கஜேந்திரன், “அதுக்கு வீட்டுக்கு வரணும்னு அவசியம் இல்லையே?” என்று கூர்விழிகளுடன் கூற,
அப்பொழுது தான் கணவரின் வீங்கிய கன்னத்தைப் பார்த்த ராதிகா பதறியபடி அவர் அருகே சென்று, “அய்யோ! என்ன இது?” என்றார்.
கிருஷ்ணா பைரவியை முறைத்தபடி, “காலேஜில் வச்சு விசாரிங்கனு சொன்னதுக்கு அடிச்சுட்டாங்க.” என்றான்.
“பொய் சொன்ன, அடுத்து உன் கன்னமும் பழுக்கும்.” என்று தீர்க்கமாக அவனைப் பார்த்துக் கூறிய பைரவி,
கஜேந்திரனைப் பார்த்து, “இந்தாளோட தரக் குறைவான பேச்சிற்கு தான் அடித்தேன்.” என்று நிமிர்வுடன் கூறினாள்.
ராதிகா கோபத்துடன், “நீ என்ன பேசினியோ? எங்க வீட்டுக்கே வந்து எங்களையே அடிப்பியா? உன்னோட அராஜகத்தை வேறு எங்கேயாவது வச்சுக்கோ..! முதல்ல மன்னிப்பு கேட்டுட்டு வெளியே போ!” என்று எகிறினார்.
நரேன் கோபத்துடன் கிருஷ்ணாவைப் பார்த்து, “நீ என்ன செய்துட்டு இருந்த?” என்று கேட்டான்.
இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்த பைரவி, “எல்லோரும் வெளியே போனு துரத்துறதிலேயே குறியா இருக்கிறதை பார்க்கிறப்ப, நீங்க தான் கலைச்செல்வியை கொலை செய்ததா தோணுது.” என்றாள்.
ராதிகா கோபத்துடன் பேச வாய் திறக்கப் போகயில், கஜேந்திரன், “கொஞ்சம் இரு ராதி” என்று தடுத்து இருந்தார்.
பின் பைரவியைப் பார்த்து, “உங்களுக்கு என்ன தெரியனும்?” என்று தீர்க்கமான பார்வையிலும் குரலிலும் கேட்டார்.
அவரது நேர் கொண்ட பார்வையும் குரலுமே அவரிடம் தவறு இல்லை என்பதை எடுத்துக் கூற,
பைரவி, “கிருஷ்ணா அண்ட் நரேனை விசாரிக்கணும்.. மிஸ்டர் ருத்ரேஷ்வரை பாக்டரி போய் விசாரிச்சுப்பேன்.” என்றாள்.
மகனை மட்டும் மரியாதையுடன் அழைத்ததை கவனித்தவர், “ஓகே ப்ரோசீட்.. ஆனா, என்ன இருந்தாலும் அடிச்சது அதிகம் தான்.. பேச்சு பேச்சா தானே இருந்து இருக்கணும்? அவர் வயசுக்கு மரியாதை கொடு..” என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுதே இடையிட்ட பைரவி,
“நான் ஒருத்தரோட செய்கையை வைத்து தான் மரியாதை கொடுப்பேன்.” என்றாள்.
ராதிகா மீண்டும் கோபத்துடன், “இப்போ நீ மன்னிப்பு கேட்கலை. கமிஷனர் கிட்ட கம்ப்ளைண்ட் கொடுப்பேன்.” என்று மிரட்டினார்.
பைரவியோ உதட்டோர வளைவுடன், “தைரியம் இருந்தால் இந்தாளை கம்ப்ளைண்ட் கொடுக்கச் சொல்லு பார்ப்போம்.” என்றாள்.
தங்கையையும் ஒருமையில் பேசிய பைரவியை கஜேந்திரன் யோசனையுடன் பார்த்தார்.
அப்பொழுது அவளைப் பார்த்த பாலாஜி அவளது துழைத்தெடுக்கும் அக்னிப் பார்வையில் வெடவெடத்தார்.
சட்டென்று பார்வையை தாழ்த்தியவர் தனது பதற்றத்தை மறைக்க முயற்சித்தபடி, “விடு ராது” என்று விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றார்.
இப்பொழுது கஜேந்திரன் செல்லும் பாலாஜியை யோசனையுடன் பார்க்க,
ராதிகா பைரவியை முறைத்த படி, “உன்னை சும்மா விட மாட்டேன்.” என்று கூறிவிட்டு கணவர் பின்னால் சென்றார்.
அதை அலட்சியபடுத்தியவள் கஜேந்திரனைப் பார்த்து, “நான் இவனுங்களை தனியா விசாரிக்கணும்.” என்றாள்.
அவர் எழுந்து செல்ல, கிருஷ்ணாவும் நரேனும் அவள் எதிரே அமர்ந்தனர்.
கிருஷ்ணாவைப் பார்த்து, “கலைச்செல்வி இறந்த அன்னைக்கு நீ எங்க இருந்த?” என்று திரும்பக் கேட்டாள்.
அவன் முறைப்புடன், “ஒரு அக்கியுஸ்ட்டை விசாரிக்கிற மாதிரி விசாரிக்கிற” என்றான்.
“அக்கியுஸ்ட்டை நான் விசாரிக்கிற விதமே வேறு.. விசாரிச்சுப் பாரு.”
“மரியாதையுடன் பேசவே உனக்கு தெரியாதா?”
