விலகல் – 22
இரவு ஒரு மணி அளவில், தூக்கக் கலக்கத்துடன் நந்தகுமார் தண்ணீர் அருந்த சமையலறை நோக்கிச் சென்ற போது,
“காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்”
என்ற பாடல் ஒலிக்கவும், பயத்துடன் சுற்றிப் பார்த்தவன் கண்ணில், மேஜை மீது இருந்த ஹரீஷின் கைபேசி தென்பட்டது.
“ஸப்பா…. ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.” என்று கூறியபடி அதை கையில் எடுத்தான்.
அதில் ‘ரௌடி பேபி காலிங்’ என்று ஆங்கிலத்தில் வந்து கொண்டிருந்தது.
“யாரு இந்த ரௌடி பேபி?” என்று அவன் யோசிக்கையில், அழைப்பு நின்றது. மீண்டும் அழைப்பு வரவும், பாடல் வரிகளை கவனித்தவன்,
“அவனவன் காதலிக்க பிகர் கிடைக்கலைனு புலம்புறான்… இவன் என்னடானா சுத்தி சுத்தி வந்து காதலிக்கிற பொண்ணு இருந்தும், காதலை சொல்லாம தேவதாஸ் ஃபீலோட சுத்துறான்.” என்று கூறியபடி ஹரீஷ் அறைக்குச் சென்று கதவைத் தட்டினான்.
கதவை திறந்த ஹரீஷ், “என்னடா?”
“உடனே திறந்துட்ட! தூங்கலையா?”
ஹரீஷ் முறைப்புடன், “இதை கேட்க தான் கதவை தட்டுனியா?”
“ஹி… ஹி… இல்ல… உன் போன்.”
“இப்போ இது ரொம்ப முக்கியம்! தூங்காம மோகினி பிசாசு மாதிரி சுத்திட்டு என்னை தூங்கலையானு கேட்கிறியா!”
“எல்லாம் நேரம்டா”
“என்ன?”
“தூக்க கலக்கத்தில் தண்ணி குடிக்க வந்தவனுக்கு, பீதியை கிளப்பி தூக்கத்தை தூர விரட்டினது உன் மோகினி பிசாசு தான்”
“ஏன்டா அர்த்த ராத்திரியில் இம்சை செய்ற!”
“ஹும்ம் வேண்டுதல்”
ஹரீஷின் முறைப்பில், “உன் மோகினி பிசாசு ரெண்டு முறை கூப்பிட்டது.” என்று அவன் கூறிக் கொண்டிருந்த போது, மீண்டும் அழைப்பு வந்தது.
நந்தகுமார், “இதைத் தான் சொன்னேன்”
ஹரீஷ் கைபேசியை வெறித்துப் பார்க்க,
நந்தகுமார், “எடுத்துப் பேசுடா… இந்த நேரத்தில் விடாம கூப்பிடுறா… ஏதாவது முக்கியமானதா இருக்கப் போகுது”
“முக்கியமானதா இருக்கலாம், ஆனா, நான் அவளுக்கு முக்கியமானவன் இல்லை.”
“ரொம்ப செய்றடா”
“….”
“முக்கியமானவன் இல்லைனா ஏன்டா இந்த பாட்டை வச்சிருக்க?”
“நான் தான் அவளுக்கு முக்கியமானவன் இல்லை. ஆனா அவ எனக்கு முக்கியமானவள் தான்.”
நந்தகுமார் முறைப்புடன், “நீ ஒரு இம்சைடா”
“அதை நீ சொல்றியா! போடா… போய் தூங்கு.”
“உன்னை திருத்த முடியாது” என்ற நந்தகுமார், தண்ணீரை மறந்து தன் அறைக்குச் சென்றான்.
ஹரீஷ் கதவை மூடிவிட்டு கட்டிலுக்கு வரவும், மீண்டும் அழைப்பு வந்தது.
