
தழல் ~ 6
தண்ணீரை அருந்தி தனது பதற்றத்தை குறைத்த மருத்துவர், அந்த நபருக்கு கைபேசியில் அழைக்க முயற்சிக்க, அழைப்பு செல்லவில்லை. சில முறை முயற்சித்துப் பார்த்து விட்டு, இன்னொரு எண்ணிற்கு அழைத்தார்.
அழைப்பை எடுத்த அந்த நபர், “இந்த நம்பருக்கு போன் போடாதனு சொல்லி இருக்கிறேனே..” என்று சிறு கோபத்துடன் பொரிந்தான்.
மருத்துவர், “அந்த நம்பர் ரீச் ஆகலை.” என்று பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே,
“எதுவா இருந்தாலும் இனி இதுக்கு கூப்பிடாத.. என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லு.” என்றிருந்தான்.
“அந்த ஏசிபி ரொம்ப நோண்டுது.. கன்னத்தில் அடித்த தடம் இருந்ததானு கேட்டதும், ஒரு செகண்ட் ஆடி போயிட்டேன்.. நான் எதுவும் சொல்லலை. ஆனா அந்த ஏசிபி பார்க்கிற பார்வை! எனக்கு ரொம்ப பயமா இருக்குது”
“பயந்தா காசு வாங்கி இருக்க கூடாது”
“அது.. நீங்க எதுவும் பிரச்சனை வராதுனு சொன்னீங்க.”
“இப்பவும் வராது.. நாங்க பார்த்துக்கிறோம்.”
“எனக்கு என்னவோ கொஞ்சம் பயமாவே இருக்குது”
“பயத்தில் எதையாவது உளறின! அப்புறம் உனக்கு வேற ஒரு டாக்டர் போஸ்ட் மார்டம் செய்வான்.” என்று விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான்.
பைரவி தனது அலுவலகத்திற்கு செல்ல, அவள் சென்ற சிறிது நேரத்தில் கபிலனும் வந்தான்.
கபிலன், “கலைச்செல்வி இறந்த அன்னைக்கு டியூஷன் சென்டர் லீவ் மேம்.. அன்னைக்கு அந்த சென்டர் ஓனர் தங்கச்சிக்கு கல்யாணம் நடந்து இருக்குது. ஸோ.. லீவ் விட்டு இருக்கார்..
கலைச்செல்வி போற நேரத்தில் வர டீச்சர்ஸ்ஸில் ஒருத்தர் மட்டும் இன்னைக்கு வரலை.. உடம்பு சரி இல்லைனு லீவில் இருக்கிறார். வந்தவங்களை விசாரிச்சதில், கலைச்செல்வி யாரோடவும் பெருசா பழகினது போல தெரியலை.. வந்ததும் நேர கிளாஸ்ஸுக்கு போய் கிளாஸ் எடுத்துட்டு கிளம்பிடுவாளாம்.. பார்க்கும் போது சின்ன ஸ்மைலோட கடந்துடுவானு தான் சொல்றாங்க..
அவ டியூஷன் எடுத்த ஸ்டுடென்ட்ஸ் கிட்டயும் பாடம் தவிர பெருசா பேசினது போல தெரியலை.” என்றான்.
“ஸோ… அன்னைக்கு கலைச்செல்வி டியூஷன் சென்டர் போகலைங்கிறது மட்டும் தான் நமக்கு கிடைச்ச ஹின்ட்..”
“எஸ் மேடம்”
“மத்த டீச்சர்ஸ் அண்ட் அந்த ஸ்டுடென்ட்ஸ் கிட்ட என்னோட நம்பர் கொடுத்தீங்களா?”
“எஸ் மேடம்.. நீங்க கலைச்செல்வி காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் அண்ட் பிரெண்ட்ஸ் கிட்ட சொன்ன மாதிரியே, ஏதாவது ஞாபகம் வந்தா உங்களுக்கோ எனக்கோ கூப்பிடச் சொல்லி, நம்ம நம்பர்ஸ் கொடுத்து இருக்கிறேன்.”
“பைன்”
“அந்த டாக்டர் என்ன சொன்னார் மேடம்?”
