நான்கு பேரும் கடைசி பெஞ்சில் அமர, முதல் வகுப்பிற்கான மணி சரியாக அடித்தது.
முதல் பெஞ்சில் அமர்ந்து இருந்தா மாணவனை பார்த்து
“யாருடா அருண் இன்னைக்கு ஃபர்ஸ்ட் ஹவர்?” என அந்தக் கிளாஸ் லீடரான அருணிடம் ரிது கேட்டாள்.
“தெரியல ரிது… யாரோ புதுசா விசிட்டிங் lecturer வர்றதா HOD சொன்னார்” எனக் கூறினான்.
“ஓஹோ… ஒருவேளை அவனாக இருக்குமோ?” என்றாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த அருண், “எவன்?” எனக் கேள்வி எழுப்பினான்.
“ஆஹ்… ஒண்ணுமில்ல, நீ உன் வேலையை பாருடா” என அவனிடம் சாதாரணமாகச் சொன்னாள்.
ஏற்கெனவே முதல் நாளிலிருந்து ரிதுவைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தவன், நேராக அவளைப் பார்த்தான்.
அவனுடைய கேவலமான பார்வை அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்த, “என்ன?” என்றாள் புருவங்களை உயர்த்தி.
“உன்னைப் பார்க்கிறதைத் தவிர எனக்கு என்ன வேலை?” என அவன் பதிலளித்த மறுநொடி, அவனுடைய முதுகில் ‘பொத்’ எனச் சத்தம் கேட்டது.
“அம்மா!” என அலறிக்கொண்டே அவன் திரும்ப, அதே நேரம் ரிதுவும் நேராகப் பார்த்தாள்.
பார்த்த நொடி ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனாள்.
திரும்பிப் பார்த்த அருண், “சார்… ஏன் சார் அடிச்சீங்க?” என முதுகைத் தேய்த்துக்கொண்டு கேட்டான்.
“பின்ன கிளாஸ் லீடர் நீ, ஸ்டாப் வர்றாங்கன்னு வாசலைப் பார்க்காம, அந்தப் பக்கம் செவுத்தை பார்த்துட்டு இருக்கியே” எனக் கேட்டார் அவர்கள் டிபார்ட்மென்ட் HOD, டாக்டர் கலைச்செல்வன் (40 வயது மதிக்கத்தக்க நல்லவர்).
“இல்லை சார், அது வந்து ரிது யார் ஃபர்ஸ்ட் ஹவர் வருவாங்கன்னு கேட்டா, அவகிட்ட அதைத்தான் சார் சொல்லிட்டு இருந்தேன்” என நடந்ததில் பாதியை மட்டும் கூறினான்.
“அப்படியா… பார்த்தா அப்படி தெரியலையே… ரிது உன்னை முறைச்ச மாதிரி இருந்தது” எனக் கேட்டார்.
அருண் பேந்தப் பேந்த முழித்தான்.
அவர் அவனை நக்கலாகப் பார்க்க,
“சார்… அவர் யாருன்னு சொல்லவேயில்லையே சார்” எனக் கேட்டான் அதே பெஞ்சில் இருந்த கிருபாகரன் (அருணின் நெருங்கிய நண்பன்).
“சார்… அவர் க்ளோஸ் பிரெண்டைக் காப்பாத்துறாராம்” எனப் பின்னாலிருந்தவனைப் பார்த்துச் சொல்ல, அவ்வளவு நேரம் மொபைலில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தவன் அப்போதுதான் அங்கு நடப்பதைக் கவனித்தான்.
“ம்ம்ம்” என மேலே பார்த்தவன், கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த ரிதுவைப் பார்த்தான்.“இவளா!” என ஒரு நொடி மட்டும் பார்த்தவன் சுதாரித்து, HOD பேசுவதைக் கவனித்தான்.
“இவர்தான் மிஸ்டர் ஆதித்ய வர்மன். உங்க கிளாஸுக்கு தற்காலிகமாக கெஸ்ட் லெக்சரரா வந்திருக்காரு” எனக் கூறினார்.
முதலில் அவனைப் பார்த்துவிட்டு ‘இவனா’ என அதிர்ச்சி அடைந்தாலும், அதை பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் தலையைக் குனிந்து அவள் போனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் அவன் பெயரைக் கேட்ட நொடி, சட்டென தலையை நிமிர்த்தியவள் கண்கள் கலங்க, உதட்டில் சிறு புன்னகை தவழ, மனதில் சந்தோஷம் நிறைய அவனைப் பார்த்தாள் வைத்த கண் வாங்காமல்.
அதுவும் ஒரு நொடி மட்டுமே. உடனே கண்ணீரை உள்ளிழுத்தவள், முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொண்டு HOD பேசுவதை கேட்டாள்.
“இவர் ஹையர் ஸ்டடீஸ் யூ.எஸ்-இல் உள்ள ஐவி காலேஜ்ல ஃபர்ஸ்ட் கிளாஸில் முடிச்சிருக்காரு… அப்புறம் நம்ம சேர்மனுடைய ஒரே பையன்” என அவர் கூறினார்.
மாணவர்கள் கரகோஷம் எழுப்பி, “வெல்கம் சார்” எனக் கோரஸாகப் பாடினர்.
“தேங்க்யூ ஃபோக்ஸ்…” எனத் தனது நெஞ்சில் கை வைத்துச் சிறிதாகப் புன்னகைத்து நன்றி கூறினான்.
அந்தப் புன்னகையில் அந்த வகுப்பிலிருந்த அனைத்து மாணவிகளும் அவனை ரசிக்க ஆரம்பித்தனர்.
ரிதுவும் தான்.
6 அடி உயரம், சீர்திருத்தப்பட்ட தாடியும் மீசையும், ஜெல் வைத்து படியாமல் இருந்த முடியைப் பின்னால் இழுத்து வாரி இருந்தான்.
அழகான பேஸ்டல் வண்ண லாவெண்டர் ஃபுல் ஹேண்ட் ஷர்ட்டும், உள்ளே ஒரு வெள்ளை டீ-ஷர்ட்டும் அணிந்து, சாண்டல் ஃபார்மல் பேண்ட் உடன் டக்-இன் செய்திருந்தான்.
ஃபுல் ஹேண்ட் ஷர்ட்டின் கைகளை முழங்கை வரை மடித்து விட்டிருந்தான்.
அவன் பார்வை எல்லோரை ஒரு தடவை சுற்றிவர, அங்கே அவனை ரசித்த ரிதுவைப் பார்த்தான்.
கண்களில் மின்ன, அவளைப் பார்த்து, அவளுக்கு மட்டும் தெரியும் வண்ணம் கண்களால் குறும்பாகச் சிரித்தான்.
அதை உணர்ந்த ரிது சட்டெனப் பார்வையைத் திருப்பி அவளது தோழிகளைப் பார்க்க, அவர்களும் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“என்ன” என்பதுபோல ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டாள்.
“ஹே, இந்த சார்… அவன்… ச்ச… அவர் தான நேத்து மால் ல?” என நேத்ரா கேட்டாள்.
“ஆம்” எனத் தலையசைத்தாள் ரிது.
“சேர்மனுடைய பையன்னா… உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும்ல?” என நேஹா கேட்டாள்.
ஒரு பெருமூச்சுடன் “ம்ம்ம்ம்” எனப் பதிலளித்தாள்.