அழைப்பு முடியும் தருவாயில் எடுத்தவன், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
திவ்யா, “ஹப்பா எடுத்துட்டியா! தூங்கு மூஞ்சி ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் போன் போட்டேன்… சிக்ஸ்த் செம் ரிசல்ட் வந்திருச்சு.” என்று முடித்த போது, அவள் குரலில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
அவன் வரவழைத்த கோபக் குரலில், “இதை சொல்ல தான் அர்த்த ராத்திரியில் போன் போட்டியா?”
அவன் கோபத்தில் சிறிதும் பாதிக்கப்படாதவளாக, “எஸ் ரிஷி கண்ணா.” என்றாள்.
“என்னை அப்படி கூப்பிடாத”
“அப்படி தான் கூப்பிடுவேன்”
“அறிவில்ல! ஒரு முறை சொன்னா புரியாதா?”
“என் அறிவை போய் ரிசல்ட்டில் பாரு… உன் மொக்கை ரீசனையும் முறியடிச்சிட்டேன்.”
“….”
“நாளைக்கு ஏதாவது உருப்படியான ரீசன் சொல்லு….”
“நான் தான் உன்னை காதலிக்கலைனு சொல்லிட்டேனே! ஏன் என் உயிரை வாங்குற?” என்று கத்தினான்.
“ஏன்னா, நீ தான் என் உயிர்”
“…”
“என்ன பதிலை காணும்!”
“…”
“பதில் சொல்ல முடியலையா?”
“பதில் சொல்ல பிடிக்கலை”
“பிடிக்காம தான் இவ்ளோ நேரம் பேசுறியா?”
அவன் சட்டென்று அழைப்பைத் துண்டித்தான்.
‘இவனை என்ன செய்ய!’ என்று யோசித்தவள், பின் “டேய் ரிஷிகேஷ்! பேசாம அதிரடியா உன் கழுத்தில் தாலி கட்டி என் புருஷன் ஆக்கிடவா!” என்று வாய்விட்டு கூறியவள், அதை காட்சியாக கற்பனை செய்து சிரித்தாள்.
“இது கூட நல்லா தான் இருக்குது… லவ் யூ டா ரிஷி கண்ணா” என்று கூறி காற்றில் முத்தம் கொடுத்தவள், புன்னகையுடன் உறங்கினாள்.
அழைப்பை துண்டித்த ஹரீஷ், அடுத்த நொடி தனது மடி கணினியை இயக்கி தேர்வு முடிவுகள் பக்கத்திற்கு சென்று, அவளது தேர்வு எண்ணை அடித்தான். அவளது மதிப்பெண்களை பார்த்து சிறிது அதிர்ந்து தான் போனான். கடந்த அரை கல்வியாண்டில்(செமிஸ்டர்) மிக நல்ல மதிப்பெண்களை பெற்றதோடு, இதற்கு முன் தோல்வியுற்ற பாடங்கள் அனைத்திலும் மிக நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தாள்.
“அடபாவி! இதை மனசில் வச்சிட்டு தான் அன்னைக்கே அப்படி சொன்னீயா!” என்றான்.
பிறகு, “அரியர் வச்சது எல்லாமே ஈஸி பேப்பர்ஸ்… எதுக்கு அரியர் வச்சா! இப்போ கிளியர் செஞ்சிட்டா! அரவிந்த் சொன்ன மாதிரி இவ ஒரு புரியாத புதிர் தான்! ஆனா இந்த புதிரை தானே எனக்கு பிடிக்குது… ஏன்டி பணக்கார வீட்டில் பிறந்த?” என்று வேதனையுடன் வினவினான்.
“எனக்கே எனக்கு நீ வேணும்னு மனசு பேராசை கொள்வதை என்னால் தடுக்க முடியலையே! சண்டை போடும் தோழியா… கொஞ்சும் காதலியா… மடி தாங்கும் அன்னையா எனக்கு நீ வேணும்னு என் மனசு ஏங்குதே!” என்று புலம்பியவன்,
“அட்லீஸ்ட் நீ என்னை காதலிக்காமல் இருந்து இருக்கலாம்… என் மனசை தேற்றி இருப்பேனோ என்னவோ! இப்போ ரொம்ப வலிக்குதுடி… நெஞ்சம் முழுவதும் உன்னை சுமந்துட்டு உன்னை விலக்குவது எவ்வளவு கொடுமையா இருக்குது தெரியுமா?
