வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்து, ஆசிரியர் மணிமேகலை வகுப்பினுள் வரவும், அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்தனர்.
பவித்ரா, “உன் மனசில் என்ன ஓடுது?”
“என்னடி?”
“நீ சந்தோஷமா இருந்தாலும், ஏதோ ஒன்னு உன்னை அரிச்சிட்டு இருக்குது.”
“லூசு… அப்படிலாம் இல்லை.”
ஒரு நொடி அவளை ஆழ்ந்து நோக்கிய பவித்ரா, “சரி… உனக்கு எப்போ சொல்லணும் தோணுதோ, அப்போ சொல்லு.”
“பவி….”
“விடு… இப்போ சந்தோஷமானதை பற்றிப் பேசலாம்”
“என்ன பேசணும்?”
“எப்படி இப்படி? ஹரி சார் சொன்னாருனா!”
“அவன் மேல் லவ் வந்தது, அவனை இங்கே பார்த்த அப்புறம் தானே!”
“ஆமா”
“எக்ஸாம் எழுதி முடிச்சது எப்போ? அவனை இங்கே பார்த்தது எப்போ?”
“ஹி…ஹி…ஹி” என்று பவித்ரா அசடு வழிந்தாள்.
“போதும்… ரொம்ப இளிக்காதே!” என்ற திவ்யா, “இவ்ளோ நாள் செய்தது அந்த ஆளை டென்ஷன் செய்ய (அவளது கட்டுப்பாட்டையும் மீறி குரல் இறுகியது)… இது எனக்காக…”
அவளது இறுக்கத்தை எப்பொழுதும் போல் உள்ளதாக எடுத்துக் கொண்ட பவித்ரா, அதைக் கண்டு கொள்ளாமல், “இத்தனை நாள் உனக்காகத் தானே நான் சொன்னேன்.”
“ஹும்ம்… என்ன சொன்ன?”
“என்னாச்சுடி?”
சட்டென்று முழுவதுமாக சுதாரித்த திவ்யா, “சொல்லுடி, என்ன கேட்ட?” என்று வினவினாள்.
தோழியை பற்றி அறிந்த பவித்ரா மீண்டும் கூறினாள்.
திவ்யா, “இனி தானே கேம்பஸ் இண்டர்வியூ வரும்.”
“இதை முன்னாடியே சொல்லி இருந்தா, நான் கவலை இல்லாம இருந்து இருப்பேனே!”
திவ்யா மெல்லிய புன்னகையுடன், “உனக்கு டென்ஷன் ஆகுறதுக்கு காரணமா இல்லை…”
“போடி”
“எங்கே! என் ரிஷி கிட்டயா?”
“எங்கே சுத்தினாலும் சார் கிட்டேயே வந்து நில்லு.”
“பின்ன!”
“சரி… சார் என்ன சொன்னார்?”
“அவன் வாயில் இருந்து முத்து உதிர்ந்திட்டாலும்!”
அப்பொழுது மணிமேகலை, “திவ்யா” என்று அழைக்கவும், அவள் எழுந்து நின்றாள்.
அவர், “கங்ராட்ஸ்” என்றார்.
“தாங்க் யூ மேம்” என்று கூறி அமர்ந்தாள்.
அதன் பிறகு அவர் பாடத்தை ஆரம்பித்தார். அடுத்து வந்த தங்ககுமாரும், அவளை வாழ்த்திவிட்டே பாடத்தை ஆரம்பித்தார்.
தேநீர் இடைவேளையில் ராஜாராம் அவளை அழைத்ததாக பியூன் வந்து கூறவும், அவரை பார்க்கச் சென்றாள்.
அவள் உள்ளே சென்றதும், ரோஜா இதழ்களை தூவி வரவேற்ற ஜனனி, மகிழ்ச்சியுடன் அவளை அணைத்து, “சூப்பர் கா… கலக்கிட்ட… கங்ராட்ஸ்” என்று கூறி, அவளை விடுவித்து கையை நீட்டினாள்.
செய்வதறியாது திகைத்த திவ்யா, வெளியே அதை காட்டிக் கொள்ளாது அமைதியாக நின்றாள். ஏற்கனவே ஜனனியின் அன்பில் இளகத் தொடங்கியிருந்த திவ்யாவின் மனமோ, நேற்று அறிந்து கொண்ட விஷயத்திற்குப் பிறகு, அவர்கள் பக்கம் யோசிக்க விழைந்தது, இருந்தாலும், பிடிவாதத்துடன் மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.
