குறிப்பு: இந்த கதை 2019யில் “LadysWings” என்ற தளத்தில், “Super Writer Contest 2019” என்ற போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

விலகல் – 1
அந்த வகுப்பே அமைதியாக இருக்க, ஆசிரியரின் தாலாட்டுப் பாடல் (ஆசிரியரின் விரிவுரை) மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவர் கரும்பலகை பக்கம் திரும்பி எழுதத் தொடங்கியதும், ஒரு சுண்ணத்துண்டு அவர் முதுகின் மீது பட்டுத் தெறித்தது.
கோபத்துடன் திரும்பிய ஆசிரியரின் பார்வை, மாணவர்கள் பக்கம் சிறிதும் செல்லவில்லை. முறைப்புடன் ஒரு மாணவியை ஆள்காட்டி விரலை அசைத்து எழக் கூறினார்.
பயபக்தியுடன் எழுந்தவளைப் பார்த்து, “நீ தான?” என்று வினவினார்.
அவள் அமைதியாக இருக்கவும்,
“எனக்கு தெரியும், நீ தான்னு… சொல்லு.”
அப்பாவியான முகபாவத்துடன் இருந்த அந்த மாணவி, “சாரி சார்… உங்க தலையத் தான் குறி வைத்தேன். குறி கொஞ்சம் தப்பி, உங்க முதுகுல பட்டிருச்சு.” என்றதும், அவர் பதில் சொல்வதறியாது அவளை முறைக்க,
“கோதாவுல இறங்கச் சொன்னா, தாதா பொண்ணு
கண்ணுல கெத்து இவ கண்ணுல கெத்து
வாய்ப்பில்லாம வச்சிடுவா வாயில குத்து
வாயில குத்து வாயில குத்து
ஏய் வா மச்சானே மச்சானே……….” என்ற பாடல் (‘இறுதி சுற்று’ திரைப்படம்) மாணவர்கள் பக்கத்தில் இருந்து கேட்டது.
அப்பொழுது வகுப்பு முடிவதற்கான மணி அடிக்கவும் அந்த ஆசிரியர், ‘திருந்தாத வானரக் கூட்டம்….! இதுங்கெல்லாம் எங்கே உருப்பட போகுது!’ என்ற முணுமுணுப்புடனும், முறைப்புடனும், வெளியேறினார்.
அவர் சென்றதும், “ஹே! சூப்பர் விஜி.” என்ற கூச்சலுடன் அந்த மாணவி தனது தோழனுடன் கை தட்ட,
அவனும், “நீயும் சூப்பரா கௌண்டர் கொடுத்த திவி.” என்றபடி கை தட்டினான்.
அப்பொழுது உள்ளே வந்த ஆசிரியை, “திவ்யா, விஜய் இடத்தில் உட்காருங்க.” என்று அதட்டினார்.
திவ்யா இடத்தில் அமர்ந்ததும், அவளது தோழி பவித்ரா, “எப்படிடி நீங்க ரெண்டு பேர் மட்டும் டிஸைன் டிஸைனா யோசிக்கிறீங்க?”
“ஏன்னா, எங்களுக்கு மட்டும் தான் மூளை இருக்கு.”
பவித்ரா முறைக்கவும், திவ்யா புன்னகையுடன், “மூளை இருந்தா, டாப்பரான நீ என்கிட்ட பிரெண்ட்டா இருப்பியா?”
“நான் டாப்பரா?”
“பின்ன, இல்லையா?”
“நிச்சயம் இல்ல! நீ நினைத்தால் நீ தான் டாப்பர்… நீ தான் நினைக்க மாட்டிக்கிறியே! ஏன்டி, இப்படி பண்ற?”
“…”
“அதானே! இப்போ உனக்கு காது கேட்காதே!”
“…”
“லூசு… ஏன்டி? உன் வாழ்க்கைய நீயே கெடுத்துக்கிற! நான் சொல்றதை கேளுடி…”
“மேம்.” என்று கத்தினாள் திவ்யா.
அவளது கத்தலில் பாடம் நடத்துவதை நிறுத்தி விட்டு, “எஸ்” என்றார்.
“உங்களுக்கு இந்த சாரீ சூப்பரா இருக்கு… உங்க அழகை செம்ம தூக்கலா(அழுத்தம் கொடுத்து கூறினாள்) காட்டுது.”
அவர் முறைக்கவும், “அப்படின்னு பவித்ரா சொன்னா.” என்றாள்.
