விலகல் – 6
விடுதி வெளியே நின்றவரைக் கண்டதும், திவ்யாவின் அகமும் முகமும் இறுகியது. அவரை கண்டு கொள்ளாமல் அவள் கிளம்பத் தயாராக, பவித்ரா தயக்கத்துடன் நின்றாள்.
தன்னைத் தொடர்ந்து வராத தோழியைப் பார்த்து திவ்யா முறைக்க, அவளோ செய்வதறியாது திணறினாள்.
அப்பொழுது, “குட்டிமா… இந்த அப்பாவை மன்னிக்கவே மாட்டியா?” என்று பாசமும் ஏக்கமும் தவிப்பும் நிறைந்த குரலில் அவர் கேட்டார்.
‘குட்டிமா’ என்ற அழைப்பிலும், அவரது குரலில் இருந்த உணர்வுகளிலும், ஒரு நொடி திவ்யாவின் மனமும் கண்களும் கலங்கத் தான் செய்தது. ஆனால், அடுத்த நொடியே அவளது மனமும் உடலும் இறுகியது.
திவ்யா, அவரை திரும்பிப் பார்க்காமல் இறுகிய குரலில், “பவி கிளம்பலாம்.” என்றாள்.
பவித்ராவின் பார்வையோ, அவரை சுட்டிக்காட்டி கெஞ்சியது. திவ்யாவிடம் சிறிதும் மாற்றம் இல்லை.
திவ்யாவின் கூற்றில் அவர் பதறியவராக, “குட்டிமா, வீட்டுக்கு வாடா…! இந்த விடுமுறை நாட்களை எதிர் பார்த்துத் தான், உன்னோட பிரிவை கஷ்டப்பட்டு தாங்கிட்டு இருக்கேன்.”
“…”
“என் முகத்தை கூட பார்க்கப் பிடிக்கலையாடா?”
“என்னோட இந்த நிலைமைக்குக் காரணமான இவரை, நான் முற்றிலும் வெறுக்கிறேன்னு சொல்லு பவி.” என்று திவ்யா வெடித்தாள்.
“நான் அப்போ தெரியாம………….” திவ்யாவின் தீ பார்வையில் அவர் தடுமாறி, “இல்…லை… தெரிந்து தான் தப்பு செய்தேன்… ஆனா, அப்போ இருந்த ராகவன் வேறுடா…! அப்போ இளமையின் வேகத்திலும், பணத் திமிரிலும் தப்பு செய்துட்டேன். ஆனா, உன் சாருமா வந்து என்னை மனுசனா மாத்திட்டா. என்னை மன்னிக்கக் கூடாதாடா?”
‘சாருமா’ என்ற வார்த்தையில் இளகிய திவ்யாவின் மனம், அவரது கடைசி வாக்கியத்தில் மீண்டும் இறுகியது.
சில விஷயங்களை நினைத்துப் பார்த்தவள் தோழியிடம், “இவர் வாழ்க்கையில் வந்த மூன்று பெண்களிடமும், இவர் உண்மையா இல்லைனு சொல்லு.”
ராகவன் சட்டென்று, “சாருகிட்ட நான் உண்மையா தான் இருந்தேன்.”
திவ்யா இகழ்ச்சியான பார்வையுடன் அவரை பார்த்தபடி, “அப்படி இவர் உண்மையா இருந்து இருந்தா, இவர் வாழ்க்கையில் மூன்றாவது பெண் நுழைந்து இருக்க முடியாதுனு சொல்லு பவி.”
“அது… அது வந்து……” என்று சிறு குற்ற உணர்ச்சியுடன் அவர் திணறினார்.
திவ்யா நக்கலும் கோபமும் நிறைந்த குரலில், “இவரால் பதில் சொல்ல முடியாது.”
“இல்லை… அது நான்… உனக்காக தான்…”
“எனக்காக…!” என்று கோபமும் இகழ்ச்சியுமாகக் கூறியவள், “எனக்காகனா சூர்யா எப்படி வந்தான்னு கேளு பவி.”
பவித்ரா, இருவரின் உரையாடலையும் சங்கடத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். சற்று தள்ளி நிற்கலாம் என்று நினைத்தால், தோழி அடுத்த நொடியே கிளம்பிவிடுவாள் என்பதால், வேறு வழி இன்றி அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
ராகவன், “ஆனா, உனக்கு நல்ல அப்பாவா தானேடா இருந்தேன்… இப்பவும் அப்படி இருக்கத் தான் விரும்புறேன். என்னோட உயிர்டா நீ…! ப்ளீஸ்டா… அப்பா கூட வாடா”
திவ்யாவின் மனதினுள் பெரும் வலி எழுந்தது. அவள் மனதில் இருப்பதை அவரிடம் சொல்ல அவள் விரும்பவில்லை. என்ன தான் அவரை வெறுத்து, அவரை விலக்கி வைத்து அவரை வருத்தப்பட வைப்பதற்காகவே சில காரியங்களை செய்தாலும், தனது இந்த வலியை, அவரை வெறுப்பதற்கு காரணமான இதைச் சொல்லி அவரை கஷ்டப்படுத்த அவள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.
திவ்யா வேதனையுடனும், இயலாமையுடனும், சிறிது கலங்கிய விழிகளுடன் அவரைப் பார்த்து மறுப்பாக தலையை அசைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் கிளம்பினாள்.
