அவன் அவள் கண்களை பார்த்து, “நான் உனக்கு சார் மட்டும் தானா?”
தன் மனதை அடக்கியவள் உறுதியுடன், “ஆமாம்” என்றாள்.
அவன் சிறு அதிர்ச்சியுடன், “என்னாச்சுடா? நான்………..”
“உங்க ஸ்டுடென்ட் கிட்ட பேசுற மாதிரி பேசுங்க”
“முன்னாடி நான் சுத்தலில் விட்டேன்னு இப்போ நீ சுத்தல்ல விடாதடி… நான் ஏன் அப்படி செஞ்சேன்னு சொல்றேன்… ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லணும்” என்று நிறுத்தியவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி மென்மையான குரலில்,
“தியா நான் உன்னை என்னுயிராய் விரும்புறேன்… நாம விரும்பிய அன்பும் காதலும் நிறைந்த வாழ்க்கையை நாம் வாழ்வோம்டா” என்றான்.
அவள் உணர்ச்சியற்ற பார்வையுடன் அமைதியாக அவனை பார்க்கவும், அவன் குழப்பத்துடனும் யோசனையுடனும், “தியா!” என்று அழைத்தான்.
அவள் வெறுமையான குரலில், “இப்போ நான் என்ன சொல்லணும்?”
அவளது வெறுமையான குரலில் அவன் மனம் துடித்து. எதுவோ பெரிதாக அவள் கூறப் போகிறாள் என்பதை உணர்ந்தவனின் இதயம் படபடத்தது. அவன் அமைதியாக அவளை பார்க்க,
அவள், “ரொம்ப சந்தோஷம்… என் கனவு நிறைவேறிடுச்சு… நீ என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொல்லி நீ நினைக்கிற மாதிரி சேர்மன் சாரையும் அவர் மனைவியையும் என் பேரென்ட்ஸ்ஸா ஏத்துக்கணுமா?”
“தியா!” என்று அவன் பெரும் அதிர்ச்சியுடன் அழைத்தான்.
“அப்படி நீங்க நினைத்தால்… அம் சாரி மிஸ்டர் ஹரீஷ்” என்றாள் இறுகிய குரலில்.
அவளது அன்னிய பேச்சில் அவன் நெஞ்சம் அடி வாங்கியதோடு மனம் பெரிதும் துடித்தது. அவன் வார்த்தைகளின்றி அடிபட்ட பார்வையுடன் பார்க்க,
அவள், “என்ன பார்க்கிறீங்க! நீங்க, சேர்மன் சார் நிம்மதி தான் உங்களுக்கு முக்கியம்னு சொன்னதை என் காது குளிர கேட்டேன்… அவர் நான் யாருனு சொன்னதையும் கேட்டேன்… ஆனா அவர் விளக்கமா சொல்றதை கேட்கும் சக்தியற்று கிளம்பிட்டேன்”
“தியா… நீ தப்பா புரிஞ்சுட்டு இருக்கிறடா… நான்……..”
“கால் மீ திவ்யா” என்று கடுமையுடன் கூறியவள், “எல்லாம் சரியா புரிஞ்சிட்டு தான் பேசுறேன்”
“உன்னை பற்றி தெரிஞ்சுக்க தான் அவர் கிட்ட அப்படி பேசினேன்டா… எனக்கு நீ தான் முக்கியம்”
விரக்தியுடன் சிரித்தவள், “உங்களுடைய பரிதாபக் காதல் எனக்கு தேவையே இல்லை… நான்……..”
ஹரீஷ் கோபத்துடன், “லூசு மாதிரி பேசாத”
“நான் லூசு தான்… உங்களுடைய அன்பான ஒரு பார்வைக்காக உங்க பின்னாடியே சுத்தினேனே! நான் லூசு தான்!”
ஹரீஷ் சட்டென்று கோபம் வடிந்தவனாக, “நிஜமாவே எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்டி”
“வெளியே கெத்தா இருந்தாலும், உள்ளுக்குள் இதை நீங்க சொல்ல மாட்டிங்களானு எவ்ளோ ஏங்கினேன் தெரியுமா! ஆனா, இப்போ…!”
“இப்போ மட்டும் என்னடி!” என்று அவன் தவிப்புடனும், காதலுடனும் கேட்டான்.
அவனது குரலில் மனம் சிறிது அசைத்தாலும், மனதை கட்டுப் படுத்திக்கொண்டு, மீண்டும் உணர்ச்சியற்ற பார்வையுடன் அமைதியானாள்.
“நீ என்னைப் பத்தி நந்து கிட்ட கேட்ட மாதிரி, நான் உன்னைப் பத்தி சேர்மன் சார் கிட்ட கேட்டேன்.”
“ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு”
“என்ன?”
