அவன் யோசனையாக பார்க்க, அவள் புருவம் உயர்த்தினாள்.
“ருத்ரா க்ரூப்ஸ் எல்லாமே..” என்றவனின் பேச்சை மீண்டும் இடையிட்டவள்,
“சில ஆண்டுகளா மிஸ்டர் கஜேந்திரனோட சன் ருத்ரேஷ்வர் தான் பார்த்துட்டு இருக்கார்.. சிலதை ருத்ரேஷ்வர் அத்தை பசங்க, கிருஷ்ணா அண்ட் நரேன் பார்த்துட்டு இருக்கிறாங்க.” என்றாள்.
“எப்பவுமே நீங்க வேகமும் விவேகமும் தான்.”
அவளது பார்வையில், “துதி பாடலை மேடம்.. உண்மையைத் தான் சொல்றேன்.” என்று நேர் கொண்ட பார்வையுடன் கூறினான்.
அவள் தோள் குலுக்கலுடன், “லௌட் ஸ்பீக்கர் செட் எடுத்துக்கோங்க” என்றபடி எழுந்து கொள்ள,
“எஸ் மேடம்” என்ற படி எழுந்தவன் ஒலி வாங்கியுடன் இணைந்திருந்த ஒலிபரப்பியை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினான்.
தனது நான்கு சக்கர வாகனத்தை நோக்கிச் சென்றவள் நின்று திரும்பி கபிலனிடம், “உங்க பைக் கீ” என்றபடி கையை நீட்டினாள்.
அவன் அதிர்வுடன் பார்க்க,
அவளோ அலட்டிக்கொள்ளாமல், “ஏன்! என் பின்னாடி உட்கார்ந்து வர மாட்டீங்களா?” என்று புருவம் உயர்த்தினாள்.
அதிர்ச்சி விலகாமலேயே ‘வருவேனே’ என்பது போல் தலையை ஆட்டியபடி சாவியியை அவளிடம் கொடுத்தான்.
மற்ற காவலர்களின் பார்வையை பொருட் படுத்தாமல், கபிலனை பின்னால் ஏற்றிக் கொண்டு வ.உ.சி மைதானத்தை நோக்கி புறப்பட்டாள்.
…..………
அதே நேரத்தில் தனது அலுவலகத்தில் பெயரிற்கு ஏற்றார் போல் நெற்றிக் கண்ணை திறந்த சிவனாக நின்றிருந்த ருத்ரேஷ்வர், தன் முன் பயத்துடன் நின்றிருந்தவன் கன்னத்தில் அறைந்த ஒற்றை அறையில், அவனது உதடு கிழிந்து இரத்தம் கசிந்ததோடு, கடவாப்பல் ஒன்றும் கழண்டு கொண்டது.
தணியாத கோபத்துடன் தனது செயலாளர் பிரவீனைப் பார்த்து, “ப்ளக்(black)லிஸ்ட்.” என்றான்.
அடி வாங்கியவன் ருத்ரேஷ்வர் காலில் விழுந்த படி, “தெரியாம செய்துட்டேன் சார்.. ப்ளீஸ் சார்.. இந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க சார்.” என்று வலியை மீறிக் கெஞ்சினான்.
“தவறுக்கு மன்னிப்பு உண்டு, துரோகத்திற்கு இல்லை.” என்றவன், ஏவலரை அழைக்கும் மணியை அழுத்தி இருந்தான்.
அடுத்த நொடி ஏவலர் உள்ளே நுழைய, அடி வாங்கியவனோ, “சார்.. சார்.. ப்ளீஸ் சார்.” என்று கதறினான்.
ருத்ரேஷ்வரின் பார்வையில், ஏவலர் அடி வாங்கியவனை அவனது கதறலை மீறி வெளியே இழுத்துச் சென்றான்.
வெளியே சென்றதும் ஏவலர், “என்ன செய்த?” என்று கேட்டான்.
அவன் தலை குனிந்து நிற்க,
ஏவலர், “அப்போ.. பெரிய தப்பை செய்து இருக்க.” என்றான்.
“என்னோட குழந்தைக்கு ஹார்ட் ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்பட்டுச்சு.. அதான்..” என்று இழுத்து நிறுத்தினான்.
“அதை சார் கிட்ட கேட்டு இருந்தா, அவரே கூட கொடுத்து இருப்பார்.”
“மூனு லட்சம்”
“போன வருஷம் என்னோட மனைவி ஆபரேஷன், தங்கை கல்யாணம்னு நிறைய பணத்தேவை இருந்துது.. அப்படி இப்படி புரட்டியும் தொக்கா ரெண்டு லட்சம் துண்டு விழுந்துச்சி.. சார் தான் உதவினார்.. லோன் மாதிரி மாசம் மாசம் சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சிக்கிறேன்னு சொன்னார்.”
வாய் விட்டு கதறி அழுதவன், “பெரிய தப்பு செஞ்சுட்டேனே!” என்று நெற்றியில் அடித்துக் கொண்டான்.
“இப்போ கதறி என்ன பிரயோஜனம்? சரி கிளம்பு.. சார் உன்னைப் பார்த்தா எனக்கு தான் திட்டு விழும்”
“ஹ்ம்ம்” என்றவன் வேறு வழி இன்றி தனது செயலை நினைத்து நொந்துக் கொண்டவனாக கண்ணீர் தோய்ந்த நிலையில் வெளியேறினான்.