பவித்ரா கிளம்பும் போது, “இப்போ உங்க வீட்டுக்கு தான் போறீங்களா? குட்டிமாவை நல்லா பார்த்துக்கோ.” என்ற ராகவனின் பேச்சு பவித்ராவிடம் இருந்தாலும், பார்வையோ செல்லும் மகளிடம் இருந்தது.
“எங்க வீட்டுக்கு தான் போறோம் அங்கிள்… திவியை நான் நல்லா பார்த்துக்கிறேன்… நீங்க கவலைப்படாதீங்க. நிச்சயம் ஒரு நாள் அவ உங்ககிட்ட வருவா.”
வெறுமையாகப் புன்னகைத்தவர், “சரி, நீ கிளம்பு” என்றார்.
பவித்ரா, அவசரமாக தோழியை நாடி ஓடினாள்.
மூச்சு வாங்க வந்தவளைப் பார்த்து திவ்யா, “என்ன சொன்னார்?”
“உன்னை நல்லா பார்த்துக்கச் சொன்னார்… இருந்தாலும், நீ ரொம்ப தான்டி செய்ற… அவர் பாவம்.”
வெறுமையாகப் பார்த்தவள், “உனக்கு சொன்னா புரியாது.”
“என்ன புரியாது?”
“அவருக்கு மட்டுமில்லை… எனக்கும் அவர் உயிராய் தான் இருந்தார்… ஆனா… ப்ச்… விடு.” என்று வேதனையுடனும், சலிப்புடனும் முடித்தாள்.
“மனசில் இருப்பதை என்னிடமாவது சொல்லேன்.”
“சொல்லி?”
“உன் பாரம் குறையுமே!”
திவ்யா விரக்தியாகப் புன்னகைத்தாள்.
“நீ ஒரு இம்சைடி”
“தேங்க்ஸ்” என்று திவ்யா புன்னகைக்கவும், பவித்ரா முறைத்தாள்.
“நான் தான் வண்டி ஓட்டப் போறேன்.” என்ற திவ்யாவின் அறிவிப்பில் நெஞ்சைப் பிடித்த பவித்ரா, “வேணாம்டி எனக்கு ரொம்ப நாள் உயிர் வாழும் ஆசை இருக்குது.”
“எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா?”
“நீ இருப்ப… நான் இருப்பேனா!” என்று பரிதாபமாகக் கேட்ட பவித்ராவை கண்டு, தன் கவலை மறந்து சிரித்தாள் திவ்யா.
அதை ரசித்துப் பார்த்தது மூன்று ஜீவன்கள். ராஜாராம், சுபாஷினி மற்றும் ராகவன் தான் அந்த மூன்று ஜீவன்கள்.
பவித்ரா கெஞ்சல்களை பொருட்படுத்தாமல் வண்டியை கிளப்பிய திவ்யாவின் கையில், பவித்ராவின் வண்டி பறந்தது. அவளது வேகத்தில், மழையில் நனைந்த கோழிக்குஞ்சைப் போல், பயந்துடன் பின்னால் அமர்ந்திருந்தாள் பவித்ரா.
…………………..
“இந்த ஆளுக்கு இங்கே என்ன வேலை?” என்ற ஜனனியின் கோபக் குரலில், ராஜாராமும் சுபாஷினியும் ஜனனியின் பார்வை இருந்த திசையை பார்த்தனர்.
கிளம்பிச் சென்ற திவ்யாவை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ராகவனைக் கண்டதும், சுபாஷினியிடம் இறுக்கமும் கோபமும் வந்தது. மனைவியின் கையை ஆதரவாகப் பிடித்த ராஜாராம் அமைதியாக இருந்தார்.
எதேச்சையாக இவர்களைப் பார்த்த ராகவன், சுபாஷினியை முறைத்து விட்டு, வேகமாகக் கிளம்பினார்.
ஜனனி கோபத்துடன், “நாம தான் முறைக்கணும். ஆனா உங்களை முறைச்சிட்டு போறார்… எனக்கு வர கோபத்திற்கு அந்த ஆளை!”
“ஜனனி” என்று ராஜாராமின் குரல் கண்டிப்புடன் ஒலித்தது.
“அட போங்க டாடி… நீங்க ஒரு அஹிம்ஸைவாதி”
“அவரைப் பற்றிய பேச்சு நமக்கெதற்கு?”
“அந்த ஆள்…” என்று ஏதோ சொல்ல வந்த ஜனனி, தந்தையின் கண்டிப்பு பார்வையிலும், அன்னையின் இறுக்கத்தையும் கண்டு, “சரி விடுங்க” என்றாள்.
ராஜாராம், “ஒன்றை நல்லா புரிஞ்சுக்கோ ஜனா… அன்பு மட்டுமே ஒருவரின் மனதை வெல்லும்.”
“எப்படி! நீங்க அம்மாவின் இதயத்தை வென்றது போலவா!” என்று குறும்புடன் கேட்டு கண்ணடித்தாள்.
சுபாஷினி அழகாக வெட்கபட்டபடி, மகளை செல்லமாக அடித்தார்.
மனைவியின் வெட்கத்தை புன்னகையுடன் ராஜாராம் ரசித்தார்.