ரிது தனது மஹிந்திரா “தார்” காரை மிதமான வேகத்தில் பிரதான சாலையில் ஓட்டிச் சென்றாள்.
என்னதான் அவளது கண்கள் சாலையைப் பார்த்து, கை கால்கள் அதன் வேலைகளைச் செய்தாலும், ரிதுவின் மனமோ ஆதியை நினைத்துக்கொண்டு இருந்தது.
“ஆதி…” என்று முணுமுணுத்தவள், ஒரு நொடி கண்களை மூடி அந்த டாலரை வலது கையால் அழுத்திப் பிடித்து பெருமூச்சு விட்டாள்.
கண்ணைத் திறந்தபோது, சடன் பிரேக் போட்டு வண்டி ‘கீச்’ எனச் சத்தம் எழுப்ப, ஸ்டியரிங்கில் மோதி அமர்ந்தாள்.
அந்த ஒரு நொடி கண் மூடியதால் எவ்வளவு பெரிய விபத்து நேர்ந்திருக்கும்!
ஆம், முன்னால் சிக்னலில் சிவப்பு விழுந்ததைக் கவனிக்கத் தவறியவள், அவளுக்கு முன்னால் இருந்த ஹார்லி டேவிட்சன் பைக்கில் மோதியிருப்பாள்.
அவள் பிரேக் போட்டதால், அந்த பைக்கிற்கும் அவளது தார் காருக்கும் ஐந்து அங்குல தூரமே இருந்தது.
“ஷி..ட்! தேங்க் காட்!” எனச் சொன்னவள், தனக்கு முன்னால் இருந்த வண்டியைப் பார்த்தாள்.
அந்த விலையுயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்கில் இருந்தவன் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.
முன்னால் திரும்பி சிக்னலைப் பார்த்தவன், அதில் இன்னும் 70 நொடிகள் இருக்க, தனது இருசக்கர வண்டியில் இருந்து இறங்கி நேராக அந்த தார் காரின் டிரைவர் சீட் அருகே சென்று ஜன்னல் கண்ணாடியில் தட்டினான்.
அவன் இறங்கி வருவதைப் பார்த்தவள் முதலில் ‘இவனா?’ என அதிர்ந்து சுதாரித்துக்கொண்டாள்.
இவள் கண்ணாடியை இறக்கத் தயங்க, மறுபடியும் கண்ணாடியில் தட்டி அதை கீழே இறக்குமாறு சைகை செய்தான்.
“ச்சே… எல்லாம் அந்த எருமையால வந்தது, இடியட்” எனச் சொன்னவள், பதட்டத்தை முகத்தில் காட்டாமல் கண்ணாடியை இறக்கினாள்.
காருக்குள் இருந்தவளைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்த.
அவளைப் பார்த்து முறைத்தான்.
“என்ன?” எனப் புருவம் உயர்த்தி அவனை அலட்சியமாகப் பார்த்துக் கேட்டாள்.
அவளை விட அலட்சியமாக, அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு கூர்மையான கத்தியைப் போல் நோக்கியவன், “வாய் மட்டும்தான் ஓவரா ஆடும் போல… கார் ஓட்டத் தெரியாத உனக்கு யாரு லைசென்ஸ் கொடுத்தா? உனக்கே ஓட்டத் தெரியல… அப்புறம் எதுக்கு ஓவரா சீன் போட்டுட்டு இவ்வளவு பெரிய காரை எந்தத் தைரியத்துல கொடுத்தாங்க… உங்க வீட்ல உன்னைத் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா?” என அவளுக்குப் பேச வாய்ப்பே தராமல் திட்டிவிட்டு,
“ச்சே” எனத் திரும்ப, சிக்னல் போடப்பட்டது.
அவளைப் பார்த்து முறைத்துவிட்டு அவனது பைக்கில் ஏறிச் சென்றான்.
அவன் சென்ற பிறகு, சுற்றிலும் பார்த்தபோது அனைவரும் அவளைத்தான் பார்த்தனர்.
அதில் குறுகியவள், முன்னே சென்றவனை “ராஸ்கல்” என முறைத்துவிட்டு வண்டியை எடுத்தாள்.
நேராக அங்கிருந்து கல்லூரிக்குச் சென்றவள், அவளது காரை நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தினாள்.
அவள் வந்ததை தூரத்திலிருந்து பார்த்த அவளது தோழிகள் அவளிடம் வந்தனர்.
அவள் தனது பையை எடுத்துக்கொண்டு இறங்கி, கதவைத் ‘தடடார்’ என்ற சத்தத்துடன் சாத்தினாள்.
அவள் சாத்திய வேகத்தைப் பார்த்த நண்பர்களில் ஒருத்தியான நேஹா, “என்னடி, இவ்ளோ கோவமா இருக்கா? காலையில எவன் மாட்டுனானோ தெரியலையே?” என அக்ஷயாவிடம் கூறினாள்.
“அதானடி, என்னன்னு கேட்போமா?” என அக்ஷயா கேட்க,
“கார் கதவையே இந்த சாத்து சாத்துறா, அடிச்சிருவாளோ?” என நேத்ரா கேட்க,
மூவரும் ஒருவரை ஒருவர் மிரண்டு போய் பார்த்தனர்.
மெதுவாக அவளிடம் சென்று நின்றனர்.
