திவ்யா, “என்னடா?”
“ஒரு சீனியர் அடிச்சுட்டாங்க” என்று சோகமாக கூறினான்.
விஜய், “அடி பலமோ!” என்று புன்னகையுடன் வினவ, சஞ்சய் ஆம் என்பது போல் தலையை ஆட்டினான்.
திவ்யா, “யாரு அடிச்சா?”
“பெயரையும் டிபார்ட்மென்ட்டையும் கேட்டப்ப முறைச்சாங்க.. நான் அட்டு பிகருன்னு சொன்னதும் அடிச்சிட்டாங்க” என்றதும் பசங்க சிரிக்க,
தோழர்களிடம், “சிரிக்காதீங்கடா.. பாவம்” என்ற திவ்யா சஞ்சயிடம், “இப்படி ஆகும்னு நினைக்கலைடா.. சாரி” என்றாள். அவளது தோழர்கள் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
சஞ்சய் புன்னகையுடன், “விடுங்க சீனியர்.. இப்போ என் பெயர் பேமஸ் ஆகிரும் தானே” என்றவன் “சீனியர்.. அவங்க தான் அடிச்சாங்க” என்றான்.
அவன் கை நீட்டிய நபரை பார்த்த திவ்யா, “நிச்சயம் உன் பெயர் பேமஸ் தான் மகனே! ஏன்னா அவங்க சீனியர் இல்லை மேடம்”
“சீனியர்!” என்று திவ்யாவை பார்த்து அவன் திகிலுடன் அழைக்க, பசங்க வாய்விட்டு சிரித்தனர்.
பவித்ரா மனதினுள், ‘இன்னைக்கு இவளுக்கு பதில் இவன் வினையை கூட்டிட்டானே!’ என்று புலம்பினாள்.
திவ்யா மெல்லிய சிரிப்புடன், “விடுடா.. ராகிங்னு அவங்களுக்கு தெரிந்திருக்கும்.. உனக்கு பிரச்சனை வராது” என்றவள், “நீ ஏன்டா அவங்க கிட்ட போன! சரீ கட்டியிருக்கும் போதே யோசிக்க வேண்டாமா?”
“இன்னொரு சீனியர் தான் அவங்க கிட்ட சொல்ல சொன்னாங்க.. அவங்க பைனல் இயர் ஸ்டுடென்ட்னு வேற சொன்னாங்க”
விஜய் மற்றும் மற்ற நண்பர்கள், “யாருடா இப்படி கோர்த்து விட்டது?”, “யாரா இருக்கும்?”, “யாரு அது?” என்று தங்களுக்குள் வினவ,
திவ்யா, “உன்கிட்ட சொன்னது பையனா பொண்ணா?”
“பையன் தான்”
புருவம் சுருக்கி யோசித்த திவ்யா, “அந்த பொறுக்கி சைமன்னா தான் இருக்கும்.. இவனுக்கு டாஸ்க் கொடுத்தப்ப, இங்க பார்த்துட்டே தான் போனான்.. என்னை மாட்டி விட நினைச்சு பக்கி இவனை கோர்த்து விட்டிருக்கு” என்றவள் சஞ்சயிடம், “உனக்கு பிரச்சனை வராது.. வந்தா, நான் தான் ராகிங் செய்தேன்னு சொல்லிடு.. என் பெயர் திவ்யா.. பைனல் இயர் சி.எஸ்.இ” என்றாள்.
சஞ்சய் புன்னகையுடன், “பிரச்சனை வந்தா என்னை மாட்டிவிட்ட சீனியரை சொல்லிக்கிறேன்..” என்றான்.
திவ்யா புன்னகையுடன் அவனுடன் கை குலுக்கி, “அவனை பார்த்தா போட்டோ எடுத்து என்கிட்ட காட்டு” என்றாள்.
அவன் புன்னகையுடன் வலது கை கட்டை விரலை காட்டினான்.
