
விலகல் – 10
அந்த வெள்ளை சட்டைக்காரன் அகன்றதும்,
“அவனை சும்மா விடக் கூடாது மச்சி”
“என்ன தைரியம்! சீனியரை அடிச்சு இருக்கிறான்! கண்டிப்பா சும்மா விடக் கூடாது.”
“அதானே! அவனை சஸ்பெண்டு செய்ய வைக்கணும்.” என்று மற்ற மாணவர்கள் கூற,
கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்ற திவ்யாவிடம் விஜய், “என்ன செய்யலாம் திவி?” என்று வினவினான்.
பவித்ரா, “ஒன்னும் செய்ய வேண்டாம்” என்று கூற,
மற்ற மாணவர்கள், “நீ சும்மா இரு” என்று கோபத்துடன் கூற,
பவித்ராவும் கோபத்துடன், “நீங்க சும்மா இருங்கடா” என்றவள் விஜய் பக்கம் திரும்பி, “இவளுக்கு இருக்கும் பிரச்சனைகள் போதாதா?”
திவ்யா தோழியை முறைக்க…
அவளோ, “என்ன முறைப்பு! நீ தான் ஆரம்பிச்ச”
“என்னடி ஆரம்பிச்சேன்? பெயரை தானே கேட்டேன்.”
“பேச்சு பேச்சா இருந்திருக்கனும்! நீ கையை நீட்டின, அவரும் நீட்டினார்”
“அப்போ… என்னை அடிச்சது சரினு சொல்றியா?”
“இல்ல… ஆனா முதல் தப்பு உன் கிட்ட இருந்து ஆரம்பிச்சுதுனு சொல்றேன்.”
“அப்போ, அன்னைக்கு அவன் பேசியதுக்கு நான் அடிச்சு இருக்கனும்.”
“முடிந்ததை பற்றி பேசாத… இப்போ கிளாஸ் போகலாம் வா.”
அப்பொழுது ஒருவன், “இதை சும்மா விட்டால், திவி கெத்து என்னாகுறது?”
அவனை கடுமையாக முறைத்த பவித்ரா, “அந்த கெத்தை வைச்சு ஒன்னும் செய்ய முடியாது… படிப்பு தான் சோறு போடும்… இது வரைக்கும் காமிச்ச கெத்தே போதும்…” என்றவள், “திவி நீ இப்போ கிளாஸ்க்கு வர” என்றாள்.
திவ்யா யோசனையுடன் கிளம்ப, விஜய் மெல்லிய குரலில், “என்ன திவி?” என்றான்.
அவளும் மெல்லிய குரலில், “முதல்ல அவனை பற்றி விசாரி… பெயர் என்ன? எந்த டிபார்ட்மென்ட்னு கண்டு பிடிச்சு சொல்லு… அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றாள்.
“சரி” என்றதும், அவள் முன்னால் தோழியுடன் இணைந்து நடக்க, பின்னால் மாணவர்கள் வந்தனர்.
ஒருவன் விஜய்யிடம், “பவிக்கு இவ்ளோ கோபம் வருமா?”
“திவி விஷயத்தில் மட்டும் வரும்.” என்றான் மெல்லிய புன்னகையுடன்.
“என்னடா! அதை ரசனையா சொல்றது போல இருக்குது!”
“ஒரு டஷும் இல்லை… அவ எனக்கு நல்ல பிரெண்ட் மட்டும் தான்… நீ மூடிட்டு வா.”
“பார்க்கலாம்… பார்க்கலாம்.” என்று மெல்ல முணுமுணுக்க, விஜய் முறைக்கவும், பல்லைக் காட்டி சிரித்தான்.
விஜய் ‘நீ என்னமும் சொல்லிக்கோ!’ என்பது போல் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான்.
அனைவரும் வகுப்பிற்கு வந்தனர்.
திவ்யாவின் அமைதியில் கலவரமடைந்த பவித்ரா, “திவி” என்று அழைத்தாள்.
பின் யோசனையில் இருந்தவளின் கையை சிறிது உலுக்கினாள்.
“என்னடி?”
“என்ன, ரொம்ப தீவிரமா யோசிக்கிற!”
“எல்லாம் அந்த விருமாண்டி பத்தி தான்”
“விருமாண்டியா!”