“அவர் கிட்ட உண்மையும் பொய்மையும் கலந்து இருக்குது.. இன்ஸ்பெக்டர் மாதிரி அவரும் விலை போய் இருக்கலாம். இல்லை,. பயந்து ரிப்போர்ட்டை மாத்தி கொடுத்து இருக்கணும்” என்றவள்,
“நான் கிளம்புறப்ப சங்கவிங்கிற நர்ஸ் ரகசியமா என்னோட நம்பர் வாங்கி நாளைக்கு காலையில் போன் செய்து கலைச்செல்வியோட போஸ்ட்மார்டம் பத்தி ஒரு உண்மை சொல்றதா சொன்னாங்க.. பார்க்கலாம்.”
“வீட்டிற்குப் போனதும் நைட் போன் செய்யலாமே?” என்று அவன் யோசனையுடன் வினவ,
“அவங்களுக்கு இன்னைக்கு நைட் டியூட்டி இருக்கலாம்.” என்றாள்.
“ஓ” என்றவன், “நீங்க யார் மேல சந்தேகப் படுறீங்க மேடம்?” என்று கேட்டான்.
“உங்க கெஸ் என்ன?”
“மிஸ்டர் நரேன் மேல அதிக டவுட் இருக்குது மேடம்.. மிஸ்டர் கிருஷ்ணாவும் கூட்டா இருக்கலாம்.. மிஸ்டர் ருத்ரேஷ்வர் நேர்மையானவரா தான் தெரிறார்.. இல்லை… இவங்க யாரும் இல்லாம வேற யாரும் கூட இருக்கலாம்.”
“எஸ்.. இவங்க குடும்பத்தை தவிர வெளி ஆளாக் கூட இருக்கலாம்.” என்றவள்,
“உங்க லிஸ்ட்டில் பாலாஜியையும் சேர்த்துக் கோங்க” என்றாள்.
அவன் கேள்வியாய் பார்க்க,
“அந்த ஆள் பொண்ணுங்க விஷயத்தில் சரி கிடையாது.” என்ற போது, அவளது குரல் சாதாரணமாக இருந்தாலும், அவளது மனமோ தகித்துக் கொண்டிருந்தது.
அன்று இரவு வீட்டிற்கு விரைவாக வந்த ருத்ரேஷ்வர், அகத் தொடர்பு மூலம் குடும்பத்தினரை தந்தையின் அறைக்கு வரக் கூறி விட்டு, கூடத்தில் கோபத்துடன் அமர்ந்து இருந்தான்.
அனைவரும் கஜேந்திரன் அறைக்கு வந்ததும், உள்ளே சென்றவன் தந்தையை கோபத்துடன் முறைத்த படி, “என்ன செய்து வைத்து இருக்கிறீங்க? காலையில் தானே இவ மனசில் ஆசையை வளர்க்காதீங்கனு சொன்னேன்! நான் சொன்னதையும் மீறி, டேட் பிக்ஸ் செய்யலைனாலும், எனக்கும் இவளுக்கும் கல்யாணம் செய்ய முடிவு செய்திருக்கிறதை முன்னிட்டு வொர்க்கர்ஸ்க்கு இந்த மன்த் போனஸ் தரச் சொல்லி எல்லா GMக்கும் மெயில் போட்டு இருக்கிறீங்க.” என்று சீறினான்.
அவனது கோபத்தில் பாதிக்கப் படாதவராக கஜேந்திரன், “இந்த கல்யாணாம் நடக்கும்னு நானும் தெளிவாச் சொன்னேனே!” என்றார்.
“நீங்க பத்திரிக்கையே அடிச்சாலும், இந்தக் கல்யாணம் நடக்காது” என்றவன் ராதிகாவைப் பார்த்து, “நேத்து உங்க கிட்ட என்ன சொன்னேன்?” என்று கோபத்தை அடக்கிய குரலில் கேட்டான்.
அவர் சங்கடத்துடன் சிறிது வருந்திய குரலில், “அண்ணா தான் கல்யாணம் ஆனா சரி ஆகி, நீ நித்தியை காதலிக்க ஆரம்பிச்சிடுவனு சொன்னார்.” என்றார்.
