வெளி வாயிற் கதவருகே நிற்கும் காவலாளி அகத் தொடர்பு(intercom) மூலம் வீட்டு மேற்பார்வையாளரை அழைத்து பைரவி வந்திருக்கும் விஷயத்தைக் கூறினான்.
காவலரின் வரவில் சிறிது அதிர்ந்த மேற்பார்வையாளர்,
“லைனில் இரு.. ஐயா கிட்ட கேட்டு சொல்றேன்.” என்றார்.
அவர் வெளிப்புற கூடத்தில் இருந்த தனது அறையில் இருந்து வேகமாக வீட்டின் உட்புற கூடத்திற்கு வந்து ருத்ரேஷ்வர் அறைக்கு தொடர்பு கொள்ள அகத் தொடர்பு தொலைபேசியை கையில் எடுக்க,
அப்பொழுது அங்கே வந்த பாலாஜி, “என்ன ராமையா?” என்று கேட்டார்.
“அது.. போலீஸ் வந்து இருக்குது ஐயா” என்றார் தயக்கத்துடன்.
“என்ன!” என்று அவர் சிறிது அதிர,
“ஆமாயா.. அந்த ஏசிபி அம்மா வந்து இருக்காங்களாம்.. உள்ள விடவானு முத்து கேட்கிறான்.” என்றார்.
“வீட்டிற்குள் போலீஸ் வரதா!” என்று சற்றே கோபத்துடன் கூறியவர், “எதா இருந்தாலும் காலேஜ்ல வச்சு விசாரிக்கச் சொல்லு.. இப்போ கிளம்பச் சொல்லு!” என்றார்.
“சின்ன ஐயா கிட்ட ஒரு வார்த்தை..” என்று அவர் தயங்கியபடி இழுக்க,
பாலாஜி கோபத்துடன், “அப்போ இந்த வீட்டில் நான் யாரு?” என்று சற்றே குரலை உயர்த்தினார்.
அவர் அவசரமாக, “மன்னிச்சிடுங்க ஐயா.. நீங்க சொன்னதை முத்து கிட்ட சொல்லிடுறேன்.” என்றபடி வெளியேறினார்.
இவர் காவலாளியிடம் கூறியதை, அவன் பைரவியிடம் கூறினான்.
கபிலன், “இங்கே விசாரிக்க கமிஷனர் சார் கிட்ட வாரன்ட் வாங்கிட்டு வரலாம் மேடம்.” என்று கூற,
உதட்டோரத்தை லேசாக பிதுக்கியபடி அவனை பார்த்தவள், அடுத்த நொடி துப்பாக்கியை எடுத்து காவலாளியை குறி பார்த்து நீட்டி இருந்தாள்.
பெரிதாக அதிர்ந்த காவலாளி, கைகளை தூக்கியபடி பயத்துடன் நிற்க,
அவள், “ஹும்ம்” என்றபடி கதவை கண் காட்டினாள்.
பயத்துடன் ஓடி சென்று கதவைத் திறந்தவன், அவளது வண்டி உள்ளே நுழையவும், அவசரமாக தனது கூண்டிற்கு ஓடிச் சென்று அகத் தொடர்பு மூலம் நடந்ததை மேற்பார்வையாளரிடம் கூறினான்.
மேற்பார்வையாளர் அவசரமாக உள்ளே சென்று அங்கே அமர்ந்திருந்த பாலாஜியிடம் விஷயத்தைக் கூறி முடிக்கவும், பைரவி கபிலனுடன் உள்ளே நுழைந்து இருந்தாள்.
பாலாஜி கோபத்துடன், “எவ்ளோ தைரியம் இருந்தா எங்க வீட்டிற்குள்ள வருவ? அதுவும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளே வந்து இருக்கிற!” என்று எகிற,
‘நீ எல்லாம் ஒரு ஆளா?’ என்றபடி அலட்சியமாக பார்த்தவள் அங்கிருந்த மெத்திருக்கையில்(sofa) கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி,
“உட்காருங்க கபிலன்” என்றாள்.
அவன் அமரவும், “உன் பசங்களை வரச் சொல்லு.” என்று பாலாஜியைப் பார்த்து கூறினாள்.
அதிகரித்த கோபத்துடன், “ஏய்! நான் சொல்லிட்டே இருக்கிறேன்.. முதல்ல வெளிய போ!” என்று கத்திய பாலாஜி, ‘தொறந்த வீட்டிற்குள் நாய் நுழைந்த மாதிரி வந்துட்டு, அதிகாரத்தைப் பாரு.’ என்று சத்தமாகவே முணுமுணுத்தார்.
கோபத்துடன் எழுந்த கபிலன், “மரியாதையா பேசுங்க.” என்று சீறினான்.
தானும் எழுந்த பாலாஜி அடங்காமல், “நாங்க போடுற காசை பொறிக்கிட்டு வாலை ஆட்டுற ஆட்கள் தானே நீங்க…” என்றார்.
இப்பொழுது கோபத்துடன் எழுந்த பைரவி, “இன்னொரு வார்த்தை பேசின! அடுத்து பேச வாய் இருக்காது.” என்று கூறினாள்.
