குழலிசை 25
சிறிது தூரப் பயணத்திற்குப் பிறகு, முட் புதர்களை கடந்ததும், மற்றொரு அட்டாணியைக் கண்டனர். இந்த அட்டாணி முதலில் சென்ற அட்டாணியை விட உயரத்திலும் சற்று வித்யாசமாகவும் இருந்தது.

அதைப் பார்த்ததும் பூங்குழலி, “இந்த அட்டாணி முதற் தளம் கூட இல்லாமல் இருந்தாலும், வித்யாசமா இருக்குதே! இதை மலையைக் குடைந்து உருவாக்கி இருக்கிறாங்களோ?” என்றாள்.
அவளை மெச்சும் பார்வை பார்த்த மாறவர்மசிம்மன், “ஆம் தேவி.. இந்த அட்டாணியை மலையை குடைந்து தான் உருவாக்கி இருக்கிறார்கள்” என்றான்.
“அந்த காலத்திலேயே எந்த வித தொழில் நுட்ப உதவியும் இல்லாமல், எப்படி உருவாக்கி இருக்கிறார்கள்!” என்று பிரம்மிப்புடன் கூறினாள்.
அவன், “திருப்பரங்குன்றம் கோவில், கழுகுமலை வெட்டுவான் கோவில் எல்லாம் மலையைக் குடைந்து உருவாக்கியது தான்.. ஒரு கோவிலையே மலையை குடைந்து உருவாக்கி இருக்கிறப்ப, இந்த அட்டாணி எம்மாத்திரம்!” என்றான்.
அவள் இன்னும் பிரம்மிப்புடன், “திருப்பரங்குன்றம் கோவில் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அந்த கோவிலுக்குச் சென்றது இல்லை.. இரண்டுமே, முழு கோவிலுமே மலையை குடைந்து உருவாக்கியது தானா?” என்று கேட்டாள்.
“ஆம் தேவி.. கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவில் இருக்கும் கழுகுமலை வெட்டுவான் கோவில், எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் கட்டப் பட்டது. ஒரே ஒரு பெரிய மலைப் பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்புறத்தை கோவிலாக செதுக்கி உள்ளனர்.

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் கோவில் சுப்ரமண்ய சுவாமியின் கருவறை, பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னர் காலத்தில், அவரது படைத்தலைவன் சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில்..
சுப்ரமண்யசுவாமி கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப் பட்டுள்ளன. சுப்ரமண்யசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயகர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி என்று ஐந்து சந்நிதிகள் இருக்கிறது”

“என்னவொரு அற்புதமான படைப்புகள்!”
“ஆம் தேவி.. நெல்லையப்பர் கோவிலில் இசைத் தூண்கள் இருக்கிறன.. உலக அதிசயங்களில் நம் தமிழ்நாட்டின் கோவில்களை சேர்க்கும் அளவிற்கு பல அற்புதங்களை, நம் கோவில்கள் கொண்டுள்ளது.. நம் தமிழர்களுக்கே இவற்றின் அருமை பெருமைகள் தெரியாத போது, மற்றவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது!” என்றவன், “சரி, நம் தேடலை ஆரம்பிப்போம்.” என்றான்.
அந்த அட்டாணியின் உள்ளே சென்றனர். வெளிச்சம் சற்று குறைவாக இருக்கவும், மாறவர்மசிம்மனின் அறிவுறுத்தலில் சுதிர் இரண்டு தீப்பந்தங்களை ஏற்றினான்.
அதன் பிறகு மண்டபத்தின் உள்ளே வெளிச்சம் பரவியது.
நால்வரும் அங்குலம் அங்குலமாக நிதானமாகத் தேட ஆரம்பித்தனர்.
இந்த முறையும் பூங்குழலியின் கண்ணில் தான் அந்த இடம் தென்பட்டது. ஒரு இடத்தில் பாண்டிய கொடியை செதுக்கி இருக்க, அது வித்யாசமாக இருந்தது.
சுதிர் மற்றும் தயாளன் இருப்பதை மறந்து அவள், “மாறா” என்று அழைக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும், தங்களின் சிறு அதிர்ச்சியை கூட வெளிபடுத்த வில்லை.
அதைக் கவனித்த மாறவர்மசிம்மன் கண்டு கொள்ளாதது போல், “என்ன கண்டுபிடித்தாய், தேவி?” என்றபடி அவள் அருகே சென்றான்.
“இங்கே பாருங்க.. பாண்டிய கொடியை செதுக்கி இருக்காங்க.. ஆனா, இதில் வித்யாசம் இருக்குது.. கொடியில் இரண்டு மீன்களின் தலை பகுதி மேலே தானே இருக்கும்.. இங்கே ஒரு மீனோட தலை கீழேயும் வால் மேலேயும் இருக்குது.” என்றாள்.

மாறவர்மசிம்மன், “சுதிர்” என்றபடி கையை நீட்ட, அவன் இவனது கையில் தீபந்தத்தைக் கொடுத்தான்.
தீபந்தத்தை அதன் அருகே கொண்டு சென்றதும் இன்னும் தெளிவாகத் தெரிய, “தலை மேலே இருக்கும் மீனின் கண்ணில் திருகை அமைப்பு இருக்கிறது பார் தேவி” என்றவன் தனது ராஜமுத்திரை மோதிரத்தை மீனின் கண்ணில் வைத்துத் திருப்ப முயற்சிக்க, அவனால் அதை திருப்ப முடியவில்லை.
அவள், “என்னாச்சு?” என்று வினவ,
“மோதிரம் சரியாகப் பொருந்தி தான் இருக்கிறது. ஆனால், திருப்ப முடியவில்லை.” என்றபடி யோசித்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
மோதிர வளையத்தினுள்ளே இடது கை ஆள்காட்டி விரலை நுழைத்த படி, உள்ளங்கை கொண்டு மீனை அவன் அழுத்தவும், அந்த மீன் உள்ளே சென்றது. உடனே உள்ளங்கையை சுருக்கியபடி மீனின் தலை பகுதியில் மற்ற நான்கு விரல்களின் நுனியால் அழுத்திப் பிடித்தபடி, வலது கரத்தினால் தலைகீழாக இருந்த மீனை திருப்பி நேராக்கினான்.
அதன் பின் மோதிரத்தை திருப்ப முடிந்தது. மோதிரத்தை முழுவதுமாக ஒரு முறை சுற்றி முடித்ததும், அவர்கள் நின்ற இடத்திற்கு அருகே, தரைப் பகுதி கீழே திறந்து கொள்ள, நிலவறைக்குச் செல்ல படிகள் இருந்தது.
அனைவரின் கண்களிலும் பிரம்மிப்பு தெரிந்தது. ரணசிம்ம ராஜா மலையை குடைந்து ரகசிய குகை நிலவறையை உருவாக்கி இருந்தார்.
இந்த முறை சுதிர் மச்சபுள்ளி அருகே நிற்க, மற்ற மூவரும் கீழே சென்றனர். தீப்பந்தத்தை ஏந்தியபடி தயாளன் முதலில் செல்ல, அவனைத் தொடர்ந்து பூங்குழலி செல்ல, அவளைத் தொடர்ந்து தீப்பந்தத்தை ஏந்தியபடி மாறவர்மசிம்மன் சென்றான்.