‘விலகிப் போய்டு.’ என்ற வார்த்தைகளில் அதிர்ந்து நின்ற பவித்ரா, தன்னை சுதாரித்துக் கொண்ட பொழுது, திவ்யா கைகளை கட்டிக் கொண்டு தலைமை ஆசிரியர் முன் நின்று கொண்டிருந்தாள்.
பவித்ரா அவசரமாக முன்னால் விரைந்து சென்றாள்.
விஜய் அங்கே தான் நின்று கொண்டிருந்தான்.
தண்ணீர் பருகிய பிறகு நிதானத்திற்கு வந்த தலைமை ஆசிரியர், தன் முன் நின்று கொண்டிருந்த திவ்யாவைப் பார்த்து கடுமையாக முறைக்க, அவளோ அசராமல் அவரது முறைப்பை எதிர் கொண்டாள்.
அவர் கோபத்துடன், “உடம்பு முழுவதும் திமிர்… தெனாவெட்டு…! நீயெல்லாம் எங்கே உருப்படப் போற! உன்னை காலேஜை விட்டு தூக்கிடலாம்னு சொன்னா, சேர்மன் கேட்கிறாரா? எல்லாம் அவர் இருக்கிற தைரியம்! இன்னைக்கு நானா நீயானு பார்க்கிறேன்..!”
அவளது இதழோரம் அரும்பிய புன்னகையில் மேலும் கோபமடைந்தவர், “எல்லாம் பணத் திமிர்! இன்னைக்கு தான் இந்த காலேஜ் கடைசி நாள் உனக்கு.”
அப்பொழுதும் அவள் இருந்த நிலையில் சிறிதும் மாற்றமில்லை என்றதும் அவர் கோபத்துடன், “கம் டு சேர்மன் ரூம்.” என்று கத்திவிட்டு வேகமாகச் சென்றார்.
திவ்யா, தோழியை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றாள்.
விஜய் சிறு கலவரத்துடன், “இப்படி ஆகும்னு நான் நினைக்கல பவி.” என்றான்.
பவித்ரா முறைக்கவும், “நிஜமா டி.சி கொடுக்கிற அளவிற்கு போவார்னு நான் நினைக்கல..”
“பின்ன, இவ செய்ற அலம்பலுக்கு மெடலா கொடுப்பாங்க?”
“இப்போ என்ன செய்ய?”
“ஒன்னும் ஆகாது. வா, கிளாஸ் போகலாம்.”
விஜய் ஆச்சரியத்துடன் பார்க்க,
பவித்ரா, “என்ன?”
“எப்போதும் டென்ஷன் ஆற நீ, இவ்வளவு பெரிய விஷயத்திற்கு…”
“டி.சி-லாம் கொடுக்க மாட்டாங்க. நான் டென்ஷன் ஆனது, ஆகுறது அவளோட எதிர்காலத்தை நினைத்து தான்.”
“எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?”
“அது அப்படி தான்.”
“சேர்மன் சார், திவிக்கு ரிலேடிவ் தான் என்றாலும்… இன்னைக்கு அந்த பிணம் திண்ணி ரொம்ப உறுதியா இருக்கிறானே!”
“அவர் தலை கீழா நின்னாலும், திவிக்கு டி.சி கொடுக்க வைக்க முடியாது. ஆனா நீ எதுக்கும் ஜாக்கிரதையா இரு! அவளுக்கு அடுத்து உன்னை தான் H.O.D கவனிப்பார்.”
“எவ்வளவோ பார்த்துட்டோம்! இத பார்க்க மாட்டேனா!”
“என்னமும் செய்” என்றவள் தன் இடத்தில் அமர்ந்தாள்.
விஜயும் தன் இடத்தில் அமர்ந்தான். இருவரது மனமும் திவ்யாவைப் பற்றி தான் சிந்தித்தது.
தாளாளர் அறை:
கல்லூரியின் தாளாளர் மற்றும் தலைவரான ராஜாராமிடம் தலைமை ஆசிரியர், திவ்யா பற்றிய புகார்களை படித்துக் கொண்டிருக்க, அவளோ அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சார், உங்க ரிலேடிவ்னு தண்டிக்காம இருப்பது தவறில்லையா! இப்போ கூட பாருங்க, எப்படி நிற்கிறா? ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திமிரும், தெனாவெட்டும் கூடாது. சாரி சார்… நீங்க கொடுக்கும் இடம் தான் இதற்குக் காரணம்.”
