குறிப்பு: நேற்று போடுறேன்னு சொன்ன எப்பி இன்னைக்கு தான் போடுறேன்.. நேற்று ஏமாற்றியதிற்கு மன்னிக்கவும் தோழமைகளே..
விலகல் – 7
திவ்யாவிடம் பந்தால் அடி வாங்கியவன், மாடியில் இருந்த தங்கள் வீட்டின் உள்ளே சென்றதும், அவன் கண்ணைப் பார்த்த அவனது நண்பன், “டேய்! என்னாச்சு?” என்று சிறிது பதறியபடி கேட்டான்.
“ஒரு பொண்ணு கிரிக்கெட் பாலால் அடிச்சிட்டா மச்சி” என்று சோகமாக கூற,
அவன் நண்பனோ புன்னகையுடன், “நான் தான் சொன்னேனே! ஏதாவது பொண்ணு கிட்ட அடி வாங்கப் போறன்னு… ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் வாங்குவனு நினைக்கலடா”
“டேய், நானே கடுப்பில் இருக்கிறேன்”
அவன் நண்பன் எழுந்து சென்று குளிர்சாதனப் பெட்டியில் இருந்து சின்ன சின்ன பனிக்கட்டிகளை எடுத்து, ஒரு துணியில் கட்டிக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தபடி, “சரி… சரி… இதை வச்சு ஒத்தடம் கொடு.”
அவன் ஒத்தடம் கொடுத்தபடி, “வலிக்குதுடா”
“வம்பு செய்றதுக்கு முன்னாடி யோசித்து இருக்கணும்.”
“வம்பெல்லாம் செய்யலைடா… சின்னதா கண்ணடிச்சேன்… அவ்ளோ தான்.”
“அதான் கண்ணுலேயே தாக்கிட்டா போல!” என்றான் மென்னகையுடன்.
“இது கூட பரவாயில்லடா மச்சான்… என்னைப் பார்த்து என்ன சொல்லிட்டா தெரியுமா?”
“என்ன சொன்னா?”
“எப்படிடா அவ அப்படி சொல்லலாம்?”
“ஏன்! சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கானு கேட்டாளா?”
அவன் முறைக்கவும்,
நண்பன், “எதுக்கு முறைப்பு மச்சி! நானும் அந்த கேள்விக்கு தான் பதிலை தேடிட்டு இருக்கிறேன்னு சொல்ல வேண்டியது தானே!”
“டேய்!” என்று அவன் கத்த…
நண்பனோ, “என்ன?” என்று அலட்டாமல் கேட்டான்.
“உனக்கு அந்த பஜாரியே மேல்”
“பஜாரியா?”
“பின்ன… பொண்ணா அது! என்னா பேச்சு பேசுது! சரியான பஜாரி!”
“உன்னை எதிர்த்துப் பேசினா பஜாரியா!”
அவன் முறைக்கவும்,
“தப்பு யாரு மேல்?”
“என் மேல் தான்… அதுக்காக இப்படி பேசலாமா?”
“சரி… என்ன சொன்னா?”
“நீயே சொல்லு மச்சி… நான் சும்மா லைட்டா கடலை போடுவேன்…”
“லைட்டா!”
“சரி கடலை போடுவேன்… அப்புறம் மிஞ்சி மிஞ்சி போனா கண்ணடிப்பேன்… அவ்ளோ தானேடா!”
“அதையும் ஏன் செய்யணும்?”
“பின்ன உன்னை போல் சாமியார் மாதிரி இருக்கச் சொல்றியா?”
“நான் சாமியாரா?”
“பின்ன… சைட் கூட அடிக்காத நீ சாமியார் தான்… எப்படிடா நீ எனக்கு பிரெண்ட் ஆன!”
“எனக்கும் சில நேரம் இந்த சந்தேகம் வரும்… சரி அதை விடு… ஆனா என்னை சாமியார்னு சொல்லாத… ஏன்னா இப்பலாம் சாமியார்னு சொல்லிட்டு தான், பல வேலைகளை பார்க்கிறான்க!”
“அதுவும் சரி தான்” என்றவன் மீண்டும், “எனக்கு மனசே ஆறலைடா…”
“அப்படி என்னடா சொன்னா?”
“…”
“சொல்லித் தொலைடா”
“அது”
“இப்போ நீ சொல்லலை, நானே உன்னை மொத்துவேன்.”
“எனக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்திடுவேன்னு சொல்லிட்டாடா!”
“வாட்!”
“கேட்கிற உனக்கே ஷாக்ஆ இருக்குதே! எனக்கு எப்படி இருக்கும்?”
“உன்னை நினைத்து ஷாக் ஆகலை… ஒரு பொண்ணு இப்படி சொன்னாளானு ஷாக் ஆனேன்.”
அவன் பல்லைக் கடித்தபடி, “உன்னிடம் போய் சொன்னேன் பாரு!”
“அப்படியே சொன்னாளா?”
அவன் முறைக்கவும்,
“ஸீன் போடாம சொல்லுடா”
“இன்னொரு முறை கண்ணடிச்சா அடுத்த பால் கண்ணை தாக்காது… நேரா குடும்ப கட்டுப்பாடு தான்னு சொன்னா. போதுமா!” என்று எரிச்சலுடனும், கடுப்புடனும் சொன்னான்.
நண்பன் வாய்விட்டு சிரிக்கவும்,
“வேணாம் டா! நானே கடுப்பில் இருக்கிறேன்.”
