“ஹும்ம்… மிஸ்டர் ராகவன் தான் நான் ஜனிக்க காரணமானவர். ஆனா என்னைப் பெத்த தாய் சாருமா இல்லை… சேர்மன் சாருக்கும் எனக்கும் என்ன உறவுன்னு கேட்டியே, அவர் எனக்கு அப்பா முறையில் இருப்பவர். ஆனா, மனதால் என்னைப் பெற்ற மகளாக நினைப்பவர்” என்றவள் நண்பனைப் பார்த்து, “குழப்பமா இருக்குதா!” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல், “சேர்மன் சார் மனைவி தான், என்னைப் பெற்ற தாய்… மிஸ்டர் ராகவன் முதல் மனைவி சாருமா தான்… என்னைப் பெற்ற தாய் கல்யாணம் செய்து கொண்டது சேர்மன் சாரை தான்.” என்றாள்.
சில நொடிகள் மெளனமாக இருந்தவள், “இப்போ புரியுதா, நான் ஏன் என்னை இல்லீகல் சைல்டுனு சொன்னேன்னு?” என்று வினவினாள்.
விஜய்க்கு அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை. அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை. அவள் தொடர்ந்தாள்.
“சாருமாவுக்கு குழந்தை பிறக்காதுனு டாக்டர் சொன்னதும், அவங்க தான் குழந்தையை தத்தெடுக்கும் முடிவை எடுத்து இருக்காங்க… என்னை அவங்க தத்தெடுத்த போது, எனக்கு மூணு வயசு… சாருமா இருந்தவரை அவ்ளோ சந்தோஷமா இருந்தேன்.” என்றவள் கண்ணில் சிறு ஒளியுடன்,
“அன்பான அழகான குடும்பம் எங்களது… அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் நான்னா உயிர்… எனக்கும் அப்படி தான்… சாருமாக்கு அதிர்ந்து பேசக் கூட தெரியாது… அன்பே உருவானவங்க… என்னோட ஒன்பதாவது வயசில் ஒரு அக்சிடென்ட்டில் அவங்க இறந்துட்டாங்க…” என்றவளின் முகம் வேதனையில் சுருங்கியது.
“அப்புறம் எனக்காகனு சொல்லி பார்வதி சித்தியை கல்யாணம் செய்துக்கிட்டார்… நான் தத்தெடுக்கப்பட்டவள்னு தெரிந்த அவங்களுக்கு, என்னை சுத்தமா பிடிக்காது. என்னை காயப்படுத்த முயற்சி செஞ்சு என் கிட்ட பலமுறை பல்ப் வாங்கி இருக்காங்க…
வெளிப்படையா அவங்களால் வெறுப்பை என்னிடம் காட்ட முடியாது. ஏன்னா… அவர் அவங்களை திட்டுவார். அப்போலாம் அவர் தான் என் ஹீரோ. எவ்ளோ பெருமையா அவர் பொண்ணுன்னு சொல்லுவேன் தெரியுமா? ஆனா…” என்று சில நொடிகள் மெளனமாக இருந்தவள், மீண்டும் ஆரம்பித்தாள்.
“எனக்கும் சித்தியை பிடிக்காது. ஆனா, அவருக்காக அவங்களை ஏத்துக்கிட்டேன். அவங்களுக்கு சூர்யா பிறந்தப்ப எனக்கு பன்னிரண்டு வயசு… எனக்கு சூர்யாவை ரொம்பப் பிடிக்கும். அவனுக்கும் என்னை பிடிக்கும். அந்த சின்ன வயசுலேயே என்ன தான் சித்தி என்னிடம் பேசக் கூடாதுனு சொன்னாலும், கேட்காமல் என்னிடம் தான் ஒட்டிப்பான். இப்போ கூட எனக்காக ஏங்குவான் தான். ஆனா என்னால் தான் முன்ன மாதிரி ஒட்டமுடியலை.
இப்படி தான் போய்க்கிட்டு இருந்தது… அந்த கொடிய நாள் என் டென்த் ரிசல்ட் வந்த அடுத்த நாள்…!
நான் டென்த்தில் ஸ்டேட் பர்ஸ்ட் வந்தேன்னு அவர் ஒரு நகைக் கடையை என் பேரில் புதுசா ஆரம்பிக்கப் போறதா சொன்னதும், சித்தி சண்டை போட்டாங்க…! அப்போ தான் அவங்க ‘என் பையனுக்கு வர வேண்டிய சொத்தை, ஒரு அனாதைக்கு போக விட மாட்டேன்’னு கத்தினாங்க. அவர் அவங்களை அடிச்சார்… அவங்க ஏதேதோ கத்தினாங்க, ஆனா அவங்க சொன்ன ‘அனாதை’ என்ற வார்த்தையில், என் மூளை மரத்துப்போச்சு. அதை கேட்ட நான் எப்படி துடிச்சேன் தெரியுமா?” என்றவள் கண்கள் மீண்டும் கலங்கியது.