“சரி… நீங்க கிளம்புங்க” என்றதும் முதலாம் ஆண்டு மாணவர்கள் மூவரும் கிளம்பினர்.
தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களை பார்த்து, “என்னங்கடா?”
விஜய், “நீ சாரி கேட்டதில் தான் ஷாக் ஆகி நிற்கிறோம்”
“தெரிந்தே செய்த தப்புக்கு யாராவது சாரி கேட்பாங்களா! இது வேற.. இப்போ என்னால் நீங்க யாராவது பாதிக்கப்பட்டா, சாரி கேட்க மாட்டேனா! அது மாதிரி தான் இதுவும்” என்றவள் இரண்டு முதலாம் ஆண்டு மாணவிகளை அழைத்தாள்.
நண்பர்கள் முகத்தை பார்த்தவள், “டோர் க்ளோஸ்.. கெத்தா நில்லுங்கடா பக்கீஸ்” என்றாள்.
அவர்கள் சிறிது அசடு வழிந்துவிட்டு கெத்தாக நின்றனர்.
திவ்யா பவித்ராவிடம், “நீ தான் இவங்களை ரகிங் செய்யப் போற” என்றாள்.
அவள் அதிர்ச்சியுடன் நெஞ்சில் கை வைக்க திவ்யா ‘ஆரம்பிச்சிட்டியா!’ என்பது போல் பார்த்தாள்.
அந்த மாணவிகள் வந்ததும் திவ்யா தோழியின் கையை இடித்தாள்.
பவித்ரா சற்று கறாரான குரலில், “உங்க பெயர் என்ன?” என்றதும் நண்பர்கள் பவித்ராவை ‘பார் டா!’ என்பது போல் பார்த்தனர்.
பவித்ராவோ உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தாள். அதை அறிந்த திவ்யா மெல்லிய குரலில் நண்பர்களிடம், “இது பில்டிங் ஸ்டராங் பேஸ்மென்ட் வீக்டா” என்றாள். நண்பர்கள் மெலிதாக சிரித்தனர்.
அந்த மாணவிகள் பெயரை சொன்னதும், பவித்ரா, “சரி ஒரு பாட்டு பாடிட்டு போங்க” என்றதும் அந்த மாணவிகள் பாடிவிட்டு சென்றனர்.
அவர்கள் நகர்ந்ததும், “அப்பா!” என்று பவித்ரா மூச்சை வெளியிட்டாள்.
“நீயெல்லாம் தேறவே மாட்ட” என்றபடி திரும்பிய திவ்யா கண்கள் மின்ன, “விஜி.. அங்கே வரவனைக் கூப்பிடு” என்றாள்.
அவள் காட்டிய திசையில் பார்த்தவன், “ஐடி கார்ட் இல்லைனாலும் பார்த்தா பஸ்ட் இயர் மாதிரி தெரியலையே திவி!”
“டைரக்ட் செகண்ட் இயரா இருக்கும்.. எப்படியும் நமக்கு ஜூனியர் தானே, கூப்பிடு”
விஜய் அப்பொழுதும் யோசனையுடன் நிற்கவும், “டேய்! நம்ம கிளாஸ் முத்துக்குமார் ஜித்து-லாம் நம்மை விட நாலு வயசு, ரெண்டு வயசு பெரியவங்க தான! ஆனா நம்ம கூட படிக்கலையா!! அதை மாதிரி இவனுக்கு வயசு அதிகமா இருந்தாலும் நமக்கு ஜூனியர் தானே! கூப்பிடு” என்றாள்.
அரை மனதுடன், “ஏய்! வைட் ஷர்ட்” என்று விஜய் கத்தினான்.
அந்த வெள்ளை சட்டைக்காரன் சுட்டு விரலால் ‘என்னையா?’ என்பது போல் கேட்டான்.
விஜய், “ஆமா.. நீ தான்.. இங்க வா”
அவன் இவர்களை நோக்கி வரவும் விஜய் திவ்யாவிடம், “நீ ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்கிற?”
