குறிப்பு: என்னவோ இன்னைக்கு அப்டேட் போடுறதுக்கு அம்புட்டு தடங்கல்கள்.. என் பையன் அப்பவே 11மணி னு போடு மா னு சொன்னான்.. கேட்டேனா!!! 10.30 ஆகவும் அவனை தூங்க வச்சுட்டு வந்து மீதி edit செய்து போடுறேன்.. இன்று மூன்று episodes.. ஹீரோ ஆர்மிக்காக நாளை மாலை/இரவு 7த் எப்பி போடுறேன்..
விலகல் – 4
மதிய உணவு இடைவேளையின் போது பவித்ரா, “என்ன யோசனை திவி?”
“நேத்து தியேட்டரில் ஒருத்தனை பார்த்தோமே! அவனைப் பற்றி தான் யோசிச்சிட்டு இருந்தேன்”
“பார்த்தோம் இல்லை… பார்த்தேன்… நீ தான் பார்த்த…”
“சரி பார்த்தேன்.”
“அவனைப் பற்றி என்ன யோசனை?”
“ஆள் கொஞ்சம் ஸ்மார்ட்டா தான் இருந்தான்…”
பவித்ரா ஆச்சரியமாகப் பார்க்கவும்,
திவ்யா, “என்ன?”
“பசங்களைப் பற்றி நீ இப்படி பேசியது இல்லையே!”
“ஸ்கூல் காலேஜில் நான் பெருசா நோட் பண்றது இல்லை… நான் பார்த்து அதை அவங்க பார்த்து, எதுக்கு தேவை இல்லாத வினைனு விட்டுட்டேன்.”
“ஆச்சரியமா இருக்குதே!”
“எது?”
“இல்லை, ஒரு விஷயம் வினையை கூட்டும்னா… அதைத் தானே நீ செய்வ?”
“நானா வினையை கூட்டுவேன்… அதுவா என்னைத் தேடி வர மாதிரி நடந்துக்க மாட்டேன்.”
“என்னவோ போ!” என்றவள் சிறு தயக்கத்துடன், “ஒன்னு கேட்கலாமா?”
“என்ன?”
“நீ… உனக்கு…”
“தந்தி அடிக்காம விஷயத்தைச் சொல்லு.”
“அது”
“அடி தான் தரப் போறேன்… சொல்லித்தொலைடி”
“அது வந்து…”
திவ்யா முறைக்கவும் பவித்திரா வேகமாக, “நீ கல்யாணம் செஞ்சுக்குவ தானே!”
திவ்யா வாய்விட்டு சிரிக்க, பவித்ரா சிறு கலக்கத்துடன், “என்னடி?”
“இதுக்கு தான் இவ்ளோ பில்ட்-அப் கொடுத்தியா?”
“பதிலை சொல்லுடி”
திவ்யா சிறு இறுக்கத்துடன், “செய்துப்பேன். ஆனா, அவங்களை மாதிரி இல்லாம... சந்தோஷமான நிறைவான வாழ்க்கையை வாழுவேன்.”
பவித்ரா ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பார்க்கவும்,
மெல்லிய புன்னகையுடன், “அவங்களை நான் வெறுத்து விலகுறேன் தான்… ஆனா… கண்டிப்பா கல்யாணம் செய்துப்பேன்… அதுவும் காதலிச்சு.”
தோழியின் விழிகள் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியுடன் மேலும் விரியவும், திவ்யா விரிந்த புன்னகையுடன், “எதுக்கு இவ்ளோ ஷாக்?”
“அது இல்லை… நீ….”
“ஹும்ம்… என்னைப் போல ஒருத்திக்கு கல்யாணம் நடக்கணும்னா, அது காதல் கல்யாணமா இருந்தால் மட்டும் தான் சாத்தியம்…
ஆனா, அதுலேயும் என்னோட பின்புலத்துக்காகவோ, என் மேல பரிதாபப்பட்டோ இல்லாம, என்னை எனக்காக விரும்பும்… என்னை மட்டும் காதலித்து, என்னை உயிராய் நேசிக்கும் ஒருவனை, நானும் உயிராய் காதலித்து கல்யாணம் செய்துக்கணும்…! அவனோட அன்பின் சிறைவாசத்தில் திகட்ட திகட்ட இனிய வாழ்க்கையை வாழனும்.” என்று கண்கள் மின்ன கனவில் மிதப்பவள் போல் கூறியவளைக் கண்டு, பவித்ராவின் மனமும் கண்களும் கலங்கியது. அந்த நொடியே தன் தோழிக்கு அத்தகைய வாழ்க்கை அமைய வேண்டும் என்று மனமார இறைவனை வேண்டினாள்.
கனவில் மிதந்தவள் மெல்ல இறுகவும், பவித்ரா பேச்சை மாற்றினாள்.
“சரி, தியேட்டர் பார்ட்டி பத்தி என்ன யோசனை?”
“பெருசா ஒன்னுமில்ல… சும்மா திடீர்னு யோசிச்சேன், அவ்ளோ தான்.”
“அப்டீங்கிற!”
“அப்படியே தான்”
“ஆனாலும் சண்டை போட்டுட்டே சைட் அடிச்ச ஆள், நீயா தான்டி இருப்ப!”
“அது வேற டிப்பார்ட்மென்ட், இது வேற டிப்பார்ட்மென்ட்” என்று புன்னகையுடன் கண்சிமிட்ட, பவித்ரா புன்னகைத்தாள்.
“சரி, நேத்து என்ன சண்டை? அப்புறம் சொல்றேன்னு சொல்லி விட்டுட்டியே!”
