திவ்யா உதட்டை பிதுக்கவும்,
“என் பீபி ஏத்தாம, சீக்கிரம் சொல்லுடி பிசாசு”
“அவன் ஒன்னும் சொல்லலை.”
“என்னடி சொல்ற? எப்போ அவரிடம் சொன்ன?”
“அன்னைக்கு அவன் ஹாஸ்டல் வந்தான்னு சொன்னேனே, அப்போ தான் ப்ரொபோஸ் பண்ணேன். ஆனா நான் நேரிடையா சொல்லலை… 24.10.56 னு சொன்னேன்…”
“எதில் விளையாடுவதுனு இல்லையா திவி.” என்று பவித்ரா கோபத்துடன் வினவினாள்.
“எனக்கு என்னவோ யாரும் சொல்லாத முறையில் என் காதலை சொல்லணும்னு தோனுச்சு… அவன் க்ரிப்டோக்ராபி தானே எடுக்கிறான்! அதான் இப்படி சொன்னேன்…”
“ச்ச்… ஏன்டி தலையை சுத்தி மூக்கை தொடுற! இதை அவர் எப்போ கண்டு பிடிச்சு…”
“அதெல்லாம் கண்டு பிடிச்சிட்டான். ஆனா ஒத்துக்க மாட்டிக்கிறான்… ‘எனக்கு வேற வேலை இல்லையா! இதை நான் ஏன் கண்டு பிடிக்கணும்’ னு சொல்றான்.”
“அது உண்மையா கூட இருக்கலாமே!”
‘இல்லை’ என்பது போல் மறுப்பாக தலையை ஆட்டியவள், “நிச்சயம் கண்டு பிடிச்சிட்டான்.”
“எதை வைத்து சொல்ற?”
“நான் கண்டுபிடிச்சிட்டானானு கேட்டதும், அவன் கோபமா பேசினான். ஆனா……………”
“திவி… நான் எதிர்மறையா பேசுறேன் நினைக்காதே… ஒருவேள அவர் நிஜமாவே அதை பற்றி யோசிக்காம இருக்கலாம்… அதாவது நீ அவரை பாதிக்காமல் இருக்கலாம்… நீ அவரை பாதித்து இருந்தா, உடனே அதைத் தான் கண்டு பிடித்து இருப்பார்… இல்லை, நீ சொல்ற மாதிரி கண்டு பிடித்து அதை மறுக்கிறார்னா, அவர் உன்னை விரும்பலைனு தானே அர்த்தம்…! எப்படி பார்த்தாலும், அவர் உன்னை விரும்பலைனு தானே அர்த்தம் வருது.”
திவ்யா, “நிச்சயம் அப்படி இல்ல… அவனுக்கு என் மேல் தனி அக்கறை இருக்குது.”
“அக்கறை வேறு காதல் வேறுடி”
“உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது!” என்று சிறு தவிப்புடன் கூறிய திவ்யா,
“அன்னைக்கு அவனோட முகத்தில் கோபத்தை பார்த்தேன். ஆனா, என் இறுக்கம் புரிந்து கோபத்தை விட்டு, என் மனதை திசை திருப்பி.. என் மனநிலைய மாற்றினான். அந்த தைரியத்தில் தான், அப்போவே நான் ப்ரொபோஸ் பண்ணேன். இப்போ பேசுனப்ப கூட கோபமா பேசினவன், அவன் பேச்சு என் வேதனையை கிளறுதுனு சொன்னதும், சட்டுன்னு கோபத்தை கைவிட்டான். எனக்கு தெரிந்து, அவன் கோபம் வந்தால் லேசில் மலை இறங்குபவனா தெரியல…! ஆனா, என் விஷயத்தில் நிச்சயம் அவன் அப்படி இல்லை.”
“இது எல்லாம் உன் யூகம் மட்டும் தானே!”
“யூகம் தான். ஆனா இது தான் உண்மையும் கூட… எனக்கு இருநூறு சதவிதம் நம்பிக்கை இருக்கு.”
