திவ்யா நிதானமான குரலில் விஜய்யிடம், “இவன் கேட்ட கேள்வியை செகண்ட் இயர் வினீத் கிட்ட கேளு.” என்றவள் சைமனை பார்த்து சிறு நக்கல் கலந்த மென்னகையுடன், “வினீத் யாருனு தெரியலையா! உன் தங்கச்சி ஷரோனோட பிரெண்ட்.”
சைமன் கோபத்துடன், “ஏய்!” என்று கத்தியபடி, அவளை அடிக்க கையை ஓங்கினான்.
அவன் கையை மீண்டும் தடுத்தவள், “இப்போ புரியுதா! நான் ஏன் உன்னை அடிச்சேன்னு.” என்றவள் நண்பன் மற்றும் தோழியிடம், “வாங்க போகலாம்.” என்று கூறிக் கிளம்பினாள்.
வெளியே சென்றதும் விஜய் ஏதோ பேச வாய் திறக்க, அவனை கண்ணசையில் தடுத்த திவ்யா, பவித்ராவின் தோளில் கை போட்டு, “பவி அவன் சும்மா ஸீன் போட்டான்… அவ்ளோ தான்…! நீ பயப்பட ஒன்னுமில்ல.”
“அவன் பார்த்த பார்வை” என்று அவள் சிறிது உடல் நடுங்கக் கூற, விஜய் கோபத்தில் பல்லைக்கடித்தான்.
திவ்யா, “அதெல்லாம் சும்மாடா… நிஜமாவே அவன் அப்படிப்பட்ட கரெக்டர் இல்லை.”
“…”
“ஏய் அவன் சும்மா தான்டி அப்படி பார்த்தான்… ஏன் இப்போ நம்ம விஜியை ஒரு டிராமால நடிக்கச் சொல்லி, அப்படி பார்க்க சொன்னா அவன் கூட அப்படி பார்ப்பான்.” என்றதும்,
விஜய் ‘என்னது!’ என்று மனதினுள் அலறியபடி திவ்யாவை பார்த்தான். அவள் புன்னகையுடன் கண்சிமிட்டவும், அவன் அவளை முறைத்தான்.
பவித்ரா, “இன்னைக்கு காலைல கூட சஞ்சய் விஷயத்தில் நீ அவனை பொறுக்கினு தானே சொன்ன…”
“அது… இப்போ பேசியது மாதிரி, சில நேரம் அவன் வரம்பு மீறி பேசுவான். அதான் எப்போதும் நான் அவனை அப்படி சொல்வேன். மத்தபடி நீ பயப்படும் அளவுக்கு அவன் கெட்டவன் இல்லைடா” என்றவள் மெல்லிய புன்னகையுடன், “அதான் அவன் உன்னை நெருங்குறதுக்கு முன்னாடி, விஜி ஹீரோ மாதிரி வந்து உன்னை மறைச்சு நின்னு ப்ரோடேக்ட் பண்ணிட்டானே!”
திவ்யாவின் எண்ணம் போல், பவித்ரா சட்டென்று பயத்தில் இருந்து வெளி வந்து முகத்தைச் சுளித்து, “சீ! இவன் ஹீரோ வா!” என்று கூற,
அதே நேரத்தில் விஜய், “என்ன திவி! நீயும் மத்தவங்க மாதிரி தப்பா ஓட்டுற!”
நண்பனின் பின் தலையில் லேசாக தட்டிய திவ்யா, “டேய் லூசு! உன்னை ஹீரோனு சொன்னேனே தவிர, பவியின் ஹீரோனு சொல்லலையே! ஏன்? ஹீரோ.. அவனோட பிரெண்டை காப்பாற்ற மாட்டானா?”
விஜய் தெளிந்தவனாக, “ஓ காப்பாத்தலாமே!” என்றான்.
பவித்ரா, “யார் என்ன சொன்னாலும், நானும் திவியும் எப்போதும் உன்னை சந்தேகப்பட மாட்டோம்… நட்பிற்குள் சந்தேகத்திற்கு இடமில்லை.” என்றவள் கிண்டலாக,
“இருந்தாலும் திவி, இவனைப் போய் ஹீரோனு சொல்லி, ஹீரோ என்ற வார்த்தையை நீ கேவலப்படுத்தி இருக்கக் கூடாது!”
விஜய்யும் கிண்டல் குரலில், “பயத்துட்டு என் கையை இறுக்கமா பிடிக்கும் போது இது தெரியலையா!”
“அது… என்னை விட நீ பலமானவன், அதான் பிடிச்சேன்… ஆனா அதுக்காகலாம் உன்னை ஹீரோனு ஒத்துக்க முடியாது.”
“உன்னை யாரு ஒத்துக்கச் சொன்னா! எனக்காக காத்திருக்கும் என் தேவதை சொல்லுவா.”
பவித்ரா, “யாரு, அந்த சுனிதா வா!”
விஜய் முகத்தை சுளித்து, “சீ! ஏன்டி உனக்கு இந்தக் கொலை வெறி!”
பவித்ரா நக்கலுடன், “இதை அவகிட்ட கடலை வறுக்கும் போது சொல்றேன்.”