பொறுமை இழந்தவன் கோபக் குரலில், “ஒரு நாளும் இவ மேல எனக்கு காதல் வராது.. ஏன்னா என் மனசில் வேற ஒரு பொண்ணு இருக்கிறா.” என்றான்.
ராதிகா குடும்பத்தினர் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க,
கஜேந்திரன், “ருத்ரா..” என்று அழைத்து பேசப் போக,
அவர் பக்கம் கோபமாக திரும்பி, “என்ன! என் மனசில் இருப்பது காதலே இல்லை.. என் ஆசை ஒரு நாளும் நிறைவேறாதுனு சொல்லப் போறீங்களா? நீங்க என்ன சொன்னாலும் என் முடிவில் மாற்றம் இல்லை” என்றவன்,
“அம்மா இறந்த பிறகு நீங்க ஏன் வேற கல்யாணம் செய்துக்கலை?” என்று கேட்டான்.
மகன் எங்கே வருகிறான் என்பதை புரிந்தவர், “அதுவும் இதுவும் ஒன்றா?” என்று சிறு கோபத்துடன் கேட்டார்.
“கல்யாணம் நடந்தால் தானா? என் மனைவி யாருனு நான் முடிவு செய்து, ரொம்ப வருஷம் ஆகுது” என்றான்.
நரேன் கோபத்துடன், “அப்போ.. என் தங்கச்சியோட மனசை ஏன் கலைச்ச?” என்று கேட்கவும்,
அழுது கொண்டிருந்த நித்யா அருகே சென்றவன்,
“உன்னை எப்போதாவது காதல் பார்வை பார்த்து இருக்கிறேனா? இல்லை.. உன் கிட்ட ஆசை வார்த்தை பேசி இருக்கிறேனா?” என்று கடின குரலில் கேட்டான்.
அவள் அமைதியாக இருக்க,
“பதில் சொல்லு” என்று கோபத்துடன் குரலை உயர்த்தினான்.
அதில் சற்றே உடல் தூக்கிப் போடட்டவளாக அழுதபடி மறுப்பாகத் தலையை ஆட்டினாள்.
நரேனை முறைத்தவன், “ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கல்யாணப் பேச்சை நான் எதிர்த்திட்டு தான் இருக்கிறேன்.” என்றான்.
கிருஷ்ணா, “அப்போவே உன் மனசில் வேற பொண்ணு இருக்கிறானு சொல்லி இருந்தா, இவ்ளோ தூரம் வந்து இருக்காதே!” என்று கோபத்துடன் கூறினான்.
“அது என் பெர்சனல்”
“ஆனா… நித்தி உன்னை விரும்புறது உனக்கு தெரியும் தானே! அப்போ தெளிவா சொல்லி இருக்கணும் தானே!” என்று கிருஷ்ணாவும்,
“என் பொண்ணு வாழ்க்கை உனக்கு விளையாட்டா?” என்று பாலாஜியும் கோபத்துடன் வினவ,
அவனும் கோபத்துடன், “ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் இல்லைனு நான் சொன்னதை பொருட் படுத்தாத நீங்க எல்லோரும் தான், விளையாட்டா நினைச்சிட்டீங்க.” என்றான்.
பின் பாலாஜி, கிருஷ்ணா மற்றும் நரேனை பார்த்த படி, “உங்க யாருக்கும் நான் விளக்கம் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை.. இருந்தாலும் அத்தைக்காகச் சொல்றேன்.. என் மனசில் இருக்கும் பெண்ணை இன்னைக்கு தான் கண்டு பிடிச்சேன்.” என்றான்.
அவனது கூற்றில் கஜேந்திரன் அதிர்வுடன் அவனைப் பார்க்க,
மற்றவர்கள் ‘என்ன சொல்றான் இவன்!’ என்று புரியாமல் பார்த்தார்கள்.
முதலில் சுதாரித்த பாலாஜி, “அப்போ உன் காதலை அந்தப் பொண்ணு கிட்ட இன்னும் சொல்லலை தானே!” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.