“நிச்சயம் கொலையாளியை கண்டு பிடிச்சு தண்டனை வாங்கிக் கொடுப்பேன்.. இப்போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குது.. அப்புறம் பேசுறேன்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவள்,
“கபிலன்” என்று அழைத்தபடி வேகமாக படிகளில் இறங்கினாள். கபிலனும் அவள் பின்னே ஓடினான்.
கீழே சென்றவள், அந்தக் கட்டிடத்தின் அருகே இருந்த வேப்ப மரத்தின் மீது வேகமாக ஏற ஆரம்பித்தாள்.
எதற்கு என்று புரியாமல் கபிலனும் ஏறப் போக, மரத்தில் ஏறியபடியே, “நீங்க கீழயே இருங்க” என்றாள்.
இரண்டாவது மாடி வரை உயர்ந்து நின்ற அந்த மரத்தில் சரசரவென்று ஏறியவளின் கூர்விழிகள், ஒரு குறிப்பிட்ட கிளையின் மீதே இருந்தது.
அவள் குறி வைத்திருந்த கிளை வலுவின்றி இருக்கவும், அதன் கீழே இருந்த சற்றே வலுவான கிளையின் மீது மெல்ல நடந்தபடி முன்னேறினாள்.
அவள் செல்வதைப் பார்த்து கபிலன் தான், “பார்த்து மேடம்” என்று பதறினான்.
அவளது கவனமோ அந்த குறிப்பிட்ட கிளையின் மீதே இருந்தது. கரம் கொண்டு அந்த கிளையை பிடிக்க முயற்சித்தவள், அது முடியவில்லை என்றதும், அவள் நின்று கொண்டிருந்த கிளையில் இருந்து சிறு கொப்பு ஒன்றை உடைத்து எடுத்து அந்த கிளையை குறி பார்த்து ஓர் இடத்தில் ஏறிய, எதுவோ கீழே விழுந்தது.
‘எஸ்’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டவள், “கபிலன் கர்சீஃப் வச்சு அதை எடுங்க.” என்றபடி கீழே இறங்க ஆரம்பித்தாள்.
“எஸ் மேடம்” என்றபடி தனது கைக் குட்டையினால் கீழே விழுந்த ஆண்கள் அணியும் தங்கக் காப்பை எடுத்தான்.
பைரவி அவன் அருகே வந்ததும், “இது கொலையாளியோடதுனு உறுதியா சொல்ல முடியாதே மேடம்!” என்றான்.
பார்வையை சுழற்றி அவர்கள் மட்டும் இருப்பதை உறுதி செய்த பின், “எஸ்.. ஸ்டுடென்ட்ஸ், லெக்சரர்ஸ், மேனேஜ்மென்ட் ஆட்கள் இப்படி யாரோடதா கூட இருக்கலாம்.. பட் மை இன்ஸ்டின்ட் சேஸ், இது கொலையாளியோடதா இருக்க அதிக வாய்ப்பு இருக்குது..
கலைச்செல்வி இறந்து கிடந்த இடத்திற்கு பக்கத்தில் தான் இந்த மரம் இருக்குது.. ஸோ மேல இருந்து கலைச்செல்வியை தள்ளி விடும் போதோ, அவளோட டெட் பாடியை தூக்கிப் போடும் போதோ அவன் கையில் இருந்து விழுந்து இருக்கலாம்.. லெட்ஸ் ஸீ.” என்றவள் அதனை சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு,
“லன்ச் முடிச்சிட்டு இதை ஃபோரென்சிக்கில் கொடுத்திடுங்க.” என்றாள்.
“ஓகே மேடம்.”
கார்த்திக் பேசியதைப் பற்றி கூறியவள், “ஃபோரென்சிக் டிப்பார்ட்மென்ட்டில் உங்களுக்கு தெரிந்தவங்க யாரும் இருக்காங்களா?” என்று கேட்டாள்.
“டாரிக்னு ஒருத்தர் கூட பழக்கம் உண்டு.. திறமையானவர் அண்ட் நேர்மையானவரும் கூட”
“கலைச்செல்வி இறந்தப்ப இங்கே ஃபோரென்சிக் டிப்பார்ட்மென்ட் வந்த போது டாரிக் வந்தாரானு கேளுங்க.. அப்படி வந்து இருந்தால் கலைச்செல்வி உடம்பில் ஹரஸ்மென்ட் மாதிரி எதுவும் தெரிந்ததானு கேளுங்க.”
“ஓகே மேடம்..”
அதன் பின் இருவரும் கிளம்பி அவளது அலுவலகத்திற்கு சென்றனர்.
மதிய உணவை முடித்துக் கொண்டு அந்தக் காப்பை தடயவியல் பரிசோதனைக்குக் கொடுத்து விட்டு வந்த கபிலன் அவள் அறைக்குச் சென்று, “டாரிக் அன்னைக்கு லீவில் இருந்து இருக்கார், மேடம்.. அன்னைக்கு ஸ்போட்டுக்கு போனவர் வளைந்து போறவர்னு சொன்னார்.. இப்போ பிரேஸ்லெட்டை டாரிக் கிட்ட தான் கொடுத்தேன்.” என்றான்.
