பரை நான் பரசன்ட் செய்யலை சார்.”
“திவ்யா… பர்சனல் வேறு, படிப்பு வேறு.”
“அது மத்தவங்களுக்கு… என்னைப் பெற்றவரை டென்ஷன் படுத்த அரியர் வைத்தவள் நான்… இதெல்லாம் எனக்கு ஒன்னுமே இல்ல… தேவை இல்லாம உங்கள் தரத்தை இறக்கிக்காதீங்க” என்றபடி அவள் கிளம்ப,
ஹரீஷ் சட்டென்று அவளது வலது கையை பற்றி நிறுத்தினான்.
அவள் திரும்பி அரவிந்தை முறைக்க,
அரவிந்த் மனதினுள் ‘தேவை தான்டா எனக்கு!’ என்று கூறிக் கொண்டு ஹரீஷை முறைத்தான்.
ஹரீஷ் அதைக் கண்டு கொள்ளாமல், “தியா, நான் உன் கிட்ட பேசணும்.” என்றான்.
“எனக்கு யாருடனும் பேச வேண்டியதில்லை சார்” என்று அரவிந்தை பார்த்துக் கூறினாள்.
ஹரீஷ், “உன்னை பேச சொல்லல… நான் பேசுறதை கேளுன்னு தான் சொல்றேன்.”
“இவர் சொல்றதை, நான் ஏன் சார் கேட்கணும்?”
“நான் சொல்றதை கேட்காம, யாரு சொல்றதை கேட்ப?”
“அது, இவருக்கு தேவை இல்லாதது.”
“அதை நான் சொல்லணும்.”
“என் சம்பந்தப்பட்ட விஷயத்தை நான் தான் முடிவு செய்வேன்.”
“நீ தான் நான்… நான் தான் நீ என்றாகி ரொம்ப நாள் ஆச்சு.”
பார்வையை சுழற்றியவள், மேஜை மீது இருந்த பேனாவை இடது கையில் எடுத்து அரவிந்தை நோக்கி, “இப்போ என் கையை விடல… நான் என்ன செய்வேன்னு உங்க பிரெண்ட் கிட்ட சொல்லுங்க.”
அரவிந்த் பதற்றத்துடன், “டேய் விடுடா… மணிமேகலை மேடம் லீவ் தரலன்னு பென்சிலால் கையை கீறிக்கிட்டா.”
“தெரியும்டா…” என்று அசால்ட்டாகக் கூறியவன், சட்டென்று பிடியில் அழுத்தம் கொடுத்து சிறிது இழுக்க, அவள் அவன் அருகில் வந்து நின்றாள்.
இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது தான். ஆனால் இவ்வளவு நேரம் அவனது தொடுகையை உணராத அவளது மனம், அவனது அருகாமையில் அதை உணர்ந்தது. கோபம் மறையத் தொடங்கி அவளது பெண்மை விழிக்கத் தொடங்கியது.
அவள் மௌனமாக நிற்க, அவன் புன்னகையுடன்,
“என் செல்ல ரௌடி பேபி! மாமா, உன்னை விட பெரிய ரௌடிடி.” என்றபடி கண் சிமிட்டினான்.
அரவிந்த் வாயடைத்துப் போய் பார்த்துக்கொண்டு நின்றான்.
அவளது வைராக்கியத்தையும் மீறி, அவனது ஒவ்வொரு வார்த்தையும், கண்சிமிட்டலும் அவளது மனதை மயிலிறகைப் போல் வருடியது.
அவன், “என்ன! பென்சிலும் பேனாவும் உன் கையை மட்டும் தான் கீறுமா?” என்று கேட்டு புருவம் உயர்த்த, அவளுள் சிறு அதிர்வலை ஓடியது. அதை அவளது கையில் உணர்ந்தவன், அவளது கண்களை ஆழ்ந்து நோக்கினான்.
அவள் அவன் பார்வையுடன் கட்டுட்டுண்டு நின்றது சில நொடிகளே, பின் சுதாரித்தவளாக கையை உருவ முயற்சித்தாள்.
கையை உருவ முடியவில்லை என்றதும், அவள் அரவிந்தை முறைத்தபடி, “நீங்க செய்திருக்கும் வேலைக்கு பெயர் என்ன தெரியுமா?”
ஹரீஷ் கோபத்துடன், “தியா…!”
“இந்த கத்தலை வேறு எங்கேயாவது காட்டச் சொல்லுங்க சார்.”
“பேசுறதுக்கு அளவில்லை! உன் சாரை இப்படி தான் பேசுவியா?”
“கோபம் வந்தால் இவர் பேசுறதை விட அதிகமா நான் பேசிடல சார்… அது போக நான் பேசுவது உண்மை”
“எதுடி உண்மை?” என்று கோபமாக அவள் கையை உலுக்கியவன், அவள் முகத்தை பற்றி தன்னை நோக்க செய்து, “நீ அவனை மட்டும் கேவலமா பேசல… நம் உறவையும் தான் கேவலமா பேசுற…!”