அறையின் உள்ளே பிரவீன், “போலீஸ் கம்ப்ளைன்ட் செய்து இருக்கலாமே?” என்று கூற,
“இவன் அம்பு..! எய்தவன் வினோதன்.. என்னோட பெயரைக் கெடுக்க இந்த வழி தான் கிடைச்சுதா! இனி அவன் எழுந்துக்கவே முடியாத அளவுக்கு அடிக்கிறேன்.. நேர் வழியில ஜெயிக்க துப்பில்லை.” என்று கெட்ட வார்த்தையினால் மனதினுள் திட்டியவன்,
“இவனுக்கு ஜெயில் தண்டனையை விட இது தான் பெருசு.. எங்கேயும் வேலை கிடைக்காம, தன் குடும்பத்துக்கு ஒன்னும் செய்ய முடியாம கையாலாகா தனத்துடன் கஷ்டப்படட்டும்.. அவனுக்கு மட்டும் குழந்தை இல்லை! அவனோட மனைவியையும் ப்ளாக் லிஸ்ட் செய்து இருப்பேன்” என்றான்.
பின் அடங்காத கோபத்துடன், “அவன் குழந்தை உயிரைக் காப்பாத்த, மத்த குழந்தைங்க உயிருடன் விளையாடுவானா?” என்றான்.
பிரவீன் அதிர்ச்சியுடன் பார்க்க, “என்ன?” என்றான்.
“ஒரு நாள் எக்ஸ்பெரி டேட் கூடுதலா போட்டு இருக்கிறான்.. எல்லாத்தையும் வெளியே போகாம தடுத்து கம்பெனி பெயர் பெரிய அளவில் கெட்டுப் போகாம தடுத்தாலும், முதல் முறையா சரியான நேரத்துக்கு டெலிவர் செய்யலைன்னு கெட்ட பெயர் வரத் தான் செய்யும்.. பண நஷ்டமும் தான்.. ஆனா, நீ உயிர் சேதம்னு சொல்ற!” என்று புரியாமல் இழுத்து நிறுத்தினான்.
[பிரவீன் ருத்ரேஷ்வரின் நெருங்கிய பாலிய பள்ளி நண்பன்.. நன்றாக படிப்பவனாக இருந்தும், திடீரென ஏற்பட்ட குடும்ப சூழ்நிலை காரணமாக பொறியியல் படிப்பை விடுத்து சாதாரண படிப்பை படித்து, குறைந்த சம்பளத்தில் வேலையில் இருந்தவனை, தான் பொறுப்பேற்றதும் தனது செயலாளராக நியமித்து, நண்பனின் பொருளாதரத்தை உயர்த்தி இருந்தான். செயலாளர் வேலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்த பிரவீனை பாசத்துடன் மிரட்டி தன்னுடன் சேர்த்து, அனைத்தையும் கற்றுக் கொடுத்த ஆசான் அவன். பிரவீன் தனிமையில் நண்பனாகவும் மற்றவர்கள் முன்னிலையில் செயலாளராகவும் நடந்து கொள்வான்.]
ருத்ரேஷ்வர் முறைப்புடன், “எந்தெந்த பொருளுக்கு எக்ஸ்பெரி டேட் கூடுதலா போட்டு இருக்கிறான்?” என்று கேட்டான்.
“இளநீர், வழுக்கை, பதநீர்”
“இளநீர் ஓகே.. பதநீர் கெட்டுப் போகாதுனாலும் ஒரு மாதிரி கடுத்திடும்.. ஆனா வழுக்கை! நாம ப்ரிசெர்வேடிவ் கலக்காம இயற்கையா தான் விற்கிறோம்.. அதான் கெட்டுப் போகாம இருக்க, விடியற்காலையில் வழுக்கை எடுத்து, மதுரை, சென்னைனு ப்ளைட்டில் அனுப்பி, அன்னைக்கு காலையிலேயே கிடைக்கிற மாதிரி செய்றோம்..
நாம ப்ரிசெர்வேடிவ் கலக்காததால் தான் நிறைய டிமான்ட் என்றதோடு, சின்னக் குழந்தைக்கு கூட தைரியமா கொடுக்கிறாங்க..
வழுக்கை, ஒரு நாள் லேட் ஆனாலும் கெட்டுப் போய்டும்.. ஒரு வாய் எடுத்துக் கொண்டதும் கெட்டுப் போனது தெரிந்து விடும் என்றாலும், பெரியவங்க துப்பிடுவாங்க. ஆனா, குழந்தைங்க முழுங்கிடுவாங்க.. சின்னக் குழந்தைகளுக்கு அது விஷமா மாற வாய்ப்பு இருக்குது தானே!
பண நஷ்டம் எனக்கு விஷயமே இல்லை, அதை சுலபமா ஏதாவது புது திட்டத்தில் எடுத்திடுவேன்.. ஆனா உயிர்! ஒரு உயிர் போனாலும்.. நினைக்கவே..!” என்றவனின் மனதினுள் ஒரு சிறுமியின் உருவம் தோன்ற,
தலையை உலுக்கியபடி, ‘இல்லை அவ உயிருடன் தான் இருப்பா’ என்று சொல்லிக் கொண்டான்.
நண்பனின் செயலில், “என்னடா மஞ்சரி ஞாபகமா?” என்று கேட்டான்.
வேதனையில் கசங்கிய முகத்தை நொடியில் சீராக்கியவன், “நம்ம டிரஸ்ட் மூலமா, அவனோட குழந்தை ஆபிரேஷனுக்கு ஏற்பாடு செய்!” என்றான்.
நண்பனை பெருமையுடன் பார்த்த பிரவீன் மனதினுள், ‘முட்டாள்! உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த போது எடுத்த முடிவில், ஐந்து வருட நேர்மையை, நம்பிக்கையை, எதிர் காலத்தை கெடுத்துக்கிட்டான்.’ என்று அடி வாங்கியவனை பற்றி நினைத்து வருந்தியபடி, தனது வேலையைத் தொடர்ந்தான்.
தழல் தகிக்கும்…