“நீ கொடுப்பது தான் உனக்கு கிடைக்கும்.” என்றவள், “என் நேரத்தை வேஸ்ட் செய்யாம, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.” என்று கறார் குரலில் கூறினாள்.
முறைப்புடனே, “இப்போதைக்கு நான் வெளியூர் போகலை.. ஸோ அன்னைக்கும் இங்கே தான் இருந்து இருப்பேன்.” என்றான்.
“உத்தேசமா சொல்ற?”
“அந்தப் பொண்ணு என்னைக்கு இறந்ததுனு எனக்கு தெரியாது.. அதான்..”
தேதியை அவள் கூறியதும், “அதான் வெளியூர் போகலைனு சொல்லிட்டேனே!” என்றான்.
“அன்னைக்கு ஈவ்னிங் எங்க இருந்த?”
“எப்பொழுதும் போல என்னோட நகைக் கடையில் தான்”
“நகைக்கடை போக, வேற எங்கேயும் போவியா?”
“நகைக்கடை மட்டும் தான் என் கண்ட்ரோல்”
“உன்னோட கண்ட்ரோலில் இருப்பதை கேட்கலை.. நீ வேற எங்கேயும்.. ஐ மீன் பாக்டரி, வேற கடை, காலேஜ்.. இப்படி எங்கேயும் போவியானு கேட்டேன்.”
“நரேன் பார்த்துக்கிற காலேஜ் எப்பயாச்சும் போவேன்.”
“அப்போ கலைச்செல்வியை பார்த்து இருக்கியா?”
உதட்டை பிதுக்கியவன் ‘இல்லை’ என்பது போல் தோளைக் குலுக்கினான்.
“கலைச்செல்வி இறந்த அன்னைக்கு காலேஜ் போனியா?”
“இல்லை”
நரேனைப் பார்த்து, “அன்னைக்கு நீ எங்க இருந்த?” என்று கேட்டாள்.
“நானும் இங்கே தான் இருந்தேன்.. எப்பொழுதும் காலேஜுக்கு பதினோரு மணி போல போயிட்டு நாலு நாலரைக்கு கிளம்பிடுவேன். அன்னைக்கும் அப்படி தான் செய்தேன்.”
“கலைச்செல்வி எப்படிப்பட்ட ஸ்டுடென்ட்?”
“நல்லா படிக்கிற ஸ்டுடென்ட்னு கேள்விப் பட்டேன்”
“கேள்விப்பட்டேன்னா?”
“அவ இறந்ததுக்கு அப்புறம் விசாரிச்சப்ப தெரிந்தது.. அதுக்கு முன்னாடி நான் அவளை பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.”
“பார்த்தது கூட இல்லையா?”
தோள்களை குலுக்கியவன், “என்னைக்காவது கூட்டத்தில் ஒருத்தியா பார்த்து இருக்கலாம்.. பட் அம் நாட் ஷுர்.” என்றான்.
“ஓகே முதற்கட்ட விசாரணை முடிந்தது..” என்றபடி எழுந்து கொண்டவள்,
கிருஷ்ணா மற்றும் நரேனை கூர்விழிகளுடன் பார்த்தபடி, “திரும்ப சந்திக்கலாம்” என்றாள்.
இருவரும் அமைதியாக அவளை பார்த்தபடி அமர்ந்து இருக்க, கபிலனுடன் கிளம்பிவிட்டாள்.
ருத்ரேஷ்வரின் தொழிற்சாலை நோக்கி அவள் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க, கபிலன், “ஒன்னு கேட்கலாமா மேடம்?” என்று கேட்டான்.
அவன் கேட்க வருவதை புரிந்தார் போல், “இந்தக் குடும்பத்தை எனக்கு முன்னாடியே தெரியும்.. ஆனா.. சின்ன வயசிலேயே தொடர்பு விட்டுப் போச்சு.” என்றாள்.
‘ஓ’ என்று மனதினுள் கூறிக் கொண்டவன், “உங்களுக்கும் அவங்களுக்கும் ஆகாதா மேடம்?” என்று கேட்டான்.
“நோ பெர்சனல் குவெஸ்டீன்ஸ்”
“சாரி மேடம்”
அதற்கு பின் அமைதியே ஆட்சி செய்ய, ருத்ரேஷ்வரின் தொழிற்சாலையினுள் நுழைந்தாள்.
வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்று வரவேற்பில் ருத்ரேஷ்வரை சந்திக்க அனுமதி கேட்க, அவள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
கபிலன் வரவேற்பில் இருந்த இருக்கையில் அமர்ந்திருக்க, பைரவி ருத்ரேஷ்வர் அறை நோக்கிச் சென்றாள்.
அவள் அவனது அறை உள்ளே சென்ற நொடி அவனது இறுகிய அணைப்பில் இருக்க, ஒரு நொடி அதிர்ந்தவள்,
அடுத்த நொடியே திமிறியபடி கடும் கோபத்துடன், “உன் குடும்பத்து ஆண்கள் புத்தி இப்படி தான் போகுமா?” என்று வினவினாள்.
அவளது திமிரலை சுலபமாக அடக்கியவன், அவள் காதோரம்,
“மத்தவங்களுக்கு நிரூபிக்க வேண்டாம்.. முதல்ல உனக்கு நீ ஒரு பொண்ணுனு ஞாபகப் படுத்திக்கோ.. அண்ட் என் கூட நீ படுக்காமலேயே, நீ ஒரு பொண்ணு தான்னு நிரூபிச்சுக் காட்டவா?” என்று கேட்டான்.
தழல் தகிக்கும்…