
தழல் ~ 5
ருத்ரேஷ்வரை ஆக்ரோஷமாக தள்ளி நிறுத்தியவள் அவன் கன்னத்தை அடிக்க கையை ஓங்கி இருந்தாள்.
அவளது இத்தகைய ஆக்ரோஷத்தில் ஒரு நொடி அதிர்ந்தவன், பின் நொடிப் பொழுதில் சுதாரித்து ஓங்கிய அவளது கையை பிடித்து தடுத்தபடி வேதனையான குரலில், “எவ்வளவு மாறிட்ட அம்மு!” என்றான்.
அவனது ‘அம்மு’ என்ற அழைப்பில் ஒரு நொடி அவளுள் சிறு அதிர்வலை பரவ, அதை அவனும் உணர்ந்தான்.
கையை உதறி அவனது பிடியில் இருந்து விடுவித்தவள், “யாரு அம்மு?” என்று கடின குரலில் கேட்டாள்.
அவளை ஆழ்ந்து நோக்கியவன், “லென்ஸ் போட்டு உன்னோட அழகான கருவிழியை மறைத்த உன்னால, உன்னோட வலது கண்ணுக்குள்ள ஓரத்தில் இருக்கிற அந்த குட்டி ப்ரௌன் ஸ்பாட்டை(spot) மறைக்க முடியலை.” என்றான்.
ஆம், பைரவி தனது ஆலிவ் பச்சை நிற கருவிழியை மறைக்க, விழியொட்டு வில்லை (contact lens) அணிந்து இருந்தாள்.
பின், “என்னோட அம்முவை எனக்குத் தெரியும்.. மார்னிங் பேப்பரில் உன் போட்டோவை பார்த்தப்பவே உன் முகம் பரிட்சயமா இருக்கேனு யோசிச்சேன்.. நீ வீட்டுக்கு வந்தப்ப, உன்னை பார்த்த நொடியில் எனக்குள்.. ஹ்ம்ம்.. எப்படி சொல்ல! அது ஒரு தனி பீல்.. மேலே இருந்தபடியே உன்னை இன்னும் உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சேன்..
அந்த ஆளை நீ அடிச்சிட்டு ஏதோ மெல்ல பேசினப்ப, உன் கண்ணில் தெரிந்த ரௌத்திரம்! அண்ட் அப்போ நீ சைடா(side) பார்த்தப்ப தான் கண்ணுக்குள்ள இருக்கிற அந்த ஸ்பாட் எனக்கு தெரிஞ்சுது” என்றான்.
“நான் அம்மு இல்லை” என்றவள் கையை உயர்த்தி பேச வந்தவனை தடுத்து, “அந்த அம்மு செத்து பதினாறு வருஷம் ஆகுது” என்றாள்.
சில நொடிகள் தனது வேதனையை மறைக்க முயற்சித்தபடி அவளை அமைதியாக பார்த்தவன் பின்,
“நாம கல்யாணம் செய்துக்கலாமா அம்மு?” என்று கனிவான குரலில் காதலுடன் கேட்டான்.
“நான் அம்மு இல்லை.. பைரவி.. கயவர்களை அழிக்க மறுஜனனம் எடுத்திருக்கும் பைரவி!” என்றவள் காளியின் மறு உருவாக நின்றிருந்தாள்.
இரண்டு நொடிகள் இமைக்க மறந்து அவளைப் பார்த்தவன், “எனக்கு நீ எப்பவும் என்னோட அம்மு தான்” என்றான்.
“சும்மா சும்மா உன்னோட அம்முனு சொல்லாத” என்று அவள் கோபமும் எரிச்சலுமாக கூற,
அவனோ மென்னகையுடன், “ஏன்! அது உன்னை ரொம்ப டிஸ்டர்ப் செய்யுதா?” என்று கேட்டு கண் சிமிட்டினான்.
அலட்சியமாக உதட்டை வளைத்தபடி அவனைப் பார்த்தவள், “நான் கஷ்டபட்டப்ப எங்க போச்சு இந்த உரிமை, அக்கறை சக்கரைப் பொங்கல் எல்லாம்? இதில் என்னை உனக்கு தெரியும்னு வசனம் வேற! கண்ணு உள்ள இருக்கிற இந்த ஸ்பாட் இல்லைனா, என்னை கண்டு பிடிச்சு இருப்பியா?” என்றாள்.
“உனக்கு மட்டும் தான் கண்ணுக்குள்ள இதை மாதிரி ஸ்பாட் இருக்குதா?”
“அப்படி எத்தனை பேரை நீ பார்த்த? இந்த ஸ்பாட் வச்சு ஏதோ ப்ளூக்கில் கண்டு பிடிச்சிட்டு ஓவரா பேசாத.. இனி அம்மு கிம்மு.. கல்யாணம் கில்யாணம்னு பேசு! வாய் உள்ளேயே ட்ரிகரை அழுத்திடுவேன்.” என்று மிரட்டினாள்.
அவனோ காதலுடன், “ஐ லவ் யூ அம்மு” என்றான்.
அவனது கண்களிலும் குரலிலும் தெரிந்த காதல் அவளை சிறிதும் அசைக்கவில்லை.
அவனை கடுமையாக முறைத்தபடி, “நான் அபிஷியலா வந்து இருக்கிறேன்” என்றாள்.
