“ஏன் அவனுக்கு என்ன குறை?”
“குறைன்னு நான் எங்க சொன்னேன்! வந்ததும் நீ சொன்ன மாதிரி அவன் ஒரு சாமியார் தான்”
“ஹே! உனக்கு இங்க என்ன வேலை?” என்றபடி ஹரீஷ் உள்ளே வந்தான்.
விஜய் எழுந்துக்கொள்ள, இவளோ, “நான் நந்துவை பார்க்க வந்தேன்”
ஹரீஷ் பல்லை கடித்துக் கொண்டு, “கிளம்பு”
“அதை நந்து சொல்லட்டும்”
அவன் பார்த்த பார்வையில் நந்தகுமார், “நீ கிளம்பு” என்றான்.
அவள் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி, “நீ ஏன் நந்து இவனுக்கு பயப்படுற?”
ஹரீஷ் கோபத்துடன், “அடி வாங்காம கிளம்பு”
விஜய் திவ்யா அருகே வந்து அவள் கையை பற்றி, “திவி வா.. கிளம்பலாம்” என்றான்.
அவளும் கோபத்துடன் கையை உதறி, “நீ சும்மா இரு விஜி.. எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிந்தாகனும்” என்றாள்.
ஹரீஷ், “என்ன! வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்றியா?”
“ஓ! என்னை பார்த்தால் உனக்கு பிரச்சனையா தெரியுதா?”
“…”
“ஆனா அவளை பார்த்தா எப்படி தெரியுது? குளுகுளுனு இருக்குதோ?”
அவன் கோபத்துடன் அவள் கன்னத்தில் அறைய, அவன் அறைந்த வேகத்தில் அவள் இருக்கையில் விழுந்தாள்.
விஜய், “திவி” என்றபடி அவளை பிடிக்க,
“என்ன செய்ற ஹரி!” என்றபடி நந்தகுமார் ஹரீஷை பிடித்தான்.
நிதானமாக எழுந்த திவ்யா ஹரீஷ் அருகே சென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
நந்தகுமார் பெரும் அதிர்ச்சியுடன் நிற்க, விஜய் சிறு அதிர்ச்சியுடன் நிற்க, ஹரீஷ் அமைதியாக நின்றிருந்தான்.
அவள் கோபத்துடன், “என்ன நினைச்சிட்டு இருக்க? சும்மா சும்மா அடிச்சிட்டு இருக்க? என்னை அடிக்க உனக்கு யார் உரிமை கொடுத்தது?”
“யாரு கொடுக்கணும்?”
“யாரு கொடுக்கணுமா? அப்போ நீ என்ன என் கணவனா?”
“இப்படி பேசி பேசி தான் அடி வாங்குற” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.
“என்னை பொறுத்தவரை நீ என் கணவன் தான் ஆனா கணவனாவே இருந்தாலும் சட்டு சட்டுன்னு கையை நீட்டுறது தப்பு தான்..”
“நீ நினைப்பதற்கெல்லாம் நான் பொறுப்பில்லை.. என்னை பொறுத்தவரை நீ என் ஸ்டுடென்ட் மட்டும் தான்”
“ஓ!” என்று அவனை ஆழ்ந்து நோக்கியவள் பின் நிதானமான குரலில், “அடுத்த வீட்டு பெண்ணை இப்படி தான் அடிப்பியா? இத்தோட மூணாவது முறை”
“நீ அப்படி நடந்துக்கிற”
“அப்படி என்ன நடந்துக் கிட்டேன்? பேச்சு பேச்சா இருக்கணும்.. சும்மா கை நீட்டுற வேலையை வச்சிக்காதே.. மீறி கை நீட்டின நானும் இப்படி தான் நீட்டுவேன்”
“..”
“என்ன பதிலை காணும்”
ஹரீஷ் எங்கோ பார்த்தபடி, “இனி அடிக்க மாட்டேன்”
“அதை என் முகத்தை பார்த்தும் சொல்லலாம்”
“எங்க பார்த்து சொன்ன என்ன? உனக்கு வேண்டிய பதிலை சொல்லிட்டேன்.. கிளம்பு” என்றவனது பார்வை இப்பொழுதும் அவளிடம் இல்லை.
“சரி காபி போட்டு கொடு.. குடிச்சிட்டு கிளம்புறேன்” என்று சிறு புன்னகையுடன் கூறினாள்.
அவன் பதில் கூறாமல் சமையலறைக்கு சென்றான்.
விஜய் நந்தகுமாரிடம், “இங்கே என்ன பாஸ் நடக்குது?” என்று முணுமுணுத்தான்.
நந்தகுமார், “ஒரு நிமிஷம் முன்னாடி வரை எலியும் பூனையுமா சண்டை போட்ட ஆட்களா இதுங்க!!!”
“இதில் யாரு எலி யாரு பூனை பாஸ்?”
“ரொம்ப முக்கியம்!” என்று நந்தகுமார் முறைக்க, விஜய் பல்லை காட்டி சிரித்தான்.
ஹரீஷ் காபியுடன் வந்த போது திவ்யா கால் விரல்களில் நின்றபடி ஜன்னல் வழியாக குனிந்து ஏதோ செய்துக் கொண்டிருந்தாள்.
