புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 23.2

உடனே முடியாது  தேவி.. சில ஏற்பாடுகளைச் செய்ய   வேண்டும்.. அலுவல்  வேலைகள் சம்பந்தமாகவும், பிறகு நம் பயணத்திற்குத் தேவையானதையும் தான்”

நம் பயணத்திற்குத் தேவையானதா?

ஹ்ம்ம்.. நாம் செல்லப் போகும் இடம் மலைக் காடு.. அங்கே எதிர்பாராத விதத்தில் ஏதேனும் சர்ப்பம் நம்மைத் தீண்டினாலோ, விஷப்பூச்சிகள் கடித்தாலோ உடனடியாக கொடுக்கும் முறிமருந்து(antidote) தேவை.. அனைத்து வித சூழ்நிலைகளையும் சமாளிக்க, நாம் தயார் ஆனதும் கிளம்பலாம்.. அதிகபட்சம் ஒரு வாரம்.”

கோட்டையை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?

மலைகாட்டு அடிவாரத்திற்கு வண்டியில் சென்று விடலாம்.. அதன் பிறகு நடக்கத் தான் வேண்டும்.. உன்னால் முடியுமா?

முடியும்.. என்.சி.சி மற்றும் ஐபிஎஸ் பயிற்சி இருக்கிறதே!”

அப்படியானால் மலைகாட்டு அடிவாரத்தில் இருந்து அதிகபட்சம் ஒருமணி நேர நடையில், நாம் அட்டாணியை அடைந்து விடலாம்.”

அப்போ அதி காலையில் கிளம்பினால் மதியத்திற்குள் திரும்பி விடலாம்.”

ஹ்ம்ம்.. எந்தவித இடையூறும் நேரவில்லை என்றால், மதியத்திற்குள் திரும்பி விடலாம்.”

சரி ஏற்பாடுகளைச் செய்ததும், சொல்லுங்க.”

இரண்டு நாட்கள் கழித்து காலையில் அலுவலகத்திற்கு மகிழுந்தில் சென்று கொண்டிருந்த பொழுது, மாறவர்மசிம்மன், “சுதிர், உனக்குத் தெரிந்த நம்பிக்கையான ஓட்டுநர் யாரேனும் இருக்கிறார்களா? என்று கேட்டான்.

அவன், “இருக்கிறார்கள், ராஜா. எந்த மாதிரி வேலை என்று தெரிந்தால், அதற்கு ஏற்ப ஆளைச் சொல்ல முடியும், ராஜா.” என்றான்.

பொக்கிஷத் தேடல் சம்பந்தமாகத் தான். நாம் பழைய கோட்டை இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.. மற்றவர்கள் அறியாமல் செல்ல வேண்டும் என்றால், நாம் நேரிடையாகச் செல்ல முடியாது..

ஆகையால் இந்த வண்டியில் சென்னை செல்வதாக போக்குக் காட்டி, வேறு வண்டியில் பழைய கோட்டை நோக்கிச் செல்ல வேண்டும்.. மற்றவர்களிடம் சென்னையில் ராணியை வளர்த்த ஐயாவை பார்க்கப் போறதாகச் சொல்ல வேண்டும்.. ஆனால், உன் ஆள் மதுரை வரை சென்றால் போதுமானது.. திடீரென்று  ஐயா முக்கிய வேலையாக வெளியூர்  சென்று  விட்டதால் நமது பயணத்தை ரத்து செய்து திரும்பி  விடுவதாகக் காட்ட வேண்டும்.. அதிகாலை நான்கு மணிக்கு நம் பயணத்தை தொடங்க வேண்டும்..

நமது பயண நாளிற்கு முன் தினமே தயா அலுவல் வேலை சம்பந்தமாக வெளியூர் சென்றுவிட வேண்டும்.. அடுத்த நாள், நாம் மூவரும் அதாவது நான், ராணி மற்றும் நீ இந்த வண்டியில் சென்னை நோக்கிக் கிளம்ப வேண்டும்.. காளி கோவில் அருகே தயாவும் உனது ஆளும், இரண்டு இருசக்கர வண்டியில் காத்திருக்கணும்..

நாம் அங்கே சென்றதும் உனது ஆள் இந்த வண்டியை எடுத்துக் கொண்டு சென்னை நோக்கிச் செல்ல, நாம் நால்வரும் இரண்டு இரு சக்கர வண்டியில் பழைய கோட்டையை நோக்கி பயணத்தைத் தொடங்க வேண்டும்.. உன் ஆள் திரும்பி வரும் போது, சிவகிரி வந்ததும் ஆள் அரவமற்ற இடத்திலோ, ஊருக்குள் சென்றோ, உனது அழைப்பிற்காக காத்திருக்க வேண்டும்.. நாம் மலை இறங்கியதும், நீ அவனை கைபேசியில் அழைத்து, நமது அடுத்தக்கட்ட திட்டத்திற்கு ஏற்ப, அவனை செயல்படக் கூற வேண்டும்..

