“ஆசையா! ஐ ஹேட் தட்…” என்று வெறுப்புடன் கூறியவள், “தினமும் யாராவது உங்களை என் உறவுனு சொல்லும் போது, எனக்கு எப்படி இருக்குது தெரியுமா? நான் மறக்க நினைப்பதை தினம் தினம் ஞாபகப்படுத்தி… கொல்றாங்க…! என் வலி உங்க யாருக்குமே புரியாது.” என்றபோது அவள் கண்கள் கலங்கியது.
“அதை நினைக்க நினைக்க, நான் ஏன் பிறந்தேன்னு தோணுது… என் மேலேயே எனக்கு வெறுப்பு வருது… இன்னும் கொஞ்ச நாளில் நான் இல்லாமலேயே போய்டுவேன்னு நினைக்கிறேன்… அது தானே உங்க எல்லாருக்கும் வேணும்.”
“என்ன பேச்சு இது?” என்று அதட்டியவர் இருக்கையை விட்டு எழுந்திருந்தார். அவரது மனம் அவளது நிலையை நினைத்துக் கலங்கியது. அவளது பேச்சைக் கேட்டு அவர் உள்ளம் பதறியது. பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி மற்றும் பெரிய மருத்துவமனையை திறம்பட நடத்துபவர், அவளை எப்படி கையாளுவது என்று தெரியாமல் திணறினார். எப்படி அவளது துயர் நீக்குவது என்று அறியாமல் தவித்தார்.
“நான் சொல்வதை கொஞ்சம் கேளேன்.” என்று கெஞ்சினார்.
“நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், என் முடிவில் மாற்றம் இல்லை… எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யுங்க.”
“என்ன?”
“எல்லாரிடமும் என்னை உங்க உறவாக பார்க்காமல், ஒரு சாதாரண மாணவியாக பார்க்கச் சொல்லுங்க… என்ன பனிஷ்மென்ட் கொடுக்கணும் என்றாலும் கொடுக்கட்டும்.” என்றவள், அவரது பதிலை எதிர்பாராமல் வெளியேறினாள்.
சோர்ந்து போய் இருக்கையில் அமர்ந்தவர் “உனக்கு கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றப் போறேன்னு தெரியலையே சுபா!” என்று கலங்கினார்.
அலையின் சீற்றத்தைப் போல் கொந்தளித்த மனதுடன், புயல் வேகத்தில் வெளியே வந்த திவ்யாவை தொடர்ந்து ஓடிய பவித்ரா, தோழியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு ஓட்டத்தை தொடர்ந்தாள்.
‘என் தலை என்னைக்கு வெடிக்கப் போகுதுன்னு தெரியலையே!’ என்று மனதினுள் புலம்பியபடி, விஜய் அவர்களுடன் வேகமாகச் சென்றான்.
வகுப்பறை நோக்கி செல்லப் போன திவ்யாவை, பவித்ரா இழுத்துக் கொண்டு கல்லூரி உணவகத்திற்குச் சென்றாள். அங்கே சென்று அமர்ந்ததும், பவித்ரா எதுவும் பேசாமல் தோழியின் கையை ஆறுதலாக தட்டிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள்.
ஐந்து நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தது. திவ்யா சுற்றுபுறத்தில் கவனமின்றி, தன்னுள் உழன்று கொண்டிருந்தாள்.
அப்பொழுது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்படவும், திடுக்கிட்டு நிமிர்ந்தவள், அந்த காரியத்தைச் செய்த தோழனை முறைத்தாள்.
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “முதல்ல இதை குடி.” என்று அவளுக்குப் பிடித்த தர்பூசணி பழச்சாற்றை கொடுத்தான்.
அவள் அதை வாங்காமல் அமைதியாக இருக்கவும்,
“இப்போ வாங்கல… உன் தலையிலேயே ஊத்திடுவேன்”
“…”
பவித்ரா பக்கம் கையை காட்டியவன், “இந்த லூசு மாதிரி அமைதியா இருக்க மாட்டேன்… நான் என்னோட ரெட்டை வால் பிரெண்ட் திவி போல் அடாவடி… ஒழுங்கா குடி.” என்றதும்,
பவித்ரா அவனை முறைக்க, திவ்யாவின் இதழ் புன்னகையில் விரிந்தது. அதைப் பார்த்ததும் பவித்ரா, கோபம் மறந்து தோழியை கனிவுடன் நோக்கினாள்.
அவன் புன்னகையுடன், “குட் கேர்ள்” என்றதும், திவ்யா பழச்சாற்றை வாங்கி பருகத் தொடங்கினாள்.
பவித்ராவின் தலையில் கொட்டிய விஜய், “அவ அமைதியா இருந்தா, பேசி தேற்றாம வயலின் வாசிச்சிட்டு இருக்க!”
தலையை தடவியபடி முறைப்புடன், “பேச்சு பேச்சா இருக்கணும்… இந்த கை நீட்டுற வேலையை வச்சுக்காத!”
