குறிப்பு: உங்களில் சிலருக்கு ஆசிரியரின் பட்டப்பெயர்களை கேட்டு அதிருப்தியாவோ, ‘என்னடா இது!’ என்றோ தோன்றலாம்.. ஆனால் நான் நிஜத்தில் நடப்பதை தான் இங்கே காட்டி இருக்கிறேன்.. ‘பிணம் தின்னி’ என்றது ‘பருத்தி வீரன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தை சொல்லப்படும் பெயர். பெரும்பாலும் பசங்க இப்படி படங்களில் வருவதை தான் வைப்பார்கள்.. பொண்ணுங்க சிம்பிள்ளா லைக் அண்டம் காக்கா கொண்டைக்காரி, பெல், வி.டிவி(பெயரை சுருக்கி)…
நான் கல்லூரி படித்த காலத்தில் என் வகுப்பில் இருந்த சக மாணவர்களில் ஒரு சில பசங்க/பொண்ணுங்க இதை விட பெருசா வைத்து கூட நான் கேட்டு இருக்கிறேன்.. இங்கே அந்தளவிற்கு நான் போகலை.
விலகல் – 2
“நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே! ஓ… தொல்லை…
லைக்-அ லைக் மை லைலா… லைலா
இன்று மட்டும் கிங் அண்ட் குயின்-ஆ
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்…
டக டக டக கொட்டும் இசையில்…”
என்ற பாடல் (“ஓகே கண்மணி” திரைப்படம்) அதிகபட்ச அதிர்வலையில் ஒலித்துக் கொண்டிருக்க, மூடிய கல்லூரி விடுதியின் அறையினுள்ளே, தாளத்திற்கு ஏற்ப தலையை ஆட்டி ஆடிக்கொண்டு இருந்தாள், திவ்யா.
அதே நேரத்தில், அவளை மனதினுள் திட்டியபடி… சிறு பயத்துடன் ராஜாராம் முன் நின்று கொண்டிருந்தார், திவ்யாவின் வகுப்பு ஆசிரியை மணிமேகலை.
அதற்கு என்ன காரணமென்று அறிய, சில மணி நேரங்கள் பின்னோக்கிச் செல்வோம், வாங்க…!
ராஜாராம் அறையை விட்டு வெளியே வந்த திவ்யா, மனதின் இறுக்கம் காரணமாக வகுப்பிற்குச் செல்ல மனமின்றி, கல்லூரி உணவகத்திற்குச் சென்றாள். தலைமை ஆசிரியர் கல்லூரியை விட்டு செல்வது, அவளுக்கும் வருத்தமாக தான் இருந்தது. ஆனால், மனதின் ரணம் அதை பின்னுக்குத் தள்ளியது.
‘முன்னாடி ஆசிரியர்களை மதிக்கும் நான்..! எப்படி இருந்த நான், இப்படி மாறிட்டேன்!’ என்ற எண்ணமும், பழைய நினைப்பில் தான் வந்து நின்றது.
மேலும், ராஜாராமின் பேச்சு அவளது மனதின் ரணத்தைக் கிளறி விட்டது போல் ஆகி விட, கோபமும் எரிச்சலும் சிறு விரக்த்தியுமாக அமர்ந்திருந்தவள், ஒரு நிலைக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், தனது கல்லூரி விடுதிக்குச் செல்லும் முடிவை எடுத்தாள்.
அவள் தனது வகுப்பிற்கு சென்ற நேரம், மதிய இடைவேளை தொடங்கி இருந்தது.
அவள் சென்றதும், பரபரப்புடன் விஜய் அவள் அருகே வந்து, “என்னாச்சு திவி?” என்று வினவினான்.
அவள் முகத்தில் இருந்த இறுக்கத்தை கவனித்த பவித்ரா, யோசனையுடன் அவளை நோக்கினாள்.
திவ்யா வரவழைத்த சிறு புன்னகையுடன், “HOD காலேஜ் விட்டு போறாராம்.” என்றபடி, தனது உடைமைகளை பையினுள் வைத்துக் கொண்டிருந்தாள்.
