பவித்ரா நெஞ்சை பிடித்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்தாள். அவளது பதற்றத்தை கண்ட திவ்யா, தண்ணீரை பருகக் கொடுத்தபடி, “என்னாச்சு பவி? முதல்ல தண்ணியை குடி.” என்றாள்.
விஜய்யுடன் பேசியபடி எழுந்த திவ்யாவின் கவனம், பவித்ரா இருக்கையில் விழுந்த சத்தத்தில் அவளிடம் திரும்பியதில், உள்ளே வந்த ஆசிரியரை கவனிக்கவில்லை.
தண்ணீர் அருந்திய பின்னரும், பேய் அறைந்தது போல் இருந்த பவித்ராவை உலுக்கிய திவ்யா, “குட் மார்னிங் பிரெண்ட்ஸ்!” என்ற குரலில் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
ஆசிரியரை பார்த்ததும் சிறிது அதிர்ந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இடத்தில் அமர்ந்தாள்.
ஆம், வந்திருந்தது அந்த வெள்ளை சட்டைக்காரன் தான்.
திவ்யாவின் முகபாவனையை ஓரப்பார்வையில் பார்த்தவன், பார்வையை திருப்பிக் கொண்டு, “அம் ஹரீஷ்… உங்களுக்கு க்ரிப்டோக்ராபி அண்ட் நெட்வொர்க் செக்யூரிட்டி பேப்பரும், செக்யூரிட்டி லேப்பும் எடுக்கப் போறேன்.” என்றான்.
விஜய் மனதினுள், ‘நல்ல வேளை ‘டா’ சொல்லலை’ என்று நினைத்துக் கொண்டான்.
அவன் அருகில் இருந்த மாணவன், “இப்போ என்ன செய்றது மச்சி?”
விஜய், “எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா!”
“திவி கூட சேர்ந்து நீ தான்டா நிறைய பார்த்த! இப்படி ஒரு வாரம் வராமல் இருந்து ஐடி கார்டையும் போடாம உள்ள வந்து, நம்மளை வம்பில் மாட்டி விட்டுட்டாரே!” என்று பயத்துடன் புலம்ப,
இன்னொருவன், “இந்த ஹவர் முடிஞ்சதும், பிரேக்கில் நேரா போய் அவர் காலில் விழுந்திர வேண்டியது தான்”
விஜய், “ஏன்டா இப்படி பயப்படுறீங்க?”
“நீ ஏன்டா சொல்ல மாட்ட! உன்னை காப்பாத்த திவி இருக்கா”
“உங்களுக்கும் பிரச்சனை வர விடமாட்டா… அது போக நாம எதுவும் செய்யலை… ஐ மீன், அவர் சார்னு தெரிந்து செய்யலை… ஸோ சாரி கேட்டா விட்டிருவார்.”
“திவியை அடித்ததை பார்த்துமா இப்படி சொல்ற!”
“அதை நினைத்தால் தான்டா கவலையா இருக்குது! அவ வேற இவரை அடிக்க கை ஓங்கிட்டா! இதுக்கு முன்னாடி வேற…” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போது,
அவனை சுட்டுவிரலால் எழும்ப சொன்ன ஹரீஷ், “இங்கே ஸ்டேஜில் வந்து பேசினா எல்லாரும் கேட்கலாம்.” என்றான்.
அவன் அமைதியாக இருக்கவும், ஹரீஷ் ‘என்ன?’ என்பது போல் பார்த்தான்.
‘மனுஷன் பார்வையிலேயே மிரட்டுறாரே!’ என்று மனதினுள் கூறியவன் வெளியே, “சாரி சார்” என்றான்.
அவனை அமருமாறு செய்கையில் சொன்னவன், வருகை கணக்கெடுப்பை ஆரம்பித்தான். மாணவர்கள் வரிசை-எண் சொல்லி அழைக்காமல் பெயரைச் சொல்லி அழைத்தான்.
