
தழல் ~ 4
அடுத்த நாள் காலையில் பைரவி தன் வீட்டின் அருகே இருக்கும் பூங்காவில் மெதுவாக ஓடிக் கொண்டிருந்த பொழுது,
உற்சாகக் குரலில், “குட் மார்னிங் ரவி” என்றபடி அசோக் அவளுடன் இணைந்தான்.
(அசோக் – மன்ற உறுப்பினரின் மகன் மேல் புகார் கொடுக்க வந்த அனிதா கூறிய பைரவியின் வக்கீல் நண்பன்)
அவன் தன்னைக் கிண்டல் செய்வது புரிந்தாலும், அவனைக் கண்டு கொள்ளாமல் அவள் மெது ஓட்டத்தைத் தொடர,
அவனாகவே, “உன் பெயரை சுருக்கினா இதான் வருது மச்சி.” என்றான்.
‘உன்னை நான் அறிவேன்’ என்பது போல் அவனை ஒரு நொடி பார்த்தவள் பின் நிதானமாக, “ஒரு ஆண் இப்படி இருக்கணும், பெண் இப்படி தான் இருக்கணும்னு யாரு நிர்ணயிக்கிறா?” என்று கேட்டாள்.
“பெண் என்றால் மென்மை, ஆண் என்றால் வலிமைனு காலம் காலமா சொல்றது தான்!”
“அதைத் தான் யார் சொன்னதுனு கேட்கிறேன்.. உன்னை மாதிரி ஒரு ஆண் தானே!”
பதில் சொல்வதறியாது அவன் சிறிது திணற,
“உன்னை எல்லாம் நம்பி கேஸ் கொடுக்கிறாங்க பாரு! ரொம்ப பாவம்.” என்றாள்.
“வாதம் செய்தால் விவாதம் செய்யலாம்.. நீ விதண்டாவாதம் செய்ற”
“உனக்கு பதில் சொல்லத் தெரியலைனா நான் விதண்டாவாதம் செய்றதா அர்த்தமாகாது.. சரி நீ அமைதியான மென்மையான குணம் கொண்டவன் தானே!
அப்போ உன்னை பொண்ணுனு சொல்லவா?”
“ஓய்.. தேவையான நேரத்தில் என் வலிமையை காட்டுவேன்.. இல்லைனா கோர்ட் தாண்டி உசுரோட வெளியே வர முடியுமா?”
“அதே மாதிரி தான்.. தேவைனா நானும் மென்மையைக் காட்டலாம்.”
“உனக்கே உறுதியா தெரியலையா?”
அவள் தோள்களை குலுக்க,
அவன் சிறு வேதனையுடன், “ஏன்டி இப்படி இருக்க?” என்று கேட்டான்.
சட்டென்று இறுகியவள், “என் மென்மை என்னோட பதினோரு வயதில் புதைக்கப்பட்டு, காணமப் போய்டுச்சு.” என்றாள்.
“அதெல்லாம் காணாமலாம் போகலை.. உனக்குள்ள புதைந்து இருக்கும் உன்னோட மென்மையை நீ நினைத்தால் வெளியே கொண்டு வரலாம்.”
“என்ன தேவைக்கு?”
“உனக்குன்னு ஒரு வாழ்க்கை வாழ்ந்து தான் பாரேன்.”
“இப்போ வாழாமையா இருக்கிறேன்?”
அவன் முறைக்க, அவளோ அலட்டிக் கொள்ளாமல் பார்த்தாள்.
“புரியாத மாதிரி பேசாத..” என்று அவன் கூற,
“சர்வைவல் ஆஃப் தி பிட்டஸ்ட்.. பிணந்தின்னிக் கழுகுகள் நிறைந்த இந்த உலகில், தழல் பட்சியா இருந்தால் தான், நான் நிலைத்து இருக்க முடியும், அண்ட் எனக்கும் இதான் பிடிச்சு இருக்குது.” என்றவள் சட்டென்று திரும்பி, அவனை கடுமையாக முறைத்தாள்.
‘நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு!’ என்று நடிகர் வடிவேல் போல் மனதினுள் நினைத்தவனின் பார்வையில் அந்தப் பெண் விழுந்தாள்.
ஆம், அவர்கள் எதிரில் அனிதா வந்து கொண்டு இருந்தாள்.
அவன் மனதினுள், ‘ரைட்டு.. இன்றைய நாள் ஜகஜோதியா இருக்கும் போலவே!’ என்று நினைத்துக் கொண்டான்.
பைரவியை வழி மறிப்பது போல் வந்து நின்ற அனிதா கோபக் குரலில், “எனக்கு உதவ முடியுமா முடியாதா, மேடம்? அவனை சும்மா விடச் சொல்றீங்களா?” என்று சற்றே ஆவேசத்துடன் கேட்டாள்.
அசோக் கூட சிறு ஆச்சரியத்துடன், ‘பார்டா!’ என்று நினைக்க,
அனிதாவை மேலும் கீழும் பார்த்த பைரவியோ, “பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மென்ட் வீக்” என்று விட்டு நகர்ந்தாள்.
அனிதா அதிர்வுடன் நிற்க, அசோக் இதழோர மென்னகையுடன் தோழியை தொடர்ந்தான்.