“ஹீ…ஹீ…ஹீ” என்று அவன் அசடு வழிய…
தோழிகள் இருவரும், “ஐயோ பேய்!” என்று போலியாக அலறியபடி ஓடினர்.
“அடிங்க!” என்றபடி விஜய் புன்னகையுடன் அவர்கள் பின் ஓடினான்.
வேகத்தை குறைத்து பின் தங்கிய திவ்யா, “விஜி, இந்த விஷயத்தை இத்துடன் விடு. அவன் தேவை இல்லாம பவியை பேசியிருக்கான். அவ பெயருக்கு பங்கம் வரக் கூடாது. ஸோ இந்த விஷயத்தை இங்கேயே மறக்கிற..!”
“ஹும்ம்…. புரியுது” என்றவன் சிறு கோபத்துடன், “அவனை வேறு விஷயத்தில் வச்சு செய்யனும்.”
“கண்டிப்பா” என்றபடி வகுப்பினுள் நுழைந்தவள் தன் இடத்தில் அமரவும், வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்தது.
முதல் வகுப்பு தகவல்மறைப்பியல். ஹரீஷ் உள்ளே வந்து வருகை கணக்கெடுப்பை முடித்து விட்டு, பாடத்தை தொடங்கினான்.
தன்னவனை ரசிக்கும் எண்ணமின்றி, சைமன் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள், திவ்யா.
‘நான் வேற அடிச்சிருக்கிறேன்… அவன் அமைதியா இருக்க மாட்டான். அடுத்து என்ன செய்வான்…?’ என்று சிந்தித்தவள், ‘நான் அடிச்சிருக்கக் கூடாதோ! ஆனா, அவனோட செய்கை அடிக்கும் படி தானே இருந்தது! அவன் என்னை மட்டும் பேசி என்னை நெருங்கி இருந்தா கூட, நான் அடிக்காம, பார்வையிலேயே அவனை தள்ளிப் போக வைச்சிருப்பேன். ஆனா, அவன் பவியை போய்…’ என்று நினைத்தவளுக்கு, இப்பொழுது கூட அவனை அடித்துவிடும் அளவிற்கு கோபம் வந்தது.
அவன் அவளைப் பற்றி மட்டும் பேசியிருந்தால், இந்நேரம் அவனை பற்றிய சிந்தனை சிறிதுமின்றி, தன்னவனை ரசித்துக் கொண்டு இருந்திருப்பாள். ஆனால், தற்போதோ அவளது மனம் அவனால் பவித்ராவிற்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாதே என்று தவித்தது.
……………….
அவளது கணிப்பு சரியே… சைமன், தாளாளர் ராஜாராமை பார்ப்பதற்காக அவரது அறை வெளியே காத்திருந்தான்.
அப்பொழுது ராஜாராம், முதன்மை ஆசிரியரிடம் சில கல்லூரி திட்டங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார். சந்திப்பு முடிந்து அவர் மருத்துவக் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த போது, கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே வந்த அவரது செயலாளர்,
“சார் உங்களை பார்க்க ஒரு பைனல் இயர் ஸ்டுடென்ட் வெயிட் பண்ணிட்டு இருக்கிறான்.” என்றார்.
ராஜாராம் மணியை பார்க்கவும்,
அவரது செயலாளர், “மெடிக்கல் காலேஜில் மூணு மணிக்கு தான் சார் மீட்டிங்.”
“சரி, அவனை உள்ளே வரச் சொல்லுங்க”
“ஓகே சார்” என்று கூறி வெளியே சென்றவர், சைமனை உள்ளே போகுமாறு கூறினார்.
அனுமதி பெற்றுக்கொண்டு அவன் உள்ளே சென்றதும், ராஜாராமின் பார்வையை கண்டு அவன், “குட் அப்ட்டர்-நூன் சார்… நான் சைமன் மத்தியு… பைனல் EEE படிக்கிறேன்.”
“கிளாஸ் நேரத்தில் இங்கே என்ன செய்ற?”
“உங்க கிட்ட ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தேன்.”
“என்ன?”
“பைனல் CSE திவ்யா, என்னை அடிச்சிட்டா சார்.”
ஒரு நொடி உள்ளுக்குள் அதிர்ந்தவர், அவனை கூர்மையுடன் பார்த்து, “நீ என்ன செய்த?”
“நீங்க நேர்மையானவர்னு நினைத்தேன் சார்.”
“நான் நேர்மையானவன் தான்… எனக்கு திவ்யாவோட நேர்மை பற்றியும் தெரியும்.” என்றவர் அவனை தீர்க்கமாக பார்த்தார்.
அவனோ பயத்தை சிறிதும் வெளியே காட்டிக்கொள்ளாமல் வரவழைத்த நிமிர்வுடன் அவரைப் பார்த்து, “நான் எதுவும் செய்யலை சார்… நான் தெரியாம அவளை இடிச்சிட்டேன்… அதுக்குப் போய் என்னை அடிச்சிட்டா சார்…” என்றான்.
“இது எப்போ, எங்கே நடந்தது?”
“கொஞ்ச நேரத்துற்கு முன்னாடி லன்ச் பிரேக்கில் கேன்டீனில் நடந்தது.”