விஜய், அவள் கையை ஆதரவாக தட்டிக் கொடுத்தான்.
“அவர் சித்தி பொய் சொல்றதா சொல்லி என்னை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்… நான் எப்பவும் அவர் பொண்ணு தான்னு சொன்னார். என் மேல் சத்தியம்னு கேட்டதும், உண்மையை சொல்லிட்டார்… அவர் என்ன தான் சமாதானம் செஞ்சாலும், அந்த வயசில் அதை என்னால் ஏத்துக்க முடியலை…!
அத்தனை நாள் என் வீடுன்னு நினைச்சது என் வீடு இல்லை. என் அம்மா அப்பான்னு நான் பெருமையா நினைச்சவங்க, என் பேரென்ட்ஸ் இல்லன்ற உண்மையை என்னால் ஏத்துக்க முடியலை. என்ன செய்யனு தெரியலை…!
ஆனா, என்னால் அங்கே இருக்கவும் முடியலை… சித்திக்கும் அவருக்கும் ஒரே சண்டையா இருந்தது.
யார் கிட்டயும் சொல்லாம ஒரு ஆசிரமத்தில் போய் அனாதைனு சொல்லி சேர்ந்துட்டேன். நான் அங்கே போன ரெண்டாவது நாள், அவர் வந்து என்னை கூட்டிட்டுப் போய்ட்டார். ‘அவர் தான் என் அப்பானும், இனி இப்படி போகக் கூடாது’னும் சொல்லி அழுதார். நானும், அவர் மடியில் படுத்து அழுதேன்.
அப்போ, சேர்மன் சாரும் அவர் மனைவியும் அங்கே வந்தாங்க…” என்றவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
அவள் கண் முன், அந்த நாள் படமாக ஓடியது.
……………..
திவ்யா, அவளது அறையில் ராகவன் மடியில் படுத்து அழுது கொண்டிருக்க, ராகவனும் கலங்கிய கண்களுடன் அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த பார்வதி,
“உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க”
“யாரு?”
“எனக்கு தெரியாது”
“இதைக் கூட கேட்க மாட்டியா?” என்று ராகவன் எரிந்து விழ,
பார்வதி கோபத்துடன், “என்னை யாரு மதிக்கிறா?”
“மதிக்கிறது போல் நீ நடந்துகிறது இல்லை.”
“அதானே, என்னைப் பார்த்தா உங்களுக்கு மனிஷியா தெரியாதே… இவளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுங்க… சனியன் ஒழிஞ்சுதுனு நினைத்தேன்… கண்டு பிடிச்சு கூட்டிட்டு….”
“ஏய்…” என்றபடி பார்வதியை அடித்தவர், “யாரைப் பார்த்து என்ன சொல்ற? நீ தான்டி சனியன்… உன்னை கல்யாணம் செய்யாமல் இருந்திருந்தா, நானும் என் மகளும் சந்தோஷமா இருந்து இருப்போம்.”
“யாரோ பெத்தவளை உங்க மகள்னு சொல்றீங்களே, உங்களுக்கு வெட்கமா இல்லை?”
“ஏய்” என்று மீண்டும் கையை ஓங்கியவர், “சீ… மனுஷன் பேசுவானா உன்னிடம்” என்றவர் மகளிடம் திரும்பி, “குட்டிமா, அப்பா போய் யாருன்னு பார்த்துட்டு வரேன்டா.” என்றார்.
திவ்யா அமைதியாக இருக்கவும், அவளது தலையை வருடி, “எதையும் யோசிக்காதடா” என்று அன்புடன் கூறியவர்,
பார்வதியிடம் திரும்பி கோபத்துடன், “வா” என்றார்.
“நான் எதுக்கு?”
“உனக்கு இங்கே என்ன வேலை?”
“என்னவோ செய்றேன்”
“ஒன்னும் தேவை இல்லை… என்னோட வா” என்றபடி அவரை இழுத்துக்கொண்டு சென்றார்.
வரவேற்பறைக்குச் சென்ற ராகவன், அங்கே இருந்த சுபாஷினியை பார்த்து, “நீ… நீ…” என்று முதலில் யோசனையில் ஆரம்பித்தவர், பின் கோபத்துடன், “உனக்கு இங்கே என்ன வேலை?” என்றவர், “வேலா” என்று கத்தினார்.
ராகவனின் கத்தலில் தோட்டக்காரன் ஓடி வரவும், “இவளை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு.” என்று கத்தினார்.
ராஜாராம் கோபத்தை அடக்கிய குரலில், “அவ மேல் கை வைச்ச! அடுத்த நொடி உன் உடம்பில் உன் கை இருக்காது.” என்றார். குரலை உயர்த்தாமலும் கர்ஜிக்க முடியும் என்பதை, தோட்டக்காரன் வாயடைத்துப் போய் பார்த்தான்.
ராகவனின் குரலில், அங்கே வந்து அறை வாயிலில் நின்றிருந்த திவ்யாவை யாரும் கவனிக்கவில்லை.