பைரவியின் அறையினுள் சென்ற கபிலன், “மேடம் கலைச்செல்வி ஒரு ஆட்டோவில் கிளம்பிப் போய் இருக்கா.. அந்த ஆட்டோ நம்பர் வச்சு டிரைவர் டீட்டேய்ல்ஸ் எடுத்துட்டேன்.” என்றான்.
“வண்ணார்பேட்டை ஸ்டாண்ட் ஆட்டோவா?”
“அது தெரியலை மேடம்.. ரன்னிங் ஆட்டோவைத் தான் நிறுத்தி ஏறி இருக்குறா”
“சரி, அவனுக்கு போன் செய்து இப்போ உடனே ஆரியாஸ் பேக்கரி வரச் சொல்லுங்க.”
“ஓகே மேடம்” என்றவன் அந்தத் தானி ஓட்டுநரை அழைத்து, பைரவி கூறிய இடத்திற்கு வரச் சொன்னான்.
அடுத்த அரை மணி நேரத்தில் பைரவி அந்த ஓட்டுநரை சாதாரண உடையில் சந்தித்தாள்.
அவன் பயத்துடன் அமர்ந்து இருக்க,
“ரிலாக்ஸ்.. பிரச்சனை எதுவும் இல்ல.. சின்ன விசாரணைக்காகத் தான் உங்களை வரச் சொன்னேன்.” என்றாள்.
பயத்துடனே, “ஓகே மேடம்.” என்றான்.
“என்ன குடிக்கிறீங்க? இல்ல, ஏதும் சாப்பிடுறீங்களா?”
“இல்ல மேடம்.. எதுவும் வேணாம்.” என்று அவன் அவசரமாகக் கூற,
“இயல்பா நடந்துக்க தான் கேட்கிறேன்.. எனக்கு காப்பி சொல்லப் போறேன்.. உங்களுக்கு என்ன சொல்ல?” என்று கேட்டாள்.
“என..க்கும் அதே இருக்கட்டும் மேடம்.”
மேசைப் பணியாளரை அழைத்து இரண்டு காப்பி கொண்டு வரக் கூறினாள்.
மேசைப் பணியாளர் அகன்றதும், தனது கைபேசியில் இருந்த கலைச்செல்வியின் புகைப் படத்தை ஓட்டுநரிடம் காட்டி,
“இந்த பொண்ணைத் தெரியுமா? பார்த்து இருக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
அவன் வருந்திய குரலில், “இந்த பொண்ணு இறந்ததாச் சொல்ற அன்னைக்கு, என்னோட வண்டில சவாரி வந்துது மேடம்.. அடுத்த நாள் நியூஸ்ல பார்த்து எம்பொண்டாட்டிட்ட கூட சொல்லிட்டு இருந்தேன்.” என்றான்.
“அந்தப் பொண்ணை எங்கே இறக்கி விட்டீங்கனு ஞாபகம் இருக்குதா?”
“அடுத்த நாள் நியூஸ் பார்த்து இதை பத்தி பொண்டாட்டி கிட்ட பேசினதால் நல்லா ஞாபகம் இருக்குது மேடம்.. ருத்ரா பாக்டரியில் இறக்கி விட்டேன், மேடம்.”
“அன்னைக்கு அந்தப் பொண்ணு எப்படி இருந்தா? ஐ மீன் ஏதும் பதற்றம், பயம், வருத்தம்.. இப்படி?”
சிறிது யோசித்தவன், “அப்படி எதுவும் தெரியலை மேடம்.” என்றான்.
பின் சிறு தயக்கத்துடன், “அந்தப் பொண்ணை யாரும் கொலை செய்துட்டாங்களா மேடம்?” என்று கேட்டான்.
அப்பொழுது மேசைப் பணியாளர் வந்து காபியை வைத்துச் சென்றார்.
“குடிங்க” என்றபடி தனது காப்பியை அருந்த ஆரம்பித்தாள். அவனும் எடுத்து பருக ஆரம்பித்தான்.
பாதி காபி அருந்தியதும், “என்ன கேட்டீங்க?” என்று கேட்டாள்.
“ஹான்” என்றவன், சிறு பயம் கலந்த தயக்கத்துடன், மீண்டும் அந்த கேள்வியைக் கேட்டான்.
