
விலகல் – 11
திவ்யா குழுவினர் வெளியே சென்றதும், ஒரு ஆசிரியர் ஆச்சரியத்துடன், “அவ மன்னிப்பு கேட்டு இப்போ தான் சார் பார்க்கிறேன்… எனக்கு தெரிந்து இது தான் சார் முதல் முறை.” என்றார்.
தங்ககுமார், “அதெல்லாம் கேட்டிருக்கா… ஆனா, அவளோட தப்பை உணர்ந்து கேட்டது இல்ல… அவளோட பிரெண்ட் விஜய்யை காப்பாற்ற கேட்டிருக்கா.”
ஹரீஷ் புருவம் சுருங்கவும்,
தங்ககுமார், “என்ன சார்?” என..
“இப்போ அவ உண்மையா தான் கேட்டுட்டு போறா”
புன்னகையுடன், “அவளோட நடிப்பை நம்பிட்டீங்களே!”
ஹரீஷ் ‘இல்லை’ என்பது போல் தலையை அசைக்க, அரவிந்த் என்ற ஆசிரியர் (ஹரீஷை கிண்டல் செய்தவர்), “ஹரீஷ் சார் சொல்றது சரி தான்… இப்போ உண்மையா தான் கேட்டாள். அவ முகத்தை நான் பார்த்துட்டு தான் இருந்தேன்… அதில் அலட்சியமோ போலித் தன்மையோ இல்லை.” என்றவர் ஹரீஷிடம், “அது என்ன சார் டீயை ஊத்தியதுக்கு மட்டும்னு அழுத்தி சொல்லிட்டு போறா!”
ஹரீஷ் மெல்லிய புன்னகையுடன், “அதை அவகிட்ட தான் கேட்கணும்”
“நீங்க அழுத்தகாரர் சார்” என்றவரின் புன்னகை, ‘நான் நீங்க சொன்னதை நம்பவில்லை’ என்று சொல்லாமல் சொன்னது.
அதற்கும், அவன் புன்னகையை தான் பதிலாகத் தந்தான்.
அப்பொழுது ஏவலர்(peon) வந்து ஹரீஷை தாளாளர் அழைப்பதாக கூறிச் சென்றான்.
ஹரீஷ் சாதாரணமாக கிளம்ப,
தங்ககுமார், “உங்களுக்கு கொஞ்சம் கூட பதற்றமா இல்லையா?”
“எதுக்கு பதற்றப் படனும்? நான் தப்பெதுவும் செய்யலையே! அப்படி தப்பே செய்திருந்தாலும், அதை எப்படி சரி செய்றதுன்னு யோசிக்கனுமே தவிர, பதற்றப் படக் கூடாது.” என்றுவிட்டு அவன் செல்ல,
தங்ககுமார், “இப்போ என்ன சொல்லிட்டு போறார்! தப்பு செய்ததா சொன்னாரா, செய்யலன்னு சொன்னாரா?”
இன்னொரு ஆசிரியர், “இப்போ அது எதுக்கு! பெல் அடிச்சாச்சு… கிளாஸ் போகலையா!”
“ஆமா… மறந்துட்டேன்.” என அவசரமாகக் கிளம்பினார்.
வகுப்பறைக்கு வந்ததும் பவித்ரா, “அது என்னடி அப்படி ஒரு சாரி கேட்ட?”
“அதுக்காக மட்டும் தான் கேட்கத் தோனுச்சு, அதான் அப்படி கேட்டேன்.”
“அதுக்கு என்ன அர்த்தம்?”
“நீ என்ன நினைக்கிற!”
“நீ நினைப்பதை நீயா சொன்னால் தான் உண்டு.”
“அப்படீங்கிற!”
“அதில் என்ன சந்தேகம் உனக்கு?”
திவ்யா சிறு யோசனையுடன், “ஆனா, அவனுக்கு புரிஞ்சிருச்சே!”
“அப்படியா…! நீ எதை வைத்து அப்படி சொல்ற?”
“முதல்ல புரியலை.. ஆனா புரிந்ததும், அவனோட இதழோரம் சிறு புன்னகை தெரிந்தது.”
“அவர் சிரிக்கவே இல்லை… நீ தப்பா…”
“சிரித்தான்… ஒரு நொடி தான் என்றாலும் நான் கவனிச்சேன்.”
“அப்போ உன்னோட கவனம் முழுவதும் அவர் கிட்ட மட்டும் இருந்திருக்கிறது!” என்று கிண்டலாக கூற,
“அவனைத் தானே பார்க்கப் போனோம்! உன்னோட கவனம் மட்டும் அந்த நொந்தகுமார் கிட்டயா இருந்தது?” என்று சிறிது உதட்டை பிதுக்கியபடி கிண்டலாக வினவினாள்.
“ஆனாலும், நாங்க பார்க்காததை நீ பார்த்து இருக்கிறியே!”
“நீங்க கவனிக்கலன்னா நான் என்ன செய்றது…!” என்று தோளை குலுக்கினாள்.
“சரி, நீ சொன்னதுக்கு அர்த்தம் என்ன?”
“நீங்க எல்லாரும் ராகிங் செய்ததுக்கு சாரி சொன்னீங்க? ஆனா நான் அதுக்கு சொல்லலை… ஏன்னா அதில் நம்ம தவறு இல்லை… அவன் வந்ததும் சார்னு சொல்லியிருந்தால், நாம ராகிங் செய்திருக்கவே மாட்டோம். ஸோ நம்ம மேல தப்பு இல்லை…
அப்புறம் அவனை அடிக்க கை ஓங்கியத்துக்கும் என்னால் சாரி கேட்க முடியாது… அவன் அடிச்ச அப்புறம் தான், நான் கை ஓங்கினேன்… ஸோ அதிலும் என் மேல தவறு இல்லை.”
