ராகவன் பார்வதியை அடித்ததோடு சுபாஷினியைப் பார்த்து, “உண்மையை சொல்லு… திவ்யா என் பொண்ணு தானே!” என்று கர்ஜித்தார்.
சுபாஷினி அதிர்ச்சியுடன் வாயடைத்துப் போய் நிற்க,
ராஜாராம் பேச வாய் திறக்கும் முன், ராகவனே திரும்பப் பேசினார்.
ராகவன், “நீ சொன்ன அதே DNA டெஸ்ட் போதும், திவ்யா என்னோட பொண்ணுனு நிரூபிக்க.”
சில நொடிகள் மௌனத்தில் கழிய, திவ்யா அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள்.
பார்வதியிடமோ, அதிர்ச்சியை மீறி கோபம் தான் அதிகமாக இருந்தது.
ராகவன் கோபத்துடன், “நீயெல்லாம் மனுஷியா? குழந்தையை அபார்ஷன் செய்ததா பொய் சொல்லி இருக்க.”
சுபாஷினி கோபத்துடன், “நான் மனுஷி இல்லையா! இப்படி பேச உனக்கு நா கூசல…! அது சரி, மனுஷனா இருந்தா தானே உனக்கு அதெல்லாம் இருக்கும்! என்னை பெருசா பேசுறியே! நீ யோக்கியனா? என் வயிற்றில் இருந்த குழந்தை மேல், உனக்கு என்ன பாசமா இருந்தது? என்னை பழி வாங்கிய வெறி தானே இருந்தது! நீ….”
“ஆமாடி, நான் அப்படி தான்… நீ கருவை கலச்சிட்டதா சொல்லி விலகிப் போனதும், நான் நிம்மதியா தான் சாரு கூட வாழ்ந்தேன். இப்போ திவ்யாவை சொந்தம் கொண்டாடிட்டு வரவ, ஏன் அவளை அனாதை ஆசிரமத்தில் விட்ட?”
“இல்ல… இல்ல… நான் விடல… நான் குழந்தை பிறக்கும் போதே இறந்துட்டதா நினைத்தேன். என்..”
“என் மேல் உள்ள கோபத்தில் கருவை அழிக்கப் பார்த்தவ தானே நீ..” என்ற போது, ஏதோ சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்க்க,
அறை வாயிலில் திவ்யா மயக்கமாகி கீழே விழுந்திருந்தாள்.
ராகவன், “குட்டிமா” என்று பதறியபடி ஓடினார். வேகமாக அவளை தூக்கிக்கொண்டு போய் அறையில் படுக்க வைத்தவர், மருத்துவரை அழைத்தார்.
மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, “பெருசா ஒன்னுமில்ல, அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான்.” என்று கூறிச் செல்லவும் தான், பார்வதியை தவிர, மற்றவர்கள் நிம்மதி அடைந்தனர்.
அவ்வளவு நேரமும், ராகவன் கண்களுக்கும், மனதிற்கும் திவ்யா மட்டுமே தெரிந்தாள்.
ராகவனின் அன்பையும் பாசத்தையும் அந்த நிமிடங்களில் புரிந்து கொண்ட ராஜாராம், திவ்யாவை அவர் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதை புரிந்து கொண்டதோடு, திவ்யாவின் மனநிலையையும் ஓரளவிற்கு புரிந்து கொண்டிருந்தார்.
திவ்யாவை நினைத்து அவர் பெரிதும் கலங்கினார். தனது பெற்றோர்கள் யார் என்பதை அறிந்த விதமே அதிர்ச்சி என்றால், அவர்கள் இருவரும் அவள் கருவில் இருந்ததை பற்றி பேசிய வார்த்தைகள், அவள் மனதை கொன்றிருக்கும் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டார்.
ஆனால், பேசிய இருவரும் அதைப் புரிந்து கொள்ளவில்லை. உணர்ச்சிவசப்பட்டு தாங்கள் கொட்டிய வார்த்தைகளை, அவர்கள் இருவரும் உணரவே இல்லை. அதனால், அது திவ்யாவின் மனதில் ஏற்படுத்திய ரணத்தை அவர்கள் இருவரும் இன்றுவரை உணரவில்லை.
மருத்துவர் கிளம்பிய சிறிது நேரத்தில், திவ்யா கண் விழித்தாள்.
கவலையுடன் அவள் தலையை வருடியபடி அவள் அருகே அமர்ந்திருந்த ராகவன் தவிப்புடன், “இப்போ, எப்படி இருக்குது குட்டிமா?” என்று கேட்டார்.
திவ்யா மெதுவாக தலையை மட்டும் அசைத்தாள்.
ராகவன் அவளது மௌனத்தை உணராமல், “நான் ரொம்ப பயந்துட்டேன்டா.” என்றார்.
அப்பொழுது திவ்யா கண் விழித்ததை அறிந்து, சுபாஷினியும் ராஜாராமும் உள்ளே வர…
ராகவன், “நீங்க இன்னுமா கிளம்பலை… வெளியே போங்க.” என்று கத்தினார்.