“ஓகே” என்றவள், “பிரேஸ்லெட் போட்டோஸ் அஜய்க்கு அனுப்பி இருக்கிறேன்.. எல்லா டிப்பார்ட்மென்ட் வாட்ஸ் அப் குரூப்ஸ்க்கும் அனுப்பி யாரும் அதைப் பார்த்து இருக்கிறாங்களானு கேட்டு சொல்லச் சொல்லி இருக்கிறேன்.. ஸோ.. அது ஸ்டுடென்ட் ஆர் லெக்சரர் ஆர் மேனேஜ்மென்ட் ஆள் யாரோடதா இல்லையானு தெரிந்திரும்.” என்றாள்.
மாலையில் கபிலன் தனிப் பயிற்சி நிலையத்திற்கு (tution centre) செல்ல, பைரவி உடல் கூறாய்வு அறிக்கை அளித்த மருத்துவரை சந்திக்கச் சென்றாள்.
மருத்துவ மனையின் ஒரு பகுதில் இருந்த நடை பாதையில் நின்ற படி, கலைச் செல்வியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவரிடம் பைரவி பேசிக் கொண்டிருந்தாள்.
பின் ஐம்பதில் இருந்த அந்த ஆண் மருத்துவர், “நாலாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தான் அந்த பொண்ணு இறந்து இருக்குது.” என்று உறுதியுடன் கூற,
“நாலாவது மாடினு எப்படி உறுதியா சொல்றீங்க?” என்று கேட்டாள்.
“காயத்தின் ஆழத்தை வைத்து எக்ஸாக்டா இல்லைனாலும் 90 சதவிதம் சரியான உயரத்தை சொல்ல முடியும்.”
“ஆனா, அவளே தான் விழுந்து இருக்கணும்னு இல்லையே, யாராவது தள்ளி விட்டு கூட இருக்கலாமே?”
“ஹ்ம்ம்.. இருக்கலாம்.”
“ஸோ.. அது கொலையா இருக்கவும் வாய்ப்பு இருக்குது?”
“அம் நாட் ஷுர்.. அதைக் கண்டு பிடிக்க தானே நீங்க இருக்கிறீங்க!”
“அஃப்கோர்ஸ்” என்றவள் கூர்விழிகளுடன்,
“கலைச்செல்வி உடம்பில் ஹரஸ்மென்ட்டிற்கான தடயம் ஏதும் இருந்ததா?” என்று கேட்டாள்.
இவ்வளவு நேரம் அவள் கண்களை நேராகப் பார்த்து பேசிக் கொண்டிருந்தவர், சற்றே பார்வையை மாற்றிய படி, “இல்லை” என்றார்.
“கன்னத்தில் அடித்த மாதிரி ஏதும் விரல் தடம் இருந்ததா?”
தனது தடுமாற்றத்தை மறைத்த படி, “அப்படி எதுவும் இல்லை.” என்றார்.
இன்னும் அதிகமாக அவரைக் கூர்ந்து பார்த்த படி, “ஆர் யூ ஷுர்?” என்று கேட்டாள்.
“எஸ்” என்ற மருத்துவர், “அதான் ரிப்போர்ட்டில் எல்லாம் தெளிவா கொடுத்து இருந்தேனே!” என்று சிறிது படபடத்தார்.
“இன்னொரு முறை தெளிவு படுத்திக்கக் கேட்டேன்.”
“இப்போ எனக்கு ஒரு எமர்ஜென்சி இருக்குது.. இன்னொரு நாள் பேசலாமே!” என்று விடை பெறுவது போல் கூறினார்.
“ஷுர்.. இன்னொரு நாள் பேசலாம்.” என்று அழுத்தத்துடன் கூறியவள் கிளம்பினாள்.
அந்த மருத்துவர் தனது அறைக்குச் சென்று வேகமாக தண்ணீரை அருந்தி, தனது பதற்றத்தை குறைக்க முயற்சித்தார்.
பைரவி கிளம்பிய போது பக்கவாட்டில் இருந்து, “ஏசிபி மேம்..” என்று ஒரு பெண்ணின் குரல் மெலிதாகக் கேட்டது.
பைரவி திரும்பிப் பார்க்கவும், பாதி மறைந்தார் போல் நின்றிருந்த செவிலி ஒருத்தி, “உங்க நம்பர் தாங்க மேம்.. அந்தப் பொண்ணோட போஸ்ட்மார்டம் பத்தி ஒரு உண்மையை சொல்லணும்.” என்று அவசரமும் பதற்றமுமாக கூறினாள்.
“உங்களோட பெயர்?”
“சங்கவி” என்றவள் அவசரக் குரலில், “இங்கே பேச வேண்டாம் மேம்.. நம்பர் சொல்லுங்க” என்றாள்.
பைரவி தனது கைபேசி எண்ணைத் கூற, அதை குறித்துக் கொண்ட அந்த செவிலி,
“நாளைக்கு காலையில் போன் செய்றேன் மேம்.” என்று கூறி விரைவாக அகன்று இருந்தாள்.
தழல் தகிக்கும்…
குறிப்பு: நாளை அப்டேட் இல்லை.. அடுத்த பதிவு திங்கள் அன்று.