அதில் நித்யாவும் அழுகையை நிறுத்தி சிறு நம்பிக்கையும் ஆசையுமாக அவனைப் பார்க்க,
அவன் பல்லை கடித்தபடி, “அவ என் காதலை மறுக்க மாட்டா, ஏன்னா அவளுக்கும் என்னை பிடிக்கும்.” என்றான்.
நித்யா, “உங்களுக்கும் தான் என்னைப் பிடிக்கும்.” என்றாள்.
அவன் முறைப்புடன், “அவ என் காதலை மறுத்தாலும் என் முடிவில் மாற்றம் இல்லை.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தால் அது அவளுடன் தான் நடக்கும், இல்லை என் வாழ்வில் கல்யாணம் என்ற பேச்சிக்கே இடம் இல்லை.” என்றான்.
நித்யா வலியும் கோபமுமாக, “உங்க மனசில் இருக்கும் பெண் யாரு?” என்று கேட்டாள்.
அவனோ அலட்சியமாக, “அது உனக்கு தேவை இல்லாதது.” என்றான்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, ருத்ரேஷ்வர் தந்தையைப் பார்த்து சிறு வலியுடன்,
“அம்மா இல்லையேனு இப்போ ரொம்ப பீல் செய்றேன்.” என்று கூறிவிட்டு வெளியேறினான்.
இவ்வளவு நேரம் திடமாக இருந்த கஜேந்திரன், மகனின் இறுதிக் கூற்றில் உடைந்து போனார்.
ராதிகாவிற்கும் அவனது இறுதிக் கூற்றில் மனம் வலித்தது. ஆனால் அவரது மனமோ ஒரு பக்கம் மகள், இன்னொரு பக்கம் மகனாய் வளர்த்த மருமகன் என்று இருதலைக் கொல்லியாகத் தவித்தது.
ராதிகா வேதனை நிறைந்த குரலில், “அண்ணா இனி இந்தக் கல்யாணத்தைப் பற்றிப் பேசாதீங்க” என்று கூற,
பாலாஜி, “ராது!” என்று அதிர்வுடன் அழைக்க,
கிருஷ்ணா, “அம்மா என்ன சொல்றீங்க?” என்றும்,
நரேன், “நம்ம நித்தி பத்தி யோசிக்காம அவனுக்கு சப்போர்ட் செய்றீங்க?” என்றும் கண்டன குரலில் கூறினார்கள்.
நித்யா வாய்விட்டு அழுத படி, தன் அறைக்கு ஓடினாள்.
நரேனைப் பார்த்து, “ருத்ராவும், நம்ம ருத்ரா தான்” என்று அழுத்தத்துடன் கூறிய ராதிகா, “அவன் மனசில் வேற ஒரு பொண்ணு இருக்கும் போது, நித்தியை கல்யாணம் செய்தால், ரெண்டு பேர் வாழ்க்கையும் நரகமா தான் இருக்கும்.” என்று விட்டு வெளியேறினார்.
வேதனையுடன், மனைவியின் புகைப்படத்தை பார்த்த படி அமர்ந்திருந்த கஜேந்திரனிடம் எதுவும் பேச முடியாமல், மற்றவர்களும் வெளியேறினர்.
அடுத்த நாள் காலை பத்து மணியளவில் பாலாஜி ருத்ரேஷ்வரை சந்திக்க, அவனது தொழிற்சாலைக்குச் சென்றார்.
தனது அறையினுள் வந்தவரை வாய் திறந்து ‘வாங்க’ என்று வரவேற்காதவன், எதிரே இருந்த இருக்கையை கை காட்டினான்.
அவனது உதாசீனத்தை பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டு அமர்ந்தவர், அங்கே இருந்த பிரவீனைப் பார்த்தார்.
பிரவீன் வெளியே செல்லப் போக, “பிரவீன்” என்று அழைத்து அவனைத் தடுத்த ருத்ரேஷ்வர்,
பாலாஜியைப் பார்த்து, “சொல்லுங்க” என்றான்.