அனிதா வேகமாக சென்று, “மேடம்.. அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணும்.. நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க.” என்றாள் உறுதியான குரலில்.
மெது ஓட்டத்தை நிறுத்தி அவளைப் பார்த்து, “தைரியம் வேணும்.” என்ற பைரவி அவள் பேச வரவும்,
கையை உயர்த்தித் தடுத்து, “நான் சொல்றது, சும்மா சிங்கப் பெண்ணே பாட்டை கேட்டதும் வர இன்ஸ்டன்ட் தைரியம் இல்லை.. தைரியம் என்பது மூளையில் இல்லை, நெஞ்சில் இருக்கணும்.. நெஞ்சில் உதிக்கும் தைரியம் தான் நிலையானது, எடுத்த காரியத்தை வெற்றிகரமா நிறைவேற்ற முடியும்.. அப்போ வந்து என்னைப் பாரு” என்றவள் நண்பனைப் பார்த்து,
“பை டா! மென்மை கலந்த வலிமையான வண்டு முருகா” என்று விட்டு கிளம்பினாள்.
“வண்டு முருகனா!” என்று அசோக் அதிர,
திரும்பிப் பார்க்காமல், “உன்னோட வாதத் திறமைக்கு இதான் செட் ஆகும்.” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறியபடி ஓடினாள்.
நண்பனிடம் மட்டும் வெளிப்படும் பைரவியின் சிறு இலகுத் தன்மையில், அனிதா ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் அசோக்கைப் பார்க்க,
அவனோ அதைக் கண்டு கொள்ளாமல், “அவனை தண்டிக்கணும்னு உன் மனசில் இன்னும் நல்லாவே வைராக்கியத்தை வளர்த்துக்கோ.. அந்த நினைப்பே உனக்குள் தைரியத்தையும், எதையும் எதிர் கொள்ளும் உத்வேகத்தையும் கொடுக்கும்.. அதைத் தான் பைரவி உன்னிடம் எதிர்பார்க்கிறா..” என்றான்.
“புரிது அண்ணா”
“சரி கிளம்பு” என்றவன் அவள் கிளம்பியதும்,
“பைரவி” என்று அழைத்தபடி வேகமாக ஓடி சென்று பைரவி முன் மூச்சு வாங்க நின்றான்.
அவள் ‘என்ன?’ என்பது போல் பார்க்க,
அவன் குறும்புப் புன்னகையுடன், “நேத்து போனில் ‘உன்னை தான் முதல்ல உள்ளே தூக்கி வைப்பேன்’னு சொன்னியே! அந்த உள்ளே, உன் மனசுக்குள்ள தானே?” என்று கேட்டு கண்சிமிட்டினான்.
ஒரு நொடி அவன் கண்களை கூர்ந்து பார்த்தவள் அவனது குறும்பில், “இந்த ரவி, உனக்கு செட் ஆக மாட்டேன்” என்று விட்டு நகர்ந்தாள்.
“அப்போ யாருக்கு செட் ஆவ?” என்று அவன் நின்ற இடத்தில் இருந்தே வினவ,
“யாருக்கும் இல்லை.” என்று விட்டு பூங்காவை விட்டு வெளியேறி இருந்தாள்.
எப்பொழுதும் போல் தோழியின் நல் வாழ்விற்காக மனதினுள் மனதார வேண்டியபடி அவனும் கிளம்பினான்.
அதே விடி காலை நேரத்தில் தனது மெது ஓட்டத்தை வீட்டுத் தோட்டத்தில் முடித்து விட்டு, வீட்டின் உள் கூடத்தில் அமர்ந்து செய்தித்தாளை கையில் எடுத்த ருத்ரேஷ்வர், முதல் பக்கத்தில் இருந்த பைரவியின் புகைப் படத்தை யோசனையுடன் பார்த்தான்.
அப்பொழுது அங்கே வந்த கஜேந்திரன் அவளது புகைப் படத்தைப் பார்த்து, “நேத்து நியூஸ் சேனல் எல்லாம் இந்த ஏசிபி தான் ஹாட் நியூஸ்.. கொஞ்சம் திமிர் போல.” என்றபடி அமர்ந்தார்.
“நானும் பார்த்தேன்.. நேர்மையானவங்க கிட்ட கொஞ்சம் திமிர் இருக்கத் தானே செய்யும்.”
“இருந்தாலும் ஒரு கூட்டத்தில், ஒரு ஆணை ஒரு பெண் அடிப்பது கொஞ்சம் அதிகம் தான்.”
“அவங்களே தவறாகப் பேசியவனை அடிச்சதா தான் சொன்னாங்க.. அண்ட் அடிச்சதை தைரியம், துணிச்சல்னும் சொல்லலாம்.”
அவர் தோளை குலுக்கிக் கொண்டார்.
அப்பொழுது, “என்ன மாநாடு நடக்குது?” என்று கேட்டபடி மென்னகையுடன் ராதிகா வர, அவருடன் அவர் கணவர் பாலாஜியும் வந்தார்.
அத்தையின் கணவரை ஓரப் பார்வை பார்த்த படி, “இவ்ளோ நேரம் இல்லை, இனி தான் மாநாடு நடக்கும்னு நினைக்கிறேன்” என்றான்.