ராஜாராம், “திவ்யா” என்று அழைக்கவும், அவர் புறம் திரும்பினாள்.
தலைமை ஆசிரியர், “ஒரு வாரம் சஸ்பென்ஷன் பத்தாது சார். இவ செய்ததில் என் உயிருக்கு ஏதும் நேர்ந்திருந்தா! இந்த முறை நீங்க டி.சி கொடுத்தே ஆகணும் சார்.”
ராஜாராம், “அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.” என்று கூற,
“என்ன சார்! நீங்க போய் மன்னிப்பு கேட்டுட்டு…” என்று பதற,
அதே நேரத்தில் திவ்யா சற்று இறுகிய குரலில், “எனக்காக நீங்க ஏன் மன்னிப்பு கேட்கிறீங்க? முதல்ல நான் தப்பே செய்யல…”
“திவ்யா!” என்ற ராஜாராமின் குரல், முதல் முறையாக சிறு கண்டிப்புடன் ஒலித்தது.
அதை கவனித்தாலும் அவள் தீர்க்கமான குரலில், “நிஜமா தான் சொல்றேன்… அன்னைக்கு இவர் ரூமுக்குள் அந்த பிஜிலி வெடியை நான் போடலன்னு எவ்வளவு சொன்னேன்! நம்பாம ஒரு வாரம் சஸ்பென்ஷன் கொடுத்தீங்களே! அதான் இப்படி செய்தேன். நான் போட்டால் சாதாரண ஜுஜுபி பிஜிலி வெடியெல்லாம் போட மாட்டேன். இது கூட ட்ரைலருக்கான டீசர் மாதிரி தான்… ரொம்ப செய்தாரு, வீடு புகுந்து அவர் ரூமுக்குள்ளேயே 10,000 வாலா போட்டிருவேன்! அப்புறம் ஏற்கனவே கொடுத்த தண்டனைக்குத் தான், இந்த அதிரடி. ஸோ இதுக்கு தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாது.”
தலைமை ஆசிரியர், அவளது தைரியத்தைப் பார்த்து உள்ளுக்குள் சிறிது வியந்தாலும், வெளியே கடுமையாக முறைத்தார்.
சில நொடிகள் மௌனம் நிலவ,
அவள், “நான் கிளாஸ் போகலாமா?”
“சார், இப்படியே விட்டால் எனக்கு என்ன மரியாதை இருக்கும்?”
திவ்யாவை பார்த்து பெருமூச்சொன்றை வெளியிட்ட ராஜாராம், “சம்பள உயர்வுடன், இதே பதவியுடன்… வேறு காலேஜ்ஜில் வேலைக்கு ஏற்பாடு செய்யட்டுமா?”
தலைமை ஆசிரியர் பெரும் அதிர்ச்சியுடன், “சார்!”
“சாரி… என் மேலும் தவறு இருக்கிறது. போன முறை நான் சரியா விசாரித்து இருந்தால், இந்தத் தவறு நடந்திருக்காது.”
“சார்… இவளுக்கு ஏன் இவ்வளவு சப்போர்ட் செய்றீங்க? இதனால் உங்க பெயர் கூட கெடுது. சார்…”
“இதை இத்துடன் விட்டுவிடலாம்… உங்க முடிவை சொல்லுங்க. தொடர்ந்து இங்கே இருக்கப் போறீங்களா? இல்லை…”
“இனி இங்கே இருந்தால், எனக்கு நிச்சயம் மரியாதை இல்லை சார்”
“நான் என் நண்பரிடம்…”
“என் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இருக்குது சார். கடைசியா ஒன்னே ஒன்னு சொல்றேன் சார்… ஒரு முறை கடுமையா நீங்க கண்டித்தால், இதுக்கு தீர்வு காண முடியும்… இதை மட்டும் சொல்லலை. படிப்பு விஷயமும் சேர்த்துத் தான் சொல்கிறேன். இவ படிக்காத பெண் இல்லை… கஷ்டமான பேப்பரில் முதல் மதிப்பெண் எடுப்பவள், சில ஈசியான பேப்பரில் பெயில் ஆகிறாள் என்றால், வேணும்னே செய்றானு தான் அர்த்தம்.”
ராஜாராம் அமைதியாக இருக்கவும்,
“சாரி சார். கொஞ்சம் அதிகமா பேசிட்டேன் நினைக்கிறேன்.”