அதற்கு பாலாஜி பதில் கூறும் முன்,
“அப்பா.. இருங்க நான் பேசிக்கிறேன்.” என்றபடி கிருஷ்ணா வர,
“நீ சும்மா இருடா” என்ற பாலாஜி அலட்சியமும் எகத்தாளமும் நிறைந்த பார்வையுடன் பைரவியைப் பார்த்து, “அப்டர் ஆல் ஒரு பொம்பள.. நீ என்னை..” என்று பேசி முடிக்கும் முன், பைரவி அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள்.
கீழே விழாமல் இருக்க சிரமத்துடன் காலை ஊன்றி தன்னை நிலைபடுத்திக் கொண்டாலும் பொறி கலங்கிப் போய் தான் நின்றிருந்தார்.
அவர் அருகே சென்றவள் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில், “16 வருஷத்துக்கு முன்னாடி விழ வேண்டிய அடி!” என்றாள்.
அவர் பெரும் அதிர்வுடன் அவளைக் கூர்ந்து பார்க்க, அவள் அவரை அற்ப புழுவைப் போல் பார்த்தாள்.
சில நொடிகள் அதிர்வில் நின்றிருந்த கிருஷ்ணா சுதாரித்து கோபத்துடன், “ஏய்!” என்று கத்தியபடி வந்து தந்தையை அரவணைத்தபடி நின்றான்.
அவள் அலட்சியத்துடன் நிற்க,
அவன் கோபத்துடன், “வயசானவரை அடிக்க வெட்கமா இல்லை?” என்று கேட்டான்.
பாலாஜியை ரௌத்திரம் மின்னும் விழிகளுடன் பார்த்த படி, “இந்த கெழட்டு கபோதிய அடிச்சதுக்கு நான் ஏன் வெட்கப்படனும்?” என்றாள்.
“ஏய்!” என்று கோபத்துடன் கத்திய கிருஷ்ணா, “உன் வீரத்தை என் கிட்ட காட்டுடி” என்றபடி அவளை அடிக்க வர,
கபிலன் கிருஷ்ணாவை பிடிக்க வந்தான்.
ஆனால் கபிலன் அவனை பிடிக்கும் முன், கிருஷ்ணாவின் கையைப் பிடித்து அவனது முதுகுக்கு பின்னால் திருகி நன்றாக முறுக்கியவள்,
“ஓவரா துள்ளுன புத்தூர்ல போய் தான் நிற்ப” என்றபடி அவன் கையை விட்டாள்.
நன்றாக வலித்த கையை மறுகையால் பிடித்து விட்டபடி அவளை முறைத்தவன், “இப்போ தான் புரியுது” என்றான்.
அவள், “என்ன?” என்று புருவம் உயர்த்த,
அவன் வன்மத்துடன், “உனக்கு ஏன் வெட்கமே இல்லைனு.. ஏன்னா பொண்ணா இருந்தா தானே வெட்கம், நாணம்லாம் இருக்கும்!” என்றான்.
அவனை வெகு அலட்சியமாகப் பார்த்தபடி, “உனக்கும் உன் அப்பனுக்கும் புரியிற மாதிரி சொல்லணும்னா, ஒருத்தன் கூட படுத்து தான் என்னை பொண்ணுன்னு நான் நிரூபிக்கணும்னு அவசியமே இல்லை.. அண்ட் யாருக்கும் என்னை நான் நிரூபிக்கணும்னும் இல்லை!” என்றாள்.
அதற்கு கிருஷ்ணா என்ன மறுமொழி கூறி இருப்பானோ, அதற்குள் தடதடவென்று தனது வேக நடையில் கீழே இறங்கி வந்த ருத்ரேஷ்வரின் முகம் இறுகி இருக்க, இவர்கள் பக்கம் சிறிதும் திரும்பாமல், இவர்களைத் தாண்டி வெளியே செல்லப் போனான்.
பைரவி, “மிஸ்டர் ருத்ரேஷ்வர், உங்களையும் விசாரிக்கணும்.” என்றாள்.
நடையை நிறுத்தியவன் திரும்பி பார்க்காமல், “எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குது.. பாக்டரி வந்து என்னை என்குவரி செய்துக்கோங்க” என்று விட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறி இருந்தான்.
‘கொஞ்சமாச்சும் என்ன ஏதுனு கேட்கிறானா?’ என்று கிருஷ்ணா மனதினுள் ருத்ரேஷ்வரை வறுத்தெடுக்க,
“உட்காருங்க கபிலன்” என்றபடி முன்பு அமர்ந்த இருக்கையில் அதே போல் கால் மேல் கால் போட்டு அமர்ந்த பைரவி கிருஷ்ணாவைப் பார்த்து, “கலைச்செல்வி இறந்த அன்னைக்கு நீ எங்க இருந்த?” என்று கேட்டாள்.
அவளை முறைத்தபடி, “உன்னை வெளியே போகச் சொன்னேன்” என்றான்.
அப்பொழுது கஜேந்திரனும் ராதிகாவும் நரேனும் வந்தனர்.
“என்ன விஷயமா வந்து இருக்கிறீங்க?” என்று கேட்டபடி கஜேந்திரன் அவள் எதிரே அமர்ந்தார்.
பைரவி கபிலனைப் பார்க்க, அவன் கஜேந்திரனைப் பார்த்து, “உங்க காலேஜில் படிச்சுட்டு இருந்த கலைச்செல்வி இறந்ததைப் பத்தி விசாரிக்க வந்து இருக்கிறோம்.” என்றான்.