
தழல் ~ 1
சிறகடிக்கும் பட்சியின்
ஆலோலம் மென்மை!
தழல் விரிக்கும் பட்சியின்
ஆக்ரோசம் மேன்மை!
மென்மையின் மேன்மைக்கு
பெண்மையே ஆதாரமே – அதன்
தாய்மையே அரிதாரமே!
(இந்த கவிதை புத்தகம் publish செய்தப்ப, dtp வொர்க் பார்த்த அக்கா எழுதியது.)
திருநெல்வேலி மாவட்டம், பாளையம் கோட்டை பகுதி, அந்தக் காலை வேளையில் எப்பொழுதும் போல் சற்றே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, முன் இருபதுகளில் இருக்கும் ஒரு பெண், சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடி சிறு பதற்றத்துடன் காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தினுள் நுழைந்தாள்.
உள்ளே சென்று ஏட்டிடம், “ஏசிபி மேடமை பார்க்கணும்.” என்றாள்.
ஏட்டு, “என்ன விஷயம் மா?” என்று வினவ,
“மேடம் கிட்ட தான் பேசணும்” என்றாள்.
“அட, என்ன விஷயம்னு சொல்லுமா” என்று அவர் கேட்ட போது, உள்ளே நுழைந்த ஆய்வாளர்(inspector) விமல்ராஜ், “என்னயா?” என்று கேட்டார்.
‘இந்தாளு இன்னைக்குனு மேடம் முன்னாடி வந்துட்டாரே! பேசாம இந்தப் பொண்ணை ஓரமா உட்கார வைத்து இருக்கலாம்’ என்று மனதினுள் நினைத்த ஏட்டு, “ஒன்னுமில்லை சார்” என்று சமாளிக்கப் பார்த்தார்.
அந்த பெண்ணை உச்சி முதல் பாதம் வரை பார்த்த விமல்ராஜ் அவளிடமே,
“என்ன கம்ப்ளைன்ட்?” என்று கேட்டார்.
விமல்ராஜின் பார்வையில் சிறு பயம் கொண்டவள் தனக்குத் தானே மனதினுள் தைரியம் கூறிக் கொண்டு, “மேடம் பார்க்க வந்தேன்” என்றாள்.
சட்டென்று கோபத்துடன், “ஏன் என்னைப் பார்த்தா கையாலாகாதவனைப் போலத் தெரியுதா?” என்றவர் அடுத்து என்ன சொல்லி இருப்பாரோ,
அதற்குள் உள் அறையில் இருந்து வந்த துணை ஆய்வாளர் கபிலன், “மேடம் வர நேரம் தான்.. நீங்க அங்க உட்காருங்க.” என்று ஒரு இருக்கையை சுட்டிக் காட்டியபடி தன்மையுடன் கூறி இருந்தான்.
கபிலனை முறைத்த விமல்ராஜ் மனதினுள் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி உள்ளே சென்றார்.
கபிலன் ஏட்டைப் பார்க்க, “என்னனு விசாரிச்சுட்டு தான் இருந்தேன் சார்.. அவர் இந்த நேரத்தில் வருவார்னு நினைக்கல.. இல்லைனா முன்னாடியே உட்காரச் சொல்லி இருப்பேன்.” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
அவன் சிறு தலை அசைப்புடன் உள்ளே செல்ல,
விமல்ராஜ் நக்கல் குரலில், “ஏதோ உங்க மேடம் பெரிய அப்பாடக்கர்.. அதை புடுங்கிடுவாங்க, இதை செஞ்சிடுவாங்கனு பெரிய பில்டப் கொடுத்த! ஒன்னுத்தையும் காணுமே!” என்றார்.
அமைதியான குரலில், “உங்களுக்கும் அவங்க தான் மேடம்.” என்றவன், “வந்து ஒரு வாரம் தானே ஆகுது.. பொறுத்திருந்து பாருங்க.” என்றான்.
“இதை விட பெரிய கொம்பன்களே இருந்த இடம் தெரியாமப் போனதை பார்த்தவன்டா.. அதுவும் ஒரு பொம்பளை அப்படி என்னத்தை கிழிக்கிறானு பார்க்கிறேன்!”
“சார் மேடமை மரியாதையாப் பேசுங்க.” என்று அவன் அடக்கப்பட்ட கோபத்துடன் கூற,
விமல்ராஜோ, “என்னை விட சின்னவளுக்கு இந்த மரியாதை போதும்.” என்றார் அலட்சியமாக.
“வயசில் உங்களை விட சின்னவங்களா இருந்தாலும், பதவியிலும் செயலிலும் உங்களை விட உயர்ந்தவங்க.”
“ரொம்ப ஆடாதடா.. இவ்ளோ வெறப்பா இருக்கிற ஆள் சீக்கிரம் ட்ரான்ஸ்ஃபர் ஆகி போய்டுவா!” என்றவரின் குரலில் ‘நீ என் கூட, எனக்கு கீழ் இருப்பவன்.’ என்ற மறைமுகமான மிரட்டல் இருந்தது.
‘உங்களை திருத்த முடியாது’ என்ற பார்வை பார்த்து அவன் செல்ல, விமல்ராஜ் கோபத்துடன் பல்லைக் கடித்தார்.
விமல்ராஜிற்கு துதி பாடும் மற்றொரு துணை ஆய்வாளர் தனது கைபேசியை காட்டியபடி,
“இதை பார்த்தீங்களா சார்? அந்த ‘ஃபளை ஹை’ (‘Fly High’) இன்ஜினியரிங் காலேஜ் கேஸ் ரொம்ப சென்சிடிவ் ஆகிட்டு வருது.” என்றான்.