“ஹே!” என்று கையை ஓங்கி மகிழ்ச்சியுடன் கத்திய விஜய், “சூப்பர் மச்சி…! உன்னை வெளிய அனுப்புறேன்னு சொன்ன ஆளை, நீ வெளிய அனுப்பிட்ட!” என்று கூற,
வெறுமையுடன் அவனைப் பார்த்தபடி, “நான் ஹாஸ்டல் போறேன்.” என்று விட்டு பையை எடுத்தவள், பவித்ராவிடம் சிறு தலை அசைப்புடன் கிளம்ப…
அவளது கையைப் பற்றி ஒரு அழுத்தம் கொடுத்த பவித்ரா, “எதையும் பற்றி யோசிக்காத… எல்லாம் சரி…” சொல்லி முடிப்பதற்குள்,
மெல்லிய புன்னகையுடன் தோழியின் கன்னத்தை தட்டியவள், “நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறி கிளம்பினாள்.
திவ்யா சென்றதும், பெருமூச்சொன்றை வெளியிட்டபடி திரும்பிய பவித்ரா, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த விஜயை பார்த்து, “என்ன?” என்றாள்.
“சில நேரங்களில் புரியாத புதிர் தான்?”
பவித்ரா ‘என்ன’ என்று கேட்கவில்லை. அவள் அமைதியாக இருக்கவும்,
“என்ன தான்டி அவ பிரச்சனை?”
“…”
“ச்ச்… அவளுக்கும் சேர்மன் சாருக்கும் என்ன உறவு? அவ்வளவு பெரிய வீடு இருந்தும், பேரென்ட்ஸ் விட்டுட்டு ஏன் ஹாஸ்டலில் இருக்கிறா? இப்படி பல கேள்விகள் என் மனதை குடையுது… மண்டையே வெடிச்சிரும் போல… நீயாவது சொல்லித் தொலையேன் பக்கி!”
அமைதியாக அவனைப் பார்த்தவள், “அவகிட்ட கேளு.” என்றாள் அமர்த்தலாக.
“சொல்லிட்டு தான் மறு வேலை பார்ப்பாள்!” என்று அவன் கடுப்புடனும், சிறு கோபத்துடனும் நொடித்தான்.
“உன் தவிப்பும், கோபமும், எனக்கும் புரியுது தான்… ஆனால்…”
“புரிந்து என்ன! வாயை திறக்க மாட்டியே!”
“நீ கேட்பது என்னை பற்றிய விஷயம் இல்லை.”
“நான் யாரு உங்களுக்கு?”
“அது அவளுக்கும் தெரியும் தானே!”
“ச்ச்..”
“அவள் மறக்க நினைக்கும் விஷயத்தை, நாம் ஞாபகப்படுத்தக் கூடாதுடா!”
“போடி” என்றவன் வகுப்பை விட்டு வெளியேறினான்.
…………….
வகுப்பறையை விட்டு வெளியே சென்ற திவ்யா, முதலில் சென்றது ஆசிரியை அறைக்கு. அவள் விடுதிக்குச் செல்ல அனுமதி பெற, வகுப்பு ஆசிரியை மணிமேகலையை பார்க்க அங்கே சென்றாள்.
மணிமேகலை முன் நின்றவள், “எனக்கு ஹாஸ்டல் போக பெர்மிஷன் வேணும்.” எனக் கேட்டாள்.
தலைமை ஆசிரியர் விஷயம் பற்றி அறிந்து இவள் மேல் கோபத்தில் இருந்த மணிமேகலை, அவள் கேட்ட விதத்தில் மேலும் கோபம் வர… அவளை முறைத்தபடி, “நல்லா தானே இருக்கிற! அதெல்லாம் பெர்மிஷன் தர முடியாது.” என்றார்.
ஒரு நொடி அவரை அமைதியாகப் பார்த்தவள், அவர் மேஜை மேல் இருந்த கரிக்கோலை(pencil) எடுத்து, அதன் கூர்முனையால் இடது கை மணிக்கட்டருகே ஒரு கோடு போல் கீறினாள். அவள் கொடுத்த அழுத்தத்தில், உடனே ரத்தம் மெலிதாக வரத் தொடங்கியது.
மணிமேகலை கோபம் மறந்து, “ஏய்! என்ன பண்ற?” என்று பதற,
அவளோ அமைதியாக, “இப்போ பெர்மிஷன் தருவீங்க தானே!” என்றாள்.
தலையில் அடித்தபடி, “அறிவில்லை! அதுக்காக இப்படியா செய்வ?” என்று திட்டியவர், அவர்கள் அறையில் இருந்த முதலுதவி பெட்டியை எடுக்க,
“பெருசா ஒன்னுமில்லை… நான் ரூம் போய் பார்த்துக்கிறேன்… நீங்க பெர்மிஷன் தாங்க.”
