தாமதத்திற்கு மன்னிக்கவும்.. தலை வலி காரணமாக காலை & மதியம் அப்டேட் போட முடியலை.
விலகல் – 15
“ஏய் சண்டகாரா! குண்டு முழியிலே
ரெண்டு உயிரதேடி பாயுதே…
குத்து சண்ட இத்தோட நிப்பாட்டு போதும்
முத்த சண்ட என்னோட நீ போட வேணும்
தனிமை தொரத்த அழையுறேன் நானும்
மனச திறந்தே என்ன காப்பாத்து
தேடி கட்டிக்க போறன்… தாவி ஒட்டிக்க போறன்…
தாலி கட்டிக்க போறன் – ஆமா
மோதி மொச்சிக்க போறன்… பாதி பிச்சிக்க போறன்…
பாவி வச்சிக்க போறன் – ஆமா
எதிரான என் அழகாலனே!
உன்ன வந்து உரசாம ஒதுங்கி நடந்தேன்
எது மோதி நா இடம் மாறினேன்!
தடுமாறி முழிச்சா நா உனக்குள்ள கிடந்தேன்…”
என்ற ‘இறுதிச் சுற்று’ திரைப்பட பாடலை செவிப்பொறியின் உதவியுடன், கண்களை மூடி கட்டிலில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்த திவ்யாவின் மனம், மகிழ்ச்சிக்கும் தவிப்பிற்கும் நடுவில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
விஜய் கூறியதை கேட்டு மகிழ்ச்சியில் துள்ளியவளின் மனம், அதே நேரத்தில் உறவுகளை வெறுத்து விலகி இருக்கும் தன்னை தனிமையில் இருந்து காப்பாற்றி, அன்பால் சிறையெடுக்க ஹரீஷ் வரமாட்டானா என்று தவித்தது.
அப்பொழுது யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டு, யாராக இருக்கும் என்ற யோசனையுடன் கதவை திறந்தவள், அங்கே ஹரீஷை கண்டதும் இன்ப அதிர்ச்சியுடன், கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தாள்.
திவ்யாவை பார்த்ததும் நிம்மதியடைந்தவன், காதில் செவிப்பொறியை மாட்டியபடி கையில் கைபேசியை பிடித்தபடி நின்றவளைக் கண்டு கோபத்துடன் முறைத்தவன், அருகில் இருந்த விடுதி காப்பாளரிடம், “நீங்க போங்க மேம்… நான் பார்த்துக்கிறேன்.” என்றான்.
அவர் சிறிது தயங்க…
“சேர்மன் சார் சொல்லி தான் மேம் இங்க வந்தேன்… அவகிட்ட பேசுறீங்களா?” என்றதும்,
“இல்ல… நான் போறேன்” என்று கூறி சென்றார்.
ஹரீஷ் திவ்யாவை பார்த்து சிறு கோபத்துடன், “சேர்மன் போன் செய்தப்ப, ஏன் எடுக்கலை?” என்று வினவினான்.
இனிய கனவில் இருக்கும் போது தண்ணீர் தெளித்து எழுப்பினால் ஒரு கோபம் வருமே! அதே கோபத்துடன் அவனை முறைத்தாள்.
அவனும் கோபத்துடன் முறைத்தபடி, “பதில் சொல்லு.” என்றான்.
“அதை தெரிந்து என்ன செய்யப் போற?”
“ஒருமையில் பேசாத!”
“பேசினா என்ன செய்வ? திரும்ப அடிப்பியா?” என்று இடுப்பில் கை வைத்தபடி நிமிர்வுடன் நின்றவளின் விழிகள், ‘அடி பார்ப்போம்!’ என்று சொல்வது போல் அவனுக்குத் தோன்றியது.
அவன் அவளை முறைத்தபடி, தனது கைபேசியில் ராஜாராமை அழைத்து, “சார்… திவ்யா ஸேஃப்… மொபைல் சைலென்ட்டில் இருந்ததால், நீங்க கூப்பிட்டப்ப எடுக்கல…” என்றான்.
“தேங்க் காட்” என்று நிம்மதி மூச்சை வெளியிட்ட ராஜாராம், “அவகிட்ட போனை கொடுங்க” என்றார்.
அவன் கைபேசியை அவளிடம் நீட்டவும், அவள் புருவம் உயர்த்தி ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.
அவன் முறைப்புடன், “சேர்மன் சார் பேசணுமாம். பேசு…!”
அவளிடம் எதிர்வினை இல்லை என்றதும், பல்லை கடித்துக்கொண்டு, “நான் பொறுமையா போறவன் இல்ல… சார் கிட்ட பேசு.” என்றவன் அவள் கையில் தனது கைபேசியை திணித்தான்.
“உன் பொறுமை பத்தி தான் எனக்கு தெரியுமே” என்றவளின் முகம் கைபேசியை காதிற்கு கொண்டு சென்றபோது இறுகியது.
