
குறிப்பு: நேத்து நைட் 18th எப்பி போட்டு இருந்தேன்.. படிக்காதவங்க படிச்சுக்கோங்க..
முக்கிய குறிப்பு: நாளையில் இருந்து எனக்கு M.E ஆரம்பிக்குது.. ஸோ எப்பி evening தான் வரும்.. கடவுள் அருளுடனும், என்னவனின் துணையுடனும், உங்களின் ஆதரவுடனும் படிப்பு & எழுத்து பணியை சரிவர செய்யணும்!!!
விலகல் – 19
ஒரு நாள், கணினி ஆய்வுக் கூடத்தில் திவ்யாவின் வகுப்பை சேர்ந்தவர்கள், ஹரீஷ் சொல்லிக் கொடுத்ததை, தங்கள் கணினியில் ஆய்வு செய்து கொண்டு இருந்தனர். அந்த ஆய்வுக் கூடம் சதுரங்கம் வடிவில் இருந்தது.
ஹரீஷ், ஆய்வு கூடத்தின் நடுவில் அமர்ந்து மேசையில் இருந்த பதிவுருப்புத்தகங்களை(record notebooks) திருத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே இருந்த வரிசையின் மூலையில் தான் திவ்யா அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது, திவ்யா அவளது கைபேசியில்,
“கண்ணாமூச்சி ஏனடா…
கண்ணாமூச்சி ஏனடா…
என் கண்ணா…
கண்ணாமூச்சி ஏனடா…
என் கண்ணா…
நான் கண்ணாடி பொருள் போலடா….” என்ற பாடலை ஒளிபரப்ப,
ஹரீஷ், கோபத்துடன் அவள் அருகே வந்து கையை நீட்டினான்.
அவன் எழுந்ததும் பாடலை நிறுத்தியவள், ஒன்றும் அறியாதது போல், “என்ன சார்?”
“உன் மொபைல் கொடு”
“எதுக்கு சார்?”
“கொடு”
“எதுக்குனு சொல்லுங்க”
“இப்போ நீ தரலை… இனி வேறு யாரவது வந்து கிரிப்டோக்ரஃப்பி எடுப்பாங்க.” என்றதும், அவள் கைபேசியை அவன் கையில் வைத்தாள்.
அடுத்த நொடி, அவன் கீழே எறிந்த வேகத்தில் அது உடைந்து சிதறியது. அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, அவன் அவளைக் கண்டு கொள்ளாமல் தன் இடத்தில் அமர்ந்தான்.
அவள் சிதறிய கைபேசியை தொடக் கூட இல்லை.
“ஹும்ம்… ப்ரோக்ராம் போடுங்க” என்ற ஹரீஷின் கோபக் குரலில், மாணவர்கள் தங்கள் பார்வையை கணினியிடம் திருப்பினர்.
பவித்ராவும் விஜய்யும் திவ்யாவை பார்க்க,
அவளோ, ஹரீஷை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
விஜய் சைகையில் ‘உன் வேலையை பார்’ என்பது போல் பவித்ராவிடம் கூற…
அவள் தோழியை பார்த்தபடி கணினியில் நிரலை(program) போட ஆரம்பித்தாள். விஜய்யும் அதைத் தான் செய்தான்.
அன்று மதியம் இருந்த மூன்று வகுப்புகளுமே, ஹரீஷின் ஆய்வு(Lab) வகுப்பு தான். அங்கே இருந்த நேரம் முழுவதும், அவள் அவனை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். ஆனால், அவன் அவளை சிறிதும் கண்டு கொள்ளவில்லை.
வகுப்பு முடியும் தருவாயில், அங்கே ஒரு ஆசிரியை வந்தார்.
ஹரீஷ் ‘என்ன’ என்பது போல் பார்க்கவும்,
மனதினுள் ‘வாயை திறந்தால் முத்தா உதிர்ந்திடும்?’ என்று ஹரீஷை திட்டிய அந்த ஆசிரியை, அவனிடம் புன்னகையுடன், “நாளைக்கு மார்னிங் தர்ட் ஹவர், தர்ட் CSE போக முடியுமா?”
ஒரு நொடி யோசித்த ஹரீஷ், “சரி” என்றான்.
“நீங்க எப்போதும் இப்படி தானா?”
“எப்படி?”
“இப்படி ஒரு வார்த்தையில் தான் பேசுவீங்களா?”
அவன் தோளை குலுக்க, அவர் செல்லமாக முறைப்பது போல் பார்த்து, “இது டூ மச் சார்” என்றார்.
