அன்று மாலை திவ்யா விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, “ஹாய் அக்கா” என்றபடி புன்னகையுடன் இவள் முன் ஜனனி வந்து நின்றாள்.
இவள் கண்டு கொள்ளாமல் நடக்க,
ஜனனி, “அம்மா மேல் உனக்கு என்ன கோபம்?”
இவள் இறுக்கத்துடன் நடந்து கொண்டே இருக்கவும்,
ஜனனி ஓடிச் சென்று இவள் வழியை மறித்து நின்றபடி, “எனக்கு இன்னைக்கு தெரிந்தே ஆகணும்.” என்று உறுதியான குரலில் கூறினாள்.
ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்த திவ்யா, உணர்ச்சிகளற்ற குரலில், “பிறந்ததில் இருந்தே அம்மா அப்பா பாதுகாப்பில் வளரும் உன்னால், என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது… என் வழியை விடு.”
“உனக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் முன்னாடியே, நீ வீட்டில் அம்மா, அப்பா கூட தானே வளருற…!”
“அதாவது நானும், நீயும் ஒரே மாதிரி சூழலில் தான் வளர்ந்தோம்னு சொல்ற..!”
“ஹும்ம்”
“ஓ! உன் பதினைந்தாவது வயசில் நீ தத்தெடுக்கப்பட்டவனு வந்து யாரும் உன்கிட்ட சொன்னாங்களா?”
ஜனனி வார்த்தைகளின்றி, ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
“இல்லை தானே…? அப்போ மூடிட்டு போ.” என்று விட்டு இவள் நடக்க ஆரம்பிக்க,
அவளது கையை பிடித்து நிறுத்திய ஜனனி, “அப்பாவை ஏத்துக்க முடிந்த உன்னால், என்னை ஏன் ஏத்துக்க முடியல…?”
தனது கையை வேகமாக உதறியவள், “நான் யாரையும் ஏத்துக்கலை” என்று விட்டு நடக்கத் தொடங்கினாள்.
ஜனனி சிறிது கலங்கிய குரலில், “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் தெரியுமா? நீ என் அக்கானு தெரிந்த நாளில் இருந்து, எனக்கு எது வாங்கினாலும் உனக்கும் சேர்த்து தான் வாங்குறேன் தெரியுமா? நான் சாப்பிடும் போது கூட, உனக்கு தனியா ஒரு ப்ளேட் எடுத்து வைச்சிட்டு தான் சாப்பிடுவேன்…”
ஒரு நொடி நடையை நிறுத்திய திவ்யா, அடுத்த நொடியே வேகமாக நடந்தாள்.
“எனக்கு என் அக்கா வேணும்.” என்ற ஜனனியின் தவிப்பு நிறைந்த குரல் தன்னை பலவீனப்படுத்துவதை உணர்ந்து, இன்னும் வேகமாக விடுதியை நோக்கிச் சென்றாள்.
அறைக்கு சென்று கதவை சாற்றி, அதன் மீது சாய்ந்து நின்றவளின் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
……………………
அதே நேரத்தில் ராஜாராம் அறைக்குச் சென்ற ஜனனி, சோர்ந்து போய் அவர் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
அவளுக்கு அருந்த நீரை கொடுத்த ராஜாராம், “என்னடா?”
“அக்கா, நம்மை ஏற்கவே மாட்டாளா பா?”
“திவிமா என்ன சொன்னா? ஏன் சோர்ந்து போய் இருக்கிற? இது உன் குணம் இல்லையே!”
“ச்ச்… என்னை விட அக்கா ரொம்ப பிடிவாதக்காரியா இருக்காளே பா”
“நீ விக்ரமாதித்தனை தொடர்ந்த வேதாளம் மாதிரி இருக்க வேண்டாமா?”
“சைக்கிள் கேப்பில் என்னை வேதாளம்னு சொல்றீங்க.” என்று அவள் செல்லமாக முறைக்கவும்,
ராஜாராம் புன்னகையுடன், “ஜனா இஸ் பேக்” என்றார்.
“அக்கா ரொம்ப பாவம் பா… அந்த லேடி இப்படி உண்மையை போட்டு உடைச்சிருக்க வேணாம். அம்மாவும், அடுத்த உண்மையை சொல்லியிருக்க வேணாம். நீங்களாவது அம்மாவை தடுத்து இருக்கலாம்.”
“சூழ்நிலை அப்படி டா…”
“அப்படி என்ன சூழ்நிலை?” என்று கோபத்துடன் வினவினாள்.
“சாருலதாவும், ராகவனும் அவளை தத்தெடுத்த உண்மையை சித்தி மூலம் தெரிந்ததும், அவ காணாமப் போய்ட்டா டா… நானும் அம்மாவும் எப்படி துடிச்சோம் தெரியுமா? ஒரு வழியா அவளை தேடி கண்டுபிடிச்சோம். ஒரு அநாதை ஆசிரமத்தில் இருந்தா.
