உள்ளே இருந்த அமைப்பைப் பார்த்தவன், “கழுத்து சங்கலியின் பதக்கத்தை பொருத்துவது போல் இருக்கிறது, தேவி” என்றபடி தான் அணிந்து இருந்த சங்கலியைக் கழட்டி அதன் பதக்கத்தைப் பொருத்தி, இரண்டு முறை திருப்பினான்.
அந்த போர்வீரனின் வலது புறம், சுவர் உள் வாங்கி நகர, மாறவர்மசிம்மன் கூறியது போல், ரகசிய அறை இருந்தது.
அவன், “தயா.. சுதிர்” என்று குரல் கொடுக்க, இருவரும் வேகமாக கீழே வந்தனர்.
ரகசிய அறையைப் பார்த்ததும் இருவரின் கண்களிலும் மகிழ்ச்சி தெரிந்தது.
மாறவர்மசிம்மன், “தயா, நீ வெளியேவே இரு.. நாங்கள் மூவரும் உள்ளே சென்று பார்க்கிறோம்.. ஒருவேளை கதவு மூடிக் கொண்டது என்றால், இந்த பதக்கத்தை இரண்டு முறை இடதுபுறம் திருப்பி வெளியே எடுத்து விடு. பின் இந்த போர் வீரனின் கண்ணை அழுத்தி, பதக்கத்தை மீண்டும் பொருத்தி இரண்டு முறை வலதுபுறமாகத் திருப்பு.. கதவு திறந்து் கொள்ளும்.” என்றான்.
தயாளன், “சரி ராஜா” என்றதும்,
“சுதிர், தீ பந்தம் எடு” என்றான்.
சுதிர் அவனது பையில் இருந்து சிறு கட்டையை எடுத்து, அதற்கென்று வைத்திருந்த துணியை அதன் மேல் பகுதியில் சுற்றி, எரி எண்ணையை ஊற்றி துணியை நனைத்தான். பின் தீப்பெட்டியை எடுத்து தீக்குச்சியை உரசி, துணியை பற்ற வைத்தான்.
அதன் பின் மூவரும் உள்ளே சென்றனர்.
உள்ளே கும்மிருட்டாக இருக்க, தீ பந்தத்தின் ஒளியில் அறையினுள் வெளுச்சம் பரவியது.
அந்த இடத்தைப் பார்த்ததும் மாறவர்மசிம்மன், “இது பொக்கிஷ அறை போல் தெரியவில்லை.. இது ஆயுதக் கிடங்காக இருந்திருக்க வேண்டும்.” என்றான்.
பூங்குழலி, “ஆயுதங்களுக்கு ரகசிய அறையா?” என்று கேட்டாள்.
“போர் காலத்தில் ஒரு வேளை எதிரிகள் முற்றுகையிட்டு விட்டால், அவர்களுக்கு நம் ஆயுதங்கள் கிடைக்காமல் இருக்க, இப்படி செய்து இருப்பார்கள்.”
“ஓ! ஆனால் ராஜமுத்திரை பதக்கத்தை வைத்து தானே அறையை திறந்தீர்கள்! ராஜா ஒவ்வொரு முறையும் இங்கே வந்து திறந்து கொடுப்பாரா?” என்று அடுத்த சந்தேகத்தைக் கேட்டாள்.
“ராஜா தான் வர வேண்டும் என்று இல்லை.. சேனாதிபதியிடம் ராஜமுத்திரை கொண்ட பதக்கத்தை கொடுத்து இருப்பார்.” என்றவன், “எதற்கும் ஒரு முறை நன்றாக ஆராய்ந்து விடுவோம்.” என்றான்.
சுற்றி சுற்றிப் பார்த்தவர்களுக்கு ஒன்றும் புலப்பட வில்லை என்றதும் வெளியே சென்றனர்.
தயாளனிடம் உதட்டை வளைத்து மறுப்பாக தலை அசைத்த மாறவர்மசிம்மன், “பழச்சாறு அருந்திவிட்டு சிறிது நேரம் இங்கே அமர்ந்து யோசிப்போம்.” என்றான்.
சந்ரா தயாரித்து கொடுத்து இருந்த பழச்சாறை நால்வரும் அருந்தினர். பின் யோசிக்க ஆரம்பித்தனர்.
சிறிது நேரத்தில், “ஒரு நிமிசம்” என்றபடி எழுந்த பூங்குழலி, வேகமாக வெளியே சென்றாள்.
“என்ன தேவி?” என்றபடி மாறவர்மசிம்மனும் அவள் பின்னால் செல்ல,
தயாளன், “நீ இங்கேயே இரு” என்று சுதிரிடம் கூறிவிட்டு மாறவர்மசிம்மனை வேகமாகத் தொடர்ந்தான்.
பூங்குழலி ஒவ்வொரு புதராகத் தேட, மாறவர்மசிம்மன், “என்ன தேடுகிறாய் என்று கூறி விட்டுத் தேடு தேவி.. நானும் தேடுவேன் இல்லையா?” என்றான்.