இவர்களை பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவின் முறைப்பில், காரம் கூடியது. அதை ஹரீஷ் உணர்ந்தாலும், இப்பொழுதும் அவன் பார்வை அவள் பக்கம் திரும்பவில்லை.
அப்பொழுது வகுப்பு முடிவதற்கான மணி அடிக்கவும், மாணவர்கள் ஹரீஷிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தனர்.
திவ்யா எழாமல் இருக்கவும், பவித்ராவும் விஜயும் அவள் அருகில் வந்தனர்.
அவளோ ஹரீஷை முறைத்தபடி, “நீங்க கிளம்புங்க” என்றாள்.
அவளது மனநிலையை உணர்ந்து பவித்ரா தயங்க, விஜய் சிதறியிருந்த திவ்யாவின் கைபேசியையும், கைபேசிச்சில்லுவையும்(SIM) எடுத்துக் கொண்டு பவித்ராவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
அந்த ஆசிரியை திவ்யாவை பார்த்து, “நீ கிளம்பல?”
அவள் கடுகடுத்த முகத்துடன், “சார் கிட்ட சந்தேகம் கேட்கணும்”
“கேளு”
“நீங்க பேசி முடிச்ச பிறகு கேட்டுக்கிறேன்.”
“பெருசா ஒன்னும் பேசல… நீ கேளு”
“பரவாயில்லை… நான் வெயிட் பண்றேன்.”
ஹரீஷ், “என்ன டவுட்?”
“ரமா மேம் இப்போ கிளம்பிடுவாங்க சார்… அதுக்கு அப்புறம் கேட்கிறேன்.” என்றாள்.
அவன் அந்த ஆசிரியை அறியாமல் அவளை முறைக்க,
அவளோ சிறு புன்னகையுடன் அந்த ஆசிரியை பார்த்து, “நான் வெயிட் பண்றேன் மேம்.” என்றாள்.
அந்த ஆசிரியை திவ்யாவை மனதினுள் திட்டியபடி, அடுத்து பேச்சை எப்படி தொடர என்று யோசிக்க,
“சரி மேம், நாளைக்கு பார்க்கலாம்.” என்ற ஹரீஷ் அவரது பதிலை எதிர் பார்க்காமல், “என்ன டவுட்?” என்றபடி திவ்யாவை நோக்கிச் சென்றான்.
அவள், “மேம்…” என்று ஆரம்பிக்க,
அவன் அழுத்தமான குரலில், “என்ன டவுட்?” என்று வினவினான்.
அவள் கணினியை பார்த்து, “இதில் எரர் வந்துட்டே இருக்குது.” என்றாள்.
அவனும் மும்மரமாக கணினியில் பார்வையை பதித்தபடி, அவள் கேட்டதை விளக்கவும்,
அந்த ஆசிரியை, “சரி சார், நான் கிளம்புறேன்.”
“சரி மேம்” என்றவனது பார்வையோ, கணினியில் தான் இருந்தது.
அவர் மனதினுள் திவ்யாவை திட்டியபடி கிளம்பினார்.
அவர் கிளம்பியதும், அவன் அவளைப் பார்த்து கோபத்துடன், “உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா?”
அவள் கடுப்புடன், “அதான் உன்னிடம் நிறைய இருக்குதே! கொஞ்சம் எனக்கு கொடு.”
“உன்னையெல்லாம்” என்று அவன் பல்லை கடிக்க,
அவளோ கோபத்துடன், “அவளுடன் உனக்கு என்ன பேச்சு?”
“அது உனக்கு தேவை இல்லாதது.”
“தேவை என்பதால் தான் கேட்கிறேன்.”
“என் சொந்த விஷயத்தில் நுழைய, உனக்கு எந்த உரிமையும் இல்லை”
“உன் சொந்த விஷயத்தில் நுழைய, எனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது.”
“என் பொறுமையை சோதிக்கிற… என்னை மறுபடியும் அடிக்க வச்சிராத… நீ இங்கிருத்து கிளம்பு.”
“இன்னொரு முறை நீ அவளுடன் பேசியதை பார்த்தேன்…”
“அப்படி தான் பேசுவேன்… என்ன செய்வ?”
கோபத்துடன், “என்ன செய்வேனா!” என்றவள் அரை நொடி யோசித்தாள்… பின் என்ன பேசுகிறோம் என்றே உணராமல், “அவ முன்னாடியே உன்னை கிஸ் பண்ணுவேன்.” என்று அவள் சொல்லி முடிக்கும் முன், அவள் கன்னத்தில் அடித்திருந்தான்.