ஜனனி, “சும்மாவே நீங்க அழகு… இப்படி வெட்கப் பட்டால் டாடி நிலைமை அவ்ளோ தான்”
சுபாஷினி கணவரைப் பார்க்க, அவரோ புன்னகையுடன் மகள் அறியாமல் கண் சிமிட்ட, மேலும் வெட்கப்பட்ட சுபாஷினி.. செல்லமாக கணவரை முறைத்து மகளிடம், “வாய் பேசியது போதும்… கிளம்பு.” என்றார்.
மூவரும் கிளம்பிச் சென்றனர்.
……………..
வீட்டிற்கு வந்த திவ்யாவை, பவித்ராவின் அன்னை வைஷ்ணவி இன்முகத்துடன் வரவேற்றார். உணவை முடித்துக்கொண்ட திவ்யா, அமைதியாக பவித்ராவின் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். அவளுக்குப் பிடித்த பாடல்களை கணினியில் ஒலிக்க விட்ட பவித்ரா, அவள் தலையை வருடிக் கொடுத்தாள். முன்தினம் உறக்கமின்றி படித்ததாலோ, இசை மற்றும் தோழியின் வருடல் தந்த இதத்திலோ.. திவ்யா மெல்ல கண் அயர்ந்தாள்.
அவள் உறங்கியதும் வெளியே வந்த பவித்ரா, அன்னையிடம் நடந்தவற்றை கூறி, “தயங்கி தயங்கி வரட்டுமானு கேட்டப்போ, என்னால் மறுக்க முடியலைமா… அதான் உங்களிடம் கேட்காம சரி சொல்லிட்டேன்… சாரி மா… அப்பா கிட்ட நீங்களே சொல்லிடுங்கமா…” என்றவள் அன்னை புன்னகைக்கவும்,
“வெளியே சிரித்து சேட்டை செய்தாலும், அவ உள்ளுக்குள் உடைந்து போய் இருக்கிறாமா… ப்ளீஸ் மா, அவ என்ன சேட்டை செஞ்சாலும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க… அப்பாவையும் பொறுத்துக்க சொல்லுங்கமா ப்ளீஸ்… முதல் முறை நம்ம வீட்டுக்கு வந்திருக்கா! நாம அவளை நல்லா பார்த்துக்கணும்மா ப்ளீஸ்”
“நல்லா பார்த்துக்கலாம்… கவலைப்படாத… அப்பாவை நான் சமாளிக்கிறேன்… இருந்தாலும், பெருசா எந்த வம்பிலும் மாட்டாம பார்த்துக்கோ.”
‘நான் சொன்னா கேட்கவா போறா!’ என்று மனதினுள் நினைத்தவள் அன்னையிடம், “சரி மா நான் பார்த்துக்கிறேன்… தேங்க்ஸ் மா” என்றாள்.
அவர் புன்னகைக்கவும், தன் அறைக்குச் சென்று தோழி பக்கத்தில் படுத்து உறங்கினாள்.
நல்ல உறக்கத்தில் இருந்து அடித்துப்பிடித்து எழுந்து அமர்ந்த பவித்ரா, தன் முன் சிரித்துக் கொண்டிருந்த தோழியை முறைத்தபடி, “ஏன்டி பிசாசு என் முகத்தில் தண்ணிய ஊத்தின? இப்போ தான் தூங்கவே ஆரம்பிச்சேன்…”
“இப்போ தான் தூங்க ஆரம்பிச்சியா! மணி என்ன தெரியுமா? ஆறு… நீ நாலு மணிக்கே வந்து படுத்ததா ஆன்ட்டி சொன்னாங்க.”
“வந்து படுத்தா உடனே தூங்கியிருக்கனுமா! நான் அஞ்சு மணிக்கு மேல தான் தூங்கவே ஆரம்பிச்சேன்.”
“போதும் போதும் எழுந்து வா.”
“வந்து என்ன செய்ய?”
“வெளியே பசங்க கிரிகெட் விளையாடிட்டு இருக்காங்க… நாமும் போய் விளையாடலாம்.”
“அடிப்பாவி அவன்க சின்னப் பசங்க… தெருவில் விளையாடுறான்க… அப்படி நாம போய் விளையாட முடியுமா?”
“ஏன் முடியாது?”
“லூசு.”
“உன் பெயரை ஏன் நீயே சொல்லிக்கிற!”
பவித்ரா முறைத்தபடி, “வைஷு மாதாவை கூட சமாளிச்சிரலாம் ஆனா….”
“மிஸ்டர் சந்திரமௌலி வரதுக்கு முன், நல்ல பிள்ளையா வீட்டுக்குள் வந்து உட்கார்ந்துக்கலாம்.”
“பக்கத்து வீட்டு அங்கிள் யாராவது சொல்லி, விஷயம் எப்படியும் தெரிஞ்சிரும்.”
“அப்போ நான் சமாளிக்கிறேன்.” என்றவள் “ஸ்ப்பா… உனக்கு விளக்கம் சொல்றதுக்கே நான் தனியா சாப்பிடனும் போல!”
“நான் வரலை.”
“சரி, சும்மா வந்து எனக்கு இன்ட்ரோ கொடுத்துட்டு விளையாடுறதை பாரு”
“நீ கிளம்பும் போது பெட்டி படுக்கையை கட்டி, என்னையும் ஹாஸ்டல் கூட்டிட்டு போற முடிவில் தான்டி இருக்க?”
