குறிப்பு: இறுதி நிலை போட்டியில் பதில் கூறியவர்களின் விடைக்கான மதிப்பெண்களை அந்த திரியிலேயே சொல்லி இருக்கிறேன்.. பார்த்துக்கோங்க தோழமைகளே!!
இரு வெற்றியாளர்கள் யார் என்பதை கீழே இருக்கும் திரியில் சொல்லி இருக்கிறேன்…
குழலிசை 24
காலை 4.50 மணிக்கு மலைக் காட்டின் அடிவாரத்தில் மரத்தின் கீழ் சற்று மறைவாக இருசக்கர வண்டிகளை நிறுத்தியவர்கள், தங்கள் பையை தோளில் மாட்டிக் கொண்டு, கைவிளக்குடன்(torch light) நடக்க ஆரம்பித்தனர்.
சுதிர் முதலில் செல்ல, அவனுக்குப் பின் மாறவர்மசிம்மனும் பூங்குழலியும் ஒன்றாகச் செல்ல, அவர்களுக்குப் பின் தயாளன் சென்றான்.
சற்று தூரம் சென்ற பிறகு அடர்ந்த காடாக இருக்கவும், வழி தவறாமல் இருப்பதற்காக, சுதிர் சிறு சிறு மரக்கிளைகளை உடைத்துக் கொண்டே சென்றான்.
மாறவர்மசிம்மன், “பாம்புச் சட்டை கிடக்கிறது.. சற்று கவனத்துடன் இருங்கள்.” என்றான்.
ஒர் இடத்தில் ஒரு மரத்தின் கிளைகள் நன்றாக வளைந்து வளர்ந்து இருக்க, தாவிக் குதித்து இரு கிளைகளின் நடுவே நுழைந்து தான் கடந்தனர்.
அவ்வபோது தண்ணீரை அருந்திய படி சென்றவர்கள், சிறிது தூரம் சென்றதும் முள் மரங்ககளாக இருக்கவும், நின்றனர்.
சுதிரும் தயாளனும் மரக்கிளைகளை வெட்டி எறிந்தபடி செல்ல, மாறவர்மசிம்மனும் பூங்குழலியும் அவர்கள் பின்னால் சென்றனர்.
“ஸ்ஆ” என்று மெலிதாகக் கூறியபடி கையை உதறிய சுதிர், “பூச்சிகள் இருக்கிறது.. கவனமாக வாங்க ராஜா” என்றபடி முன்னேறினான்.
சரியாக அப்பொழுது ஒரு பூச்சியை பார்த்த மாறவர்மசிம்மன், “சுதிர்” என்று அழைக்கவும், சுதிர் நின்று திரும்பினான்.
மாறவர்மசிம்மன் தனது பையில் இருந்து சிறு மருந்து பெட்டியை எடுத்தபடி, “உன் கையை காட்டு” என்றான்.
“ஒன்றுமில்லை ராஜா” என்று அவன் மறுக்க ஆரம்பிக்க,
மாறவர்மசிம்மன், “கையை காட்டக் கூறினேன்” என்று அழுத்தத்துடன் கூறினான்.
அவன் மறுபேச்சின்றி கையை காட்டவும், மணிக்கட்டில் சிகப்பாக இருந்த சிறு புள்ளியின் மீதும், அதை சுற்றியும் மருந்தை தடவிய மாறவர்மசிம்மன், “இது விஷ பூச்சிக் கடி தான்.. ஆனால், விஷத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்.. இப்போது மருந்து போட்டதால் எதுவும் பிரச்சனை இருக்காது.” என்றான்.
பின் கீழ் இருந்து சிறு கிளையை எடுத்தவன் தயாளனிடம், “இதன் முற்களையும் இலைகளையும் சீவி எடு” என்றான்.
தயாளன் அவ்வாறே செய்து தரவும், அதை சுதிரிடம் கொடுத்த மாறவர்மசிம்மன், “நான் விளக்கை அடிக்கிறேன்.. நீ இதை வைத்து முதலில் கிளையை தட்டிவிட்டு, பின் வெட்டு” என்றான்.
“சரி ராஜா” என்றபடி அவன் வாங்கிக்கொள்ள,
மற்ற இருவரையும் பார்த்து, “கவனமாக வாங்க” என்றான்.
பயணம் தொடர்ந்தது. அடுத்து சற்று அடர்த்தியான செடிகள் இருந்தது.
