“திவ்யா” என்று அவன் கோபத்துடன் அழைக்க,
அவளோ அலட்டிக்கொள்ளாமல், “அரவிந்த் சாருக்கு எல்லாம் தெரியும்னு நீ அவர் முன்னாடி இதை கொடுத்ததில் இருந்தும், நான் உன்னை ஒருமையில் உரிமையுடன் பேசியதை பார்த்து, அவர் ஷாக் ஆகாததில் இருந்தும் தெரியுது.”
அரவிந்த் வாய்விட்டு சிரிக்க, ஹரீஷ் அவனை முறைத்தான்.
அரவிந்த் புன்னகையுடன், “அன்னைக்கு நீ சொன்னது நினைவுக்கு வந்தது, அதான்.”
திவ்யா ஆர்வத்துடன், “என்ன சொன்னார் சார்?”
“என்னையும் உன்னையும் புத்திசாலியான இம்சைகள்னு சொன்னான்.”
“ஓ!” என்றவள், “புத்திசாலியான இவருடன் இருப்பவங்க புத்திசாலியா தானே இருப்பாங்க! ஆனா, அதில் ஒரு விதிவிலக்கு இருக்குது சார்”
அரவிந்த் புரியாமல் பார்க்க அவள், “இவருடன் தங்கியிருக்கும் ஒரு ஜந்துவை சொன்னேன்.”
“ஓ” என்று சிறு புன்னகையுடன் அரவிந்த் கூறினான்.
ஹரீஷ், “நீ கிளம்பு” என்றான்.
“ஏன்! உன்னிடம் பேசாமல் அரவிந்த் சாருடன் பேசுறேன்னு பொறாமையா?”
“நான் ஏன் பொறாமைப்படனும்?”
“அப்போ, ஏன் என்னை கிளம்பச் சொன்ன?”
‘என்னமோ செய்’ என்பது போல் அவளைப் பார்த்தவன், தனது புத்தகத்தை எடுத்து அதில் பார்வையை பதித்தான்.
அவள், அவனை ஓரப்பார்வை பார்த்தபடி அரவிந்திடம், “என்னை பற்றி என்ன சொன்னார்?”
அரவிந்த் சிறு புன்னகையுடன், “ஒன்னும் சொல்லலை”
அவளும் சிறு புன்னகையுடன், “ஜாடிக்கு ஏத்த மூடி”
அரவிந்தின் புன்னகை விரிந்தது. ஹரீஷோ அவர்கள் பேசுவதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், புத்தகத்தில் இருந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.
அரவிந்திடம், “ஓகே சார், நான் கிளம்புறேன்” என்றவள் ஹரீஷிடம், “சொல்ல மறந்துட்டேன்… நேத்து உன் ஆருயிர் தோழி போன் செய்தா.”
ஹரீஷ் புருவம் உயர்த்தி அவளை பார்க்க, அவள் விஷமப் புன்னகையுடன், “நீ இன்னைக்கு தர்ட் ஹவர் தர்ட் CSE போக வேண்டாம்னு சொல்லச் சொன்னா.”
“வாட்!”
அவனது அதிர்வை அவள் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க, அவனோ பதற்றத்தை மறைத்து, “நீ யாருன்னு அவங்ககிட்ட சொன்ன?”
அவள் சிரிப்புடன், “அதை அவளே வந்து சொல்லுவா.” என்று விட்டு சென்றாள்.
ஹரீஷ் தலையில் கை வைத்தபடி அமர, “இதுக்கே இப்படி உட்கார்ந்தா எப்படி பாஸ்!” என்ற திவ்யாவின் குரலில் அவன் நிமிர, அவள் அவன் மேஜை மீது இருந்த புது கைப்சியின் டப்பாவை எடுத்துக் கொண்டு, “பை, ரிஷி கண்ணா” என்றுவிட்டு சென்றாள்.