“இதுக்கு மேல எனக்கு என்ன சொல்லனு தெரியலை திவி… நீ சந்தோஷமா இருக்கனும்… எனக்கு அது தான் வேணும். உன் வேகம் பார்த்து எனக்கு ரொம்ப பயமா தான் இருக்குது. நூற்றில் ஒரு சதவிதமா அவர் உன் காதலை ஏற்கலனா, உன்னால் அதை தாங்கிக்க முடியாது… கொஞ்சம் பொறுமையா போடி ப்ளீஸ்!”
“இதில் நான் என்ன செய்ய? மனம் அறிவு சொல்றதை கேட்க மாட்டேங்குதே! ஆனா, எனக்கு நம்பிக்கை இருக்குது… அவனுக்கும் என்னைப் பிடிக்கும்… என் காதலை ஏற்றுக் கொள்வான்.”
“நானும், கடவுள் கிட்ட இதை தான் வேண்டிக்கிறேன்”
“சரி, நீ என்ன குட் நியூஸ் சொல்ல வந்த?”
“அதுவா… சொன்னா ஓட்டக் கூடாது.”
“அது நீ சொல்லும் விஷயத்தை வைத்து.”
“அப்போ, நான் சொல்ல மாட்டேன் போ”
“சரி சொல்ல வேணாம்”
“என்னடி இப்படி சட்டுன்னு சொல்லிட்ட!”
திவ்யா புன்னகைக்கவும், பவித்ரா செல்லமாக முறைத்து, “ஒரு பேச்சுக்காவது கெஞ்சிறியா!”
“அது எதுக்கு! எப்படியும் உன்னால் என்கிட்ட சொல்லாம இருக்க முடியாது… அதுவும் எனக்கு குட் நியூஸ்னு வேற சொல்ற…”
“ஹும்ம்… உன் ஆள் வீடு எங்கேனு எனக்கு தெரியும்.”
“இதுக்கு ஏன் நான் உன்னை ஓட்டக் கூடாதுனு சொன்ன?”
பவித்ரா சிறிது அசடு வழிந்தபடி, “அது… வந்து திவி… அவர் என் எதிர் வீட்டு மாடியில் தான் இருக்கிறார்.”
“ஓ! அந்த சூம்பிப் போன சிக்கன் பிரெண்ட்… அதாவது விக்கி கொக்கி சொன்ன நல்லவர் வல்லவர், நாலும் தெரிந்த அண்ணா ரிஷி தானா!” என்றவள் நக்கல் சிரிப்புடன்,
“ஆனாலும் நீ இவ்ளோ பழமா இருக்கக் கூடாதுடி!”
“நீயும் தான், ரெண்டு நாள் என் வீட்டில் இருந்த… அவரை பார்த்தியா?”
“ரெண்டு நாளும், ரெண்டு மாசமும் ஒன்னாடி!”
“உன் ஆள் என் கண்ணில் படலனா, நான் என்ன செய்வேன்!”
“ஆமா, அவனுக்கு வேறு வேலை இல்ல பாரு”
“எனக்கு மட்டும் வேறு வேலை இல்லையா!”
“அதுக்காக இப்படியாடி இருப்ப! உன் வீட்டுக்கு எதிர் வீட்டில் யாரு இருக்காங்கனு கூட தெரியல… உன்னை எல்லாம்!”
“நான் ரொம்ப நல்ல பிள்ளைடி”
“அது என்னவோ உண்மை தான்… நீ சமத்து பேபி தான்.” என்று கிண்டலாகக் கூற,
பவித்ரா சிணுங்கலுடன், “கிண்டல் செய்யாதடி.”
திவ்யா சிரிக்கவும் பவித்ரா, “திவி!” என்று முறைத்தாள்.
“சரி சரி… இன்னைக்கு எப்படி கண்டு பிடிச்ச?”
“அது… அப்பா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பினாங்க… கேட் திறந்து விட வெளியே வந்தேன்… அப்போ தான், அவரும் அவர் பிரெண்ட்டும் பைக்கில் கிளம்பினாங்க.”
“ஹும்ம்”
“சரி 24.10.56 க்கு என்ன அர்த்தம்?”
திவ்யா ‘லூசாடி நீ’ என்பது போல் பார்க்கவும்,
“அது ‘ஐ லவ் யூ’ னு தெரியும். ஆனா எப்படினு எக்ஸ்ப்ளேன் பண்ணு”
“பார் டா! நம்ம பவி பேபிக்கு கூட இந்த விஷயம் புரியுது.”