அவர் கோபத்தை அடக்கிக் கொண்டு, “குடும்ப விஷயம் பேசணும்.” என்றார்.
“சொல்லுங்க”
அவர் பிரவீனை முறைக்க, அவன், “சார்” என்று ருத்ரேஷ்வரை அழைத்தான்.
ருத்ரேஷ்வர் பாலாஜியிடம், “அவன் என் பி.ஏ மட்டுமில்லை, என்னோட நெருங்கிய நண்பனும் கூட.. அண்ட் உங்களை பற்றி நல்லாவே தெரியும்.” என்றவன், “எனக்கு வேலைகள் இருக்குது.. ஸோ” என்று கூறி நிறுத்தினான்.
வேறு வழி இல்லாமல் வந்த விஷயத்தை பேச ஆரம்பித்தார்.
“என் மேல் உள்ள கோபத்தில் தான் என் மகளை வேண்டாம்னு சொல்றியா?” என்று கேட்டார்.
“நேத்தே நான் காரணத்தைச் சொல்லிட்டேன்.”
“நித்தியை தவிர்க்க நீ சும்மா சொன்னதா தான் எனக்குத் தோணுது.”
“உங்களை மாதிரி பொய் சொல்ற பழக்கம் எனக்கு இல்லை.”
“ருத்ரா ப்ளீஸ்.. என் மேல உள்ள கோபத்தில் என் பொண்ணை தண்டிச்சிறாத.”
“நேத்து நான் சொன்னது நூறு சதவிதம் உண்மை”
“அப்போ யாரை விரும்புறனு சொல்லு”
“அது உங்களுக்கு தேவை இல்லாதது”
“அது எப்படி? இதில் என் பொண்ணோட வாழ்க்கை அடங்கி இருக்குது”
“என் நேரத்தை வீணாக்காம கிளம்புங்க”
“நான் என்ன செய்தால் நித்தியை கல்யாணம் செய்வ?”
“மஞ்சரி விஷயத்தில் என்ன நடந்ததுனு உண்மையைச் சொல்லுவீங்களா?”
“உண்மையைச் சொன்னா, நித்தியை கல்யாணம் செய்துப்பியா?” என்று அவசரமாக பரபரப்புடன் கேட்டார்.
“அத்தை உட்பட வீட்டில் இருக்கும் எல்லாரிடமும் உண்மையைச் சொல்லுவீங்களா?”
சில நொடிகள் மெளனமாக இருந்தவர், பின் தன்னை திடப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்து,
“சரி சொல்றேன்.. நீ நித்தியை கல்யாணம் செய்துப்பியா?” என்று கேட்டார்.
மறுப்பாக தலை அசைத்தவன், “நித்தி மேல எனக்கு பாசம் இருக்குது. ஆனா.. காதல் இல்லை.” என்றான்.
“என் மக கஷ்டப்படுறதை என்னால் பார்க்க முடியலை..” என்று வருந்திய குரலில் கூற,
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. மஞ்சரியை கஷ்டப்படுத்தி ரசிச்சதுக்கு, இப்போ அனுபவிக்கிறீங்க.. உங்களுக்கு பொண்ணா பிறந்த பாவத்துக்கு நித்தியும் அனுபவிக்கிறா..” என்றான்.
அவசரமாக, “இல்லை ருத்ரா.. அன்னைக்கு நான் வேணும்னு செய்யலை.. நான்..” என்று பேசியவரின் பேச்சை நிறுத்துவது போல் கோபத்துடன் மேஜையில் தட்டியவன்,
“உங்க பொய்களை நம்ப, நான் அத்தை இல்லை.. அண்ட் ஆரம்பத்தில் இருந்தே நீங்க மஞ்சரியை காயப்படுத்திட்டு தான் இருந்தீங்க..”
அவர் ஏதோ கூற வர, அவன், “கிளம்புங்க” என்ற படி கதவை நோக்கிக் கையை நீட்டினான்.
