“என்ன அப்பா, யாருக்கு இந்த அட்வைஸ் மழை?” என்ற ஜனனியின் குரலில் நிமிர்ந்தவர், புன்னகையுடன் மகளை பார்த்து, “அக்காவும் தங்கையும் ஒரே மாதிரி இருக்கிறீங்க… என் ரூமிற்குள் நுழையும் போது பெர்மிஷன் கேட்பதே இல்லை.”
“சேர்மனை பார்க்க தான் பெர்மிஷன் வேணும். எங்க அப்பாவை பார்க்க நாங்க ஏன் பெர்மிஷன் கேட்கணும்!” என்று எகிறியவள், “கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுங்க… யாருக்கு அந்த அட்வைஸ் மழை?” என்று மீண்டும் வினவினாள்.
(ஜனனி, ராஜாராம் மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி)
“உன் அக்காவோட எதிரியோட அப்பாவுக்கு.”
ஜனனி முறைக்கவும், அவர், “அவனால் உன் அக்காக்கு பிரச்சனை வந்திரக் கூடாதே! அதான்.”
“உங்க கவலை தேவை இல்லாதது… அவளிடம் யாரும் வாலாட்ட முடியாது.”
“இன்னொரு ராகவன் உருவானால், அதை தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை.”
“அப்பா!”
பெருமூச்சை வெளியிட்டவர், “என் மகளை காப்பது என் கடமை… அதைத் தான் நான் இப்போ செய்தேன்.”
“என்ன பிரச்சனை? யாரு அந்த பையன்?”
ராஜாராம் நடந்ததை கூறியதும் ஜனனி, “அவன் தப்பா பேசிய போது, அக்கா கூட யாராவது இருந்தாங்களா?”
“ஹம்ம் விசாரிச்சேன்… பவித்ராவும் விஜய்யும் இருந்து இருக்காங்க.”
“சைமன் அவங்க நட்பை கொச்சைப்படுத்தி, ஏதோ ரொம்ப கேவலமா பேசி இருக்கனும்.”
“எப்படி சொல்ற?”
“இதுவரை அவனும் அக்காவும் சண்டை போடாமலா இருந்து இருப்பாங்க! அப்போலாம் அடிக்காதவ, இப்போ அடிச்சு இருக்கிறானா, அவன் அதிகமா பேசியிருக்கனும்… அவன் அக்காவை சீண்டி, அக்கா பதிலடி கொடுத்து, அவளுக்கு திரும்ப பதிலடி கொடுக்க முடியாத இயலாமையில்… அவன் அவங்க நட்பை கேவலமா பேசி இருக்கலாம்… கேவலம் என்பதை விட, ஏதோ கொச்சையா அசிங்கமா பேசியிருக்கனும்…! அதான், அக்கா அடித்து இருக்கிறா…!”
“இருக்கலாம்.”
“நீங்க அவனைத் தான் தண்டித்து இருக்கணும்.”
“என்ன செய்றது, முதல்ல வேற ஒரு டென்ஷனில் அவகிட்ட காரணத்தை கேட்காம அவளை திட்டிட்டேன். அப்புறம் காரணம் கேட்டப்ப உன் அக்கா அதை சொல்லாம, ‘நம்பிக்கை’ என்ற வார்த்தையை சொல்லி, என்னை லாக் செய்து இதை செய்ய வச்சிட்டா”
புன்னகையுடன், “அவளை நம்பாததுக்கு உங்களுக்கு இது தேவை தான்” என்றவள் வாய்விட்டு சிரித்தபடி, “ஆனாலும் நீங்க அவனுக்கு இந்த பனிஷ்மென்ட் கொடுக்கிறதை விட அக்கா கொடுத்த பனிஷ்மென்ட் செம… அதுவும் அந்த ரெண்டு மீம்ஸ் சான்ஸ்சே இல்லை.”
“நீங்க விளையாட்டா செய்றது தான், வினையா போய் முடியும்…”
ஜனனி தீர்க்கமான குரலில், “இது விளையாட்டு இல்லைபா… அவன் செய்ததுக்கு அக்கா கொடுத்த பதிலடி.”
“மீம்ஸ் போட்டது விஜய்… உன் அக்காவே விஜய்யை திட்டி தான் இருக்கா.”
“மீம்ஸ் போட்டது விஜய் அண்ணானா! அவனும் சைமன் மேல் செம கோபத்தில் இருக்கிறான்… ஸோ.. நான் சொன்ன மாதிரி சைமன் அவங்க நட்பை பத்தி தான் ஏதோ பேசி இருக்கிறான். ஆனா அக்கா விஜய் அண்ணாவை திட்டியது தான் இடிக்குது.” என்று யோசித்தவள்…
சில நொடிகளில், “அப்போ சைமன், பவிக்கா பற்றியும் ஏதோ தப்பா பேசியிருக்கனும்… அதான் பவி அக்காவுக்காக, அக்கா அடக்கி வாசிக்க நினைக்கிறாளா இருக்கும்.”