ஜனனியோ புன்னகையுடன் திவ்யாவின் கையை பற்றி மீண்டும், “கங்ராட்ஸ்” என்றாள்.
திவ்யா மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றாள்.
ஜனனி துள்ளிக் குதித்து ராஜாராம் அருகே சென்று சிரிப்புடன், “அப்பா அக்கா என்கிட்ட சிரிச்சு சாதாரணமா பேசிட்டா.” என்றபோது அவளது இமையோரம் ஆனந்தக் கண்ணீர் வடிந்தது.
ஜனனியின் தூய அன்பில் திவ்யாவின் மனம் நெகிழ்ந்து கரையத் தொடங்கியது. ஜனனியின் அன்பு அவளது காயத்தை மயிலிறகால் வருடியது போல் இருந்தது. சில நொடிகள் தங்கையை பாசத்துடன் பார்த்தவள் பின் சுதாரித்து,
“கூப்பிட்டீங்களா சார்?” என்றாள்.
ராஜாராம், “கங்ராட்ஸ் திவிமா… ரொம்ப சந்தோஷம்”
“தேங்க்ஸ் சார்”
“ஏதாவது கிப்ட் கேளு டா”
“ஒரு சேர்மனா உங்க ஸ்டுடென்ட்க்கு நீங்க கொடுத்தால், நான் வாங்கிப்பேன் சார்”
“திவிமா…”
“முன்னாடியே கேட்டிருக்கிறேன்… எல்லா ஸ்டுடென்ட்ஸ்-ஸையும் நீங்க இப்படி தான் பாசமா கூப்பிடுவீங்களா?” என்றபோது முன்பிருந்த கோபம் அவள் குரலில் இல்லை.
“மத்தவங்களும் நீயும் ஒன்றில்லையே.”
“என்னைப் பொறுத்தவரை ஒன்று தான்”
ஜனனி, “சரி… நான் கொடுத்தால் வாங்கிப்பியா?”
“நீ எப்போதிருந்து சம்பாதிக்கிற?”
“அப்போ நான் சம்பாதித்து வாங்கித் தந்தா வாங்கிப்பியா?”
அரை நொடி மௌனித்தவள், “நான் அப்படி சொல்லல…”
ஜனனி புன்னகையுடன், “நல்லா சமாளிக்கிற…. பட் நான் கொடுக்க நினைத்ததிற்கு பணம் தேவை இல்லை.”
“…”
“என்ன பார்க்கிற? நான் கொடுக்க நினைத்தது அன்பு…”
முதல் முறையாக பதில் சொல்வதறியாது திவ்யா மௌனமானாள். அது கூட தங்கையின் மனதை காயப்படுத்த விரும்பாததால்.
ஜனனி விரிந்த புன்னகையுடன், “அப்போ உனக்கு ஓகே” என்றபடி திவ்யா அருகே வந்து, “இப்போ டோக்கன் ஆஃப் லவ் ஆ” என்று கூறி திவ்யாவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, தலை சரித்து கண்ணடித்தாள்.
தன் மனம் முழுவதும் தங்கையிடம் சரிவதை உணர்ந்தவள், “நான் கிளாஸ்க்கு போறேன் சார்.” என்று கூறி வேகமாக வெளியேறினாள்.
ஜனனி ராஜாராமை மகிழ்ச்சியுடன் அணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “அம் ஸோ ஹப்பி டாடி.” என்றாள்.
ராஜாராமும் மகிழ்ச்சியுடன், “திவிமா, சீக்கிரம் நம்மளை ஏத்துப்பா.”
“ஆனா அம்மாவை பார்த்தா மட்டும் பத்திரகாளியா மாறிடுறா…. அம்மா எவ்ளோ மென்மையானவங்க… ஹும்ம்… பார்க்கலாம்”
“விடுடா… இந்த நிமிஷ மகிழ்ச்சியை கொண்டாடு.”
“ம்ம்… கண்டிப்பா பா” என்றவள், “நான் அக்காக்கு முத்தம் கொடுத்ததை போட்டோ எடுத்தீங்களா?”
“இல்லையே டா!”
ஜனனி முறைக்கவும்
அவர், “ஜனாமா… நானே ஷாக்கில் இருந்தேன்.” என்று பயந்தவர் போல் கூறினார்.
