ஹரீஷ் அமைதியான குரலில், “நான் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன்… சேர்மன் சார் நடத்தும் டிரஸ்ட் மூலம் தான் பி.இ. படிச்சேன்… அப்புறம் வேலை பார்த்துட்டே எம்.இ முடித்தேன்… ரெண்டு வருஷம் XXX காலேஜில் வேலை பார்த்தேன்… இப்போ இங்கே… எனக்குனு சொல்லிக்க, என் பிரெண்ட் நந்தகுமார் மட்டும் தான்.”
“அப்போ, நான் யாரு?”
தன்னைப் பற்றி சொன்னதும், ‘ஆசிரமம்மா’ என்பது போல் பார்வையில் கூட விகல்பம் காட்டாமல், உரிமையுடன் பேசிய அரவிந்தை அவனுக்குப் பிடித்தது.
ஹரீஷ் புன்னகையுடன், “நீங்களும் என் பிரெண்ட் தான்.”
“அது! நான் இங்க வந்து ஒன் இயர் ஆகுது… இதுக்கு முன்னாடி ரெண்டு வருஷம் YYY காலேஜ்ஜில் வேலை பார்த்தேன்… ஒரே பையன்.. அப்பா அட்வோகேட்… அம்மா ஹோம் மேக்கர்… எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை… வீட்டில் பெண் பார்த்துட்டு இருக்காங்க… இங்கே என் வேவ் லென்த்க்கு செட் ஆகுற மாதிரி க்ளோஸ்னு யாரும் இல்லை. எல்லாருடனும் ஜஸ்ட் ஹாய், பை ரிலேஷன் தான்…! பட் உங்களுடன் வேவ் லென்த் செட் ஆகும்னு தோனுது.” என்றவன் கையை நீட்டியபடி, “பிரெண்ட்ஸ்” என்றான்.
ஹரீஷ் புன்னகையுடன் கை குலுக்கி, “பிரெண்ட்ஸ்” என்றான்.
“அப்போ ஒருமையிலேயே பேசலாமா!”
“பேசலாமே!”
“நீ ஏன் சேர்மன் சார் கிட்ட அந்த கேள்வி கேட்ட?”
“ஏன்?”
“வந்த அன்னைக்கே கேட்டு இருக்க! அதுவும் என்குவரிக்கு போன போது… ஆக்சுவலி நான் கிண்டல் செய்தப்ப, சேர்மன் பொண்ணா இருந்தாலும் அடித்து இருப்பேன்னு நீ சொன்னியே! அந்த தைரியம் தான் என்னை இம்ப்ரெஸ் செய்துச்சு…! இருந்தாலும், உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்…”
ஹரீஷ் புன்னகைக்கவும் அரவிந்த், “முதல்ல நீ அமைதின்னு நினைத்தேன்.”
“ஏன்?”
“காலையில் இருந்து நீ எவ்ளோ பேசிட்ட சொல்லு!”
அவன் புன்னகையுடன், “தேவைனா மட்டும் தான் பேசுவேன், ஆனா பிரெண்ட் கிட்ட அப்படி இல்லை.”
அரவிந்த் புன்னகையுடன், “நான் அமைதிலாம் இல்ல, ஜாலி டைப்… ஆனா வம்பு பேசுறவங்க கிட்ட அளவோட பேசுவேன்…” என்றவன், “நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே?”
“கேட்கணும் தோனுச்சு, கேட்டேன்.” என்றான் சிறு தோள் குலுக்கலுடன்.
“சரி, காலைல என்ன நடந்தது?”
ஹரீஷ் நடந்ததை கூறியதும்,
அரவிந்த், “இருந்தாலும், நீ கை நீட்டியது கொஞ்சம் அதிகம் தான்… உன் கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்கோ.”
“முயற்சி செய்றேன்” என்றவன், “மதியம் முதல் பிரியட் கிளாஸ் இருக்குது… அதுக்கு கொஞ்சம் பிரிப்பர் செய்யணும்.”
“என்னை வாயை மூடுனு சொல்ற..” என்று அரவிந்த் புன்னகையுடன் கூற,
ஹரீஷும் புன்னகையுடன், “தெரிந்தால் சரி” என்றான்.
இருவருக்கும் நடுவே அழகான நம்பிக்கையான நட்பு உருவானது. இருவரும் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
இங்கே இவர்களுக்குள் நட்பு உருவான நேரத்தில், நம்ம திவி என்ன செய்தாள் என்று பார்ப்போம் வாங்க…!
…………………….
ஹரீஷை தேடியவள், அவன் அங்கு இல்லை என்றதும், ‘ப்ச்… போயிட்டானே! இப்போ என்ன செய்றது?’ என்று யோசித்தவள், ‘இது காதல் தானே!’ என்று சிறிது நேரம் யோசித்தாள்.
பிறகு, ‘நிச்சயம் காதல் தான்’ என்று உறுதியுடன் முடிவெடுத்தவள், ‘என் ஆசை நிறைவேறுமா? அவனும் என்னை காதலிப்பானா? என்னைப் பற்றி தெரிந்த பிறகும், என்னை உயிரா நேசிப்பானா?’ என்று பெரிதும் தவித்தாள்.
சில நொடிகளிலேயே, ‘பாஸிட்டிவ்வாவே யோசிப்போம்… அவன் காதலிக்கலைனா என்ன? நான் என் மேல் காதலை மலரச் செய்வேன்!’ என்று உறுதிமொழி எடுத்தவள், ‘இப்போ என்ன செய்றது?’ என்று மீண்டும் யோசித்தாள்.