“அப்போ என்னை உன்னோட பெர்சனல்னு ஒத்துக்கிற!”
அவள் சட்டென்று துப்பாக்கியை எடுத்து அவன் வாயினுள் வைக்க,
அவனோ சிறிதும் அஞ்சாமல் துப்பாக்கியை கீழே இறக்கி நெஞ்சின் மீது அழுத்தி வைத்தபடி, “முடிஞ்சா இங்கே சுடு” என்றான்.
கோபமும் எரிச்சலுமாக துப்பாக்கியை அதன் உரையில் வைத்தவள், “இப்படியே பேசிட்டு இருந்த! ஒரு நாள் அதைத் தான் செய்வேன்.. இப்போ உன்கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கிறதுக்கு காரணம், ஒரு காலத்தில் நீ என் மீது காட்டிய அன்பு.” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
“அதே அன்பு இப்பவும் இருக்குது.. சொல்லப் போனா அது பலமடங்கு கூடி, காதலா உருமாறி இருக்குது..” என்றவனின் பேச்சை இப்பொழுது அவள் இடையிட்டு,
“என்னை நீ கடைசியா பார்த்தப்ப எனக்கு பதினோரு வயசு, உனக்கு பதினைந்து வயசு. அந்த வயசில் வரதுக்கு பெயர் காதலே இல்லை.. சும்மா லூசு மாதிரி உளறாம உருப்படுற வழியைப் பாரு.”
“அந்த வயசில் வரதுக்கு, என்னோடது பப்பி லவ் இல்லை.. எனக்கு உன்னை நீ பிறந்ததில் இருந்தே ரொம்பப் பிடிக்கும்.. அந்த அன்பு எப்போ காதலா மாறுச்சுனு எனக்கே தெரியாது. ஆனா.. நான் அதை உணர்ந்தது என்னோட இருபதாவது வயசில் ஒரு பொண்ணு என் கிட்ட ப்ரொபோஸ் செய்தப்ப”
“எப்படி இருந்தாலும் என்னோட பதினோரு வயசு குழந்தை முகம் தானே, உன் மனதில் இருந்து இருக்கும்!”
“இப்போ நீ குழந்தை இல்லையே.. 27 வயசு குமரி தானே!” என்று தலை சரித்து வசீகரப் புன்னகையுடன் கேட்க,
அதில் சிறிதும் பாதிக்கப் படாதவளாக தோளை அலட்சியமாக குலுக்கினாள்.
“நேத்து கூட அப்பா கிட்ட எனக்கு மனைவினா அது என்னோட அம்மு மட்டும் தான்னு சொன்னேன்” என்றான்.
“லுக்.. இந்த காதல், கல்யாணம் எல்லாம் என்னைப் பொறுத்த வரை துர்நாற்றம் வீசும் குப்பை.. ஸோ கண்டதையும் பேசி என்னை எரிச்சல் படுத்தாத.. எப்போதும் இதே மாதிரி அமைதியா இருக்க மாட்டேன்”
“அம்மு..” என்று அவன் ஆரம்பிக்க,
தனது கைபேசியை எடுத்து கபிலனை அழைத்து, “உள்ளே வாங்க கபிலன்.. ருத்ரேஷ்வர் வரச் சொன்னதா சொல்லிட்டு வாங்க.” என்று கூறி அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.
ருத்ரேஷ்வர், “பயமா இருக்குதா அம்மு?” என்று வினவ,
‘நீ என்ன லூசா?’ என்பது போல் பார்த்தாள்.
“என்னைத் தனியா சமாளிக்க முடியாம உன்னோட அசிஸ்டன்ட்டை கூப்பிடுறியே!” என்றான்.
லேசான உதட்டோர நக்கல் சிரிப்புடன் அவனைப் பார்த்தவள், “நீயெல்லாம் எப்படி நம்பர் ஒன் பிசினெஸ்மேனா இருக்கிற?” என்று கேட்டாள்.
அவன் கைகளை கட்டியபடி அவளை ஆழ்ந்து பார்க்க,
நேர் பார்வையுடன், “இதுக்கு பெயர் பயம் இல்லை.. உன்னோட இம்சையில் கோபப்பட்டு, நான் பட்டுனு சுட்டு நீ பொட்டுன்னு போய்ட்டா!” என்றாள்.
“நான் பொட்டுன்னு போனா உனக்கு என்ன? சுட வேண்டியது தானே!”
“அந்தக் குடும்பத்தில் தப்பி பிறந்த நல்லவனா இருக்கிறியேனு பார்க்கிறேன்.. ஆனா எப்போதும் இப்படியே இருப்பேன்னு நினைக்காத.” என்று அவள் எச்சரிக்க,
அவனோ அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அப்பொழுது கதவைத் திறந்து கொண்டு கபிலன் வந்தான்.
சட்டென்று ருத்ரேஷ்வரின் உடல் மொழியில் மாற்றம் வந்தது. இவ்வளவு நேரம் இருந்த இலகு தன்மை சிறிதுமின்றி கம்பீரத் தோரணையில் தனது இருக்கையில் அமர்ந்தவன், “உட்காருங்க” என்று இருவரையும் பார்த்து பொதுவாகக் கூறினான்.