அரவிந்த், “நான் தான் அன்னைக்கே சொன்னேனே! நீயா ஒத்துக்கிட்டா சேதாரம் கம்மியா இருக்கும்னு.” என்று சொல்ல,
கோபத்துடன் அவனை முறைத்த ஹரீஷ், சைகையால் ‘வாய் மூடு’ என்றான்.
ஒவ்வொரு ஆசிரியராக வரத் தொடங்கினர். சிறிது நேரத்தில் அங்கே வந்த ஆசிரியை ரமாலக்ஷ்மி (திவ்யாவினால் முண்டக்கண்ணி என்று அழைக்கப்படுபவர்) ஹரீஷிடம், “என்ன சார் உங்களுக்கு கல்யாணம் ஆனதை சொல்லவே இல்லை!”
ஹரீஷ் உள்ளுக்குள் அதிர்ந்தாலும், வெளியே பெரிதாக காட்டிக் கொள்ளாமல், “என்ன?” என்று வினவினான்.
அரவிந்த் சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தான்.
அந்த ஆசிரியை, “நேத்து உங்க வைஃப் கிட்ட பேசினேன்… சொன்னாங்களா?”
பல்லை கடித்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த ஹரீஷ், “நேத்து உங்ககிட்ட பேசியது என்னோட பிரெண்ட்… வாய்ஸ் மாடுலேட்டர் மூலம் பேசியிருக்கான்… என்ன பேசினான்னு தெரியாது, பட் தர்ட் ஹவர் நான் தர்ட் CSE போக வேண்டாம்னு நீங்க சொன்னதை சொன்னான்.”
அவனை சிறிது வாய் திறந்தபடி பார்த்த அந்த ஆசிரியை ஆச்சரியத்துடன், “நீங்க இவ்ளோ நீளமா பேசுவீங்களா?”
அவன் அவரை முறைக்க,
“ஆனாலும் உங்க பிரெண்ட் இப்படி பேசியிருக்க கூடாது சார்”
அவன் பதில் கூறாமல் பார்க்க,
“கொஞ்சம் அதிகமா பேசிட்டார்”
அப்பொழுதும் அவன் பதில் பேசவில்லை என்றதும், அவர் மனதினுள், ‘என்ன பேசினான்னோ, அப்படியா? அவனுக்காக நான் சாரி கேட்றேன்னோ சொல்றாரா?’ என்று மனதினுள் திட்டினார்.
பிறகு அவர் புன்னகையுடன், “அப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகலை தானே!” என்றார்.
அவரது குரலில் இருந்த மகிழ்ச்சியை கண்டு கொண்டவன், “எனக்கு கல்யாணம் ஆகல தான். ஆனா, என் பர்சனல் விஷயத்தை பற்றி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.
அவனது பதிலில் அவர் அவமானமாக உணர, “சாரி சார்” என வெளியேறினார்.
ஒரு ஆசிரியர், “என்ன சார் இப்படி பேசிட்டீங்க?”
ஹரீஷ், “ஏன்?”
“இப்படியா முகத்தில் அடித்தது போல் சொல்லுவீங்க?”
“பின்ன உங்களை மாதிரி வழியச் சொல்றீங்களா?”
“அது… அப்படி இல்லை… ஆனா இப்படி பேசியிருக்க வேணாம்” என்று சிறிது அசடு வழிந்தபடி அவர் கூற,
“நான் இப்படி தான் சார்.” என்று ஹரீஷ் கோபத்துடனே கூற அரவிந்த் அவன் கையை அழுத்தமாக பற்றினான்.
அதில் கோபத்தை சற்று கட்டுக்குள் கொண்டு வந்தவன், தனது கவனத்தை புத்தகத்தில் திருப்பினான்.
ஆனால், திவ்யா மீது எழுந்த கோபம் அடங்க மறுக்கவும், அவன் எரிச்சலுடன் புத்தகத்தை மூடினான்.