“பவித்ரா! உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை.”
பதற்றத்துடன் எழுந்த பவித்திர, “சாரி மேம்” என்றாள்.
“ஓகே… சிட் டோவ்ன். கிளாஸ் கவனி.”
“ஓகே மேம்.” என்றபடி அமர்ந்தவள் திவ்யாவை முறைக்க, அவளோ அழகாக புன்னகைத்து கண் சிமிட்டினாள்.
பிறகு, “ஆனாலும், இந்த பெல்லுக்கு (மணிமேகலை என்ற அந்த ஆசிரியை பெயரை பெல் என்று மாற்றிவிட்டாள்) கான்பிடென்ஸ் அதிகம் தான்… அழகுன்னு சொன்னதை நம்பி, உன்னை திட்டுது பாரு.”
பவித்ரா அமைதியாக முறைத்துவிட்டு வகுப்பை கவனிக்கவும், திவ்யா அவளது காதில், “ஹ்ம்ம்… இது நல்ல பிள்ளைக்கு அழகு. அட்வைஸ்ங்கிற பெயரில், மொக்கை போடாம அமைதியா கிளாஸை கவனி.” என்றாள்.
தேநீர் இடைவேளையில் திவ்யா, “ஓவர் முறைப்பு உடம்புக்கு ஆகாதுடி”
“ஒரு வாரம் சஸ்பென்ஷன் முடிஞ்சு, இன்னைக்கு தானே வந்த… வந்த உடனே தேவையா?”
“பின்ன! நான் வந்துட்டேன்னு தெரிய வேணாமா!” என்றவள் யோசனையில் அமைதியாகி விட,
“என்னடி அமைதியா இருக்க? அது நல்லதுக்கு இல்லையே!”
“அந்த H.O.Dய இன்னைக்கே கவனிக்கவா, இல்லை… நாளைக்கு கவனிக்கவானு யோசிக்கிறேன்.”
“அடிப்பாவி!” என்று பவித்ரா அலற ஆரம்பிக்க…
“அஞ்சு வருஷமா, என்னை திருந்தச் சொல்லிட்டு இருக்கிறியே! நீ தான் கொஞ்சம் திருந்தேன்.”
“ச்ச்… என்னடி செய்யப் போற?”
திவ்யா புன்னகைக்கவும், “உன் சிரிப்பே எனக்கு பீதியை கிளப்புதே!” என்றாள்.
அப்பொழுது அங்கே வந்த விஜய், “திவி, என்ன பிளான்?”
“எரும! நானே அவளை அடக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கிறேன்.”
வாய்விட்டு சிரித்த விஜய், “ஐயோ! ஐயோ! காமடி! நீ திவியை அடக்கப் போற! ஐயோ! என்னால முடியல.” என்று அவன் மேலும் சிரிக்கவும்,
பவித்ரா மேஜை மீது இருந்த கனமான புத்தகத்தை வைத்து அவனை அடித்தாள்.
தூசி தட்டுவது போல் அவள் அடித்த இடத்தை தட்டியவன், “நீ சொல்லு திவி.” என்றான்.
“இன்னைக்கா, நாளைக்கானு சின்ன யோசனை”
“ஏன்?”
“நாளைக்கு அவன் பிறந்த நாளாம்… அதான் பிறந்த நாள் பரிசா இருக்கட்டுமா? இல்லை, இன்னைக்கு செஞ்சா தான் பவர்ஃபுல்லா இருக்குமானு யோசிக்கிறேன்…!” என்றாள்.
பவித்ரா பயத்துடன், “என்னடி செய்யப் போற?”
“வெயிட் அண்ட் ஸீ”
“இப்போ தான் சஸ்பென்ஷன் முடிந்தது.”
திவ்யா முறைக்கவும், பவித்ரா கடுப்புடன், “நான் தான்டி முறைக்கணும்.”
விஜய், “இவ கிடக்கிறா! நீ சொல்லு, என்ன பிளான்?”
திவ்யா முகத்தில் இருந்த தீவிரத்தை பார்த்த பவித்ரா, முறைப்பதை விட்டுவிட்டு, “ப்ளீஸ்டி, நான் சொல்றதை கேளு.” என்று கெஞ்ச ஆரம்பித்தாள். ஆனால், பலன் தான் எப்பொழுதும் போல் பூஜ்யம்.
விஜய் சிறு எரிச்சலுடன், “நீ ஏன் அந்த பிணம் தின்னிக்கு சப்போர்ட் செய்ற?”
