அரை மணி நேரம் கழித்து தனது மிடுக்கான கம்பீர வேக நடையுடன் வந்த பைரவி, உள்ளே நுழையும் பொழுதே அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டு, ஏட்டைப் பார்த்து பார்வை சுருக்கியபடி நடக்க,
அவர் அவளது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கூடவே ஓடிய படி, “உங்களை பார்க்கனும்னு முக்கால் மணி நேரமா உட்கார்ந்து இருக்குது மேடம்.” என்றார்.
விமல்ராஜ் உட்பட அனைவரின் வணக்கத்திற்கும் (சல்யூட்) மிக சிறு தலை அசைப்பை பதிலாக தந்த படி ஏட்டிடம், “அஞ்சு நிமிஷம்” என்றவள் கபிலனைப் பார்த்து உள்ளே வருமாறு தலை அசைத்துவிட்டு, தனது அறையினுள் சென்றாள்.
சற்றே ஆசுவாசமான ஏட்டு வெளியே சென்று அந்தப் பெண்ணிடம், “அஞ்சு நிமிஷம் கழிச்சு மேடமை போய் பாருமா.” என்று விட்டு தன் இடத்தில் அமர்ந்து தண்ணீரைப் பருகினார்.
பைரவியின் அனுமதியுடன் அவள் அறையின் உள்ளே சென்ற கபிலன் விறைப்பாக வணக்கம் தெரிவிக்க, தலையசைத்து அதை அங்கீகரித்தவள் எதிரில் இருந்த இருக்கையை காட்டினாள்.
கபிலன் இருக்கையில் அமர்ந்ததும், “எனி கெஸ்?” என்று கேட்டாள்.
“ஃபளை ஹை கேஸ்?”
‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தவள், “நாம ரெண்டு பேர் மட்டும் தான் டீம்.” என்றாள்.
“ஏட்டு” என்று அவன் சிறு தயக்கத்துடன் இழுக்க,
மறுப்பாக தலை அசைத்தபடி, “நேர்மை மட்டும் போதாது.” என்றவள், “விமல்ராஜையே எதிர்க்க தைரியம் இல்லாதவர்.” என்றாள்.
“சாரி மேடம்”
“ஆல்ரைட்.. முதல்ல வி.ஓ.சி கிரௌண்ட் போய் ஸ்டுடென்ட்ஸ் பார்த்துட்டு, விசாரிக்க ஆரம்பிக்கணும்.”
[VOC Ground [வ.உ.சி மைதானம்] – திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பெரிய பொது வெளித் திடல். சிறுவர் பூங்கா, உட்புற விளையாட்டு அரங்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டு திடல் இருக்கிறது. சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டியத் தமிழர் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவாக அவர் பெயர் வைக்கப் பட்டுள்ளது.]
“ஓகே மேடம்”
அவனிடம் ஒரு கோப்பியத்தை நீட்டியபடி, “இந்த சேரை இங்க போட்டுட்டு, அந்த சேரை கொஞ்சம் தள்ளி போட்டு உட்கார்ந்து படிங்க.” என்றாள்.
கோப்பியத்தை வாங்கியவன் அவன் அமர்ந்து இருந்த இருக்கையை அவளது பக்கவாட்டில் போட்டு விட்டு, அவள் எதிரில் இருந்த மற்றொரு இருக்கையை சற்று தள்ளி போட்டு அமர்ந்து கோப்பியத்தில் கவனத்தை செலுத்தினான்.
அப்பொழுது கதவை தட்டியபடி, “எக்ஸ்கியூஸ் மீ மேம்” என்று வெளியே காத்திருந்த பெண் உள்ளே வர அனுமதி கேட்டாள்.
“எஸ்” என்றதும், உள்ளே வந்த பெண்ணை நோக்கி பக்கவாட்டில் இருந்த இருக்கையை காட்டினாள்.
அந்த பெண் கபிலனை தயக்கத்துடன் பார்த்தபடி அமர,
கால் மேல் கால் போட்டபடி அமர்ந்த பைரவி,
“விஷயம் நம்ம மூனு பேரைத் தாண்டி போகாது.” என்றாள்.
பைரவியின் இலக்கமற்ற தோற்றத்தில் சிறு பதற்றம் ஏற்பட்டாலும், ஒருவாறு தைரியத்தை வர வழைத்துக் கொண்டு,
“என்னோட பேரு அனிதா மேம்.. **** ஏரியால இருக்கிறேன்.. ருத்ரா ட்ரெஸ் கடையில் வேலை பார்க்கிறேன்.” என்றவள், அரை நொடி தயக்கத்தின் பின், “எங்க ஏரியா கவுன்சிலர் பையன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கணும்.” என்றாள்.
“பெட்ரூம் வரச் சொல்லி டார்ச்சர் செய்றானா?” என்ற பைரவியின் நேரடிக் கேள்வியில் அவள் அதிர, கபிலனின் கவனமோ கோப்பியத்தில் தான் இருந்தது.
அந்தப் பெண் இயல்பிற்கு திரும்ப சில நொடிகள் காத்திருந்தவள் பின், ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்தினாள்.
அந்தப் பெண் கலங்கிய கண்களுடன் மறுப்பாக தலையை அசைத்தாள்.
அந்த பெண்ணின் கண்ணில் தெரிந்த வேதனையிலும், இரு கைகளில் தெரிந்த சில ஆரிய சிறு சிறு காயங்களிலும் இருந்து விஷயத்தை யூகித்துவிட்ட பைரவி, அந்தப் பெண்ணே விஷயத்தை கூறக் காத்திருந்தாள்.