அரவிந்த், “ஒரு காபி குடிச்சிட்டு வருவோம் வா.” என்றான்.
“நான் வரல…”
“நீ வர…” என்று அழுத்தத்துடன் கூறிய அரவிந்த், அவனது கையை பிடித்து எழுப்பி வலுகட்டாயமாக அழைத்துச் சென்றான்.
கல்லூரி உணவகத்தில் தனக்கு ஒரு காபியை எடுத்துக்கொண்டு, ஹரீஷிற்கு ஒன்றை கொடுத்தான் அரவிந்த்.
ஹரீஷ் கோபத்துடன், “எப்படி சொல்லியிருக்கா பார்! இவளுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?”
“அவ சொன்னது அதிகம் தான். ஆனா, சிலதை நீ யோசிக்கனும்.”
“என்ன?” என்று கோபத்துடனே கேட்டான்.
“ரமா மேம் நம்பரை சேவ் பண்ணியிருக்கியா?”
“அவங்க நம்பர் எனக்கு தெரியாது.”
“ஸோ… அது அவங்கனு தெரியாம அட்டென்ட் செய்திருப்பா.”
“இதில் யோசிக்க என்ன இருக்குது?”
“ரமா மேம்னு தெரிந்து இருந்தால், நிச்சயம் அட்டென்ட் செய்திருக்க மாட்டா.”
“யாரா இருந்தா என்ன? அவ ஏன் அட்டென்ட் செய்யனும்?”
“ரமா மேம் நம்பரில் இருந்து ரெண்டு மிஸ்டு கால்ஸ் பார்த்தேன்… ஸோ.. திரும்ப திரும்ப கூப்பிடவும், அட்டென்ட் செய்திருப்பா”
“…”
“என்ன?”
“அதுக்காக… இப்படியா சொல்லுவா?”
“வேற எப்படி சொல்லுவா?”
“டேய்” என்று அவன் பல்லை கடிக்க,
அரவிந்த், “நிதானமா யோசி… காதலினு சொல்லி இருந்தா, உனக்கோ அவளுக்கோ அது கௌரவமா இருக்குமா? ஏன்னா ரமா மேம் கூப்பிட்டது நைட் ஒன்பது மணிக்கு…”
“….”
“உன்னை காதலிப்பவள், தன்னை எப்படி உன் சகோதரினு சொல்ல முடியும்?”
“நான் எப்படி சமாளிப்பேன்னு கொஞ்சமாவது யோசிச்சாளா?”
“அதை யோசித்து தான் மனைவினு சொல்லி இருக்கிறா… திவ்யானு சொல்லியிருந்தால், உன் நிலை என்னவா இருந்திருக்கும்?”
சில நொடிகள் மௌனத்தில் கழிய,
“நீ என்ன தான் சொன்னாலும் என்னால் இதை ஏற்க முடியலை”
“அவ மனசளவில் உன் மனைவியா மாறிட்டானு நினைக்கிறேன்… நீ கொஞ்சம் யோசிச்சு…”
“ஒரு இழவும் தேவை இல்லை…”
“ஏன் டா இப்படி பிடிவாதம் பிடிக்கிற?”
“…”
“உனக்கும் அவளை பிடித்து தானே இருக்கு… அப்புறம்…”
“பிடித்தம் வேறு, காதல் வேறு… அவ…”
“சேர்மன் சார் ரிலேடிவ்னு சொல்லாதே…! எவ்ளோ நாள் இப்படியே உன்னை நீயே ஏமாத்திக்கப் போற?”
“நான் ஒன்னும் ஏமாத்திக்கல… நிஜமாவே என் மனசில் காதல் இல்லை”
அரவிந்த் தீர்க்கமாகப் பார்க்க,
ஹரீஷ், “வா போகலாம்.” என்று கூறி அவனை அழைத்துச் சென்றான்.
இணைய காத்திருப்போம்…