பவித்ரா கோபமாக, “நீ சும்மா இருடா… அவளை ஏத்தி விடுறதே நீ தான்டா.”
“நான் ஏத்தி விடுறேனா!”
“பின்ன இல்லையா? எல்லாம் உன்னால் தான்”
“நான் அமைதியா இருந்துட்டா, திவி அமைதியா இருந்துருவாளா? சின்ன வயசிலிருந்து அவ கூடவே இருக்கிறனு சொல்லிக்கிறியே, உன் மனசாட்சியை தொட்டுச் சொல்லு… திவி ரொம்ப அமைதியான பொண்ணு… நான் தான் அவளை கெடுக்கிறேனா?”
“அவ வாலு தான். ஆனா, முன்னாடி இப்படி கிடையாது. அதுவும் நீ கூட்டு சேர்ந்த அப்புறம் தான் ரொம்ப செய்றா…”
“நான் அவளுடன் சேர்ந்து பனிஷ்மென்ட்டை ஷேர் செய்துக்கிறேன். அவ்ளோ தான்.”
“ச்ச்… உனக்கு சொன்னா புரியாது.”
“என்ன புரியாது? சும்மா, எப்போ பார்த்தாலும் இதையே சொல்லு… முன்னாடி இப்படி கிடையாது… எனக்கு புரியாதுனு… என்ன எனக்கு புரியாது? எனக்கு இப்போ தெரிந்தே ஆகணும், சொல்லு”
“…”
“சொல்லு” என்று அவன் கேட்ட பொழுது, வெடி வெடிக்கும் சத்தம் கேட்கவும், இருவரும் ஒருவரையொருவர் சிறு அதிர்ச்சியுடன் பார்த்து விட்டு, வேகமாக வெளியே ஓடினர்.
பல மாணவர்களும், சில ஆசிரியர்களும், அவர்கள் துறை தலைமை ஆசிரியர் அறை முன் நின்று கொண்டிருக்க, ஒரு ஆசிரியர் பூட்டி இருந்த அந்த அறையை திறந்து கொண்டிருந்தார். அவர் திறந்து அரை நிமிடம் கழித்து, வெடிச் சத்தம் நின்ற பிறகு.. புகை மண்டலத்தின் நடுவே தலைமை ஆசிரியர் வெளியே வந்தார்.
ஒரு ஆசிரியர், “ஏய் ஒரு சேர்(chair)எடுத்துட்டு வா.” என்றும், மற்றொரு ஆசிரியர், “யாராவது தண்ணி எடுத்துட்டு வாங்க” என்றும் கூறினர்.
சிறிது மிரண்ட முகத்துடன் வெளியே வந்த தலைமை ஆசிரியரின் தோள் பற்றிய ஒரு ஆசிரியர், “உட்காருங்க சார்” என்று கூறி, இருக்கையில் அமர வைத்து பருக தண்ணீர் கொடுத்தார்.
தலைமை ஆசிரியரை பார்த்த விஜய், “ச… சேதாரம் ஏதுமில்லாம வெளியே வந்துட்டானே!”
பவித்ரா அவனை முறைக்க, அவர்கள் அருகே இருந்த திவ்யா, “சிறுத்தை பட சந்தானபாரதி மாதிரி வரவர் முகத்தில் இருக்க பயத்தை நீ கவனிக்கலையா?” என்றாள்.
பவித்ரா, “இங்க தான் இருக்கிறியா! அவர் உன் முகத்தை பார்க்கல தானே!”
அவள் சிரிக்கவும், “டென்ஷன் ஏத்தாம சொல்லுடி, பிசாசு”
திவ்யா புன்னகையுடன், “கதவை மூடுறதுக்கு முன்னாடி தலையை மட்டும் உள்ள நீட்டி ‘அட்வான்ஸ் ஹாப்பி பிறந்த டே சார்’ னு சொல்லிட்டு தான் மூடினேன்.”
பவித்ரா தலையில் அடித்துக்கொள்ள,
விஜய், “இருந்தாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்” என்று கூற, திவ்யா சிரித்தாள்.
“ஏன்டி இப்படி படுத்துற? நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது. நடந்ததை உன்னால் மாற்ற முடியாது…”
திவ்யா இறுகிய குரலில், “நான் இப்படி தான். பிடிக்கலைனா என்னை விட்டு விலகிப் போய்டு.” என்று கூறிவிட்டு முன்னால் நகர்ந்தாள்.