காப்பியை அருந்தியபடி, “நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டாள்.
“நானா!” என்று சிறிது அதிர்ந்தவன், “நான் என்ன மேடம் சொல்ல?” என்றான்.
பின் பதறியவனாக, “மேடம் இதில் எனக்கு எதுவும் சம்பந்தம் இல்லை மேடம்.. நான் எதுவும் செய்யலை” என்றான்.
“உங்க மேல சின்ன சந்தேகம் வந்து இருந்தாலும், உங்களை ஸ்டேஷனில் தான் விசாரிச்சு இருப்பேன்.. இப்போ சும்மா தான் கேட்டேன்.” என்றவள் கையை உயர்த்தி மேசைப் பணியாளரை அழைத்து செய்கையில் ‘பில்’ என்றாள்.
பின் ஓட்டுநரைப் பார்த்து, “இறந்த அன்னைக்கு உங்க ஆட்டோவில் சவாரி வந்து இருக்கிறா.. எந்த வித பதற்றமோ வருத்தமோ அவ முகத்தில் தெரியலைனு சொல்றீங்க? அந்தப் பொண்ணு தற்கொலை செய்து இருக்க வாய்ப்பு இருக்குதானு உங்க கருத்தைச் சொல்லுங்க”
“நானா மேடம்!” என்று அவன் சிறு பயம் கலந்த தயக்கத்துடன் கூற, மேசைப் பணியாளர் வந்து கட்டணத் தொகையை வைத்துச் சென்றார்.
ஓட்டுநர் காப்பியை குடித்து முடிக்கவும், அவள் தனது கைபையில் இருந்து கட்டணத் தொகையை எடுத்து வைக்க, அவன் அதிர்வு கலந்த சிறு குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது எண்ணம் புரிந்தார் போல், “நான் தானே உங்களை வரச் சொல்லி காப்பி வாங்கி கொடுத்தேன், அப்போ நான் தானே பணம் கொடுக்கணும்.” என்றாள்.
அவன் அவளை பிரம்மிப்புடன் பார்க்க,
அதை கண்டு கொள்ளாதவள், “சரி உங்க கருத்தைச் சொல்லுங்க.. இது நமக்குள் தான் இருக்கும்.” என்றாள்.
“முகத்தை பார்த்தப்ப நல்ல திடமான தைரியமான பொண்ணா தான் தெரிந்தது.. அது தற்கொலை செய்துக்குமானு எனக்குத் தெரியலை மேடம்..”
“ஹ்ம்ம்” என்றபடி எழுந்தவள், “இங்கே பேசிக்கிட்டது நமக்குள் தான் இருக்கணும்.” என்று அழுத்தத்துடன் கூறினாள்.
“யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் மேடம்”
“ஹ்ம்ம்” என்று விட்டு அவள் கிளம்ப, அவனும் கிளம்பினான்.
அடுத்த ஐந்தாவது நிமிடம், தனது நான்கு சக்கர வண்டியில் கபிலனுடன் ருத்ரேஷ்வரின் தொழிற்சாலை நோக்கிக் கிளம்பி இருந்தாள்.
கபிலன், “ருத்ரேஷ்வரை நான் எதிர்பார்க்கலை, மேடம்” என்றான்.
“பார்க்கலாம்” என்று மட்டுமே அவள் கூற,
“இவர் இல்லைனு நினைக்கிறீங்களா மேடம்?” என்று கேட்டான்.
“ஹ்ம்ம்.. அவரிடம் தப்பு இருக்காது.. பார்க்கலாம்”
“அவரிடம் தப்பு இல்லைனாலும், தப்பு செய்தவங்களை காப்பாத்த நினைக்கலாமே!”
“ஏன் இப்படி சொல்றீங்க?”
“ருத்ரேஷ்வருக்கும் அவரோட அத்தை பொண்ணு நித்யாக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்குது மேடம்.”
“ஓ” என்றவள், “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள்.
“நித்யாவும் என் தங்கச்சியும் காலேஜில் ஒரே கிளாஸ்.. ஆனா நெருங்கிய பழக்கம் கிடையாது.. நித்யா நேத்து வாட்ஸ்அப் குரூப்பில் மெசேஜ் போட்டு இருக்கிறா.. படிக்கிறப்பவே லவ் போ..ல”
“ஓ” என்று கூறியவளின் காதுகளில் அவளையும் மீறி, ‘நாம கல்யாணம் செய்துக்கலாமா அம்மு?, ஐ லவ் யூ அம்மு’ என்ற ருத்ரேஷ்வரின் குரல் கேட்டது.