“அதுவா….” என்று நேற்று திரை அரங்கத்தில் நிகழ்ந்ததைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
………………
திரைப்பட இடைவேளையின் போது, விஜய் கழிப்பறைக்குச் சென்றிருக்க, பவித்ரா ‘நீளுருளை வறுவல்கள்’(French fries) வாங்க ஒரு இடத்திற்குச் செல்ல, திவ்யா மக்காச்சோளப்-பொறி(Popcorn) மற்றும் குளிர்ந்த குளம்பி வாங்க ஒரு இடத்திற்கு சென்றாள்.
அங்கு அவள் நின்ற இடம், சற்று கூட்டமாகத் தான் இருந்தது.
அவளிடம் மக்காச்சோளப் பொறியை கொடுத்தவர், “கோல்ட் காஃபி, அடுத்த கவுன்டரில் வாங்கிக்கோங்க மேம்.” என்று கூற,
இரண்டு கைகளிலும் மக்காச்சோளப் பொறியை பிடித்தபடி, “தேங்க்யூ” என்றபடி புன்னகையுடன் திரும்பியவள், ஒரு இளைஞன் மீது மோதியிருந்தாள்.
அவள், “சாரி” என்று கூற,
அவனோ அவளது மன்னிப்பை பொருட்படுத்தாமல், “அறிவில்லை உனக்கு? கண்ணு என்ன பொடதிலயா இருக்குது உனக்கு? இல்ல வேணும்னே இடிச்சியா?” என்று கடுமையாக வினவினான்.
ஒரு நொடி அவன் முகத்தை சலனமற்று பார்த்தவள், அடுத்த நொடி கையில் இருந்த மக்காச்சோளப் பொறி ஒன்றை அவன் தலையில் கொட்டியிருந்தாள்.
அவன் கோபத்துடன் கையை ஓங்கினான். ஆனால் கண்ணில் சிறிதும் பயமின்றி, தைரியத்துடன் தீர்க்கமாகப் பார்த்த அவளது விழிகளைக் கண்டு என்ன நினைத்தானோ, கையை கீழே இறக்கி கோபத்துடன், “உன்னையெல்லாம் பெத்தாங்களா, செஞ்சாங்களா?”
“உன்னைப் போன்ற ஆட்களை சமாளிக்க என்னை செஞ்சாங்க.”
“ஏய்! என்ன கொழுப்பா?”
“ஏன் உனக்கு வேணுமா?”
அவன் கோபத்துடன் பல்லை கடிக்க, அப்பொழுது அவன் பின்னால் இருந்த நடுத்தர வயதுடைய ஒரு ஆள், “ஏம்பா உங்க ஊடலை, சத்த தள்ளி நின்னு வச்சுக்கப்பிடாதோ!”
அவன் கோபத்துடன் அவரை முறைத்தபடி ஏதோ சொல்ல வர,
அவள் தலையை மட்டும் சரித்து அவர் முகத்தைப் பார்த்து, “இப்போ என்ன சொன்னீங்க?”
அவர், “மத்தவாளுக்கு வழி விட்டு, உங்க ஊடலையோ கூடலையோ, சத்த தள்ளி இருந்து வச்சிண்டா நல்லது.”
அவன் திரும்பிப் பார்த்து அவளை முறைக்க, பதிலுக்கு அவனை முறைத்தவள், இரண்டடி முன்னால் வந்து அந்த ஆள் அருகே இருந்த பெண்மணியைச் சுட்டிக் காட்டி,
“உங்க தங்கை ரொம்ப அழகா இருக்காங்க.”
“என்ன…!”
அவரது முகத்தைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கி நிதானமாக, “உங்க தங்கை ரொம்ப அழகா இருக்காங்கனு சொன்னேன்.”
“இவ என் தங்கை இல்ல… இவ…”
“அப்போ உங்க அக்கா வா! ஆனா, பார்க்க அப்படி தெரியலையே! ரொம்ப இளமையா அழகா இருக்காங்க!”
அவள் அக்கா என்றதும் கோபமான அந்த பெண்மணியின் முகம், அவள் அடுத்துக் கூறியதை கேட்டு புன்னகையை தத்தெடுத்தது.
அந்த ஆள், “இல்லை… இவ…”
“அக்காவும் இல்லையா! அப்போ பொண்ணா?” என்றதும்,
அவர் அழாத குறையாக, “இவ என் ஆம்படையா… நோக்கு தெரியலைனா நீயா ஏதாவது சொல்லாத..”
“அதே தான் உங்களுக்கும்.” என்றவள் இடத்தை விட்டு நகர்ந்தாள்.
அந்த இளைஞன் சிறு ஆச்சரியத்துடன் போகும் அவளைப் பார்க்க,
அவரோ, “ஏன்டா அம்பி உன் ஆம்படையா எப்போதுமே இப்படி தான் புரியாத மாதிரி பேசுவாளா, இல்…”
அவர் முடிக்கும் முன், அவர் தலையில் மக்காச்சோளப் பொறியை கொட்டியவள் சிறு கோபத்துடன், “இப்போ தானே சொன்னேன்… பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சுப் பேசுங்க!” என்றவள் அந்த பெண்மணியிடம், “நீங்க உண்மையிலேயே ரொம்ப அழகு மாமி… இவருக்கு நீங்க மனைவியா கிடைத்தது கொஞ்சம் அதிகம் தான்.” என்று கூறிச் செல்ல,
அந்த பெண்மணி புன்னகையுடன் நிற்க, அவர் கணவரோ அதிர்ச்சியுடன் நிற்க, அவனோ வாய்விட்டுச் சிரித்தான்.