இப்பொழுது செடிகளை ஊடுருவிய படி ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். சுதிர் முதலில் செல்ல, அடுத்து பூங்குழலி செல்ல, அவளுக்கு அடுத்து மாறவர்மசிம்மன் செல்ல, இறுதியாக தயாளன் சென்றான்.
சிறிது தூரம் சென்றதும், ஏதோ சத்தம் கேட்டு தயாளன் பையில் இருந்து கத்தியை எடுக்க, அதற்குள் மாறவர்மசிம்மன் இரும்பு வளரியை ஒரு இடத்தை நோக்கி வீசி இருந்தான். வெகு சில நொடிகளில் வளரி அவனது கைக்குத் திரும்பியது.
ஒரு மிருகத்தின் ஓலச்சத்தம் கேட்கவும், சுதிர் அவ்விடத்திற்கு விரைந்தான். அங்கே மாறவர்மசிம்மன் வீசிய வளரிக்கு காட்டுப்பன்றி ஒன்று இரையாகி இருந்தது.
மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர். கோட்டை அருகே நெருங்கவும், பாறைகளும் புதர்களுமாக இருந்தது.

நேரம் ஆறு மணியை நெருங்கவும், நன்றாக விடிய ஆரம்பித்து இருக்க, கைவிளக்கின் உதவி இன்றியே, வழி அவர்களுக்குப் புலப்பட்டது.
இன்னும் சிறிது தூரம் சென்றதும், இரண்டடுக்கு அட்டாணி ஒன்று தென்பட்டது. அதைக் கண்டதும் வேகமாகச் சென்றனர்.

அட்டாணியின் உள்ளே இன்னும் சூரிய ஒளி படராமல் இருக்கவும், சற்று இருட்டாக இருந்தது. சுதிர் உள்ளே காலெடுத்து வைக்கவும், சில வௌவால்கள் வேகமாக வெளியே பறந்தது. சட்டென்று நிகழ்ந்ததில் பூங்குழலி சிறு அதிர்வுடன், மாறவர்மசிம்மனின் கையைப் பற்றினாள். அவன் கண்ணசைவில் அவளுக்கு தைரியம் கூறி, உள்ளே அழைத்துச் சென்றான்.
நால்வரும் தங்கள் பையை ஓரமாக வைத்து விட்டு, கைவிளக்கின் உதவியுடன் தேட ஆரம்பித்தனர். மாறவர்மசிம்மன் மற்றும் பூங்குழலி கீழ் தளத்தை ஆராய, சுதிர் முதல் தளத்தையும், தயாளன் இரண்டாவது தளத்தையும் ஆராய்ந்தனர்.
சிறிது நேரம் தேடியவர்களுக்கு எதுவும் புலப்பட வில்லை.
மாறவர்மசிம்மன், “வெளியே இருந்து பார்த்த போது பெரிதாகத் தெரிந்தது. ஆனால் உள்ளே அறை சிறியதாக இருக்கிறது. நிச்சயம் உள்ளே ரகசிய அறை இருக்கிறது, தேவி” என்றான்.
இன்னும் தீவிரமாக அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தனர்.
இரண்டாவது தளம் சிறியதாக இருக்கவும், தனது தேடலை முடித்துக் கொண்டு முதல் தளத்திற்கு வந்த தயாளன், “மேலே எதுவும் இல்லை.” என்றான்.
சுதிர், “நல்லா பார்த்தியா?” என்று கேட்க,
“மேலே சின்ன அறை தான்.. ஐந்து முறை ஆராய்ந்து பார்த்துவிட்டேன்.. ஒன்றும் இல்லை” என்றபடி சுதிருடன் சேர்ந்து தேட ஆரம்பித்தான்.
கீழ் தளத்தில் ஓர் இடத்தில் கற்சுவரின் மேல் செதுக்கி இருந்த ஒரு போர் வீரனின் கண் சற்று வித்யாசமாக பூங்குழலிக்குத் தோன்றவும், அதன் மீது ஒற்றை விரலை வைத்து அழுத்தினாள். அடுத்த நொடி அருகில் சிறு அடைப்புப் பலகை போல், கல் இடது புறம் விலக, உள்ளே திறவுகோல் பொருத்துவது போல், ஒரு அமைப்பு இருந்தது.
அவள் விரலை எடுத்த படி, “மாறா” என்று அழைக்க, அந்த அடைப்புப் பலகை போன்ற கல் மூடிக் கொண்டது.
“என்ன தேவி?” என்று கேட்டபடி அவள் அருகே மாறவர்மசிம்மன் வரவும், மீண்டும் வீரனின் கண்ணை அழுத்தினாள்.