பிறகு, “பொதுவா நான் முதல் நாள் கிளாஸ் ஆரம்பிக்க மாட்டேன். ஆனா ஏற்கனவே ஒரு வாரம் நாம பின்தங்கி இருப்பதால் இன்னைக்கே தொடங்கலாம்.”
ஒரு மாணவன், “இன்ட்ரோ கூட வேணாமா சார்?”
ஹரீஷ், “உன்னோட பெயர் தினேஷ் தானே?” என்றான்.
அந்த மாணவன் ஆச்சரியத்துடன் பார்க்கவும், ஹரீஷ், “அட்டெண்டன்ஸ் உங்க பெயரை சொல்லித் தானே எடுத்தேன்! இப்போ கிளாஸ் ஆரம்பிக்கலாம்.” என்று கூறிவிட்டு வகுப்பை தொடர்ந்தான்.
அவன் திவ்யா குழுவினரை தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. அவன் சுவாரசியமாக பாடம் எடுத்த விதத்தில், வகுப்பில் இருந்த அனைவருமே பாடத்தை கவனித்தனர்.
பவித்ரா ஒருவாறு சுதாரித்து பாடத்தில் கவனத்தை செலுத்த, அவனது குணத்தைப் பற்றிய ஆராய்ச்சியை மீண்டும் தொடங்கியிருந்த திவ்யாவும், பாடத்தில் மூழ்கினாள்.
அவன் வகுப்பு முடிந்ததும் வெளியே சென்றுவிட்டான். விஜய்யும் காலையில் அவனுடன் இருந்த மாணவர்களும், திவ்யாவின் இடத்திற்கு வந்தனர்.
ஒருவன், “திவி வா… சார் கிட்ட சாரி கேட்டுட்டு வரலாம்.”
திவ்யா, “நீங்க போயிட்டு வாங்க.”
விஜய், “திவி நீயும் வா”
“நீங்க போயிட்டு வாங்க” என்று அவள் அழுத்தத்துடன் கூற, விஜய் பவித்ராவிடம் கண் ஜாடை காட்டினான்.
‘ஆமா, நான் சொன்னா, மறுபேச்சின்றி கேட்டிடுவா!’ என்று மனதினுள் நினைத்த பவித்ரா, “திவி… ப்ளீஸ்டி… எனக்காக வா.” என்று கெஞ்சினாள்.
திவ்யா அமைதியாக இருக்கவும், “நீ சும்மா வந்து நின்னா போதும்… நாங்க சாரி கேட்டுக்கிறோம்…” என்றாள்.
மற்றவர்களும், “ஆமா திவி… நீ சும்மா வந்து நின்னா போதும்.” என்று கூறினர்.
பவித்ரா மீண்டும், “ப்ளீஸ்டி… வா” என்று கெஞ்சினாள்.
ஒருவாறு கெஞ்சி திவ்யாவை அழைத்துக் கொண்டு ஆசிரியர் அறையை நோக்கிச் சென்றனர்.
வகுப்பை முடித்துவிட்டு ஆசிரியர் அறைக்குச் சென்ற ஹரிஷுக்கு, நல்ல வரவேற்பு கொடுத்தனர் மற்ற ஆசிரியர்கள்.
அவன் புரியாமல் பார்க்கவும்,
தங்ககுமார், “இப்போ தான் சார் விஷயம் தெரிந்தது…”
ஹரீஷ் ‘என்ன’ என்பது போல் பார்த்தான்.
ஒருவர், “நீங்க சான்சே இல்லை சார்” என்று கூற,
தங்ககுமார், “காலைல சட்டையில் தண்ணி கொட்டிருச்சுனு சொல்லி என்னை கிளாஸ் போக சொன்னப்ப கூட எப்படி தண்ணியாச்சுனு சொல்லலையே சார்!”
ஹரீஷ், “இதெல்லாம் வெளியே சொல்ற விஷயமா சார்!”
