அந்த சிறிய நிலவறையின் நடுவே ஒரு மேடான பகுதி இருக்க, அதன் மேல் தங்கத்தினால் செய்யப்பட பொக்கிஷப் பெட்டி இருந்தது. பெட்டியின் மேல் ராஜமுத்திரை கொண்ட பதக்கத்தை வைத்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றவும், பதக்கத்தை பொருந்தி இருந்த பகுதி சற்று மேல் நோக்கி வந்தது. அதன் பிறகு பதக்கத்தை இடதுபுறம் ஒரு சுற்று சுற்றியதும், பெட்டி திறந்தது.
பெட்டி திறந்ததும் சிறு இடைவெளி வழியே கண்கள் சிறிது கூசும் அளவிற்கு ஒளி பாய்ந்தது. பொக்கிஷ பெட்டியின் உள்ளே பஞ்சரத்தின உரையில் இருக்கும் ரணசிம்ம ராஜாவின் வாளும், நறுமுகை தேவியின் பஞ்சரத்தின நகைகளும், பொற்காசுகளும் இருந்தன.

குறிப்பு: கிடைத்த படங்களை இணைத்து இந்த பொக்கிஷ பெட்டி படத்தை தயாரித்தேன்.. ரணசிம்ம ராஜா வாளை வர்ணித்தது போல் இந்த வாள் இல்லையே என்று நினைக்க வேண்டாம்.. அட்டாணியின் படங்களுமே அப்படி தான், இரண்டு மூன்று படங்களை இணைத்து ஒரு படமாக உருவாக்கி தந்துள்ளேன்.
பொக்கிஷப் பெட்டியை மூடி தயாளனும் மாறவர்மசிம்மனும் தூக்கிக் கொள்ள, பூங்குழலி இரு தீபந்தங்களையும் ஏந்தியபடி வழி காட்ட, மூவரும் மேலே சென்றனர்.
மேலே சென்றதும், மாறவர்மசிம்மன் ராஜ முத்திரை மோதிரத்தை இடதுபுறம் சுற்றி மீனை பழையபடி தலைகீழாக கொண்டு வந்து, மோதிரத்தை எடுத்துக் கொண்டதும், நிலவறைக் கதவு மூடிக் கொண்டது.
பின் அவன் கொண்டு வந்திருந்த பெரிய கனமான தோல் பையினுள், பொக்கிஷப் பெட்டியை வைத்தனர்.
அதன் பிறகு கொண்டு வந்திருந்த காலை உணவை உண்ட பின், மலை அடிவாரத்தை நோக்கிப் பயணித்தனர்.
தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் காலி ஆனதும், பூங்குழலியின் பையில் முக்கால் பங்கு இடம் காலியாக இருக்கவும், அவளது பையை மாறவர்மசிம்மனின் பையினுள் வைத்தனர். மாறவர்மசிம்மனின் பையை பூங்குழலி தூக்கிக் கொள்ள, தயாளன் மற்றும் சுதிரின் பைகளை மாறவர்மசிம்மன் தூக்கிக் கொள்ள, தயாளனும் சுதிரும் பொக்கிஷப் பெட்டி இருக்கும் பையைத் தூக்கிக் கொண்டனர்.
ஏறும் பொழுது இருந்தது போல், எந்த ஒரு இடையூறும் இப்பொழுது இல்லாததாலும், ஏறுவதை விட இறங்குவது சற்று சுலபம் என்பதாலும், வேகமாக கீழே இறங்கி இருந்தனர்.
நேரம் பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது.
பொக்கிஷப் பெட்டி இருக்கும் பையை மாறவர்மசிம்மனின் வண்டியில் இறுக்கமாகக் கட்டினர். மற்ற இரண்டு பைகளில் ஒன்றை இன்னொரு வண்டியின் பின் பக்கம் கட்டியவர்கள் மூன்றாவது பையை வண்டியின் முன் பக்கம் இருக்கும் கல்நெய்-தகரி(Petrol tank) மேல் வைத்தனர்.
சுதிர் தனது தம்பியை கைபேசியில் அழைத்து சிவகிரி வந்துவிட்டானா என்று விசாரிக்க, அவன் அப்பொழுது தான் வந்ததாகக் கூறினான். தென்காசி நோக்கி வரும் படி கூறியவன், புளியங்குடியில் காத்திருக்கக் கூறினான்.
கிளம்பிய போது செய்தது போல் இப்பொழுது செய்தால், மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க அதிக வாய்ப்பு இருப்பதால், எழில்புரத்தில் இருந்து தள்ளி இருக்கும் புளியங்குடியை தேர்ந்தெடுத்து இருந்தான்.
