“போனில் மீட்டிங்கில் இருந்தார்.. இனி தான் விசாரிக்கணும்.” என்று கபிலனிடம் மெல்லிய குரலில் கூறிய படி, அவள் ருத்ரேஷ்வர் எதிரே இருந்த இருக்கையில் அமர,
‘ஓகே மேடம்’ என்பது போல் தலையை லேசாக ஆட்டிய கபிலன் அவள் அருகே அமர்ந்தான்.
பைரவியின் பார்வையில் கபிலன் கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.
“உங்க காலேஜ் அட்மினிஸ்ட்ரேஷன் யார் பார்த்துக்கிறா?”
“கடந்த ரெண்டு வருஷமா நரேன் தான் பார்த்துக்கிறான்.. ஒன் ஸ்மால் கரெக்சன்.. காலேஜில் அத்தைக்கும் சம உரிமை இருக்குது.”
“அப்படினா, அவங்க.. இல்லை அவங்களோட கணவரோ, பசங்களோ சொந்தக் காசைப் போட்டு பார்ட்னர் ஆகி இருக்கிறாங்களா?”
“இவ்ளோ டீட்டேய்ல்ஸ் தேவை இல்லன்னு நினைக்கிறேன்”
“விசாரணைனா எல்லாம் தான் கேட்போம்”
“சொத்து விவரம் கேட்க, இது ஐ.டி விசாரணை இல்லையே!”
“சொத்துக்காக நிறைய கொலைகள் நடக்குதே”
“இருக்கலாம். ஆனா இறந்த பெண்ணிற்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையே!”
“ஒரு வேளை நீங்க கொலை செய்யாம இருந்து, உங்க அத்தை குடும்பத்தில் யாரேனும் செய்து இருந்து, கொலை பழி உங்க மேல் விழுந்து, நீங்க ஜெயிலுக்குப் போனால், உங்க சொத்துக்கள் யாருக்குப் போகும்?”
“வேடிக்கையா இருக்குது.”
“சில நேரங்களில் முதலில் வேடிக்கையா தெரியும் விஷயம் தான் விஸ்வரூபம் எடுக்கும்” என்று கூறிய பைரவி கபிலனைப் பார்த்து,
“எதுக்கு இவ்ளோ விளக்கம் சொல்றீங்க? நாம கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லித் தான் ஆகணும்.” என்றவள் முடித்த போது ருத்ரேஷ்வரை பார்த்தப் பார்வை ‘நீ பதில்களை சொல்ற’ என்று கட்டளையிட்டது.
ருத்ரேஷ்வர் சிறு தோள் குலுக்கலுடன், “அத்தை குடும்பத்தில் யாரும் பணம் போடலை.. என்னோட அப்பாவா விருப்பப்பட்டு அவர் தங்கையை சேர்த்துக் கொண்டார்.”
“ஓ” என்ற கபிலன், “அப்போ மிஸ்டர் கிருஷ்ணா பொறுப்பில் இருக்கும் நகைக்கடை?” என்று கேட்டான்.
“அதிலும் எங்களுக்கு சம பங்கு இருக்கிறது.”
“உங்க அத்தை குடும்பத்துக்கு முழு உரிமையான சொத்துனு ஏதாவது இருக்குதா?”
“நகைக்கடையும் ட்ரெஸ் கடையும் தாத்தா ஆரம்பித்தது.. அதில் ட்ரெஸ் கடை அப்பாக்கும், நகைக்கடை அத்தைக்கும்னு முன்னாடியே முடிவு செய்தது தான்.. ஆனா, நகைக்கடை நஷ்டம் ஆகவும், அப்பா பணம் போட்டு அதை லாபகரமா கொண்டு வந்தார்.. அதனால் அதில் எங்களுக்கும் சம பங்கு இருக்குது.”
“மிஸ்டர் கிருஷ்ணா அண்ட் மிஸ்டர் நரேனுக்கு முன்னாடி யார் பொறுப்பில் நகைக்கடையும் காலேஜ்ஜும் இருந்தது?”
“நகைக் கடையை அவங்க அப்பா பார்த்துக்கிட்டாங்க.. காலேஜ் என்னோட அப்பா பார்த்துக்கிட்டாங்க.”
“பாலாஜி காலேஜுக்குப் போவாரா?” என்று பைரவி இடையிட்டு கேட்டாள்.
அதன் பிறகு பைரவி தான் கேள்விகளை கேட்டுக் கொண்டு இருந்தாள்.
“காலேஜ் டே மாதிரியான விழாக்களுக்குப் போவார்” என்றான்.
“நகைக்கடை?”
“கிருஷ்ணா பொறுப்பேற்ற அப்புறம், சில நேரம் போய் இருக்கிறார்.”
“நீங்களோ உங்க அப்பவோ போவீங்களா?”
“அப்பா முன்னாடி போய் இருக்கார். ஆனா கிருஷ்ணா பொறுப்பில் கொடுத்த பிறகு போறது இல்லை..
எனக்கு எப்போதுமே அதில் ஈடுபாடு இருந்தது இல்லை. ஸோ போனது இல்லை”
“நரேன் பொறுப்பேற்ற பிறகு, நீங்களோ உங்க அப்பாவோ காலேஜ் போய் இருக்கிறீங்களா?”
“இல்லை”
“விழாக்களுக்குக் கூட போனது இல்லையா?”
“அப்பா ஒரு முறை போனார்.. நான் போனது இல்லை.. அப்பா பொறுப்பில் இருந்தப்பவே நான் போனது இல்லை.”
“ஏன்?”