“ரொம்ப செய்யாதடி”
திவ்யா புன்னகையுடன், “சரி சொல்றேன்… நம்பர்ஸ் எதுவும் சரியான இடத்தில் இல்லை. ஸோ அதையெல்லாம் மாத்தி போட்டா என்ன வரும்?”
சிறிது யோசித்த பவித்ரா, “10 56 24 வரும்”
“கரெக்ட்… அதில் –1 -2 -3 செஞ்சா என்ன நம்பர்ஸ் வரும்?”
“9 54 21”
“அவ்ளோ தான்…”
“என்னடி சொல்ற?”
“யோசி”
சிறிது யோசித்த பவித்ரா, “அல்பபெட்-க்கு நம்பர்ஸ் போட்டியா?”
“எஸ்” என்றாள் புன்னகையுடன்.
“ஆனா கடைசி நம்பர் வேறு வருதே! 61 தானே வரும்?”
“YOU னா தான் அப்படி வரும்… வெறும் U மட்டும் னா 21 தானே!”
“நிஜமா, இதை அவர் கண்டு பிடிச்சிட்டார்னா சொல்ற?”
“எதை யாரு கண்டு பிடிச்சா?” என்ற கேள்வியுடன் விஜய் வந்தான்.
தனது பார்வையை சுழற்றிய பவித்ரா மெல்லிய குரலில், “இவ ப்ரொபோஸ் பண்ணதை பற்றி கேட்டேன்.” என்றாள்.
விஜய் மகிழ்ச்சியுடன், “வாவ்! சூப்பர் திவி… அந்தப் பக்கம் என்ன ரியாக்சன்?”
பவித்ரா, “கேன்டீன் போகலாம் திவி.”
விஜய், “எனக்கு காலை டிபன் இன்னைக்கு பவி தான் ஸ்பான்சர்.”
“நான் எங்கே அப்படி சொன்னேன்?”
“நான் அப்படி தான் சொல்றேன். காலையில் சாப்பிடலை” என்று சேர்த்துச் சொல்ல,
பவித்ரா, “எத்தனை முறை சொன்னாலும் கேட்காத! இனி காலையில் சாப்பிடாம வந்த, நானும் திவியும் உன்னோட பேச மாட்டோம்.”
“டென்ஷன் ஆகாத… வா போகலாம்.”
“இப்ப கூட சாப்பிடுவேன்னு சொல்றியாடா”
“ஹீ ஹீ ட்ரை பண்றேன்டி”
பவித்ரா முறைக்கவும்,
“நான் இவ்ளோ இறங்கி வந்ததே பெருசு… வந்து சாப்பாடு வாங்கி தா!”
“உன்னையெல்லாம் திருத்த முடியாது”
“அது இப்போ தான் தெரிஞ்சுதா!” என்று சண்டை போட்ட படியே கல்லூரி உணவகம் நோக்கிச் சென்றனர்.
விஜய், “இப்போ சொல்லு திவி” என்றான்.
திவ்யா சுருக்கமாக சொல்லி முடிக்கவும், உணவகம் வரவும் சரியாக இருந்தது. விஜய்யும் திவ்யாவும் இருக்கையில் அமர, பவித்ரா உணவு வாங்கச் சென்றாள்.
விஜய், “பவி சொன்ன மாதிரி, நீ நேரிடையாவே சொல்லி இருக்கலாம்.”
திவ்யா மென்னகையுடன், “நேரிடையா சொல்லவானு கேட்டதும், அவன் முகத்தில் வந்த பதற்றம் உறுதிப்படுத்துச்சி, அவன் அதை கண்டு பிடிச்சிட்டான்னு…! அவனோட இப்படி விளையாட பிடிச்சு இருக்குது… இப்படி காதலை சொல்லாமல் சொல்றதில், தனி சுகம் இருக்குது… இது சொன்னா புரியாது, அனுபவிச்சா தான் புரியும்…” என்று மென்மையான குரலில் காதலுடன் கூறியவளை, சிறு பிரம்மிப்புடன் விஜய் பார்த்தான்.
இணைய காத்திருப்போம்…