பார்வதி, “அதான், உங்க அருமை மகளே வெளியே போகச் சொல்றாளே! இன்னும் ரோஷம் கெட்டுப் போய் ஏன் நிற்கிறீங்க”
அவர் பேசியதை கூட உணராமல், ராகவன் கண்ணீர் வடிய மகளைப் பார்த்தபடி நின்றிருந்தார்.
சில நொடிகள் கழித்து ராகவனைப் பார்த்த திவ்யாவின் விழிகளில் வலியும், வேதனையும், வெறுப்பும் சரி சமமாகக் கலந்து இருந்தது. பின் கையை வெளியே செல்லுமாறு நீட்டினாள். ராகவன் செய்வதறியாது வெளியேறினார்.
பார்வதி, “சனியன் ஒழிஞ்சதுனு நினைச்சேன்… இப்படி என் உயிரை வாங்கவே பிறந்து இருக்கியே! அதான் உன்னை பெத்தவ வந்து கூப்பிடுறாளே! போக வேண்டியது தானே! ஆனாலும், முறை தவறி பிறந்த உனக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம் ஆகாதுடி.” என்று திவ்யாவின் ரணமடைந்த மனதில் அம்பை எய்துவிட்டே வெளியேறினார்.
இவற்றை சொல்லி முடித்த திவ்யா, அதன் பிறகு அவள் ராகவனிடம் பேசாததையும், பாடத்தில் தன் கவனம் சிதைந்ததும், தன்னை பள்ளிக்கு வந்து ராஜாராம் பார்த்துப் பேசியதை பற்றியும் கூறினாள்.
பிறகு ராகவனை வெறுப்பேத்தவும், அவருக்கு மன அழுத்தம் கொடுப்பதற்காகவும் இந்தக் கல்லூரியில் சேர்ந்தது, வேண்டுமென்றே சில பாடங்களில் தோல்வியுற்றது என்று அனைத்தையும் கூறினாள்.
பிறகு, “இத்தனை நாள்… நான் ஜனனி அம்மாவும், அவரும் ஏதோ காதலிச்சு பழகி, பின்னாடி ஏதோ சண்டையில் பிரிஞ்சுட்டாங்கனு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா…” என்று ஒரு நொடி மெளனமாக இருந்தவள் பின் வெறுப்புடன்,
“அந்த ஆள் மனுஷனே இல்லை… என்னோட இந்த நிலைக்கு முழுக்க முழுக்க அவர் தான் காரணம்னு மூணு நாளுக்கு முன்னாடி தான் தெரிஞ்சுக்கிட்டேன்.” என்றவள் மீண்டும் மௌனமானாள்.
அமர்ந்திருந்தவளின் தோளை ஆதரவாக பற்றிய விஜய், “விடுடா” என்றான்.
திவ்யா கோபத்துடனும், வெறுப்புடனும், “எப்படிடா விட முடியும்? அந்த ஆள் என்ன செய்தார் தெரியுமா?”
“என்ன செய்தார்?”
“ஜனனி அம்மா, இவர் ஜுவெல் ஷாப்பில் தான் வேலை பார்த்திருக்காங்க… அப்போ இவர் படிப்பை முடித்த நேரம்… அப்போ இவர் கொஞ்சம் அப்படி இப்படி தான் போல… எல்லாம் பணத் திமிர்…” என்று பல்லை கடித்துக்கொண்டு கூறியவள்,
“ஒரு நாள் சும்மா அந்த பிராஞ்ச்சுக்கு போனவர், ஜனனி அம்மாவை பார்த்து ஏதோ தப்பா பேசியிருக்கார். அவங்க கோபத்தில் இவரை அடிச்சிருக்காங்க… அவர் கோபத்துடன், தான் தான் முதலாளினு சொல்லி இருக்கார்… அவங்க அப்பவும் நிமிர்வுடன் ‘நீ யாராக இருந்தாலும் நீ பேசியது தப்பு தான்னு சொல்லியிருக்காங்க… இவருக்கு செம கோபம்… எல்லோருக்கும் முன்னாடி தன்னை அவமானப் படுத்தியவங்களை பழி வாங்க நினைத்து இருக்கார்.
உடனே அந்த பிராஞ்ச்சை தன் பொறுப்பில் எடுத்து இருக்கார். அவங்க ‘துஷ்டனை கண்டா தூர விலகு’ என்ற எண்ணத்தில் ரிசைன் செய்ய நினைச்சு இருக்காங்க. ஆனா, இவர் முன்னறிவிப்பு இல்லாமல் போக முடியாது… குறைந்தது ஒரு மாசம் வேலை பார்க்கணும்னு சொல்லியிருக்கார். அவங்களும் பல்லை கடிச்சிட்டு சரினு சொல்லி வேலை பார்த்து இருக்காங்க…
அவர் அவங்களை எல்லோர் முன்னாடியும் கடுமையா பல முறை திட்டி இருக்கார்… அப்பவும் அவங்க நிமிர்வுடன் பதில் சொல்ல, இவருக்கு கோபம் கூடியிருக்கு…
அதனால், ஒரு நாள் அவங்களுக்கே தெரியாம அவங்க குடிச்ச காபியில் போதை மருத்தை கலந்து அவங்களுக்கு தெரியாமல்…” என்றவள் மேலே சொல்ல முடியாமல் பேச்சை நிறுத்தினாள்.