“ஹும்ம்… அவன் கேரக்டரை பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கிறேன்… அவனை சரியா புரிஞ்சுக்க முடியலை…
நீ சொன்ன மாதிரி, இன்னைக்கு நான் தான் ஆரம்பிச்சேன். ஆனா, அன்னைக்கு நான் தெரியாம இடிச்சதுக்கு அவனோட ரியாக்சன்! ஏதோ பொண்ணுங்களை வெறுப்பவன் போல முகத்தை கடுமையா, கோபமா, வெறுப்பா வைச்சிட்டு, நான் வேணும்னு இடிச்ச மாதிரி திட்டினான். ஆனா, நான் அந்த மாமியோட ஆள் கிட்ட பேசியதையும், பாப்கார்ன் கொட்டியதையும் பார்த்துச் சிரித்தான்.
இன்னைக்கு நாம கூப்பிட்டதும் அவன் வந்து நின்ன விதம் செம மாஸ்ஸா இருந்துது. அப்புறம்… பெயரை கேட்டதுக்கு முறுக்கிக் கிட்டான்… அலட்டிக்காம அலட்சியத்தோட பேசினான்… நான் டீயை ஊத்தியதும் கோபத்துடன் என்னை அடிச்சான்…..” என்று பேசிக் கொண்டே போனவள்,
பவித்ரா வாயை திறந்தபடி தன்னை பார்த்துக் கொண்டிருக்கவும், “என்னடி?” என்றாள்.
“இப்போ உன்னைத் தான்டி என்னால் புரிஞ்சுக்க முடியலை”
“ஏன்?”
“அவர் மேல் செம்ம கோபத்தில் இருப்பன்னு நினைச்சேன்… ஆனா நீ!”
“அது என்ன அவர்னு மரியாதையா சொல்ற?”
“அதுவா வருது.”
திவ்யா முறைக்கவும்,
பவித்ரா, “இப்போ இதுவா முக்கியம்! கேட்டதுக்கு பதிலை சொல்லுடி”
“அவன் மேல கோபம் இல்லன்னு யாரு சொன்னா?”
“அப்புறம்!”
“அவன் மேல கோபம் இருந்தாலும், அதையும் மீறி என்னை ரொம்ப யோசிக்க வைக்கிறான்!”
பவித்ரா அமைதியாகப் பார்க்கவும், மீண்டும், “என்னடி?” என்றாள்.
“இன்னைக்கும், இந்த ரணகளத்திலும் சைட் அடிச்சு இருக்க!”
“அது முதல்ல தான், அப்புறம் தான் அவன் என்னை டென்ஷன் படுத்த ஆரம்பிச்சுட்டானே!”
“அதில் உனக்கு ரொம்ப வருத்தம் போல!”
“அப்படியெல்லாம் இல்லை”
“எனக்கு ஒரு டவுட்”
“என்ன?”
“பெயரை சொல்லாமல் உன் பெயரை கேட்டதுக்கு, ஏன் டென்ஷன் ஆன?”
“தெரியல… அன்னைக்கு அவன் பேசியது… பெயரை கேட்டதுக்கு அலட்சியத்தோட முறுக்கிக் கிட்டதா இருக்கலாம்.”
“ஒருவேளை பெயரை தெரிந்துக்க முடியலைனு டென்ஷனோனு நினைத்தேன்!”
ஒரு நொடி யோசித்தவள், “இருக்கலாம்” என்று தோளை குலுக்கினாள்.
அவளது பதிலில் ஒரு நொடி மௌனமான பவித்ரா பின், “எதுக்குடி விருமாண்டினு பெயர் வச்ச?”
“அவன் வெறப்பா நின்னு பேசியதைப் பார்த்து அப்படி தான் தோனுச்சு! ஏன் பவி! நான் பொண்ணு மாதிரி நடந்துக்கிறது இல்லையா? அவன் ஏன் அப்படி சொன்னான்?” என்று வினவிய போது, அவள் குரலில் சிறு வருத்தமும் கலக்கமும் இருந்தது.
“அப்படியெல்லாம் இல்லைடி… அது சும்மா கோபத்தில் சொல்றது… நீ அவரை அடிக்க கை ஓங்கிய கோபத்தில் சொல்லியிருப்பார்.”
“நிஜமா!”