“என்னடி, ஏன் மூணு பேரும் பேயைப் பார்த்த மாதிரி இருக்கீங்க?” எனக் கேட்டாள் ரிது.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்.”ஹலோ… என்ன? மின்சார கண்ணா படத்துல வர்ற மதன் பாபு, மனோபாலா மாதிரி முழிக்கிறீங்க, சொல்லுங்க” எனக் கேட்க,
மூவரும் ஒரு மாதிரி இளித்துக்கொண்டு, “ஒண்ணுமில்லைடி, ஏன் காலையிலேயே இவ்ளோ டெரரா இருக்க?” எனக் கேட்டாள் அக்ஷயா.
“அதுவா… நேத்து மால்ல ஒரு இடியட் நம்ம மேல மோதினான்ல?” எனக் கேட்க, “ஆஆங்… நம்ம மேலயா?” எனக் கோரஸாகக் கேட்டனர்.
“சரி, என் மேல, போதுமா?”
“ஆமா, இப்போ அவனுக்கு என்ன?” எனக் கேட்டாள் நேஹா.
“இன்னைக்கு காலையிலயும் அவன் தான். ஏதோ ஞாபகத்துல நான் அவன் மேல காரை இடிச்சிருப்பேன். ஆனா ஜஸ்ட் மிஸ்ல பிரேக் போட்டுட்டேன்…”
“அய்யயோ… அப்புறம் என்ன ஆச்சு?” எனக் கோரஸாகக் கேட்டனர்.
“ஓன்னும் ஆகல… ஒரு 5 இன்ச் கேப்ல நிறுத்திட்டேன்… பட் அதுக்கு அந்த இடியட் எப்படி திட்டினான்னு தெரியுமா?”
“நீ மட்டும் நேத்து கொஞ்சமா திட்டின?” என முணுமுணுத்தாள் நேத்ரா.
அதைக் கேட்டு அச்சு, “ஹே, அமைதியா இருடி” எனக் கூற, “என்னடி சொல்ற?” என்று கேட்டாள் ரிது.
“அய்யயோ, கேட்டிருச்சோ?” என மைண்ட் வாய்ஸில் பேசுவதாக நினைத்து சத்தமாகச் சொன்னாள் நேத்ரா.
அவளை முறைத்துக்கொண்டு, மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள் ரிது.
“போச்சு போச்சு, செத்தேன்” என்றாள் நேத்ரா.
“சொல்லப்போறியா இல்லையா?”
“அ… அ… அது… அதுவா… வந்து…” எனத் தடுமாறினாள்.
“சீக்கிரமா சொல்லு, கிளாஸுக்குப் போகணும்.”
“இப்போ நான் உன்கிட்ட என்ன சொல்றது…” எனச் சொன்னவள், மற்ற இரு நண்பிகளை உதவிக்கு அழைத்தாள், சைகையில் தான்.
அவர்கள் இவளைப் பார்த்து ‘இல்லை’ எனத் தலையாட்டினர்.
“அய்யயோவ், பாக்குறாளே…” “அது ஒண்ணும் இல்ல ரிது,” எனச் சத்தமாக ஆரம்பித்து, “நேத்து நீ அவரை ‘காச்சியிஎடுத்தத’ சொன்னேன்” என்றாள் உள்ளுக்குள்ளே போன குரலில்.
அவள் செய்வதைப் பார்த்துச் சிரிப்பு வந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் முறைத்துக்கொண்டு நின்றாள்.
“சாரி ரிது, ஏதோ ஒரு ஃப்ளோவுல சொல்லிட்டேன்” என்க, “பிழைச்சுப்போ… வாங்க, கிளாஸுக்குப் போலாம்” என முன்னே நடந்தாள்.
“இன்னைக்குத் தப்பிச்சிட்டா, மறுபடியும் அவகிட்ட மாட்டிக்காத… அப்புறம் உன் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது… நாங்களும் சப்போர்ட்டுக்கு இருக்க மாட்டோம்” என நேஹா கூற, அச்சு அதை அமோதித்தாள்.
“ஏன்டி இருக்க மாட்டீங்க?” என வாடிய முகத்துடன் கேட்டாள் நேத்ரா.
“ஏன்னா, அதுக்கு முன்னாடி எங்களை போட்டுருவா, அவகிட்ட சொல்லலைன்னு” எனச் சொன்னாள் நேஹா.
“ஆமா ஆமா, செஞ்சாலும் செய்வா” எனச் சோகமாகச் சொன்னாள் நேத்ரா.
“சரி சரி, மூஞ்சியை அப்படி வெக்காத, பார்க்க முடியல… அவ திரும்பி பார்க்கிறதுக்குள்ள நாம அங்க போயிடணும்,” என்று ஒரே ஓட்டமாக அவள் பின்னால் போய் நடந்தனர் மூவரும்.
என்னதான் அவர்கள் அவளுக்குப் பயந்தாலும் (நடித்தாலும்), ரிதுவுக்கு ஒன்றென்றால் சும்மா இருக்க மாட்டார்கள்.
அதே போலத்தான் ரிதுவும்.
நான்கு பேரும் அந்தப் பெரிய வகுப்பறைக்குள் சென்று கடைசி பெஞ்சில் அவரவர் இடத்தில் அமர, சரியாக முதல் செஷனுக்கான மணி அடிக்கப்பட்டது.
தொடரும்…