ராகவனின் கையை பிடித்து தடுத்த திவ்யாவின் பார்வை, சுபாஷினியிடம் இருந்தது.
“குட்டிமா” என்று ஆரம்பித்த ராகவன், மகளின் பார்வையை கண்டு பயத்துடனும் தவிப்புடனும் மகளைப் பார்த்தார். எங்கே அவள் தன்னை விட்டு போய் விடுவாளோ என்ற பயம், அவர் முகத்தில் பிரதிபலித்தது.
மகிழ்ச்சியும், பயமும், தவிப்பும் சரிசமமாக மனதை தாக்கியதில் சுபாஷினி கலங்கிய கண்களுடன், “திவிமா” என்று மெல்லிய குரலில் பாசத்துடன் அழைத்த படி அவள் அருகில் அமர்ந்து, அவள் கையைப் பற்றினார்.
திவ்யா, கையை உருவிக் கொண்டாள்.
ராஜாராம், “திவிமா… நாங்க சொல்றதை கொஞ்சம் கேளுடா… நாங்க…”
அவர் பேசுவதை கையை நீட்டி தடுத்தவள்,
சுபாஷினியை பார்த்து, “உங்க இன்னொரு பொண்ணோட வயசென்ன?”
“எதுக்குடா கேட்கிற?”
திவ்யாவிடம் பதில் இல்லை. ஆனால், அவளது பார்வை பதிலைக் கேட்டது.
சுபாஷினி தவிப்புடன், “பதிமூன்று.”
கண்களை மூடிய திவ்யா மனதினுள், ‘என்னை விட ரெண்டு வயசு தான் சின்னவ… ஸோ… என்னைப் பற்றிய கவலை உங்களுக்கு ஒரு வருஷம் தான் இருந்து இருக்குது. அது சரி, என்னை கருவில் அழிக்க நினைச்சீங்க… பிறக்கும் போது இறந்ததா நினைச்சீங்க… ஸோ என்னை பற்றிய கவலை கூட இருந்து இருக்காது. நான் தான் ஏதோ நப்பாசையில் கேட்டுட்டேன்.’ என்று கூறிக் கொண்டவள், அடுத்து ராகவனை பற்றி நினைத்தாள்.
அவள் மனம், ‘இவங்க கூட பரவாயில்லை (அப்)பா ஆனா நீங்க! நான் கருவில் அழிந்தேன்னு நினைச்சு நிம்மதியா இருந்தீங்களா? அப்போ, நான் உங்க பொண்ணுன்னு தெரிந்து இருந்தா என்னை தத்தெடுத்து இருக்க மாட்டீங்க! அப்போ உங்க அன்பே பொய்…’ என்று நினைத்த போது, அவளது மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
சுபாஷினி, “திவிமா” என்று தவிப்புடன் கலங்கிய குரலில் அழைக்க,
கண்களை இறுக மூடியபடி, “எல்லோரும் வெளியே போங்க… எனக்கு யாரும் வேணாம்… என்னை தனியா விடுங்க.” என்று கத்தினாள்.
ராகவன், “குட்டிமா” என்று அழைத்ததும்,
கண்களை திறந்து அவரை வெறுப்புடன் பார்த்தவள், கலங்கிய கண்களுடன், “ஐ ஹெட் யூ” என்றாள்.
ராகவன் பெரிதும் கலங்கிய கண்களுடனும், வலியுடனும், “குட்டிமா” என்று கூப்பிட,
அவளோ அவர் முகத்தை பார்க்காமல், கையை அறை வாயிலை நோக்கி நீட்டினாள்.
ராஜாராம் சுபாஷினியின் தோளில் கைவைத்து அழுத்தினார். அவர் கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தார்.
ராஜாராம் கண்ணசைவில் கிளம்பலாம் என்றார். சுபாஷினி தவிப்புடன் பார்க்க, ராஜாராம் மீண்டும் கண்களில் தைரியம் சொல்லிய படி கிளம்பக் கூறினார்.
சுபாஷினி வேதனையுடன் எழுந்து கொண்டார்.
அறையை விட்டு வெளியே செல்லும் முன் ராஜாராம் ராகவனிடம், “இப்போ திவிமா ரொம்ப காயப்பட்டிருக்கிறாள்… இப்போ அவளுக்கு தேவை அமைதி… அவளை தொந்தரவு செய்யாம……….”
“மூடிட்டு வெளியே போடா… எல்லாம் உங்களால் தான்” என்று வெறுப்புடனும் கோபத்துடனும் எரிந்து விழுந்தார் ராகவன்.
திவ்யா, “தயவு செய்து எல்லோரும் வெளியே போங்க” என்று மீண்டும் கத்தினாள்.
ராகவன் பேச வாய் திறக்கும் முன், திவ்யா சுவற்றை பார்த்தபடி, “சார், இவரை முதல்ல வெளியே போகச் சொல்லுங்க” என்று வெறுப்புடன் கூறினாள்.
ராகவன், முற்றிலும் உடைந்து அழுதார்.
ராஜாராம் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.