அவள் தேடிய படி, “அப்போது வந்த போது ஒரு பாறையில் மீனின் தலை தெரிந்தது போல் இருந்தது.. புதர் மறைத்துக் கொண்டு இருந்ததால், இடத்தை கடந்த பிறகு தான் மூளையில் உரைத்தது.. அப்பொழுது அட்டாணியைப் பார்க்கவும் இதை விட்டு விட்டு வந்துவிட்டேன்.” என்றாள்.
மாறவர்மசிம்மன் மற்றும் தயாளனும் அவளுடன் சேர்ந்து தேட ஆரம்பித்தனர்.
சில நொடிகளில் தயாளன், “ராஜா” என்று அழைத்தான்.
இருவரும் அவன் அருகே செல்ல, தயாளன் பிடித்து இருந்த புதரின் பின் இருந்த பாறையில் வட்ட வடிவில் ஏதோ செதுக்கி இருக்க, அதை கூர்ந்து கவனித்தால், ஒரு மீனின் உருவம் தெரிந்தது.
மாறவர்மசிம்மன் மகிழ்ச்சியுடன், “அருமை தேவி.. ஒவ்வொரு முறையும் நீ தான் கண்டு பிடிக்கிறாய்.. இந்த மீனின் வால், நாம் இப்போது சென்ற அட்டாணி இருக்கும் திசையை நோக்கி இல்லை.. இந்த வால் குறிக்கும் திசையில் சென்றால் பொக்கிஷம் இருக்கும் அட்டாணி இருக்கலாம்.” என்றான்.
அவள் மென்னகையுடன், “தமிழ் புலமையில் மேதையான நீங்கள் புதிரின் அர்த்தத்தை கண்டு பிடிக்கிறீர்கள்.. என்னால் முடித்த உதவியை நான் செய்கிறேன்.. அவ்வளவு தான்.” என்றாள்.
“இது உனது தன்னடக்கம், தேவி”
“அப்போ, உங்களை என்ன சொல்ல?”
“சரி விவாதம் வேண்டாம்.. கிளம்புவோம்.” என்று அவன் கூற,
தயாளன், “நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள் ராஜா.. நானும் சுதிரும் பைகளை கொண்டு வருகிறோம்.” என்றான்.
மாறவர்மசிம்மனின் தலையசைப்பில் தயாளன் அவர்கள் சென்ற அட்டாணி நோக்கிச் சென்றான்.
அவள், “ஆக.. ‘மாயோன் முடிவின் வழி அட்டாணி கிட்டும்’ என்பதற்கு மச்சாவதாரதின் முடிவின் வழியில் சென்றால் அட்டாணி இருக்கும் என்பது தான் பொருள்.” என்றாள்.
“ஆம் தேவி.. ஆனால் அடுத்த வரிக்கான அர்த்தம், ‘மீனில் இருக்கும் புள்ளி.. அதாவது திருகையில் ராஜமுத்திரை இருக்கும் மோதிரத்தை வைத்து சரியாக இயக்கினால், பொக்கிஷ அறை தோன்றும்.’ என்பது தான் பொருளாக இருக்க வேண்டும்”
“ஏன் அப்படிச் சொல்றீங்க? இப்போ இந்த அட்டாணியில் நீங்க முதலில் சொன்ன பொருள் தானே சரியாக இருந்தது.. சிறப்பு மச்சம் கொண்ட நீங்கள் ராஜமுத்திரை உடைய பதக்கத்தை, குறிப்பிட்ட புள்ளியில் வைத்து சரியாக இயக்கியதும் தானே, ரகசிய அறை திறந்தது!”
“அதனால் தான் சொல்கிறேன்.. பொதுவாக தெரிந்த ஒரு விஷயத்தையே பொக்கிஷ அறையைத் திறக்கவும் வைத்து இருக்க மாட்டார்கள்.. ஆகையால் மச்சபுள்ளி மற்றும் ராஜவந்தத்திற்கு நான் கூறிய இன்னொரு பொருள் தான் சரியாக இருக்கும்.”
“அதுவும் சரி தான்.. அப்போ
‘மச்சாவதாரதின் முடிவின் வழியில் சென்றால்
கோட்டை மதில் மேல் மண்டபம் இருக்கும்..
மீனின் திருகையில் ராஜமுத்திரை மோதிரத்தை சரியாக இயக்கினால்,
பொக்கிஷ அறை தோன்றும்’
என்பது தான் புதிரின் விடை.. சரியா?”
“அப்படி தான் நினைக்கிறேன்.. பார்க்கலாம்.”
தயாளனும் சுதிரும் வரவும் மீனின் வால் காட்டிய திசை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர்.
குறிப்பு: நாளை கதை முடிந்துவிடும்.
குழலின் இசை தொடரும்…