“உங்க ரிலேடிவ்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தெரியும்.” என்று அவன் பயமின்றி நேர்பார்வையுடன் கூறியதில், மனதினுள் அவனை மெச்சினார்.
அவர், “திவ்யா இடத்தில் யாராக இருந்தாலும் நான் இதை தான் சொல்லியிருப்பேன்… நீங்க செய்தது தப்பு தான்”
“எடுத்ததும், என்னை குற்றம் சொல்லாம என் தரப்பை நீங்க கேட்டதில் இருந்தே உங்க நேர்மை புரியுது சார்… ஆனா, திவ்யா இடத்தில் உங்க மகளே இருந்திருந்தாலும், நான் அடிச்சு தான் இருப்பேன் சார்.”
ஒரு நொடி கண்ணை மூடித் திறந்தவர், “அவளோட அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால், சும்மா விட மாட்டார்.”
“மிரட்டுறீங்களா சார்?”
“இல்லை, நிலவரத்தை சொல்றேன்”
“அவர் வந்து கேட்டா, நான் பேசிக்கிறேன் சார்”
“திவ்யா என்ன செய்தாள்?”
“புரியலை சார்”
“நீங்க அடிச்சதும், அவ கை ஓங்கி, அதை நீங்க தடுத்தது… இப்போ உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வந்தது வரை தெரியும்… ஆனா, என்ன பேசினீங்கனு தெரியாது.”
அவன் மென்னகையுடன், “என் மேல டீயை ஊத்தியதுக்கு மட்டும் மன்னிப்பு கேட்டா.”
“ஸோ அடிச்சதை தப்புனு நீங்க ஒத்துக்காதது போல, கை ஓங்கியது தப்புன்னு அவளும் ஒத்துக்கல…”
அவன் மெளனமாக இருந்தான்.
அவர், “திவ்யா கம்ப்ளைன்ட் செய்தால், நான் உங்களுக்கு எதிரா தான் ஆக்ஷன் எடுப்பேன்.”
“திவ்யாவிற்கு பதில் வேறு பெண் இருந்திருந்தாலே நீங்க எனக்கு எதிரா தான் ஆக்ஷன் எடுப்பீங்கனு உங்க பேச்சில் இருந்து புரிந்தது… நான் அடிச்சது திவ்யா என்றப்ப, என் வேலை போனால் கூட ஆச்சரியப் படுறதுக்கில்லை.”
“பிரச்சனை வந்தால், அதன் தீவிரத்தை ஆராய்ந்து, அதிக பட்சம் சஸ்பெண்ட் செய்யலாம்…”
“ஓகே சார்.”
அவர் யோசனையுடன், “நாம் இதுக்கு முன்னாடி சந்தித்து இருக்கிறோமா?”
அவன் கண்ணில் சிறு ஆச்சரியத்துடன், “நாலு வருசத்துக்கு முன்னாடி, ஒரு முறை அஞ்சு நிமிசம் சந்தித்து இருக்கிறோம்.” என்றான்.
சிறிது யோசித்தவர் புன்னகையுடன், “ஹரீஷ்! டுவெல்த் டிஸ்ட்ரிக்ட் பஸ்ட் அண்ட் ஐ.ஐ.டி பஸ்ட் ரங்க் ஹோல்டர்.”
“எஸ் சார்” என்றான் புன்னகையுடன்.
“இந்த ஷர்ட் ஞாபகம் இருக்குதா?”
அவன் புன்னகையுடன் ‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தான். அது அவன் அவருக்கு வாங்கிக் கொடுத்தது. ஹரீஷ் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன். பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்டத்தில் முதலாவதாக வந்தவன். ராஜாராம் நடத்தும் கல்வி அறக்கட்டளை மூலமாக ஐ.ஐ.டி-யில் பொறியிலை படித்து முதலாவதாக தேர்ச்சி பெற்றான். இரவு நேர வேலையில் சேர்ந்து ஐ.ஐ.டி-யில் மேல் படிப்பை தொடர்ந்தவன், முதல் மாத சம்பளத்தில் ராஜாராமிற்கு ஆடை வாங்கிச் சென்று அவரைப் பார்த்து நன்றி கூறினான்.
“நீ… நீங்க இங்கே வந்து ஜாயின் செய்ததில் ரொம்ப சந்தோஷம்.” என்றவர் அவன் கையை குலுக்கியபடி, “மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.” என்றார்.
அவனும் புன்னகையுடன், “தாங்க் யூ சார்” என்றான்.
“ஓகே கேரி ஆன்” என்றவர் சிறு புன்னகையுடன், “திவ்யா கிட்ட ஜாக்கிரதையா இருங்க.” என்றார்.
அவன் சிறு யோசனையுடன் பார்க்கவும்..
“ஏதாவது கலாட்டா செய்துட்டே தான் இருப்பா… நீங்க அடிச்சதை வைத்து பெருசா கலாட்டா செய்ய வாய்ப்பு கிடைத்தும் அமைதியா இருக்கிறா… அதான் சொன்னேன்.”