சட்டென்று அவள் வண்டியின் வேகத்தை கூட்ட, கபிலன் ‘என்னாச்சு?’ என்று மனதினுள் கேட்டுக் கொண்டாலும், அவளிடம் எதுவும் கேட்கவில்லை.
அதே நேரத்தில், கொலையாளி அறைக்குச் சென்ற அவனது வலது கை, “நீங்க சந்தேகப்பட்டது சரி தான் சார்.. நான் அந்தப் பொண்ணை தூக்கினது பதிவாகலை. ஆனா, கார் பாக்ட்ரியை கிராஸ் ஆனது கேமராவில் பதிவாகி இருந்தது.. அதை அஜ்மல் எடிட் செய்துட்டான்.” என்றான்.
“உன்னை எப்போவே இதை செய்யச் சொன்னேன்?” என்று கோபமாக வினவ,
“இல்லை சார்.. அஜ்மல் ஊரில் இல்லை.. இன்னைக்கு காலையில் தான் வந்தான்.. வந்ததும் இன்டர்நெட் கேபிளை கட் செய்து, சரி செய்வது போல உள்ளே போய் வேலையை முடிச்சுட்டான்.”
“கம்பெனி ஆளை, என்ன செய்தான்?”
“அவனோட பிரெண்ட் ஒருத்தன் அந்த இன்டர்நெட் ஆபீஸ்ஸில் வேலை பார்க்கிறான்.. அவன் கூடவே இவனும் போய் வேலையை முடிச்சிட்டான்.”
“ஹனுமார் வால் மாதிரி வெளி ஆட்களை கூட்டிட்டே போற!” என்று கத்த,
“இல்லை சார்.. சந்தேகம் வந்து அந்த இன்டர்நெட் ஆபீஸ்ஸில் விசாரிச்சாலும், அவங்க ஆபீஸ் ஆள் தான் போனதா சொல்லிடலாம்னு இப்படி பிளான் செய்தான்.. நண்பனை நூறு சதவிதம் நம்பலாம்னு சொன்னான்.”
“என்னவோ! வேலையை சரியா செஞ்சானா?”
“எஸ் சார்… அந்தப் பொண்ணு அரை மணி நேரம் ருத்ரனை பார்க்க காத்திருந்து இருக்குது.. அந்தப் பதிவை எதுவும் செய்யலை, ஏன்னா விசாரிக்கும் போது எப்படியும் அந்த விஷயம் தெரிய வரும்கிறதோடு, அதனால் ருத்ரன் மேல தான் சந்தேகம் வரும்”
“அதெல்லாம் சரி, அஜ்மல் வேலையை ஒழுங்கா செஞ்சான் தானே?”
“அஜ்மல் பத்தி தெரியாதா சார்!”
“அது தெரியும்.. ஆனா அந்த ருத்ரனும் லேசுபட்டவன் இல்லை.. அவனுக்கு அந்த பொண்ணு வந்தது தெரிந்து பதிவைப் பார்த்தால், நாம எடிட் செய்ததை கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்குது.”
“அதெல்லாம் வாய்ப்பே இல்லை சார்.. என்னோட வண்டி மூனே செகண்ட் தான் தெரிந்தது.”
“அவன் ஜகஜால கில்லாடி”
“இந்த விஷயத்தில் அஜ்மல் கில்லாடிக்கும் கில்லாடி சார்!”
“ஹ்ம்ம்.. எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு.. ருத்ரனுக்கோ அந்த ஏசிபிக்கோ சந்தேகம் வந்தால் நாம தொலைஞ்சோம்.”
“புரியுது சார்”
“அந்த செந்திலும் அவனோட ஆட்களும் வெளியூர் போய்ட்டான்களா?”
“போய்ட்டான்க சார்”
“சரி.. சரி.. எதுக்கும் கவனமாவே இருங்க”
“சரி சார்” என்றுவிட்டு வெளியேறினான்.
தழல் தகிக்கும்…