“ஏய்! இது கூட நல்ல ஐடியாவா இருக்கே!”
“இருக்கும்… இருக்கும்.”
“ஸ்வீட் பவி… நான் இப்பவே போய் ஆன்ட்டி கிட்ட இதை பத்தி பேசுறேன்.” என்றபடி அவள் வெளியே செல்ல,
“ஏய் பிசாசு” என்று அலறியபடி இவளும் அவள் பின் ஓடினாள்.
பவித்ராவை பார்த்த அவளது அன்னை, “கொஞ்சமாவது பொறுப்பு இருக்குதா? ஆறு மணி வரை தூங்குற! திவ்யாவை பாரு… பொறுப்பா நல்ல பிள்ளையா சீக்கிரம் எழுந்து, விளக்கேற்றிப்ப சாமி பாட்டெல்லாம் அழகா பாடினா”
பவித்ரா கடுப்புடன் தோழியை முறைக்க, அவளோ வைஷ்ணவி பின் நின்று, இவளுக்கு அழகு காட்டினாள்.
வைஷ்ணவி, “சரி சரி… சீக்கிரம் முகத்தை கழுவி தலை சீவிட்டு வா… காபி சேர்த்து வைக்கிறேன்.” என்று கூறிச் செல்ல,
பவித்ரா, “நீ அம்புட்டு நல்லவளாடி!”
திவ்யா விரிந்த புன்னகையுடன், “யா யா…” என்றாள்.
பவித்ரா காபி அருந்தியதும் திவ்யா, “சீக்கிரம் வா… கிளம்பிட போறாங்க”
“அம்மா கிட்ட சொல்லணுமே!” என்று பவித்ரா தயங்க,
திவ்யா, “ஆன்ட்டி பவி வெளியே விளையாடுற பசங்களை இன்ட்ரோ கொடுக்கிறேன் சொன்னா… நாங்க கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வரோம்.” என்று கூற,
பவித்ரா மானசிகமாக நெஞ்சில் கை வைத்தபடி நிற்க, திவ்யா மனதினுள் சிரித்து வெளியே அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்.
வைஷ்ணவி, “எதுக்கு பவி?”
“அது வந்து மா… அது திவிக்கு கிரிகெட் ரொம்ப பிடிக்கும் அதான்.”
“சரி சரி… போங்க” என்றதும் தான், பவித்ரா நெஞ்சில் இருந்து கையை எடுத்தாள் (மானசிகமாக தான்).
திவ்யா பவித்ராவை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினாள்.
வெளியே சென்றதும், விளையாடிக் கொண்டிருந்த பசங்க நடுவில் போய் நின்ற திவ்யா, “ஹாய் பசங்களா! நான் திவ்யா… பவித்ரா பிரெண்ட்… என்னையும் உங்க ஆட்டத்தில் சேர்த்துக்கிறீங்களா?”
பதிமூன்று பதினான்கு வயதில் இருந்த அந்த ஆறு பசங்களும், அவளை மேலும் கீழும் பார்த்தனர்.
ஒருவன், “கிரிகெட் பத்தி ஏதும் தெரியுமா?”
திவ்யா கெத்தாக, “எ டு இசட்(Z) தெரியும்”
அவன், “நீங்க பேட்டிங்கா பௌலிங்-ஆ?”
“ரெண்டும் வரும்”
மற்றொருவன், “ஓ! பௌலிங்கில் எத்தனை வகை உண்டு தெரியுமா?”
“லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், பாஸ்ட் பௌலிங்… அதுலயும்… டாப்-ஸ்பின்னர், லெக்-பிரேக், ஆஃப்-பிரேக், ப்ளிப்பர், ஸ்லைடர், ஸ்லோவர் பால், பௌன்சர், யாகர், இன்-ஸ்விங்கர், அவுட்-ஸ்விங்கர், ரிவர்ஸ் ஸ்விங், லெக் கட்டர், ஆஃப் கட்டர் னு நிறைய இருக்குது.” என்றவளை வாயை பிளந்து பார்த்தனர் அந்தப் பசங்க.
பவித்ரா ‘உங்க அலப்பறையை யாரிடம் காட்டுறீங்க!’ என்பது போல் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க,
திவ்யா ஆர்வமுடன், “என்னடா, சேர்த்துக்கிறீங்களா?” என்றாள்.
அந்த பசங்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “எங்க டீம் தான் திவ்யா அக்கா” என்று சண்டை போட ஆரம்பித்தனர்.
பவித்ரா அமைதியான குரலில், “அடிப்பாவி, ஒத்துமையா இருந்த பசங்களை ஒரே நிமிஷத்தில் இப்படி அடிச்சுக்க வச்சிட்டியே!”
“சும்மா இருடி” என்றவள், “டேய் பசங்களா… இன்னைக்கு ஒரு டீமில் இருக்கிறேன்… நாளைக்கு ஒரு டீமில் இருக்கிறேன்… ஓகே வா?”
“சரி” என்றவர்கள் அடுத்து, “இன்னைக்கு எங்க டீம் தான்” என்று மீண்டும் சண்டை போட ஆரம்பித்தனர்.