அவள் இறுகிய குரலில், “என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா? மொபைல் சைலென்ட்டில் இல்லை… வேணும்னு தான் நீங்க கூப்பிட்டப்ப எடுக்கல…” என்று எரிச்சலுடன் கூறியவள், கோபத்துடன், “உங்க போனை நான் எடுக்காதது என்ன புதுசா? எதுக்கு இவனை அனுப்பினீங்க?”
மதியம் தன்னிடம் விடைபெற்ற பொழுது புன்னகையுடன் வெளியேறியவள், இப்பொழுது கோபத்துடனும் எரிச்சலுடனும் காய்வதற்கான காரணம் புரியாமல் ராஜாராம் குழம்பினார்.
மனித மனம் குரங்கு போல் தாவிக் கொண்டே இருக்கும்… விடுதிக்கு வந்ததும், முதலில் சைமனின் பேச்சில் சுழன்ற அவள் மனம்… விஜய் செய்த வேலையில் பவித்ரா பற்றி மட்டுமே சிந்தித்தது.
சைமனை மிரட்டி தோழியின் பெயரை காத்த பின், மீண்டும் அவளது மனம் சைமனின் பேச்சிற்கு தாவியது. அவன் பேசியதில் ஒரு வார்த்தை அவளை மிகவும் அலைகழித்து, மனதின் ரணத்தை கிளறியது.
அவள் அதன் தாக்கத்தில் இருந்த பொழுது தான், விஜய் அவளை மீண்டும் அழைத்திருந்தான். முதலில் அவனிடம் எரிச்சல் கலந்த கோபத்துடன் பேசியவள், நண்பனின் குரலில் தெரிந்த கவலையில்.. மனதை மறைத்து இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.
ஆனால், ஹரீஷ் பெயரை கேட்டதும், அவளையும் அறியாமல் அவளது மனம் மெல்ல அமைதியடைந்ததோடு, அவளுள் ஒரு இதம் பரவியது. அதன் பின் அவளது சிந்தனை முழுவதையும் ஹரீஷ் தான் ஆக்கிரமித்தான்.
அப்பொழுது தான் ராஜாராம் அழைத்தார். மீண்டும் மனநிலையை கெடுத்துக்க விரும்பாமல் தான், அவள் அவர் அழைப்பை தவிர்த்திருந்தாள்.
ராஜாராம் குழப்பத்திலும், “ஹரீஷை மரியாதையுடன் பேசு.” என்று அவளை கண்டிக்கத் தவறவில்லை.
ஹரீஷை முறைத்தவள், “இப்போ எதுக்கு திருவாளர் ஹரீஷ் அவர்களை அனுப்புனீங்கனு தெரிந்துக்கலாமா?”
அவளது போலித்தனமான மரியாதையில், ராஜாராமிற்கு சிரிப்பு வந்தது.
‘இவளுக்கு இருக்கிற கொழுப்பிற்கு!’ என்று நினைத்த ஹரீஷிற்கும், அவளது குரல் மற்றும் முக பாவனையை கண்டு லேசாக சிரிப்பு வந்தது தான். ஆனால், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவளை முறைத்தான்.
ராஜாராம், “இதுக்கு முன்னாடி நீ போன் எடுக்காதது வேற… இன்னைக்கு கொஞ்சம் பயம் வந்திருச்சு… அதான் ஹரீஷை அனுப்பினேன்.”
அவள் புருவச் சுளிப்புடன், “ஏன், இன்னைக்கு என்ன?”
“சைமன்”
“அவனும், அவன் பிரெண்ட் ரியாஸும் அப்போவே காலேஜ் விட்டு வெளியே போயிட்டான்க..”
“உனக்கு எப்படி தெரியும்?”
“உங்களுக்கு மட்டும் தான் ஸ்பை வைக்க தெரியுமா!”
“எப்போ போனாங்க?”
“எப்போ எப்படினு சொல்லி, அவன்களை போட்டுக் கொடுக்க சொல்றீங்களா? அவனுக்கும் எனக்கும் ஆகாது தான், ஆனா நாங்க ஸ்டுடென்ட்ஸ்… மானேஜ்மென்ட் கிட்ட போட்டுக் கொடுக்க முடியாது.”
ஹரீஷ், அவளை ஆச்சரியத்துடனும் சிறு பிரம்மிப்புடனும் பார்க்க,
ராஜாராம் புன்னகையுடன், “இந்த காலேஜை பொறுத்தவரை மானேஜ்மென்ட்டே நீ தானே!”
“ஓ! அப்போ, இப்பவே சார்ஜ் எடுத்துக்கவா?”
“உன் படிப்பு முடிந்ததும், தாராளமா சார்ஜ் எடுத்துக்கோ”
“ஆனா, எனக்கு உங்க உறவும் தேவை இல்லை. உங்க சொத்தும் தேவை இல்லை.” என்றவள் அழைப்பை துண்டித்து, கைபேசியை ஹரீஷிடம் கொடுத்தாள். அவளது பேச்சை கேட்டு, ‘இவள் சேர்மன் சாருக்கு என்ன உறவு?’ என்ற யோசனையில் இருந்தவன், கைபேசியின் அழைப்பில் அதை எடுத்து, “சொல்லுங்க சார்” என்றான்.