ராகவன் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போனதும், நாங்க அங்க போனோம். இனி அவனிடம் திவிமா இருப்பது நல்லதில்லைனு தான், எங்களுடன் கூட்டிட்டு வர முடிவுடன் உண்மையை சொல்லி கேட்டோம். அப்போ அம்மாவுக்கும், ராகவனுக்கும் சில வாக்குவாதம் நடந்தது. அதையெல்லாம் திவிமா கேட்டுட்டு இருந்தது, எனக்கு தெரியாது. தெரிந்து இருந்தா, அம்மாவை தடுத்திருப்பேன்.” என்று வேதனையுடன் கூறியவர், ஒரு நொடி கண்களை மூடித் திறந்து,
“திடீர்னு யாரோ கீழ விழும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தா, அங்கே திவிமா கீழ கிடந்தா. கண் முழிச்ச திவிமா யாருடனும் பேசவே இல்லை… நானும் அம்மாவும் பேச முயற்சி செய்தப்ப தடுத்தவ, ஒரே ஒரு கேள்வி தான் கேட்டா…”
“என்னப்பா கேட்டா?”
“உன் வயசை கேட்டா… அதை சொன்னதும், ‘எல்லோரும் வெளியே போங்க… எனக்கு யாரும் வேணாம்… என்னை தனியா விடுங்க’ னு கத்தினா…
ராகவன் குட்டிமானு கூப்பிட்டதும், அவனை வெறுப்புடன் பார்த்தவ.. கலங்கிய கண்களுடன் ‘ஐ ஹெட் யூ’ னு சொன்னா… எனக்கு தெரிந்து, அது தான் அவனிடம் அவ கடைசியா பேசியது…”
“அந்த ஆளுக்கு தேவை தான்.” என்று வெறுப்புடன் கூறினாள்.
“அப்புறம் ரெண்டு வருஷம் வேறு வழியே இல்லாம அவன் வீட்டில் இருந்தாலும், அவ யாருடனும் பேசல… அவ மன அழுத்தம் தாங்காம கிளாஸ் டெஸ்ட்டில் பெயில் ஆனது தெரிந்ததும், நான் ஸ்கூலில் அவளை தனியா பார்த்து பேசினேன்.
என்னை பார்க்க மறுத்தவளை, ஸ்கூல் பிரின்சிபால் உதவியோட பார்த்துப் பேசினேன். அவ மனநிலையை நான் சரியா கணித்து, அவளோட போக்கில் போய் பேசவும், என் மேல் சின்ன நம்பிக்கை அவளுக்கு வந்தது.
அவ ஒத்துக்கலனாலும், இலை மறை காயா அவளுக்கு என் மேல் பாசம் இருப்பது தெரியும். எனக்கு தெரியும்னு அவளுக்கும் தெரியும்…! அவளை நல்லாத் தெரிந்ததால், இன்று வரை அதை பற்றி நான் பேசியது இல்லை.
அப்புறம் தியான கிளாஸில் சேர்ந்து படிப்பில் கவனத்தை திருப்பினா… ராகவனை வெறுப்பேத்தும் ஒரே காரணத்துக்காக, இங்கே இஞ்சினீரிங் சேர்ந்தாள்.”
“எதுக்கு ஒவ்வொரு செம்மிலும் ஒரு பேப்பர் அரியர் வைக்கிறா?”
“அது அவ டுவேல்த்தில் ஸ்டேட் ரேங்க் வந்தப்ப, ராகவன் ரொம்ப சந்தோஷப்பட்டான்… அவ லெவன்த்தில் கிளாஸ் டெஸ்ட்டில் பெயில் ஆனப்ப, ரொம்ப பீல் செய்திருப்பான் போல… ஸோ வேணும்னே இப்படி செய்றா.”
“இதனால் அவ எதிர்காலம் தானே பாழாகுது!”
“என்ன செய்றது! பக்குவம் இல்லாத பதினைந்து வயதில் அவ மனசில் ஆழமா பதிந்ததோட விளைவு.. அப்புறம் பதினேழு வயதில் கோபத்தில், வெறுப்பில் எடுத்த முடிவை இன்னும் பிடிச்சிட்டு தொங்குறா…”
“ஹும்ம்… ஆனாலும் பதினைந்து வயது சின்ன பெண், இந்த கொடிய ரெண்டு உண்மைகளை எப்படி தாங்கியிருப்பாள்?”
“அதனால் தான், நான் அவ போக்கிலேயே போறேன்… பார்க்கலாம்.” என்று பெருமூச்சை வெளியிட்டார்.
…………….