கண்களை மூடியவள், “எனக்கும் இவருக்கும் ஆசிரியர் மாணவி என்ற உறவை தவிர, வேறு எந்த உறவும் இல்லை சார்… இப்போ இவர் கையை விடல, நான் சொன்னது தான் அர்த்தம்னு சொல்லுங்க”.
“ஏய்!” என்றவனின் கோபத்தில் அவனது பிடி இறுக, அவளது கையும் தாடையும் வலித்தது. அதை வெளியே காட்டாமல் அவள் இருந்தாலும், அரவிந்த் ஹரீஷின் கையை பற்றியபடி, “டேய், விடுடா… அவளுக்கு வலிக்குது.” என்றான்.
அவளது மூடிய கண்களில் அவளது வலியை உணர்ந்தவன், முகத்தில் இருந்து மட்டும் கையை எடுத்தான். அவளது கையை விடவில்லை என்றாலும், பிடியை சிறிது தளர்த்தி இருந்தான்.
திவ்யா அரவிந்தை பார்த்து உறுதியான குரலில், “கடைசியா கேட்கிறேன், என் கையை விட முடியுமா, முடியாதா? கேளுங்க…”
ஹரீஷ், “நான் சொல்றதை கேளு… அப்புறம் விடுறேன்.”
“இப்போ இவர் விடல, நான் நிச்சயம் என் கையை கீறுவேன்… பதிலுக்கு அவரும் கீறிக்கட்டும்… அதைப் பார்க்க நான் இருக்க மாட்டேன்.”
ஹரீஷ் மீண்டும் கோபத்துடன், “ஏன்டி, என்னை உயிருடன் கொல்ற!”
அவள் வலியுடன் அவனைப் பார்க்க…
அவன் வேதனையுடனும் காதலுடனும், “ஏன்டி இப்படி கஷ்டப்படனும்? நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்… நான் உன்னை உனக்காக தான் விரும்புறேன்… நான்…”
கையை பலம் கொண்டு உதறி விடுவித்தவள், “அன்னைக்கும் இப்படி தான் சேர்மன் கிட்ட அவர் நிம்மதிக்காக மட்டும்னு பேசினார். அப்புறம் நான் கேட்டா எனக்காக பேசினாராம்… அதை மாதிரி, இப்போ எனக்காகனு சொல்றவர், அப்புறம் சேர்மன் சாரோட உறவை நான் ஏத்துக்கிட்ட அப்புறம், அவருக்காகனு சொல்லி இவர் விலகினாலும் விலகுவார்… எதுக்கு! நானே விலகிக்கிறேன்… எனக்கு யாருமே வேணாம்.” என்று ஆவேசமாகப் பேசியவள் வேகமாக வெளியேறினாள்.
ஹரீஷ் பெருமூச்சை வெளியிட்டபடி இருக்கையில் அமர…
அரவிந்த், “கோபத்தை குறைடா”
“அவள் பேசுறதை கேட்டு கோபப்படாம கொஞ்சவா செய்வாங்க.”
“அவளை இப்படி பேசத் தூண்டியது நீ தான!”
“நான் இப்படி தான்டா…”
“இப்படியே இருந்தா, ரெண்டு பேரும் ரெண்டு துருவங்களா தான் இருக்க முடியும்.”
ஹரீஷ் முறைக்கவும் அரவிந்த், “என்னை முறைத்து ஒன்னும் ஆகப் போறதில்ல… நான் இப்படித்தான்னு வாய் கிழிய சொல்லுறவன், இப்படிப் பட்ட உன்னை உனக்காக காதலித்தவளை, வாயை மூடிட்டு ஏத்துக்கிட்டு இருக்கனும்.”
“என்னவோ போனா போகுதுனு ஏத்துகிறது மாதிரி சொல்ற…! அவ தேவதைடா…! அவ கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்.”
“ஹும்ம்… என் கிட்ட மட்டும் வாய் கிழிய அவளை கொஞ்சு.”
“எல்லாம் என் தலையெழுத்து! உன் கிட்ட கொஞ்சிட்டு இருக்கிறேன்…! நானா மாட்டேன்னு சொல்றேன்! அவ கேட்க மாட்டிக்கிறாடா…”
“நீயா இழுத்துக்கிட்டது தான்… சரி சரி உடனே கண்ணகி அவதாரம் எடுக்காத… இப்போ என்ன செய்யப் போற?”
“பார்க்கலாம்.”
“ஆனாலும், எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துட்டடா”
“நண்பனுக்காக இது கூட செய்யலைனா எப்படி!”
“ஹும்ம்… தேவை தான்டா. ஆனாலும், இப்படி டக்குனு கையை பிடிச்சு இழுத்துட்ட! ஒரு சின்ன பையன் முன்னாடி ப்ரீ ஷோ காட்டிருவியோனு பயந்துட்டேன்.”
அவன், அரவிந்த்தை மேலும் கீழும் பார்த்தான்.