“போங்கப்பா…. இப்படி மிஸ் செஞ்சிட்டீங்களே!” என்றவள் பின் கண்கள் ஒளிர, “அப்பா CCTV-யில் ரெகார்ட் ஆகியிருக்குமே.!”
“கரெக்ட் டா” என்று இருவரும் வேகமாக கணினியில் பார்த்தனர். அதில் பதிவாகியிருந்ததை உடனே கைபேசியில் இருவரும் ஏற்றிக் கொண்டனர்.
ராஜாராம், “சரி கிளம்பு… உன்னை காலேஜில் விட்டுட்டு இங்கே திரும்ப வரணும்.”
“இன்னைக்கு கண்டிப்பா போகனுமா பா!”
ராஜாராம் பார்த்த பார்வையில், “ஓகே… ஓகே கிளம்பிட்டேன்” என்று கூறி கிளம்பினாள்.
அன்று மதியம் ஹரீஷின் லேப் இருந்தது. எப்பொழுதும் போல் அவன் கூடத்தின் நடுவில் அமர்ந்திருந்தான். திவ்யா ஆய்வின் வெளியீடை(output) குறிப்பேடில் எழுதி, ஹரீஷிடம் கையெழுத்து வாங்கச் சென்றாள். அவன் திருத்திக் கொண்டிருந்த போது பார்வையை சுழற்றியவள், சட்டென்று அவன் சட்டை பையில் இருந்த பேனாவை எடுத்தாள்.
அவன், “ஏய்!” என்று குரலை சற்று குறைத்து கத்தினான்.
முறைப்புடன், “ஒரு வாழ்த்து சொன்னியா?” என்றவள் பின் மெல்லிய புன்னகையுடன், “இது நான் பர்ஸ்ட் வந்ததிற்கு கிப்ட்” என்றாள்.
அவளிடம் நோட்டை நீட்டியவன், “அது அரவிந்த் பென்” என்றான்.
அவள் சந்தேகத்துடன் பார்க்கவும், அவன் புருவம் உயர்த்தினான்.
அவள் எரிச்சலுடன் அந்தப் பேனாவை மேஜை மீது வைக்கவும் அவன் மென்னகையுடன் அதை எடுத்துக் கொண்டு, “நான் என்ன சொன்னாலும் நம்பிடுவியா?”
முதலில் அவனை முறைத்தவள், பின் அவன் கண்களைப் பார்த்து தீவிர குரலில், “நிச்சயமா நம்புவேன்” என்றாள்.
இப்பொழுது அவன் அமைதியாக இருக்கவும், அவள் புருவம் உயர்த்தினாள்.
அவன், “பிளேஸ்க்கு போ.”
“ஒரு ஸ்டுடென்ட்டா நினைச்சு கிஃப்ட் தரக் கூடாதா?”
“ஸ்டுடென்ட்டா மட்டும் நீ நினைத்தால் தரேன்”
உதட்டை சுழித்து, “போடா… நீ ஒன்னும் தர வேணாம்” என்று கூறி நோட்டை பிடுங்கிக் கொண்டு, தன் இடத்திற்குச் சென்று அமர்ந்தவள், இவன் பக்கம் திரும்பவில்லை.
ஒருவேளை திரும்பி இருந்தால், ஹரீஷ் முகத்தில் இருந்த ரசனையுடன் கூடிய புன்னகையை பார்த்து இருப்பாள்.
வகுப்பு முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்த போது,
ஹரீஷ், “திவ்யா” என்று அழைத்தான்.
அவன் மேஜை அருகே வந்து நின்றாலும், அவன் முகத்தை அவள் பார்க்கவில்லை.
அவளது கோபத்தை ரசித்தவன் மென்னகையுடன், அதே பேனாவை நீட்டினான்.
சட்டென்று கண்கள் ஒளிர நிமிர்ந்தவள், அடுத்த நொடியே பிகு செய்யும் குரலில், “என்னை பொறுத்தவரை நான் உனக்கு ஸ்டுடென்ட் மட்டுமில்லை.”
அவன் மென்னகையுடன், “என்னை பொறுத்தவரை நீ என் ஸ்டுடென்ட் மட்டும் தான்.”
அவனது புன்னகையை ரசித்தவள், அவனுக்கு அழகு காட்டிவிட்டு பேனாவை வாங்கிக் கொண்டு சென்றாள்.
இணைய காத்திருப்போம்…