விஜய், “புரியுதுடா… விடு… இதை பற்றி நாம பேச வேண்டாம்.”
“ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சிட்டு, கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாம ரெண்டு கல்யாணம் வேற செய்திருக்கார். அவரோட பழி வெறியில் பலியானது ரெண்டு பெண்களோட வாழ்க்கை… ஒருத்தரோட வாழ்க்கையை, சேர்மன் சார் சரி செய்துட்டார். ஆனா என் நிலை!”
“உனக்கு என்னடா? ஹரி சார் இருக்கார்… நானும் பவியும் இருக்கோம்… இன்னும் கொஞ்ச நாளில் கேம்பஸ் இண்டர்வியு வரும்… நாம செலக்ட் ஆரோம்… ஒன்னா ஒரே கம்பெனியில் சந்தோஷமா வேலையை பார்க்கிறோம்”
திவ்யா விரக்தியுடன் சிரித்தாள்.
விஜய் தவிப்புடன், “திவி” என்று ஆரம்பிக்க,
அவளோ, “எனக்கு இப்போ எதுவுமே பிடிக்கலைடா”
“நீ ஹரி சாரை நினைத்து சொல்றனு புரியுது… எனக்கு என்னவோ அவர் உனக்காக தான்….”
திவ்யா மறுப்பாக தலையை அசைக்க,
விஜய், “நீயே யோசிச்சு பாரு… சேர்மன் சார் உன் ரிலேடிவ்னு அவருக்குத் தெரியும். கூடவே, அவர் மேல் இவருக்கு பக்தியே இருக்குது… இந்த நிலையில் உனக்காக கேட்பதா, எப்படி சொல்ல முடியும்? உன்னை விரும்புறதை தான் எப்படி சொல்ல முடியும்? அதான், அவருக்காகனு சொல்லி உன்னை பற்றி கேட்டிருப்பார்.”
“என்னால் இதை முழுமையா ஏற்க முடியல… அப்படியே அவன் எனக்காகவே கேட்டதாக வைத்துக் கொண்டாலும், அவனோட பரிதாபக் காதல் எனக்கு தேவை இல்லை.” என்று உறுதியுடன் திடமாகக் கூறினாள்.
“அவர் இல்லாமல் உன்னால்….”
“முடியாது தான். ஆனா, அவன் எனக்கு வேண்டாம். இந்த திவ்யா எப்பவுமே தனி மனுஷி தான்னு கடவுள் என் தலையில் எழுதி வைச்சிட்டார்.”
விஜய் சிறு கோபத்துடன், “அப்போ, நானும் பவியும்?”
“நீங்க என் பிரெண்ட்ஸ் தான். ஆனா ப்ரக்டிகலா யோசித்துப் பார்… உங்க வாழ்க்கை துணை வந்த பிறகு, நான் தனி தான்.”
“அப்படிலாம் இல்லை திவி”
திவ்யா சோகையுடன் சிரித்தபடி, “இப்போதைக்கு எனக்கு இருக்கும் ஆறுதல் நீங்க தான்.”
“இப்போனு இல்லை, எப்பவும் நாங்க உன்னுடன் இருப்போம்.” என்றவன், “நீ ஏன் உன் அம்மா கிட்ட பேசக் கூடாது? முன்னாடி தான் தப்பா நினைச்சிட்டு இருந்த…”
“வேணாம்.”
“ஏன்டா?”
“நான் உறவுகளிடம் இருந்து விலகி இருக்கத் தான் விரும்புறேன்.”
‘மெல்ல தான் அவள் மனதை மாற்ற வேண்டும்.’ என்று நினைத்த விஜய், “சரி… நான் போய் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்”
“எனக்கு பசிக்கலை”
“எனக்கு பசிக்குதே”
“இவ்ளோ நேரம் பேசியது நான்… உனக்கா பசிக்குதா?”
“நீ சொன்ன கதையை கேட்டு, ரொம்ப டயர்ட் ஆகிட்டேன்.”
“இவ்ளோ நேரம், நான் கதை சொன்னேனா?”
“பின்ன இல்லையா? ஆனாலும், இதுக்கு போய் பாட்ஷா பாய் எபஃக்ட் கொடுத்தீங்களே.. நீயும் பவியும்.” என்றான்.
அவனது எண்ணம் புரிந்து, திவ்யா வரவழைத்த செல்ல கோபத்துடன், “உன்னை” என்றபடி அவனை அடிக்க வர,
“மீ ஸ்மால் பாய்… நோ வயலென்ஸ்.” என்றபடி அவன் ஓட, இவள் அவனை துரத்திய படி ஓடினாள்.
சிறிது நேரம் அறைக்குள் சுற்றி சுற்றி ஓடியவர்கள், பின் மூச்சு வாங்க தரையில் அமர்ந்தனர்.
விஜய், “சாப்பிட எடுத்துட்டு வரேன்.” என்றபடி எழ,
“எனக்கு பசிக்கல”
“திரும்ப முதலில் இருந்தா…” என்று விஜய் அலற, இப்பொழுது உண்மையாகவே திவ்யா இதழில் சிறு மென்னகை அரும்பியது.
இணைய காத்திருப்போம்…