அவர் மீண்டும் ஏதோ பேச வர, அவன் கோபத்துடன், “அத்தைக்காக பார்க்கிறேன்.. செக்யூரிட்டி வைத்து வெளியே தள்ள வைக்காதீங்க” என்றான்.
அவமானம், கோபம், இயலாமை, வருத்தம் என்று பல உணர்ச்சிகளின் கலவையாக அவர் வெளியேறினார்.
காலை பதினோரு மணியளவில் கலைச்செல்வியின் பேருந்து தோழிக்கு அழைத்து கலைச்செல்வி இறந்த அன்று இறங்கிய இடத்தை கேட்டுத் தெரிந்து கொண்ட பைரவி, கபிலனை தனது அறைக்கு அழைத்தாள்.
கபிலன் வந்ததும், “கலைச்செல்வி இறந்த அன்னைக்கும் வண்ணார்பேட்டை பஸ் டிப்போ ஸ்டாப்பில் தான் இறங்கி இருக்கிறா.. ஸோ ட்ராபிக் சிக்னல் புட்டேஜ் வச்சு, அவ எந்தப் பக்கம் போனா? இல்லை.. அவ ஏறிப் போன ஆட்டோ, இப்படி ஏதேனும் க்ளு கிடைக்குதானு பாருங்க.” என்றாள்.
“எஸ் மேடம்” என்று கூறி வெளியேறினான்.
அதே நேரத்தில் தொழிற்சாலையில் ருத்ரேஷ்வரை அவனது அறையில் தனிமையில் சந்தித்த நரேன், “நீ யாரை விரும்புற?” என்று கேட்டான்.
ருத்ரேஷ்வரோ, “உனக்கு தேவை இல்லாதது” என்றான் அலட்சியத்துடன்.
அவனது அலட்சியத்தில் கோபம் வந்தாலும் தங்கைக்காக தன்மையாகவே, “உண்மையிலேயே யாரையும் விரும்புறியா? இல்லை, நித்தியை தவிர்க்க இப்படி சொல்றியா?” என்று கேட்டான்.
ருத்ரேஷ்வர் முறைப்புடன், “பொய் சொல்லி எனக்குப் பழக்கமில்லை.” என்றான்.
“நித்தி பாவம் ருத்ரா” என்று கெஞ்சும் குரலில் நரேன் கூற,
லேசாக பெருமூச்சை வெளியிட்ட ருத்ரேஷ்வர், “ஹ்ம்ம்.. எனக்கும் கஷ்டமா தான் இருக்குது.. பெரியவங்க பேசியதில் அவ மனசில் ஆசையை வளர்த்துக்கிட்டா.. ஆனா என்னால் வருத்தப்பட மட்டும் தான் முடியும்.. புரிஞ்சுக்கோ நரேன்.. இதில் என் தவறு எதுவும் இல்லை.” என்று நிதானமாகவே கூறினான்.
அமைதியான குரலில், “புரியுது” என்றவன் பின் கெஞ்சும் குரலில், “எதுவும் செய்ய முடியாதா? கொஞ்சம் யோசிச்சு பாரேன்? இன்னும் நீ உன் காதலை அந்தப் பொண்ணு கிட்ட சொல்லக் கூட இல்லை.” என்றான்.
கெஞ்சுபவனிடம் கோபம் கொள்ள மனம் இல்லாமல், அவனும் அமைதியான குரலில் ஆனால் சிறு அழுத்தத்துடன், “பத்து வருஷமா ஒருத்தியை விரும்பிட்டு இருக்கிற என்னால், எப்படி வேறு பொண்ணை கல்யாணம் செய்துக்க முடியும்?” என்று கேட்டான்.
பத்து வருடங்கள் என்றதில் அதிர்ந்தவன், அதற்கு மேல் பேச முடியாமல் நிராசையுடன் கிளம்பிவிட்டான்.
ருத்ரேஷ்வருக்கும் வருத்தமாக இருந்தாலும், தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதால் பிரவீனை அழைத்து வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.