பின் ‘காதலை சொல்றதுக்கு முன்னாடி, அவன் ஏன் அப்படி சொன்னான்னு தெரிஞ்சுக்குவோம்… என் மேல தவறான எண்ணத்தில் இருக்கும் போது, என் காதலை சொன்னா அதுக்கு மதிப்பு இல்லாம போய்டும்.’ என்ற முடிவிற்கு வந்தாள்.
அப்பொழுது பியூன் வந்து, “சேர்மன் சார், கிளாஸ்க்கு போகச் சொன்னார்.” என்றான்.
அவள் புன்னகையுடன், “கிளாஸ்க்கு தான் போறேன்.” என்று கூறியபடி எழுந்தாள்.
மணியை பார்த்தவள், ‘நல்ல வேளை ஃபோர்த் ஹவர் ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷம் ஆச்சு.’ என்று மனதினுள் கூறிக்கொண்டு வகுப்பை நோக்கிச் சென்றாள்.
அவள் வகுப்பிற்கு சென்றபோது, மணிமேகலை தான் வகுப்பில் இருந்தார்.
திவ்யா மனதினுள், ‘இன்னுமா பெல் கிளம்பல..!’ என்று நினைத்தாள்.
பாடம் நடத்தியபடியே திரும்பிப் பார்த்த மணிமேகலை, இவளைக் கண்டதும் முறைக்க, இவளோ பல்லைக் காட்டி சிரித்தாள்.
மணிமேகலை, ‘இவ லைட்டா சிரிச்சதுக்கே சேர்மன் முன்னாடி போய் நின்னோம்! இப்போ என்ன ஆப்போ!’ என்று மனதினுள் அலறியபடி, அவளை உள்ளே வருமாறு செய்கை செய்தார்.
உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தவள் பவித்ராவிடம், “இந்த ஹவரும் பெல் தானா?”
“ஆமா” என்றவள், “எதுக்குடி வெளியே போன?”
“அதை அப்புறம் சொல்றேன். இப்போ ஒரு குட் நியூஸ் சொல்லட்டுமா?”
“என்ன?” என்று பவித்ரா சிறு ஆர்வத்துடன் தோழியை பார்த்த்துக் கேட்டாள்.
மணிமேகலை, “பவித்ரா லிஸன் தி கிளாஸ்” என்றதும்,
பவித்ரா, “எஸ் மேம்” என்றாள்.
கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்த மணிமேகலையின் முதுகை, திவ்யா சிறு எரிச்சலுடன் முறைத்தாள்.
இரண்டு நிமிடங்கள் கழித்து பவித்ரா, “திவி” என்று அழைத்தாள்.
“என்ன?”
“குட் நியூஸ் என்னனு சொல்லு.”
“லஞ்ச் பிரேக்கில் சொல்றேன்.”
“இதுக்கு நீ சொல்லாமேயே இருந்திருக்கலாம்.”
“உன்கிட்ட தான் பஸ்ட் சொல்லப் போறேன்… தடையில்லாம சொல்லணும்… ஆனா, பெல் விடாது… நீ கிளாஸ்ஸை கவனி” என்றாள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பவித்ரா, “ப்ளீஸ்டி சொல்லேன்”
“சரி வா, கேன்டீன் போய் பேசிட்டு வருவோம்.”
பவித்ரா முறைக்கவும்,
“முடியாது தானே, அப்போ அமைதியா கிளாஸ் கவனி”
அப்பொழுது திவ்யா மேல் சுண்ணத்துண்டு விழுந்தது. அவள் திரும்பிப் பார்த்ததும்,
விஜய், “என்ன செய்துட்டு வந்த?” என்று செய்கையில் வினவினான்.
“ஒன்னும் செய்யல..” என்று அவளும் செய்கையில் கூறினாள்.
“அப்போ, எதுக்கு போன?”
புன்னகையுடன், “சும்மா” என்றாள்.
அவன் நம்பாமல் பார்க்கவும்,
“அப்புறம் சொல்றேன்” என்று செய்கை செய்தாள்.
அப்பொழுது மணிமேகலை சிறு கோபத்துடன், “திவ்யா” என்று அழைத்தார்.
அவள் அவரைப் பார்க்கவும், “நீ தான் கிளாஸ் கவனிக்கலை… மத்தவங்களை ஏன் டிஸ்டர்ப் செய்ற?” என்றார்.
திவ்யா திரும்பி, “விஜி, நீ கிளாஸ் கவனிக்கிற!?” என்று வினவியதும், அவன் ஒரு நொடி முழித்தான். அடுத்த நொடி, “இல்லையே” என்றான்.
திவ்யா புன்னகையுடன் மணிமேகலையை பார்க்க, அவர் கோபத்துடன், “ரெண்டு பேரும் வெளியே போங்க” என்றார்.
திவ்யா எழுந்து நின்று புன்னகையுடன் ஆங்கிலேயர் முறையில் தலை குனிந்து, “தாங்க் யூ மேம்” என்று கூறிவிட்டு வெளியே சென்று நின்றாள்.
விஜய்யும் புன்னகையுடன் அவள் அருகில் வந்து நின்றான். இருவரும் கை தட்டிக் கொள்ள, மணிமேகலை கோபத்தில் பல்லைக் கடித்தார்.
அவர் அவர்களை முறைத்துக்கொண்டு நிற்கவும், திவ்யா, “கவனிக்கிறவங்களுக்கு கிளாஸ் எடுங்க மேம்.” என்றாள்.
அவர் முறைத்துவிட்டு வகுப்பை தொடர்ந்தார்.