“நீங்க சொன்னதில் ஒன்னு மட்டும் தவறு… என் கண்டிப்பு எதையும் மாற்றி விடாது.” என்றவர் திவ்யாவை பார்த்தபடி, “ஆனால் அன்பு எதையும் மாற்றும்… அதற்கு தான் முயற்சித்து தோற்றுக் கொண்டிருக்கிறேன்.”
திவ்யாவின் உடல் இறுகியதோடு, கண்களை வெறுமை சூழ்ந்தது. அதை கவலையுடன் பார்த்த ராஜாராம், பெருமூச்சொன்றை வெளியிட்டு, “உங்களைப் போன்ற திறமையானவரை இழக்க கஷ்டமா தான் இருக்குது. ஆனா, எனக்கு வேற வழி இல்லை… சாரி”
ஒரு நொடி அமைதியாக இருந்த தலைமை ஆசிரியர், “பரவாயில்லை சார். நான் அப்புறம் உங்களை பார்க்கிறேன்.” என்று கூறி வெளியேறினார்.
திவ்யாவின் பேச்சில் கோபம் கொண்டவர், ராஜாராம் அவரை கிளம்பச் சொன்னதும் பெரும் அதிர்ச்சி அடைந்ததோடு, திவ்யா மேல் மேலும் கோபம் கொண்டார் தான். இருப்பினும், கிளம்பும் முன் நல்ல ஆசிரியராக திவ்யாவின் படிப்பு பற்றி பேசினார்.
ஆனால், ராஜாராமின் கூற்றும்.. அதற்கு திவ்யாவிடம் வந்த இறுக்கமும் அவரைக் குழப்பியது.
‘அவர்களுக்குள் என்ன உறவு?’ என்ற கேள்வி அவருள் எழுந்தது. ஆனால் தான் தற்போது இருக்கும் நிலையை கருதி, அந்தக் கேள்வியை புறம் தள்ளி தன் வேலையை கவனிக்கத் தொடங்கினார்.
தலைமை ஆசிரியர் கிளம்பியதும் வெளியேறப் போனவளை, “திவ்யா” என்று அழைத்தார்.
அவள் நின்றாலும், அவரைப் பார்க்கவில்லை.
“உன் அளவில், உன் காரணங்கள் உனக்கு சரியாப் படலாம். ஆனா, அடுத்தவங்களை கஷ்டப்படுத்துவது தப்பு. அவர் சொன்ன மாதிரி, அவருக்கு ஏதாவது ஆகியிருந்தால்?”
“அதெல்லாம் நான் கவனமா தள்ளி போட்டு தான் கொளுத்தினேன். அது போக, கதவை மூடுறதுக்கு முன்னாடி அவரை வார்ன் செய்றது போல ‘அட்வான்ஸ் ஹாப்பி பிறந்த டே’ னு சொல்லிட்டு தான் செய்தேன்.”
அரை நொடி யோசித்தவர், “என்னைக்கு அவர் பிறந்த நாள்?”
“நாளைக்கு”
“அப்போ கொடுமையான பரிசை, என்னையும் கொடுக்க வச்சிட்ட!”
“அவர் விரும்பிய இனிமையான பரிசா… எனக்கு டி.சி கொடுத்திருக்க வேண்டியது தானே!”
“அதுக்காக தான் இவ்வளவும் செய்றியா?”
“என்னிடமிருந்து விலகி இருக்கலை என்றால், நீங்க எல்லோரும் சங்கடங்களை, அவமானங்களை சந்திக்க நேரும்னு உணர்த்தத் தான் இதெல்லாம்.”
“இதனால் உன் எதிர்காலம்…”
“எதிர்காலம்!” என்று விரக்தியாகச் சிரித்தவள் இறுகிய குரலில், “என் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்.” என்றாள்.
“இன்னும் எத்தனை காலம் விலகியே இருக்கப் போற?”
“என் உயிர் உள்ள வரை.”
“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிற? எங்க பக்கம் இருக்கும் விளக்கத்தை கேட்கக் கூட மாட்டேன் என்றால்…”“எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்லை. எந்த உறவும் தேவை இல்லை..!” என்று கிட்டதிட்ட கத்தியவள், அவரது பதிலை எதிர்பாராமல் வெளியேறி இருந்தாள்.
குறிப்பு: நேற்று நெட் சதி செய்ததால் வர முடியலை.. மன்னிக்கவும்..
இணைய காத்திருப்போம்…