“ஹும்ம்… இருக்கலாம்… இப்பலாம் திவ்யாவை நீ சரியா புரிஞ்சுக்கிற…”
ஜனனி புன்னகையுடன், “உங்க பொண்ணாச்சே”
“இதைத் தான் அவளும் சொன்னா” என்றபோது ராஜாராமின் குரல் வருத்தத்துடன் ஒலித்தது.
ஜனனி மறையாத புன்னகையுடன், “அதுக்கு நீங்க சந்தோஷப் படனும்”
“நீ என் மகள் என்றதில் எப்பொழுதும் சந்தோசம் தான் டா, ஆனா திவி அதை சொன்ன விதம்!”
“அதை தான் சொல்றேன்… நான் தான் உங்க பொண்ணு, அவள் இல்லைனு விரக்தியுடன் சொல்றானா… என்ன அர்த்தம்! உங்க பொண்ணாவே இருந்திருக்கக் கூடாதானு ஃபீல் செய்றானு தானே அர்த்தம்!”
“ஜனனி!” என்று மகிழ்ச்சியுடன் அழைக்க, அவள் புன்னகையுடன் கட்டைவிரலை காட்டி கண்சிமிட்டினாள்.
சில நொடிகளிலேயே ராஜாராம் மகிழ்ச்சி குறைந்து யோசனையில் இறங்கவும், அவள், “என்னப்பா?”
“மதியம் சிரிச்சிட்டு தான் போனா… நான் கூட அவ எனக்காக பேசியதையும், சிரித்ததையும் வச்சு.. சீக்கிரம் மனசு மாறிடுவானு சந்தோஷப்பட்டேன்… ஆனா போனில் பேசியனப்ப… பழையபடி அதே வெறுப்புடனும், கோபத்துடனும் தான் பேசினா!”
சிறிது யோசித்த ஜனனி, “ஹாஸ்டல் போய் தனியா இருந்தப்ப… ஏதோ ஒரு விஷயம், அவளுக்கு பழசை எல்லாம் ஞாபகப்படுத்தி இருக்கனும்.” என்றவள் கோபத்துடன்,
“எல்லாம் அந்த ஆளால் வந்தது… இன்னொரு முறை அவனை பார்த்தேன், அவனை குத்திட்டு ஜெயிலுக்கு போய்டுவேன்.”
“ஜனனி! என்ன பேச்சு இது?”
“பின்ன என்னப்பா! எல்லாம் அந்த ஆளால் வந்தது…”
“உன்னை விட எனக்கு அவன் மேல் அதிக கோபம் இருக்குது… கொலை வெறியே இருக்குது தான்… திவ்யாக்கு அவன் மேல் வெறுப்பு வந்த பிறகும், அவனை நான் விட்டு வச்சிருக்கிறதுக்குக் காரணம் திவ்யா தான்…”
ஜனனி புரியாமல் பார்க்கவும்,
ராஜாராம், “அவன் உயிருக்கு நம்மால் ஏதாவது ஆபத்து நேர்ந்தால், திவ்யா கடைசி வரை நம்மை விலக்கி தான் வைப்பா… என்ன தான் ராகவனை அவள் வெறுத்தாலும், அவன் மேல் அதிக பாசம் உண்டு… அவளோட அதிகப்படியான கோபத்துக்கு காரணமே, பாசத்திற்கும் வெறுப்பிற்கும் நடுவில் அல்லாடுவதால் தான்!”
“நாம என்னப்பா செய்தோம்?”
“நம் பக்கம் இருக்கும் நியாயம் அவளுக்கு தெரியாதே!”
“என்னை மட்டுமாவது அவ ஏற்கலாமே பா!” என்றபோது, அவள் கண்கள் சிறிது கலங்கியது.
“சூர்யா, எட்டு வயசு சின்ன பையன்! அதுவும் பிறந்ததில் இருந்து அவன் மேல் பாசத்தை பொழிந்தா.. அவனையே விலக்கி தான் வைச்சிருக்கிறா…”
“நீங்க ஏன் பா அக்காவை அவனுடன் அனுப்புனீங்க!? நீங்க அப்போ விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால், அக்காவும் நானும் சின்ன வயதிலிருந்து ஒன்னா சந்தோஷமா இருந்து இருப்போம்…”
“என்ன செய்றது! எல்லாம் விதி.”
“சும்மா விதி மேல் பழியை போடாதீங்க.”
“உன் அம்மா திவ்யாக்காகவும், சாருலதாக்காகவும் பார்த்தா…” என்று பெருமூச்சை விட்டார்.
“ச்ச்… போங்க பா.”
“சரி வா… கிளம்பலாம். அம்மா காத்திருப்பா.” என்றவர் அவளை கிளப்பி, “இன்னைக்கு கிளாஸ்ஸில் நீயும் உன் பிரெண்ட்ஸும் என்னென்ன செஞ்சீங்க?” என்று பேச்சை மாற்றி அழைத்துச் சென்றார்.
இணைய காத்திருப்போம்…