“நீட்டினா, என்ன செய்வ?”
மேசை மீது இருந்த குவளைத் தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் ஊற்றி, “இப்படி என் கையும் நீளும்.” என்றாள்.
“என்னடி செஞ்சு வச்சிருக்க பக்கி! இப்போ நான் எப்படி கிளாஸ்க்கு வரது?”
அப்பொழுது தான் அவனது சட்டை நனைந்ததை கவனித்த பவித்ரா, “அது உன் கவலை.”
விஜய் அவளை முறைக்க, திவ்யா வாய்விட்டுச் சிரித்தபடி, “இனியும் இவளை அமைதினு சொல்லுவ…!”
“எல்லாம் என் கெரகம்.”
திவ்யா, “சரி நீங்க ரெண்டு பேரும் ஜூஸ் குடிங்க… கிளாஸ் போகலாம்.”
“இப்படியே எப்படி போறது?”
“கொஞ்ச நேரத்தில் காஞ்சிரும்… இல்லைனாலும் பரவாயில்ல… சும்மா வா.”
விஜய் பவித்ராவிடம், “உனக்கு பிடிச்ச சப்போட்டா மில்க் ஷேக் சொல்லியிருக்கேன். போய் வாங்கிட்டு வா… அப்படியே எனக்கு எக்-பப்ஸ் வாங்கிட்டு வா.”
பவித்ரா, அவனை முறைத்துவிட்டு எழுந்து சென்றாள்.
“ஏன்டா அவளை சீண்டிட்டே இருக்க?”
“அவளைப் பார்த்தா, அதுவா வருது.”
“என்னைக்கு உன்னை மொத்தப் போறான்னு தெரியல..”
“அதை விடு… நான் ஒன்னு கேட்கலாமா?”
அவள் மெல்லிய புன்னகையுடன், “சேர்மன் சார் எனக்கு ரிலேடிவ்வா, இல்லையானு தெரியனுமா?”
“கஷ்டமா இருந்தால் வேண்டாம்.”
“உன் மனசை ரொம்ப நாளா குடையுதே! சுருக்கமா சொல்கிறேன்… ஆனா இனிமேல் இதைப் பற்றி கேட்காத…” என்றவள் வெறுமையான குரலில், “எனக்கு வேண்டாத ஒரு உறவோட சொந்தகாரர்… நான் வெறுக்கும், விலகி இருக்கும் ஒரு உறவோட உறவுக்காரர், எனக்கு எப்படி உறவாக முடியும்?”
“ஸோ இருக்கு, ஆனா இல்லை… சரி அதை விடு.. இன்னும் ஒன்னே ஒன்னு.”
அவள் கூறியதை கேட்டு, அவன் மேலும் துருவி கேட்காமல் இலகுவாக எடுத்துக் கொண்டதோடு, அந்தப் பேச்சை தவிர்க்கவும்,
மெல்லிய புன்னகையுடன், “என்ன?” என்றாள்.
“நீ ஏன் ஹாஸ்டல்ல இருக்கிற?”
“அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கல..” என்று அவள் இறுக்கத்துடன் கூறவும்,
“ஏற்கனவே ஆர்டர் செய்ததை வாங்கிட்டு வர இவ்வளவு நேரமாகுது! எப்படி இந்த சோம்பேறியோட சின்ன வயசில் இருந்து குப்பை கொட்டுற?” என்று அவன் பேச்சை மாற்றினான்.
அவன் தலையில் கொட்டியபடி, “உனக்கு போய் வாங்கிட்டு வந்தேன் பாரு! என்னைச் சொல்லணும்.” என்றபடி முறைப்புடன் பவித்ரா இருக்கையில் அமர்ந்தாள்.
திவ்யா இறுக்கம் சிறிது தளர்ந்து, அவர்கள் சண்டையை ரசிக்கத் தொடங்கினாள்.
அவன் திணியடையை(puffs) உண்டபடி, “உனக்கு வாங்கும் போது கொசுறா எனக்கு வாங்கிட்டு வந்திருக்க… வாங்கிட்டு கூட இல்ல, எடுத்துட்டு வந்திருக்க… நான் தான் பே பண்ணேன்.”
“ஒரு மில்க் ஷேக் வாங்கிக் கொடுத்துட்டு, அதை சொல்லிக் காட்டுறியே! உனக்கு கேவலமா இல்ல?”
“இல்லை.”
“அதானே, மானம் ரோஷம் இருக்கிறவங்களுக்கு தானே அதெல்லாம் இருக்கும்.”
“அதை நீ சொல்லாத…”
திவ்யா, “சரி… சரி… வாங்க கிளாஸ் போகலாம்.” என்று கூறி இருவரையும் இழுத்துக்கொண்டு வகுப்பறைக்குச் சென்றாள்.
இணைய காத்திருப்போம்…