“அடிப்பாவி”
“என்ன!”
“முதல்ல சொன்னது கூட ஓகேடி… அடுத்து சொன்னது!”
“அதுக்கென்ன! அதுவும் சரி தான்.”
“அவர் நம்ம சார்.”
“சார்னா, என்னை அடிக்கலாமா?” என்று அவள் கோபமாக கேட்க,
பவித்ரா இறங்கிய குரலில், “அப்படி சொல்லலடி… ஆனா நீ சொன்னது அவருக்கு புரிஞ்சுதுன்னு வேற சொல்றியே! அதான்...” என்று இழுத்தாள்.
திவ்யா சிறு யோசனையுடன், “அது தான் எனக்கு ஆச்சரியமா இருக்குது… கோபப்படுவான்னு நினைச்சேன், ஆனா சிரிக்கிறான்…”
“ஒருவேள முதல்ல சொன்னதை மட்டும் நினைச்சு இருப்பார்”
“இல்ல, அவன் கண்ணில் தனியா தெரிந்த ஒளி! நிச்சயம் அவனுக்கு புரிந்து தான் இருக்கும்… இல்லைனா, நான் கை ஓங்கியது பற்றி ஏதாவது கேட்டு இருப்பான்..”
“ஒருவேள நீ கை ஓங்கியதை பற்றி, மற்ற சார் முன்னாடி பேசுறத, கௌரவக் குறைச்சலா நினைத்து இருக்கலாம்.”
“இல்ல… ‘அவ்ளோ தானா!’னு கேட்கிற மாதிரி அழுத்தமா பார்த்து, பார்வையிலேயே கேள்வி கேட்டு இருப்பான். ஆனா, அவன் என் கிட்ட ரியாக்ட் செய்றது எப்போதுமே முன்னுக்கு பின் முரணாவே இருக்குது.” என்று சிறு எரிச்சலுடன் கூறினாள். அவனைப் புரிந்துக்கொள்ள முடியவில்லையே என்ற எரிச்சல் அது.
“என்னடி, எப்போதுமேனு சொல்ற! இன்னைக்கு தான் ரெண்டாவது முறை பார்க்கிற!”
“…”
“என்னடி?”
“இல்ல… காலையில் இருந்து அவனைப் பற்றியே யோசித்ததாலோ என்னவோ… இது தான் ரெண்டாவது சந்திப்புனு தோனல…!” என்றவள் யோசனையில் ஆழ்ந்தாள்.
பவித்ரா குழப்பத்துடன் தோழியை பார்த்தாள்.
தாளாளர் ராஜாராம் அறை:
ராஜாராம் அனுமதியுடன் உள்ளே சென்ற ஹரீஷ், “குட் மார்னிங் சார்.” என்றான்.
“குட் மார்னிங்… இன்னைக்கு தான் ஜாயின் செய்து இருக்கீங்க போல!”
“எஸ் சார்… கொஞ்சம் உடம்பு சரி இல்லை… இன்போர்ம் செய்திருந்தேன் சார்… தாமதமா ஜாயின் செய்ததுக்கு சாரி சார்”
“ஹும்… இப்போ ஹெல்த் ஓகே தானே?”
“எஸ் சார்”
“மார்னிங் என்ன பிரச்சனை?”
“பைனல் சி.எஸ்.இ ஸ்டுடென்ட்ஸ், என்னை பஸ்ட் இயர்னு நினைச்சு ராகிங் செய்ய முயற்சி செய்தாங்க”
“முயற்சி செய்தாங்கனா…?”
“ராகிங் செய்யலை”
“நீங்க சார்னு சொல்லீட்டீங்களா?”
“இல்ல… திவ்யா என்னோட பெயரை கேட்டா… பதிலுக்கு நான் அவள் பெயரை கேட்டேன்… அப்படியே கொஞ்சம் வாக்குவாதம் வந்தது… நான் பெயரை சொல்லாமல் கிளம்பவும், அவ என் மேல டீயை ஊத்திட்டா. நான் கோபத்துல அவளை அடிச்சு திட்டிட்டு போயிட்டேன்.”
“ஒரு பொண்ண அடிப்பது தப்புனு உங்களுக்கு தோனலையா?” என்ற போது, அவர் தன் கோபத்தை கட்டுப்படுத்துவது அவனுக்குப் புரிந்தது.
“அது, அந்தப் பொண்ணு நடந்து கொள்ளும் முறையை பொறுத்தது சார்.”
“திவ்யா டீயை ஊத்தியதுக்கு பதிலா நீங்க அடிச்சது தப்பு.”
“வேற என்ன செய்திருக்கனும் சார்?” என்று வினவியவன், தீர்க்கமான குரலில்,
“அடித்ததுக்குப் பதிலாக நானும் அவ மேல டீயை ஊற்றி, மத்தவங்க முன்னாடி அவளை காட்சிப் பொருளாக்கச் சொல்றீங்களா?”
“இல்ல… நீங்க கம்ப்ளைன்ட் செய்திருக்கனும்… அதை விட்டுட்டு கை நீட்டியது தப்பு.” என்று கண்டிப்புடன் கூறியவர், “திவ்யா யார்னு தெரியுமா?” என்று வினவினார்.