ஒருவாறு சிரிப்பை அடக்கிய நண்பன், “இருந்தாலும்” என்று விட்டு மீண்டும் சிரிக்கவும்,
பல்லை கடித்துக்கொண்டு, “எல்லாம் அவளால்… எனக்கு வர கோபத்துக்கு!”
“போய் அந்தப் பொண்ணை திட்டப் போறியா! அதை அப்பவே…”
“ஏன்டா உனக்கு இந்த கொலை வெறி! நான் கல்யாணம் செய்து பிள்ளை, குட்டினு சந்தோஷமா இருக்க ஆசைப்படுறேன்… நீ ஏன்டா என்னை அந்த சொர்ணாக்கா கிட்ட கோர்த்து விடப் பார்க்கிற!”
நண்பன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க,
“டேய் வேண்டாம், ஓடிப் போய்டு” என்றான்.
“இனி உனக்கு இந்த தெருவில்… இல்லை… இல்லை… இந்த ஏரியாவில் மதிப்பிருக்கும்…!” என்று நக்கலாகக் கூறிவிட்டு அறைக்கு செல்ல,
“ரொம்ப சந்தோஷப்படாதடா…” என்று கத்தினான்.
அடுத்த இரண்டு நிமிடத்தில், அவன் கால் அடியில் அதே பந்து வரவும், முதலில் சிறிது அதிர்ந்தவன், அடுத்த நொடியே கோபத்துடன் பந்தை எடுத்துக்கொண்டு மாடி-முகப்பிற்கு(பால்கனி) சென்று திவ்யாவை பார்த்து முறைத்தான்.
அவளோ வலது கையில் மட்டையை பிடித்தபடி, இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு, இவனை கோபத்துடன் முறைத்தபடி, “என்ன வாங்கின அடி பத்தலையா!”
தனது பார்வையை சுழற்றியவன், மற்ற வீட்டில் இருந்து யாரும் பார்க்கவில்லை என்றதும், சிறிது நிம்மதி அடைந்து அவளிடம், “எப்போதும் அமைதியாவே இருக்க மாட்டேன்.” என்றவன், “இப்போ எதுக்குடி பந்தை மேல அடித்த?”
“டேய் மரியாதையா பேசு”
“நீ ரொம்ப மரியாதையுடன் தான் பேசுற!”
“அது நீ நடந்துக்கிற முறையை பொறுத்து.”
“இப்போ எதுக்குடி பந்தை மேல அடித்த? அதைச் சொல்லு”
“இப்படி தெரியாதது போல் கேட்டா! நீ ஜன்னல் மறைவில் இருந்து பார்த்தது இல்லைனு ஆகிடாது.”
அவன் வாய்விட்டு சிரித்தபடி, “ஆமா, இவ பெரிய உலக அழகி! இவளைத் தான் திரும்பத் திரும்ப பார்க்கிறேன்! போடி சொர்ணாக்கா.”
“டேய் சூம்பிப்போன சிக்கன், வேணாம்.”
“என்னடி சொன்ன?” என்றபடி அவன் வேகமாக கீழே இறங்கி வந்தான்.
திவ்யா பயமின்றி, “நீ சொன்னதுக்கு பதில் சொன்னேன்”
அவன் பல்லைக் கடித்தபடி, “எனக்கு வர கோபத்துக்கு உன்னை…”
பவித்ரா பயத்துடன் தோழியின் கையை பிடித்தபடி, “திவி… வேணாம்டி… வா வீட்டுக்கு போகலாம்.”
தன் கையை கோபத்துடன் உதறி தோழியின் பிடியை தளர்த்தியவள், “சும்மா இருடி…” என்றுவிட்டு அவன் பக்கம் திரும்பி, “என்ன செய்யப் போற? அடிக்கப் போறியா? தைரியம் இருந்தா கை வைடா…! நீயா நானா பார்த்திடலாம்…”
“பொண்ணாடி நீ! சரியான பாஜாரி”
அவள் கோபத்துடன், “உன்னை மாதிரி பொறுக்கியிடம் இப்படி தான் நடந்துக்க முடியும்…”
“ஏய், வார்த்தையை அளந்து பேசு.”
“அதை நீ முதல்ல செய்”
“நான் பொறுக்கியா?”
“நீயும், உன் பார்வையும், செய்கையும், வேற எப்படி சொல்றது?”
“பொறுக்கி எப்படி நடந்துக்குவான்னு காட்டவா!”
இப்பொழுது பசங்களிடம் பதற்றம் வந்தது.
விக்னேஷ் கூட, “இவன் கூடலாம் நீங்க ஏன்கா பேசிட்டு… வாங்கக்கா போகலாம்” என்றான்.
அவன் கோபத்துடன், “டேய் பொடிப் பயலே! என்ன ரொம்ப துள்ற!” என்று எகிறினான்.
திவ்யா அடக்கிய கோபத்துடன் நிதானமாக, “ஒரு பொண்ணுக்கு உடளவில் டார்ச்சர் கொடுப்பவன் மட்டுமில்லை, மனதளவில் டார்ச்சர் கொடுப்பவனும் பொறுக்கி தான்.” என்றாள்.
அவன் கோபத்துடன், “என்னடி திரும்ப திரும்ப பொறுக்கினு சொல்லிட்டு இருக்கிற!” என்றபடி அவளை நெருங்கினான்.