அதன் பின் இவர்கள் கிளம்பி புளியங்ககுடி சென்றனர். இவர்கள் சென்ற போது சுதிரின் தம்பி இவர்களுக்காக காத்துக் கொண்டு இருந்தான். பைகளை மகிழுந்தில் ஏற்றிய பிறகு, மாறவர்மசிம்மன் மற்றும் பூங்குழலி வண்டியில் ஏற, சுதிர் வண்டியை கிளப்பினான். தயாளனும் சுதிரின் தம்பியும் இருசக்கர வண்டியில் கிளம்பினர்.
சுதிர் மகிழுந்தை பொது கழிப்பிடம் இருக்கும் இடத்தில் நிறுத்த, தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின், பூங்குழலி கீழே இறங்கி கழிப்பிடம் நோக்கிச் சென்றாள். இப்பொழுது சட்டை மற்றும் கால்சட்டை உடையில் அணிகலன்களை அணிந்து, நெற்றியில் பொட்டு வைத்து இருந்தவளின் கையில் சிறு பை இருக்க, அதனுள் காலையில் கட்டிய புடவை இருந்தது. கழிவறையினுள் சென்றவள் பத்து நிமிடத்தில் புடவையில் வெளியே வந்தாள்.
இப்பொழுது தலை முடியை சீவிப் பின்னலிட்டு இருந்தாள். கழிப்பறை பொறுப்பில் இருந்த பெண்மணி இவளை வாய் பிளந்து பார்க்க, அவள் அதை கண்டு கொள்ளாமல் வண்டியில் ஏறினாள்.
அடுத்து வண்டி ரோஜாவனம் சென்று தான் நின்றது. தீரனின் உதவியுடன் சுதிர் பைகளை அரண்மனையினுள் வைத்தான்.
மாறவர்மசிம்மனின் திட்டப்படியே பொக்கிஷ தேடலை வெற்றிகரமாக முடித்து இருந்தனர்.
மூன்று வாரங்கள் கழித்து…….
அரண்மனை விழாக் கோலம் பூண்டிருக்க, மக்கள் ஒரு பக்கம் திரளாக குவிந்துக் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் முக்கிய பிரமுகர்கள் வந்து கொண்டு இருக்க, அரண்மனை காவலர்களும், காவல்துறை காவலர்களும் அல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
கொலுவிருக்கை முன் பெரிதாக பந்தல் போட்டு மணமேடை அமைத்து இருக்க, அங்கே ராஜா உடையில் ராஜ தோரணையில் மாறவர்மசிம்மன் அமர்ந்து இருக்க, அவன் அருகே ராணியின் உடையில் தோரணையுடன் அவனது அழகு தேவதை பூங்குழலி அமர்ந்து இருந்தாள்.
மாறவர்மசிம்மனின் ஏற்பாட்டில் மணமேடையில் அவனது தாய் தந்தை ஒன்றாக இருக்கும் பெரிய புகைப்பட சட்டம் இருந்தது.
முன் வரிசையில் ராஜமாதா, மகாராணி, பராந்தக கேசரி, பராந்தக கேசரியின் மனைவி, ஆசிரம ஐயா, ஆணையர் சங்கரநாராயணனும் அவரது குடும்பத்தினரும் அமர்ந்து இருந்தனர்.
இளவரசன், இளவரசி மற்றும் அமரகேசரி மண மேடையில் இருந்தனர். அமரகேசரியின் விடா முயற்சியில், இளவரசி முழுதாக மனம் மாறி இருந்தாலும், இது வரை மாறவர்மசிம்மனிடம் அன்பாகப் பேச வில்லை. ஆனால், தங்கையின் மன மாற்றத்தை மாறவர்மசிம்மன் உணர்ந்து தான் இருந்தான்.
நறுமுகை தேவியின் நகைகளில் ஒரே மதிப்புள்ள மூன்று நகைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மற்றதை மக்கள் நலனுக்காக உபயோகிக்கும் நிதியுடன் மாறவர்மசிம்மன் சேர்த்து இருந்தான். அந்த மூன்று நகைகளின் ஒன்றை பூங்குழலி தற்போது அணிந்து இருக்க, இன்னொன்றை இளவரசி அணிந்து இருக்க, மற்றொன்றை இளவரசனின் மனைவிக்காக எடுத்து வைத்து இருந்தான்.
ரணசிம்ம ராஜாவின் வாள் ரோஜாவனம் அரண்மனையில் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக இருக்கிறது.
சந்ரா, மண மேடையின் ஓரத்தில் நின்றுக் கொண்டு இருந்தார். வந்திருந்தவர்களை கவனிப்பதிலும், கண்காணிப்பதிலும் நிற்க நேரம் இல்லாமல் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த தீரன், தயாளன் மற்றும் சுதிர் தாலி கட்டும் நேரத்தில் சரியாக மணமேடை அருகே வந்து விட்டனர்.