“எனக்கு நேரம் இருந்தது இல்லை”
“ரெண்டு வருஷமா நரேன் பார்த்துக்கிறான்னா, 23 வயதிலேயே காலேஜ் சேர்மேன் ரைட்!” என்று அவள் ஒரு மாதிரி குரலில் கூறவும்,
“இந்த பாக்டரியை நான் என்னோட சொந்த முயற்சியில் தொடங்கிய போது, எனக்கு வயசு 23 தான்.. என்னோட 21வது வயதிலேயே நான் படிச்சிட்டே தொழிலில் கொஞ்சம் கொஞ்சமா இறங்கிட்டேன்.” என்றான்.
மெச்சுதலாக அவனை ஒரு நொடி பார்த்தவள், “ஸோ உங்களோட திறமை, நரேனிடமும் இருக்குதுனு சொல்றீங்க?” என்று கேள்வியாய் நிறுத்தினாள்.
“அப்படி சொல்லிட முடியாது”
“ஏன்?”
“எல்லோருக்கும் ஒரே மாதிரி திறமை இருப்பது இல்லையே!”
“அப்புறம் ஏன் அவன் பொறுப்பில் கொடுத்தீங்க?”
“இட் ஆல் ஹபேன்ஸ் இன் அ பாமிலி.”
“நரேனும் கிருஷ்ணாவும் பொண்ணுங்க விஷயத்தில் எப்படி?”
“எனக்கு தெரிந்து தப்பானவங்க இல்லை..”
“ஸோ.. உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்குது.”
ஒரு நொடி அவளை நோக்கியவன், பின் தோளைக் குலுக்கினான்.
“தேங்க்ஸ் பார் யுவர் கோ-ஆபரேஷன்.. திரும்ப சந்திக்கலாம்.” என்றபடி அவள் எழும்ப,
“எப்போ?” என்று கேட்டான். அவனது குரல் சாதாரணமாக இருந்தாலும், கண்களோ பிரெத்யேகமாக அவளை தீண்டியது.
அவனை முறைத்த படி, “சீக்கிரமே இந்த வழக்கு விஷயமா திரும்ப சந்திப்போம்.” என்று கூறிக் கிளம்பினாள்.
அடுத்து அவளும் கபிலனும் ‘ஃபளை ஹை’ கல்லூரிக்குச் சென்றனர். முதலில் கலைச்செல்வி இறந்து கிடந்த இடத்தை ஆராய்ந்தவர்கள், பின் நான்காவது மாடிக்குச் சென்றனர். அங்கே ஆராய்ந்துக் கொண்டிருந்த பொழுது,
அவளது கைபேசிக்கு கார்த்திக்(‘தற்கொலை என்றால் குப்புற தானே விழுந்து இருப்பாங்க?’ என்று கூறியவன்) அழைத்தான்.
அழைப்பை எடுத்தவள், “சொல்லு கார்த்திக்.. நேத்தே கூப்பிடுவனு எதிர்பார்த்தேன்.” என்றாள்.
அவன் அதிர்வுடன், “மேம்!” என்று அழைக்க,
“உன் கண்ணு, நீ என் கிட்ட தனியா பேச விரும்பியதைச் சொல்லிடுச்சு.” என்றாள்.
“நேத்து போன் தண்ணில விழுந்து வொர்க் ஆகலை மேம்.. இப்போ தான் சர்விஸ் கொடுத்த இடத்தில் இருந்து வாங்கினேன்.”
“ஹ்ம்ம்”
“கலையோட இடது கன்னத்தில் அடித்த விரல் தடத்தை நான் பார்த்தேன் மேம்.. தரையில் இறந்து இருந்தப்ப, கலையோட முகம் இடது பக்கமா திரும்பி இருந்துது, ஸோ அப்போ தெரியலை.. ஆனா ஆம்புலன்ஸ்ல ஏத்தும் போது நான் பார்த்தேன்.. லேசான தடம் தான் இருந்தது, நான் பக்கத்தில் இருந்து பார்த்ததால் தெரிந்தது.. வேற யாரும் பார்த்த மாதிரி தெரியலை.. நான் உங்க கிட்ட மட்டும் தான் சொல்றேன்”
“ஏன் வேற யார் கிட்டயும் சொல்லலை?”
“சொல்றது சரியானு தெரியலை.”
“நீயும் கலைச்செல்வியும் காதலிச்சீங்களா?”
“மேம்!”
“சொல்லு”
“நான் காதலிச்சேன்.. இப்பவும் காதலிக்கிறேன். ஆனா கலை, என் மேல் அப்படி ஒரு எண்ணம் இல்லைனும், அவளோட அப்பா பார்க்கிற பையனைத் தான் கல்யாணம் செய்வேன்னும் சொல்லிட்டா.. படிப்பை முடிச்சு நல்ல வேலையில் செட்டில் ஆனதும், அவ அப்பா கிட்ட பேசி அவளை கல்யாணம் செய்துக்கணும்னு நினைத்தேன் மேம்” என்று கரகரத்த குரலில் கூறியபடி
“என்னோட கனவு கனவாவே போய்டுச்சு மேம்” என்று அழுதவன் கோபத்துடன், “கலையை கொன்னவனை சும்மா விடாதீங்க மேம்.” என்றான்.
பின் மீண்டும் கரகரத்த குரலில், “என்னோட கலை அழுத்தமானவளா இருந்தாலும் மென்மையானவ மேம்.. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத தேவதை மேம்.” என்றான்.
மொட்டை மாடியை ஆராய்ந்து விட்டு மூன்றாவது மாடியை ஆராய்ந்தபடியே இவனிடம் பேசிக் கொண்டிருந்தவள், கீழே நோக்கிய போது ஒரு இடத்தைக் கூர்ந்து கவனித்தாள்.