அனாதையா பிறந்தது என் குற்றமா! அனாதையான நான் காதலிக்க கூடாதா? ப்ச்… நீ ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இருக்கக் கூடாதா! அதுவே எனக்கு பெரிய விஷயம் தான். இப்போ நீ எட்டாக் கனி” என்று வேதனையில் உழன்றவன், தன்னையும் அறியாமல் விடியற் காலையில் கண்ணயர்ந்தான்.
அடுத்த நாள் அவன் கல்லூரிக்குச் சென்றதும், அரவிந்த், “ரிசல்ட் வந்திருச்சு” என்றான்.
“ஹும்ம்… தெரியும்.”
அரவிந்த் மெல்லிய குரலில், “திவ்யா சொன்னாளா?”
ஹரீஷ் முறைக்கவும், “அவ ரிசல்ட் பார்த்தியா?”
‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினான்.
அரவிந்த், “பழைய பேப்பர்ஸ் கிளியர் செஞ்சிட்டா…”
“பார்த்தேன்.”
“அது மட்டுமில்லை… சிக்ஸ்த் செம் யுனிவர்சிடி டாப்பர் அவ தான்.”
ஹரீஷின் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தது.
அரவிந்த், “அவளுக்கு பரிசு கொடுக்கலாமே.”
ஹரீஷ் அழுத்தத்துடன் பார்க்க,
அரவிந்த், “நந்து சொல்லிட்டான்.”
ஹரீஷ் அமைதியாக அமர்ந்து புத்தகத்தில் இருந்து குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தான்.
“சேர்மன் சார் ரொம்ப நல்லவர்டா… நீ அவர் கிட்ட பேசினா, அவரே எல்லாத்தையும் பார்த்துப்பார்.”
“…”
ஹரீஷின் கையை பிடித்தவன், “உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கிறேன்.”
“அவர் ரொம்ப நல்லவர் தான். ஆனா இந்த விஷயத்தில் அவர் எப்படினு சொல்ல முடியாது”
“முயற்சியே செய்யாம நீயா ஏன்….”
“இந்தப் பேச்சை விடு”
“ரௌடி பேபினு செல்லப் பெயரெல்லாம் வைப்பாராம். ஆனா காதல் வேணாம்னு சொல்வாராம்.” என்று அரவிந்த் அவன் காதில் விழுவது போல் முணுமுணுத்தான்.
“மூடிட்டு உன் வேலையைப் பார்.” என்றவனது பார்வையோ புத்தகத்தில் தான் இருந்தது.
“இப்பவும் சொல்றேன், நீயா ஒத்துகிட்டா உனக்கு நல்லது”
“உங்க அட்வைஸ்க்கு ரொம்ப நன்றிங்க சார்… இப்போ என்னை என் வேலையை செய்ய விடுங்க.”
“நாங்களாம் வெட்டி ஆபிசர்ஸ்… இவன் இல்லனா இந்த காலேஜ்ஜே நடக்காது.” என்ற முணுமுணுப்புடன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
அதே நேரத்தில் வகுப்பில் திவ்யா மேல் காகித தூள்களை தூவி “ஹே” என்று கத்தி கொண்டாடிக் கொண்டிருந்தனர், அவளது நண்பர்கள்.
திவ்யா, “போதும்டா… விடுங்க.”
புன்னகையுடன் தன் அருகில் நின்றிருந்த பவித்ராவை பார்த்து திவ்யா புருவம் உயர்த்த,
அவள், “இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது” என்றாள்.
அதை கேட்டு திவ்யா முகத்தில் அமைதியான புன்னகை.
நண்பர்களில் ஒருவன், “திவி ட்ரீட்”
“இதெல்லாம் பெரிய சாதனையாடா?”
நண்பர்கள் அவளை முறைக்க, அவள் புன்னகையுடன், “ஓகே… ஓகே… தரேன்” என்றதும் மீண்டும் “ஹே” என்று கத்தினர்.