“எனக்கும் அவனுக்கும் ஒரு கணக்கு பாக்கி இருக்குது”
“உனக்கு அவனை தெரியுமா?”
அந்த வெள்ளை சட்டைக்காரனை பார்த்தபடியே, “ஹ்ம்ம்.. இவன் தான் அந்த தியேட்டர் பார்ட்டி” என்றாள்.
பவித்ரா, “அதான் அன்னைக்கே அவன் தலையில் பாப்-கார்ன் கொட்டிட்டியே! அப்பறம் ஏன்டி இப்போ பிரச்சனை செய்ற?”
“திவ்யா என்றால் பிரச்சனை தானே!” என்று கூறி கண் சிமிட்டியவள் வெள்ளை சட்டைக்காரனை பார்த்த படி நின்றாள்.
அவனும் இவளை பார்த்தபடி தான் வந்துக் கொண்டிருந்தான்.
விஜய், “நீ இன்னும் அதை மறக்கலையா! எவ்ளோ நாள் ஆச்சு! அவன் முகம் உனக்கு ஞாபகம் இருக்குதா?”
பவித்ரா, “சண்டை போட்டாலும் சைட் அடிச்சாளே!” என்று முணுமுணுக்க,
அதை கண்டுக் கொள்ளாத திவ்யாவின் மனமோ அன்று போல் இன்றும் அவனது கம்பீரத்தை ரசித்தது ஆனால் அதை கண்ணில் காட்டாமல் கெத்தாக நின்றிருந்தாள்.
அங்கே வந்த வெள்ளை சட்டைக்காரன் கைகளை கட்டிக் கொண்டு கெத்தாக நின்றான்.
திவ்யா, “உன் பெயர் என்ன?”
“உன் பெயர் என்ன?”
விஜய், “நாங்க சீனியரா நீ சீனியரா? கேள்வி கேட்டால் பதிலைச் சொல்லு…..”
‘சொல்லுடா’ என்று சொல்ல வந்தவன் அந்த வெள்ளை சட்டைகாரனின் தீர்க்கமான பார்வையில் அவனையும் அறியாமல் வாயை மூடிக் கொண்டான்.
வெள்ளை சட்டைகாரன் பார்வையை திவ்யாவிடம் திருப்பினான்.
திவ்யா, “உன் பெயரை கேட்டேன்”
அவன் அலட்சியத்துடன், “நானும் தான் உன் பெயரை கேட்டேன்”
“நான் தான் முதல்ல கேட்டேன்”
“ஸோ வாட்! பதிலையும் நீயே முதல்ல சொல்லிடு”
திவ்யா கடுப்புடன், “முதல்ல மரியாதை கொடுத்து பேசு”
அவன் நக்கலுடன், “அதை நீ சொல்றியா?”
“நான் சீனியர்”
“என்னைப் பார்த்தால் உன்னை விட சின்னவனா தெரியுதா?”
அவள் பல்லை கடித்துக் கொண்டு, “இப்போ பெயரை சொல்ல முடியுமா முடியாதா?”
“முடியாது” என்றுவிட்டு அவன் நகர போக, கடுப்புடனும் எரிச்சலுடனும் சுற்றி பார்த்த திவ்யா விஜய் அருகில் இருந்த பாதி அருந்திய தேநீர் கோப்பையை எடுத்தபடி, “ஏய்!” என்றாள்.
அவன் திரும்பியதும், அவனது வெள்ளை சட்டையில் தேநீரை ஊற்றி விட்டாள்.
அவள் தேநீரை ஊற்றிய அடுத்த நொடி, அவன் அவள் கன்னத்தில் அடித்திருந்தான்.
திவ்யா அதிர்ந்து நின்றது ஒரு நொடி தான். அடுத்த நொடியே அவனை அடிக்க கையை ஓங்கி இருந்தாள்.
ஆனால் அதை வெகு சுலபமாக தடுத்து, “பொண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமா இரு” என்றவன் வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்.
இணைய காத்திருப்போம்…