“என் திவி தைரியமான பொண்ணுடா”
“ஹும்ம்… நானாவா அடிக்க கை ஓங்கினேன்! அவன் அடிச்சதும் தானே! சில திமிர் பிடித்த பொண்ணுங்க இருக்காங்க தான்.. ஆனா பொதுவாவே ஒரு பொண்ணு ஆணை எதிர்த்து சண்டை போட்டாலோ, அவனை அடிச்சாலோ, யோசிக்காம அவ பொண்ணு இல்லை… ராங்கி! அடங்கா பிடாரி…! பஜாரி…! எக்ஸட்ரா எக்ஸட்ரானு சொல்லிடுறாங்க! ஏன் பாரதி கண்ட புதுமை பெண்ணுன்னு யோசிக்கிறது இல்லை! என்ன சமுதாயமோ!” என்றவள் ஒரு நொடி இடைவெளி விட்டு, “ஆனாலும், அவன் கோபத்தில் கொஞ்சம் வார்த்தையை விட தான் செய்றான்… கொஞ்சம் முன் கோபக்காரனா இருப்பான் போல…” என்றாள்.
பவித்ரா பெரும் ஆச்சரியத்துடன் பார்த்தபடி, “இன்னைக்கு நீ கொஞ்சம் வித்யாசமா தான்டி தெரியுற!”
“ஏன்?”
“கோபத்தை மீறி அவர் குணத்தை ரொம்பவே ஆராய்ச்சி செய்ற! கடந்த அஞ்சு வருஷமா மத்தவங்க உன்னை பற்றி சொல்றதுக்கு நீ மதிப்பு கொடுத்ததே இல்லை. ஆனா, இன்னைக்கு பீல் பண்ற! சமூக கருத்து வேற சொல்ற!”
திவ்யா சிறு தோள் குலுக்கலை பதிலாகக் கொடுத்தாள்.
அப்பொழுது தங்ககுமார் உள்ளே வந்தார்.
பவித்ரா, “இன்னைக்கும் க்ரிப்டோக்ராபி(CRYPTOGRAPHY) கிளாஸ் இல்லையா?”
“இது க்ரிப்டோக்ராபி ஹவரா!”
“ஆமா… முதல் நாள் இவர் அந்த ஹவரில் வந்த போது, இவர் தான் எடுக்கப் போறாருன்னு நினைச்சேன்.”
“நீ இன்னுமா இந்த நொந்த குமாரை நம்புற!”
“ஏன்..டி?”
“பின்ன! ஈஸியான பேப்பரையே பாதி செமினார் கொடுத்து போர்ஷனை முடிக்கிற ஆளைப் பார்த்து, கஷ்டமான பேப்பரை எடுக்கச் சொல்ற!”
“க்ரிப்டோக்ராபி கஷ்டமான பேப்பரா!”
“இந்த ஆளுக்கு கஷ்டம் தான்… அதுலயும் லேப் வேற இருக்குதே!”
அப்பொழுது தங்ககுமார், “அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது என்ன பேச்சு!” என்று திவ்யாவை பார்த்து கேட்டார்.
அவள் அறியா பிள்ளையை போல் முகத்தை வைத்துக் கொண்டு, “அப்போ கிளாஸ் நடத்துறப்ப பேசலாமா சார்?”
அவர் முறைத்துவிட்டு வருகை கணக்கெடுப்பை தொடர்ந்தார்.
வருகை கணக்கெடுப்பை முடித்ததும், ஒரு மாணவன், “நெக்ஸ்ட் ஹவரும் நீங்க தானா சார்?”
“ஏன் கேட்கிற?”
“நல்லா தூங்கலாமே, அதான்”
அவர் முறைத்துவிட்டு, “நெக்ஸ்ட் ஹவர் க்ரிப்டோக்ராபி அண்ட் நெட்வொர்க் செக்யூரிட்டி” என்று விட்டு பாடத்தை எடுக்க ஆரம்பித்தார்.
“கண்ணகி கசின் பிரதர்னு நினைப்பு” என்று விஜய் அருகில் இருந்தவன் கூற,
விஜய், “விடு மச்சி… நம்மை ஒன்னும் செய்ய முடியாததை இப்படி முறைத்து சமாளிக்கிறார்”
அந்த வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்தது. இவர் வெளியே சென்றதும் உள்ளே தகவல் மறைப்பியல்(CRYPTOGRAPHY) ஆசிரியர் உள்ளே வந்தார்.