“நான் காதலை சொன்னதுக்கு அப்புறம் உன்னைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். அதாவது, எனக்கு முக்கியமாகத் தெரிந்தது நீ மட்டும் தான்… நீ யார்? ஏழையா, பணக்காரனா? உன் பின்னனி என்னனு எதுவும் தெரியாம உன்னை உனக்காக விரும்பி என் காதலை சொன்னேன். ஆனா, என்னைப் பற்றி தெரிந்த பிறகு வரும் உன்னோட இந்த பரிதாபக் காதல் எனக்கு தேவையே இல்லை…! நான் இங்கே வந்ததே… இனி என் தொல்லை உங்களுக்கு இருக்காதுனு சொல்லத் தான்… பை.” என்று பன்மையில் முடித்தவள், அவன் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினாள்.
ஹரீஷ் தலையில் கை வைத்தபடி இடிந்து போய் அமர்ந்திருந்தான். ஆனால், சில நிமிடங்களில் தன்னை மீட்டவன், ‘நீயே விலகினாலும் நான் உன்னை விட்டு விலக மாட்டேன்டி’ என்ற உறுதியை மனதினுள் கூறிக்கொண்டு கிளம்பினான்.
வண்டியில் ஏறிய திவ்யா விஜய்யிடம், “என்னை ஹாஸ்டலில் விடு… பவி கிட்ட நடந்ததை சொல்லிடு.”
“சார், என்ன சொன்னார்?”
“லவ்வை சொன்னான்.” என்று அலட்டிக்கொள்ளாமல் கூற, விஜய் வண்டியை நிறுத்தினான்.
அவள், “வண்டியை எடு.”
“நீ என்ன சொன்ன?”
“உன்கிட்ட சொன்னதைத் தான் சொன்னேன்.”
“என்ன….!”
“ஹும்ம்… அவனுடைய பரிதாபக் காதல் எனக்கு தேவை இல்லைனு சொன்னேன்… இனி என் தொல்லை அவனுக்கு இல்லைனு சொன்னேன்.”
“லூசாடி நீ”
அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், “இப்போ வண்டியை எடுக்கிறியா? இல்ல, நான் ஆட்டோல போகட்டுமா?”
“திவி, நான் உனக்காக தான் சொல்றேன்.”
“நானும் எனக்காக தான் சொல்றேன்.”
“இவ்ளோ நாள் நீ போராடியது இதுக்கா?”
“நிச்சயம் இல்லை… நான் போராடியது அவனோட தூய அன்பிற்காக.”
“இப்போ மட்டும் இல்லைனு எப்படி சொல்ற?”
“உனக்கு புரியாது.”
“அவருக்கு உன் மேல் காதல் இருக்குதுனு நீ தானே சொன்ன?”
“அதை முதலில் சொல்லிட்டு, அப்புறமா அவன் என்னைப் பற்றி கேட்டிருக்கணும்.”
“எப்போ சொன்னா என்ன? அவர் காதல் உண்மை தானே!”
“அவன் காதல் பொய்னு நான் எப்போ சொன்னேன்?”
விஜய் அவள் முகத்தை பார்க்க, அவள், “என்ன?”
“நல்லா குழப்புற…”
“உனக்கு சொன்னா புரியாது… ஒரு துளி கூட அவன் மத்தவங்களை பற்றி யோசிக்காமல், என்னை எனக்காக ஏற்று அன்பு மழை பொழியணும்னு நினைத்தேன். என் வலிக்கும், வேதனைக்கும் மருந்தா அவன் இருக்கணும்னு நினைத்தேன். இன்னைக்கு உன்கிட்ட கதறிய மாதிரி, அவனிடம் அடைக்கலம் ஆக நினைத்தேன். ஆனா… ச்ச் விடு.” என்றவள், “உன்னிடம் அடைக்கலம் பெற்றதை நான் குறைவா சொல்லலைடா… நான்…”
“புரியுதுடா…! ஆனா, அவர் நிலையில் இருந்து கொஞ்சம் யோசித்துப் பார்…! உனக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கும்னு அவருக்கு தெரியாதே! சாதாரணமா உன்னைப் பற்றி கேட்க நினைத்து கேட்டிருக்கலாமே?”
“என்ன தான் நீ சொன்னாலும், என் மனம் அதை ஏற்காது.”
விஜய் ஏதோ பேச வர, அவள், “ப்ளீஸ் டா… என்னை எதுவும் கேட்காத..! இப்போ என்னை ஹாஸ்டல்ல விடு.” என்று கூறி கண்களை மூடியபடி சாய்ந்து அமர்ந்தாள்.
விஜய் அமைதியாக வண்டியை கிளப்பினான்.
இணைய காத்திருப்போம்…
குறிப்பு: “தழல் பட்சியவள் பைரவி!” நேத்து நைட்டே போஸ்ட் போட்டேன்.. பார்க்காதவங்களுக்கு இதோ link:
https://forum.saranyahemanovels.com/threads/%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-1.1092/