காபி அடங்கிய தட்டை மேஜை மீது வைத்த ஹரீஷ் வேகமாக அவள் அருகே சென்றபடி, “ஹே! என்ன செய்துட்டு இருக்க! விழுந்திர போற” என்றவன் அவள் கையை பிடித்து இழுத்தான்.
அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் மோதி நின்றவள், “அங்க மரத்தில் ஒரு பறவைக் கூட்டுல மூன்று குஞ்சு இருக்குது.. ஒன்னு கீழே விழுற மாதிரி இருக்குது.. அதான் அதை உள்ளே தள்ளி வைக்க பார்த்தேன்.. எனக்கு எட்டலை.. ப்ளீஸ் ப்ளீஸ் நீ அதை சரி செய்றியா?” என்று கெஞ்சினாள்.
“சரி.. நீ தள்ளி நில்லு” என்றவன் அவள் சற்று தள்ளி நின்றதும் அந்த கூட்டை நேராக வைத்து குஞ்சை சற்று உள்ளே தள்ளி வைத்தான்.
அவன் ஜன்னலை விட்டு சற்று நகர்ந்து, “இப்போ பார்” என்றான்.
வேகமாக எட்டி பார்த்தவள் பெரும் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்தபடி, “சூப்பர்.. ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.
தன்னை மறந்து அவளை சில நொடிகள் ரசித்தவன் பின் சுதாரித்து, “காபி” என்றபடி கையை நீட்டி காட்டினான்.
காபி அடங்கிய தட்டை எடுத்தவள் முதலில் அவனிடம் நீட்டினாள்.
அவன், “உங்க மூணு பேருக்கு தான் கலந்தேன்” என்றான்.
விஜயிடமும் நந்தகுமாரிடம் தட்டை நீடியவள் மீதம் இருந்த ஒரு காபி குவளையுடன் சமயலறைக்கு சென்று அதை சரி பாதியாக மற்றொரு குவளையில் ஊற்றிக் கொண்டு வந்து ஹரீஷிடம் நீட்டினாள்.
அவன் கைகளை கட்டிக் கொண்டு அவளை பார்க்க அவளும் அவனை தீர்க்கமாக பார்த்தாள்.
‘பிடிவாதம்’ என்ற முணுமுணுப்புடன் அவன் ஒன்றை எடுத்துக்கொள்ள அவள் விரிந்த புன்னகையுடன், “அதை நீ சொல்றியா!” என்றுவிட்டு காபியை பருக ஆரம்பித்தாள்.
அவள் இதழ்கள் காபியை பருக கண்களோ ஹரீஷை பருகியது. அதை உணர்ந்து அவன் ஜன்னல் அருகே சென்று வெளியே பார்ப்பது போல் அவளுக்கு முதுகு காட்டி நின்றுக் கொண்டான்.
செய்கையின் மூலம் விஜய் மற்றும் நந்தகுமாரை வெளியே செல்ல சொன்னவள் அவர்கள் வெளியேறியதும் ஹரீஷ் அருகே சென்று, “ரிஷி” என்று மென்மையாக அழைத்தாள்.
சட்டென்று திரும்பியவன் அங்கே அவர்கள் மட்டும் இருக்கவும் அமைதியாக மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பி நின்றுக் கொண்டான்.
அவள் மெல்லிய குரலில், “நான் சேர்மன் ரிலேடிவ்னும், என் அப்பா கோடீஸ்வரர்னும் தானே உன் மனசை மறைக்கிற?”
அவன் பார்வையை வெளியே பதித்தபடி, “என் மனதில் உள்ளதை உன்கிட்ட சொல்லிட்டேன்”
“அது பொய்”
“பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..”
“அப்போ என் கண்ணைப் பார்த்து என்னை காதலிக்கலைனு சொல்லு”
அவள் பக்கம் திரும்பியவன் நக்கல் குரலில், “இந்த சினிமா டயலாக்ஸ் என்னிடம் பலிக்காது”
“சரி என் கண்ணைப் பார்த்து சொல்லு”
ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன் பின் அவள் கண்களை பார்த்து, “நான் உன்னை காதலிக்கலை” என்றவன் சிறிது குரலை உயர்த்தி, “போதுமா” என்றான்.
கண்ணில் கண்ணீர் வடிய அவனது சட்டை காலரை பற்றியவள், “ஏன்டா இப்படி செய்ற? என் உள் மனசு சொல்லுது நீ என்னை விரும்புறனு.. உனக்கு யாரும் இல்லை.. உன்னை ஏற்க மாட்டாங்கனு நீயா நினைச்சுக்காத.. உனக்கு நான் இருக்கிறேன்.. என்னை திவ்யா என்ற தனி மனிஷியா பாரு.. நான் தனி மனிஷி தான்.. எனக்குனு நீ மட்டும்………..”
அவள் கையை பிரித்து எடுத்தவன், “ஒரு குடும்பத்தோட அருமை அது கிடைக்காத எனக்கு நல்லா தெரியும்.. அது கிடைத்த உனக்கு அதன் அருமை தெரியலை.. அதான் ஈஸியா தனி மனிஷினு சொல்லிட்ட”
“குடும்பம்!!!” என்று விரக்த்தியாக சிரித்தவள் வேறு எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள்.