விலகல் – 20
ஹரீஷ் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்த போது,
“கிச்சனில் இருந்துட்டு ரூமில் இருக்க எனக்கு போனா! இது உனக்கே ஓவரா தெரியல…” என்றபடி சமையலறையினுள் நந்தகுமார் வந்தான்.
“என்னடா சொல்ற?” என்று சிறிது அலறிய ஹரீஷ், நந்தகுமாரின் கையில் இருந்து கைபேசியை பிடுங்கினான்.
நந்தகுமார் ‘இவனுக்கு என்னாச்சு!’ என்று பார்த்துக் கொண்டிருக்க,
ஹரீஷ் அழைப்பை எடுத்து, “ஹே! என் போனை எப்படி அன்-லாக் செஞ்ச?” என்றான்.
வாய்விட்டு சிரித்த திவ்யா, “என்ன பாஸ்! இப்படி சின்னப்புள்ளத் தனமா கேட்கிறீங்க!”
“…”
“சொந்தமா பாஸ்வர்ட் ஹக்கிங் மிஷின் செஞ்சு வச்சிருக்கிறேன்… என்னோட மினி ப்ராஜெக்ட் இது தான்.”
“…”
“ஹா…ஹா…ஹா… என்ன பாஸ் சத்தத்தையே காணும்?”
“என்ன சொல்லனும்?”
“எதுவும் சொல்ல வேணாம்… ஒழுங்கா நாளைக்கு வரும் போது எனக்கு ஒரு புது மொபைல் வாங்கிட்டு வா.” என்றவள் பின் காதலுடன், “ரிஷி கண்ணா… ஐ லவ் யூ.” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
சிலையாய் நின்றிருந்த நண்பனை உலுக்கிய நந்தகுமார், “என்னடா நடக்குது? உன் போன் யார்கிட்ட இருக்குது?”
“திவ்யா கிட்ட இருக்குது.”
“திவ்யா யாரு?”
ஹரீஷ் கொலைவெறியுடன் முறைக்க, ஒரு அடி பின்னால் நகர்ந்த நந்தகுமார், “சத்தியமா அது யாருனு எனக்கு தெரியாதுடா.”
“சொர்ணாக்கா” என்று ஹரீஷ் பல்லை கடித்துக்கொண்டு கூற, நந்தகுமார் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
ஹரீஷ் நண்பனை அடிக்க பொருளை தேட, சமையலறையை விட்டு ஓடிய நந்தகுமார் சிரித்தபடி, “சேதாரம் தொடங்கிருச்சு போல!” என்றபடி தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
மணியை பார்த்த ஹரீஷ், திவ்யாவிற்கு கைபேசி வாங்க வெளியே சென்றான்.
சிறிது நேரம் ஹரீஷ் கைபேசியை நோண்டிய திவ்யா, அதிலிருந்து ஹரீஷின் சில புகைப்படங்களை விஜய் கைபேசிக்கு அனுப்பினாள்.
அவளை அழைத்த விஜய், “என்ன மச்சி… சார் மொபைலை அன்-லாக் செஞ்சிட்ட போல!”
“இது என்ன ஜுஜுபி!”
“அதானே! திவ்யாவா, கொக்கா!”
“ஒரு நம்பரில் இருந்து செகண்ட் கால் வருது”
“நீ எந்த போனையும் அட்டென்ட் செய்யாத”
“இல்லை டா… இதே நம்பரில் இருந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியும் ரெண்டு கால் வந்துச்சு”
“இப்போ என்ன செய்ய?”
“நீ லைனில் இரு.” என்றவள் அந்த அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றாள்.
“இது ஹரீஷ் சார் நம்பர் தானே?” என்று ஒரு பெண் குரல் சிறு சந்தேகத்துடன் ஒலித்தது.
“ஆமா… நீங்க யாரு?”
“நான் அவர் கூட வேலை பார்க்கிறேன்… ரமா மேம்னு சொல்லுங்க.” என்றதும், திவ்யாவிற்கு கோபம் வந்தது.
அவள் கோபத்தை அடக்கியபடி, “என்ன விஷயம்?”
“சார் இல்லையா?”
“ஆமா, வெளிய போயிருக்கார்”
“எப்போ வருவார்?”
திவ்யா பல்லை கடித்துக்கொண்டு, “என்ன விஷயம்னு சொல்லுங்க… நான் சொல்லிக்கிறேன்”
“நீங்க?”
“நீங்கன்னா?”
“நீங்க யாரு?”
“ஹும்ம்… அவர் மனைவி…”
“என்னது!”
“எதுக்கு இவ்ளோ ஷாக்?”
“இல்ல… அது… வந்து… சாருக்கு கல்யாணம் ஆனது தெரியாது.”
“அதான் இப்போ தெரிஞ்சுக்கிட்டீங்களே… என்ன விஷயம்னு சொல்லுங்க?”
“ஹன்… ஒன்னுமில்லை”
“அப்போ எதுக்கு போன் செஞ்சீங்க?”
“அது…”
“அந்த அது தான் என்னன்னு கேட்கிறேன்.”
“உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிச்சேன்.”
“என்கிட்டயே என் கணவரிடம் கடலை போட போன் செய்தேன்னு எப்படி சொல்லனு யோசிக்கிறீங்களா?” என்று இவள் பல்லை கடித்துக் கொண்டு வினவ,
“அப்படிலாம் இல்லை மேம்” என்று பதறினார்.
“கோபப்படாம நீ பதறியதில் இருந்தே, அது தான் உண்மைனு தெரியுதே!”