தங்ககுமார், “என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க! ரெண்டு பிளஸ் பாயிண்ட் இருக்குது… ஒன்னு உங்களை பார்த்து ஸ்டுடென்ட்னு நினைச்சு இருக்காங்க… அது உங்களுக்கு காம்ப்ளிமென்ட் தானே! அதை விட பெரிய விஷயம், அந்த ராணி மங்கம்மாவை அடிச்சு இருக்கீங்க!”
“அவ என்ன அவ்ளோ பெரிய ஆளா?”
“இன்னைக்கு தானே வந்திருக்கீங்க! அதான் அவளை பற்றி உங்களுக்கு தெரியலை… அவ சேர்மன் ரிலேடிவ்…” என்று ஆரம்பித்து திவ்யாவின் அருமை பெருமைகளை பற்றி சுருக்கமாகக் கூறியவர், “HOD சாரையே வெளியே அனுப்பிட்டா.” என்று கூறி, அதற்கு காரணமான சம்பவத்தைப் பற்றி சொன்னார்.
ஒரு ஆசிரியர், “திமிர் பிடித்தவள் சார்”
“எனக்கு அப்படி தெரியலை…” என்ற ஹரிஷின் மனம், அவளை பார்த்த மற்ற சம்பவங்களை அசை போட்டது.
இன்னொரு ஆசிரியர் சிறு நக்கல் குரலில், “சேர்மன் ரிலேடிவ்னு சொன்னதும், சப்போர்ட் செய்றீங்களா சார்! அவ சேர்மன் ரிலேடிவ்னு தெரிந்திருந்தா அடிச்சிருக்க மாட்டீங்க தானே!” என்றார்.
ஹரீஷ் தீர்க்கமான குரலில், “சேர்மன் மகளாவே இருந்தாலும் அடிச்சிருப்பேன்” என்றபோது திவ்யா குழுவினர், “எக்ஸ்கியுஸ் மீ சார்” என்றனர்.
தங்ககுமார், “என்ன?”
விஜய், “ஹரீஷ் சாரை பார்க்க வந்தோம்”
தங்ககுமார் நக்கலாக சிரிக்க, அவரை மனதினுள் திட்டிக் கொண்டே ஹரீஷ் அருகே சென்றனர்.
அவன் ‘என்ன’ என்பது போல் பார்த்தான்.
திவ்யாவை தவிர மற்றவர்கள், “சாரி சார்… நீங்க சார்னு தெரியாமல் அப்படி செய்துட்டோம்… சாரி சார்.” என்றனர்.
“ஸ்டுடென்ட்ஸ் லைஃப்-பில் ராகிங் சகஜம் தான்… சும்மா ஜாலிக்காக செய்தீங்க… அதை விடுங்க…! ஆனா மன்னிப்பு கேட்க வேண்டிய ஆள் வாயை திறக்கவே இல்லையே!” என்றவனின் பார்வை திவ்யாவிடம்.
அவளும் நேர் பார்வையுடன் இவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பவித்ரா தோழியின் கையை பற்றி, “சொல்லுடி” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
சில நொடிகள் இருவரும் சளைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிறகு திவ்யா தீர்க்கமான குரலில், “உங்க மேல டீயை ஊத்தியதுக்கு மட்டும் சாரி கேட்டுக்கிறேன்.” என்றாள்.
ஹரீஷ் அவள் சொல்ல வருவது புரியாமல் புருவம் உயர்த்த, அவள் தோளை குலுக்கினாள்.
அடுத்த நொடியே அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்ததும், ஒரு நொடி ஹரீஷ் இதழோரம் சின்ன புன்னகை தோன்றி மறைந்தது. அவனது புன்னகையை கண்ட திவ்யாவின் கண்களின், ஒரு நொடி ஆச்சரியம் வந்து போனது. அதை ஹரீஷ் கவனிக்கத் தவறவில்லை.
இருவரின் முகபாவனையை மற்றவர்கள் அறியவில்லை.
ஹரீஷ், சிறு தலை அசைப்புடன் கையை வெளியே காண்பிக்கவும், திவ்யா குழுவினர் கிளம்பினர்.
இணைய காத்திருப்போம்…