“பெர்மிஷன் தரேன்… முதலில் கையைக் காட்டு”
கையை விலக்கியவள், வலது கையில் இருந்த அனுமதி கடிதத்தை நீட்டினாள்.
ஒரு சில ஆசிரியர்கள், “சைனை முதலில் போடுங்க மேம்.” என்று கூற,
அவள் கையில் இருந்து அனுமதி கடிதத்தைப் பிடுங்கியவர், கையெழுத்தை போட்டு கடிதத்தை அவள் கையில் திணித்தபடி, “இப்பவாது கையைக் காட்டு.” என்று சிறு பதற்றத்துடனும், கோபத்துடனும், கூறினார்.
லேசாக ரத்தம் கசிந்த கையை பொருட்படுத்தாமல் மென்னகையுடன், “ஒன்னுமில்லை… நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறிவிட்டு வெளியேறத் தொடங்கியவள், வாயிலை அடைந்த பொழுது நின்று திரும்பினாள்.
‘திமிர் பிடிச்சவ’, ‘உடம்பு முழுதும் திமிர்’, ‘நீங்க ஏன் மேகலை இவளுடன் வச்சுக்கிறீங்க?’ என்ற பல குரல்களை பொருட்படுத்தாமல், மணிமேகலையை பார்த்து மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றவள் அனுமதி கடிதத்தை ஆட்டி, “இதுக்கு இல்ல… நீங்க என் மேல் காட்டிய அக்கறைக்கு.” என்றவள், அவர் பதில் கூறும் முன் வெளியே விரைந்திருந்தாள்.
அவளைப் புரிந்துக்கொள்ள முடியாமல், குழப்பத்துடன் மணிமேகலை தன் இடத்தில் அமர்ந்தார்.
கல்லூரி வளாகத்தில் இருந்த முதலுதவி மையத்திற்குச் சென்று காயத்திற்கு மருந்திட்டவள், அடுத்து தன் அறைக்குச் சென்று அந்தப் பாடலை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தாள்.
அதுவும், அவளுக்குப் பிடித்த அந்த வரிகளை மீண்டும் மீண்டும் ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தாள். இசைமழையின் உதவியுடன் மனதின் புழுக்கத்தை விரட்ட முயற்சித்து, ஓரளவிற்கு வெற்றியும் பெற்றாள்.
அதன் ஒலியில் தலைவலியை பெற்றுக் கொண்ட விடுதிக் காப்பாளர், அவளை திட்டியபடி குளம்பி அருந்த கல்லூரியின் உணவகத்திற்குச் சென்றார்.
திவ்யா கையை கிழித்துக் கொண்ட விஷயம் ராஜாராமை எட்டியதின் பலனாகத் தான், மணிமேகலை தற்போது திவ்யாவை திட்டியபடி, அவர் முன் நின்று கொண்டிருக்கிறார்.
‘அந்த குட்டிச் சாத்தான் சிரிச்சுட்டு போன போதே, நான் உஷாராகி இருக்கணும்! இப்படி மாட்டி விட்டுட்டாளே!’ என்று மனதினுள் திவ்யாவை திட்டிக் கொண்டிருந்த மணிமேகலையை பார்த்த ராஜாராம், “திட்டி முடிச்சுட்டீங்களா?”
“சார்” என்று அவர் சிறு அதிர்ச்சியுடன் வினவ,
“திவ்யாவை திட்டி முடிச்சிட்டீங்களா?”
“சார்”
“அவள் உங்களை மாட்டிவிடவோ, உங்களுக்கு தொல்லை கொடுக்கவோ நினைக்கலை…! அப்படி நினைத்து இருந்தால், காயத்துக்கு மருந்து போடாம இந்நேரம் ஹாஸ்பிடலில் இருந்து இருப்பாள்.”
அவர் கூறியதை கேட்ட மணிமேகலைக்கு, பேச்சே வரவில்லை.
அவர் தொடர்ந்தார், “திவ்யா பற்றிய விஷயம் எப்படியும் என்னை எட்டி விடும்… உங்க மேல் எந்த தவறும் இல்லைனும் எனக்குத் தெரியும்…! நான் உங்களை கூப்பிட்டது, அவளோட காயத்தைப் பற்றி தெரிந்துக்கொள்ளத் தான்”