“ஹ்ம்ம்.. பார்த்தேன் பார்த்தேன்.. இப்பலாம் ஆ.. ஊனா இந்தப் பசங்க போராட்டத்துல இறங்கிடுறான்க”
“ஆமா சார்.. ஆமா” என்றவன்,
“இந்த கேஸ் பத்தி, நீங்க என்ன சார் நினைக்கிறீங்க?” என்று கேட்டான்.
“நல்ல வேளை, நம்ம டிவிஷன்ல வரலனு நினைக்கிறேன்.”
“என்ன சார்!”
“முதல்ல துட்டு பார்த்து இருக்கலாம்னு தான் நினைச்சேன்.. ஆனா இப்போ அந்தக் கேசை ஹன்டில் செய்த இன்ஸ்பெக்டர் நிலைமையைப் பார்த்து, தப்பிச்சோம்னு தான் தோணுது.”
“அப்போ.. அது தற்கொலை இல்லைனு சொல்றீங்களா?”
“என் கிட்டயே போட்டு வாங்குறீயா?”
“சார்! என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க! என்னை பத்தி தெரியாதா? சும்மா தெரிஞ்சுக்கத் தான் கேட்டேன்”
லேசாக சிரித்த விமில்ராஜ், “நீ என்னை மாதிரினு தெரியும்.. அதான் ஜாக்கிரதையா இருக்கணும்னு நினைக்கிறேன்.” என்றார்.
“சும்மா சாதாரணமா தான் சார் கேட்டேன்.. அந்த இன்ஸ்பெக்டர் உங்களுக்குப் பழக்கமா?”
“அதெல்லாம் இல்லை.. கேள்வி ஞானம் தான்.. கண்டிப்பா பணம் விளையாடி இருக்குது.. யார் கிட்ட அந்த கேசை கமிஷ்னர் கொடுக்கிறார்னு பார்க்கலாம்.”
“ஒருவேளை நம்ம மேடம்” என்று ஆரம்பித்தவன், விமல்ராஜ் பார்த்த பார்வையில், “ஏசிபி கிட்ட கொடுக்க வாய்ப்பு இருக்கானு கேட்க வந்தேன், சார்.” என்று பம்மிய குரலில் கூறினான்.
“அவளை விட அனுபவமுள்ள ஏசிபி இருக்காங்க.. இந்த கபிலன் கொடுக்கிற பில்டப் வச்சு, நீயும் அதிகமா நினைக்காத.”
“நீங்க சொன்னா சரி தான் சார்.” என்றவன், “ஆனாலும் இந்தக் கபிலன் பொய் சொல்ல மாட்டானே சார்!” என்று இழுத்தான்.
விமல்ராஜின் பாசப் பார்வையில், அசடு வழிந்த படி, “இல்ல சார்.. சும்மா சொன்னேன்.” என்றான்.
“ஹ்ம்ம்” என்ற விமல்ராஜ், “இவன் முதல் முதல்ல வேலை பார்த்தது அவளுக்கு கீழ தான் போல, அவளும் அப்போ தான் ஜாயின் செய்து சில மாசம் இருக்கும்.. வேலைக்கு சேர்ந்த புதுசுல எல்லாம் அப்படி தான் இருப்பாங்க.. விடுடா, நாம பார்க்காததா!” என்றார்.
“நீங்களே ஏசிபி கறார்னு தானே சொல்றீங்க?”
“ஹ்ம்ம்.. அதான் அடிக்கடி இடமாற்றம்..”
“ஹ்ம்ம்.. ஆனா நம்ம கமிஷனர் நேர்மையா, வெறப்பா இருக்கிற ஆளை சட்டுன்னு மாற்ற மாட்டாரே!” என்றவன்,
“ஒன்னு கேட்கலாமா சார்?” என்று போலியாக தயங்கிய குரலில் கேட்டான்.
“என்ன?”
“உங்களுக்கு ஏன் ஏசிபியை பிடிக்கலை”
“ஏன் உனக்கு பிடிச்சு இருக்கோ?” என்று தலை சரித்து ஒரு மாதிரி குரலில் கேட்டார்.
“அய்யோ சார்!” என்று பதறியவன், “என் எண்ணங்கள் உங்களுடன் ஒத்துப் போனாலும் இந்த விஷயத்தில் நான் ஏகபத்தினி விரதன் சார்” என்றான்.
“நான் மட்டும் ஏகப்பட்ட பத்தினி விரதனா?”
“இல்ல சார்.. அப்படி சொல்லலை”
“விடு விடு.. என்னை விட சின்ன வயசு, ஆனா கொஞ்சமாச்சும் மதிக்கிறாளா? வந்த ஒரு வாரத்திற்குள் நேர்மை, ரூல்ஸ் அது இதுனு எவ்ளோ கொடைச்சல்.. அதான்.”
“ஹ்ம்ம்…”
“ஆனாலும் ஆள் சூப்பர் பிகர் தான்.” என்று கூறி கண் சிமிட்டினார்.
“அய்யோ சார்.. நான் இந்த ஆட்டத்துக்கே வரலை.”
“ஏன்டா இப்படி பயப்படுற?”
“அவங்க கண்ணைப் பார்த்தாலே ஆடிப் போகுது”
அப்பொழுது அவர்கள் அருகே இருந்த அடுக்கில் இருந்து ஒரு கோப்பியத்தை எடுக்க கபிலன் வரவும்,
விமல்ராஜ், “பங்க்சுவாலிட்டிக்கு லெக்சர் கொடுக்கிற உங்க மேடமே இன்னைக்கு லேட்டா வராங்க!” என்று சீண்டினார்.
“மேடம் எப்போதும் பங்க்சுவல் தான்.. கமிஷ்னர் ஆபீஸ் போயிட்டு வரதா சொன்னாங்க.” என்று விட்டு கோப்பியத்துடன் அகன்றான்.