சில முறை தயக்கத்துடன் கபிலனைப் பார்த்த அந்த பெண், நொடிகள் நிமிடமான பிறகும் அமைதியாக இருக்க,
பொறுமை இழந்த பைரவி, “லுக்.. இங்கே நான் வெட்டியா இல்லை.” என்றாள் கறாரான அழுத்தக் குரலில்.
அந்த பெண் கண்ணீர் வடிந்த விழிகளுடன், “சாரி மேம்.. கொஞ்சம்.. தனியா.. பேச.. முடியுமா?” என்று தயக்கத்துடன் மெல்லிய குரலில் கேட்டாள்.
பைரவியோ அலட்சியத்துடன், “இவர் ஒருத்தர் இருக்கிறப்பவே உன்னால் சொல்ல முடியலையே, இதுல கோர்ட்டில் எல்லோர் முன்னாடியும் வக்கீல் கேட்கும் அந்தரங்க கேள்விகளுக்கு, எப்படி பதில் சொல்லுவ?” என்று கேட்டாள்.
அனிதா அவசரமாக, “இல்ல மேம்.. பேசுவேன்.” என்றாள்.
“ஓ.. எப்போ எங்க வச்சு உன்னை ரேப் செய்தான்? அவன் மட்டும் தானா? இல்லை, கூட அவன் பிரெண்ட்ஸ் இருந்தாங்களா? எத்தனை முறை ரேப் செய்தான், இல்லை செய்தாங்க?”
அவள் பெரும் அதிர்வுடன் பார்க்க,
பைரவியோ உதட்டோர வளைவுடன், “நான் கேட்டது ரொம்ப டீ-சென்ட்டான ஆரம்பக்கட்ட கேள்விகள்.” என்றாள்.
அந்தப் பெண் கலங்கிய விழிகளுடன் பார்வையைத் தாழ்த்த, பைரவி எரிச்சலுடன், “அவுட்” என்றாள்.
அவள் பரிதாபமாக வழியும் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்க, பைரவி அதிகரித்த எரிச்சலுடன் கையை கதவை நோக்கி நீட்டினாள்.
அழுகையை அடக்க போராடியபடி, “அசோக் அண்ணா தான், உங்களை பார்க்கச் சொன்னாங்க.” என்றாள்.
பைரவி புருவம் சுருக்கி பார்க்க,
“அவங்க வக்கீல்.. உங்க பிரெண்ட்னு சொன்னாங்க.” என்றாள்.
கோபத்துடன் கைபேசியில் அசோக்கை அழைத்த பைரவி, அவன் அழைப்பை எடுத்ததும், ‘ஹலோ’ சொல்லும் முன்,
“என்னையும் உன்னை மாதிரி வெட்டினு நினைச்சியா? இல்ல, இங்கே நீதி வழங்கப்படும்னு போர்டு போட்டு உட்கார்ந்து இருக்கிறேனா? இன்னொரு முறை இப்படி செய்த, முதல்ல உன்னை தான் உள்ளே தூக்கி வைப்பேன்.” என்று கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
அனிதா மிரட்ச்சியுடன் பார்க்க, பைரவியோ, “அவுட்” என்று கத்தி இருந்தாள்.
அதில் பயத்துடன் அவளது உடல் சற்றே தூக்கிப் போட, பைரவிக்கு அதில் எரிச்சல் தான் கூடியது.
“கபிலன்” என்ற பைரவியின் அழைப்பில் அவன் எழுந்து அனிதா அருகே சென்ற படி, “கிளம்புங்க” என்றான்.
அவள் அழுகையுடன் வெளியேற, அவள் வெளியே செல்லும் முன் கபிலன் மெல்லிய குரலில், “முதல்ல வக்கீல் சார் கிட்ட, மேடம் பத்தி கேட்டுட்டு வாங்க” என்று கூறி அனுப்பினான்.
‘டிஸ்கஸ்டிங்..’ என்று கோபமும் எரிச்சலுமாக முணுமுணுத்தவள் ‘ஃபளை ஹை’ பொறியியல் கல்லூரியில் நிகழ்ந்த இறுதி ஆண்டு மாணவி கலைச்செல்வியின் மரணத்தைப் பற்றிய வழக்கை யோசிக்க ஆரம்பித்தாள்.
கோப்பியத்தை மூடி வைத்த கபிலன், “இந்த பைல் வச்சு பார்த்தா, தற்கொலை போல தான் மேடம் தெரியுது.” என்றான்.
“அப்படி முடிச்சு இருக்கிறாங்க”
“ஆனா நாலாவது மாடியில் இருந்து விழுந்ததில் தலையில் அடி பட்டு இறந்ததா போஸ்ட் மார்டர்ம் ரிப்போர்ட் சொல்லுதே மேடம்.”
“தள்ளி விட்டு கூட கொன்று இருக்கலாம்.” என்றவள் பின் உதட்டோர மெல்லிய அலட்சிய புன்னகையுடன், “இன்ஸ்பெக்டர் மட்டும் தான் விலைக்குப் போகனுமா என்ன?” என்று கேட்டாள்.
மெல்லிய புன்னகையுடன், “அதுவும் சரி தான்” என்றவன்,
“மேடம் இப்போ அனிதா சொன்ன ருத்ரா ட்ரெஸ் ஷாப், பளை ஹை காலேஜ் ரெண்டுமே..” என்றவனின் பேச்சை இடையிட்டு,
“மிஸ்டர் கஜேந்திரன் அண்ட் அவர் சிஸ்டர் ராதிகாவுக்கு சொந்தமானது.” என்று முடித்தவளின் குரல் சாதாரணமாக இருந்தாலும், மனதினுள் அணையா தழல் ஒன்று தகித்துக் கொண்டிருப்பதை அவள் மட்டுமே அறிவாள்.