திவ்யா அவர் எண்ணத்தை சரியாக கணித்துக் கூறவும், அந்த ஆசிரியைக்கு குளிமி(AC) அறையிலும் வியர்த்தது. அவர் அவசரமாக, “இல்ல மேம்… நாளைக்கு தர்ட் ஹவர் தர்ட் CSE சார் போக முடியுமானு கேட்க…”
“இதை தான் காலேஜில் வைத்தே கேட்டுட்டீங்களே!”
“அது… ஆ…மாம்… ஆனா இப்போ வேணாம் சொல்ல தான் போன் செய்தேன்… அதை சாரிடம் சொல்லிடுங்க.” என்றவர், இவள் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தார்.
அவர் துண்டித்ததும், விஜயின் அழைப்பை தொடர்ந்தாள்.
விஜய், “யாரு திவி?”
“அந்த முண்டக்கண்ணி தான்” என்று கடுப்புடன் கூறினாள்.
“நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற? சார் தான், அவளை கண்டுக்கிறதே இல்லையே!”
“அதனால் தான், இன்னைக்கு அவன் சேதாரமில்லாம தப்பித்தான்.”
சிரித்த விஜய், “சரி, முண்டக்கண்ணி என்ன சொல்றா?”
திவ்யா அந்த ஆசிரியையுடன் பேசியதை கூறியதும், புன்னகையுடன், “செம போ” என்றவன், “ஆனா, அவ சாரிடம் உங்களுக்கு கல்யாணம் ஆனதை சொல்லலையேனு கேட்டா?”
“நிச்சயம் கேட்பா”
“திவி!”
“இன்னைக்கு என்கிட்டயே இந்த முண்டக்கண்ணியுடன் பேசுவேன்னு சொன்னான்… படட்டும்”
விஜய் சிறு புன்னகையுடன், “இருந்தாலும் ஹரி சார் பாவம் தான்”
“இரு, நாளைக்கு சுனிதா கிட்ட உன்னை போட்டு கொடுத்து கோர்த்து விடுறேன்”
“நோ திவி… நோ வயோலென்ஸ்… மீ யுவர் பெஸ்ட் பிரெண்ட்”
அவன் சொன்ன விதத்தில் புன்னகைத்தவள், “பிழைச்சு போ” என்றாள்.
“நன்றி மகாராணியாரே!”
“ஹ்ம்ம்” என்று சிரித்தவள், “ஓகே பை விஜி.” என்று அழைப்பை துண்டித்தாள்.
அடுத்த நாள் காலையில் திவ்யா கல்லூரிக்குச் சென்ற போது, ஆசிரியர் அறையில் ஹரீஷும், அரவிந்தும் மட்டும் இருந்தனர்.
அவள் ஆரிசியர் அறை அருகே வந்ததும், ஹரீஷ் அவளை அழைக்க… அவள் வேண்டுமென்ற காது கேட்காதது போல் செல்ல,
ஹரீஷ் சிறு கோபத்துடன், “நீ கூப்பிடு.” என்று அரவிந்திடம் கூறினான்.
அரவிந்த் அழைத்ததும், திரும்பி ஆசிரியர் அறைக்கு சென்றாள்.
ஹரீஷ் அவளை முறைக்க, அவளோ அவனை கண்டு கொள்ளாமல் அரவிந்திடம், “எஸ் சார்” என்றாள்.
அரவிந்த் சிறு புன்னகையுடன், “நான் அம்பு தான்… எய்தவன் அவன்.”
“அம்பு எய்யப்பட்டதின் காரணம் என்னவோ?”
“அதை அங்கே கேளு”
ஹரீஷ் பக்கம் திரும்பியவள், சிறு நக்கல் குரலில் புன்னகையுடன், “என்ன சார் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல!”
“நான் எப்போ வந்தா உனக்கென்ன?”
“என்னக்கென்னனு சொல்லவா?” என்றவள் அரவிந்தை விழிகளால் சுட்டிக் காட்ட,
ஹரீஷ் புது கைபேசி அடங்கிய டப்பாவை அவள் முன் நீட்டினான்.
அவள் மகிழ்ச்சியுடன், “தாங்க் யூ ரிஷி” என்றபடி அதை வாங்கினாள்.
அரவிந்த், “ரிஷி யா!”
அவள் நாக்கை கடித்தபடி ஹரீஷை பார்க்க,
அவனோ, அவளை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தான்.
அவள் கண்களில் மன்னிப்பு வேண்ட, அவன் முறைப்பதை விட்டாலும், இறுக்கமான முகத்துடன் கையை நீட்டி, “என் மொபைல்” என்றான்.
அவள், அவனது கைபேசியை பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள். பின் அவன் வாங்கிய கைபேசியை ஆர்வத்துடன் பிரித்து பார்த்து மகிழ்ச்சியுடன், “எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குது… தேங்க்ஸ்.”
“உன் லெவலுக்கு என்னால் முடியாது… என்னால் அதிகம் முடிந்தது இந்த ஸ்மார்ட் போன் தான்.”
அவள் அவன் கண்களை ஆழ்ந்து பார்த்து, “நீ பேசிக் மாடல் 1100 வாங்கி தந்திருந்தாலும், நான் இப்படி தான் சந்தோஷப் பட்டிருப்பேன்.”
அவளது குரலிலும், அவள் சொன்ன வார்த்தைகளிலும் ஒரே ஒரு நொடி கட்டுண்டவன், அடுத்த நொடியே சுதாரித்து, “இந்த சினிமா வசனத்தையெல்லாம் விட்டுட்டு, போய் படிக்கிற வேலையை பார்…”
அவள் சிறிதும் முகம் வாடாமல் புன்னகையுடன், “ஓ! அப்போ தான் அரியர் எல்லாம் கிளியர் பண்ண முடியும்… அப்போ தானே, டாப்பரான உன் பக்கத்தில் வர முடியும்!”