“ஒன்னு கேட்கலாமா சார்?”
“என்ன?”
“திவ்யா உங்களுக்கு என்ன உறவு?” என்ற அவனது கேள்வியில் அவரது முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
அந்த கல்லூரியில் வேலை செய்யும் அநேகம் பேரின் மனதிலும் ஓடும் கேள்வி தான் என்றபோதிலும், இதுவரை யாரும் நேரிடையாக அவரிடம் கேட்டது இல்லை.
தங்ககுமார் மூலம் திவ்யாவின் கலாட்டாக்களை அறிந்த ஹரீஷ், அவள் வேண்டுமென்றே அவற்றை செய்ததை புரிந்துக் கொண்டான். தலைமை ஆசிரியர் வெளியே சென்றதில் இருந்து, அவளுக்கு ராஜராமிடத்து இருக்கும் ஆளுமையை அறிந்து கொண்டவன், அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் எண்ணத்துடன் தான், இந்தக் கேள்வியை கேட்டான்.
சுதாரித்துக் கொண்டு பதில் சொல்ல வாய் திறந்த ராஜாராம், என்ன சொல்லியிருப்பாரோ… ஆனால் அதற்கு முன், “அவர் காலேஜில் படிக்கிற ஸ்டுடென்ட் என்ற உறவு தான்.” என்றபடி ராஜாராமை முறைத்துக் கொண்டு உள்ளே வந்த திவ்யா, ஹரீஷின் பார்வை தன் பக்கம் திரும்பவும்… முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு அவனை அழுத்தத்துடன் பார்த்தாள்.
மணி அடித்து, ஆசிரியர் மணிமேகலை வகுப்பினுள் வந்ததைக் கூட உணராமல் ஹரீஷை பற்றிய சிந்தனையில் இருந்த திவ்யா, பவித்ராவின் ஊந்துதலில் தான் அவர் வந்ததும் எழுந்து அமர்ந்து, அவர் வருகை கணக்கெடுத்த பொழுது ‘எஸ் மேம்’ என்றாள்.
அவனைப் பற்றிய தீவிர சிந்தனையில் இருந்தவள், ஒரு கட்டத்தில் அவனைப் பற்றி அறிந்தே ஆக வேண்டும் என்ற வேகம் எழ, அதை அவனிடமே கேட்டால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்து, அவனைப் பார்க்கும் எண்ணத்துடன் எழுந்தே விட்டாள்.
வகுப்பின் நடுவே திடீரென்று அவள் எழுந்து நிற்கவும் மணிமேகலை, “என்ன?” என்று வினவினார்.
அவள் அவளது சிந்தனையில் உழன்றபடி, “அவன் கிட்ட கேட்கனும்.” என்றாள்.
பாடத்தில் சந்தேகம் தான் கேட்கப் போகிறாள் என்று நினைத்தவர், அவளது பதிலில் குரலை சற்று உயர்த்தி, “வாட்?” என்றார்.
அவரது குரலில் சுதாரித்தவள், “வெளியே போகனும்” என்றாள்.
அவர் முறைக்கவும்,
“ரெஸ்ட்ரூம் போகனும்” என்றாள்.
“பிரேக்கில் என்ன செய்த’?”
“வரப்ப தான் போக முடியும்” என்றவள் அவரது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினாள்.
அவர் அவளை திட்டியபடி பாடத்தை தொடர்ந்தார்.
விஜய், பவித்ரா மேல் சுண்ணத்துண்டை எறிந்தான்.
அவள் திரும்பியதும், செய்கையில் ‘என்ன?’ என்று வினவினான்.
பவித்ராவும் செய்கையில் ‘தெரியலை’ என்று கூற, அவன் முறைத்தான். பதிலுக்கு இவளும் முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.
வெளியே சென்ற திவ்யா, ஆண் ஆசிரியர்கள் அறைக்குச் சென்று, “ஹரீஷ் சாரை பார்க்கணும்” என்றாள்.
ஆசிரியர் அரவிந்த், “உன் புண்ணியத்தில் சேர்மன் சாரை பார்க்கப் போயிருக்கார்” என்றதும், அவசரமாக ராஜாராம் அறையை நோக்கி வந்தவள், கதவை திறந்த பொழுது தான் ஹரீஷ் அவர்களின் உறவை பற்றிக் கேட்டு இருந்தான்.
திவ்யாவின் பதிலை கேட்டு, ‘சாதாரண ஸ்டுடென்ட் இப்படி தான் பெர்மிஷன் இல்லாம சேர்மன் அறைக்குள் வருவாளா?’ என்ற கேள்வி ஹரீஷ் மனதினுள் எழுந்தாலும், ராஜாராம் முன்னிலையில் கேட்காமல் அமைதியாக நின்றான்.