இன்னொரு முக்கியமான விஷயம்.. நாம் நால்வருமே சட்டென்று கண்டறிய முடியாதபடி, மாறு வேடத்தில் தான் இருக்க வேண்டும்.”

எனது சிறிய தந்தையின் மகன், இதற்குச் சரியாக இருப்பான். அவன் பார்க்கவும் என்னைப் போல் தான் இருப்பான்.. வண்டியின் கண்ணாடியை இறக்காமல் சென்றாலும், சுங்கச் சாவடியில் கண்ணாடியை இறக்க நேரிடலாம்.. அவன் பார்க்க என்னை போல் இருப்பதால் யாரேனும் பார்த்தாலும் சந்தேகம் வராது.. அவனுக்கு உங்கள் மேல் தனி பக்தியே உண்டு.. அதனால் உங்களுக்காக இந்த வேலையை மகிழ்ச்சியோடு செய்வதோடு, விஷயத்தை வெளியே கிஞ்சிதமும் கசிய விடமாட்டான்”

நல்லது.. அவனையே ஏற்பாடு செய்துவிடு.. மூன்று நாட்கள் கழித்துக் கிளம்பலாம். நம் பயணத்திற்குத் தோதுவான இரண்டு இரு சக்கர வண்டியையும் ஏற்பாடு செய்து விடு.” என்றவன், தயாளனைப் பார்த்து, “உன் வீட்டில் நீ அலுவல் வேலையாக வெளியூர் செல்வதாகவே இருக்கட்டும்.” என்றான்.

சரி சார்” என்ற தயாளன், “ஆசிரம ஐயாவிடம் விஷயத்தைச் சொல்ல வேண்டுமே!” என்றான்.

அவரிடம் நான் பேசிவிட்டேன்.. பொக்கிஷம் பற்றிய விவரத்தை கூறாமல் உதவியாகக்  கேட்டேன்.. ராணிக்காக அவரும் சரி என்று கூறி  விட்டார். பொக்கிஷத் தேடலை முடித்த பிறகு, நிஜமாகவே சென்னை சென்று வரும் படி இருக்கும்.. ஐயா அழைத்து இருக்கிறார்.”

சரி சார்.. வந்ததும் ஏற்பாடு செய்து விடலாம்.”

மூன்று நாட்கள் கழித்து அதிகாலை நான்கு மணியில் பொக்கிஷத் தேடல் பயணத்தை தொடங்கினர். மாறவர்மசிம்மனின் திட்டப்படியே செயல் பட்டனர்.

பூங்குழலி சட்டை மற்றும் காற்சட்டை அணிந்து, அதற்கு மேல் புடவையைக் கட்டி இருந்தாள். மகிழுந்து கிளம்பியதும் காதணி, வளையல், கழுத்துச் சங்கலி அனைத்தையும் கழட்டியவள், நெற்றிப் பொட்டையும் எடுத்துவிட்டு, தலை முடியைக் கொண்டையிட்டு, ஆண் போல் காட்சி அளிக்கும் விதத்தில், தலையில் பொய் முடியைச் சூடினாள்.

மாறவர்மசிம்மனும் சட்டென்று அடையாளம் காண முடியாத வகையில் சற்று நீளமான பொய் முடியையும், ஒட்டுத் தாடியையும் வைத்துக் கொண்டு மலை ஏறுவதற்கான புதைமிதியை(Boots) அணிந்தான்.

காளி கோவில் அருகே ஆள் அரவமற்ற இடத்தில் வண்டியை நிறுத்திய சுதிர், அணிந்து இருந்த பொய் முடியையும், கிடா மீசையையும் எடுத்தான். பின் அவனும் புதைமிதியை அணிந்து கொண்டான்.

மாறவர்மசிம்மன் சிறு அதிர்ச்சியுடன், “சுதிர்!” என்று அழைக்க,

அவனோ மென்னகையுடன், “மொட்டையில், அதுவும் கிடா மீசை இல்லாமல் என்னைப் பார்க்க எனக்கே சட்டென்று அடையாளம் தெரியலை.. முடி தானே! வளர்ந்து விடும் ராஜா.” என்றான்.

இவர்களுக்காக தயாளனும் சுதிரின் தம்பியும் காத்திருந்தனர். தயாளன் பழுப்பு நிறத்தில் பொய் முடியையும் மீசையையும் அணிந்து இருந்தான்.

சுதிர் கூறியது போல் அவனது தம்பி பார்க்க அவனைப் போலவே தான் இருந்தான். அவன் ஆர்வத்துடன் மாறவர்மசிம்மனை நோக்க, மாறவர்மசிம்மன் மென்னகையுடன் அவனுடன் கை குலுக்கி, புஜத்தில் தட்டியபடி, “கவனம்” என்றான்.

பரவச நிலைக்குச் சென்றவன், சுதிரை பார்த்து, “அண்ணா! ராஜா எனக்கு கை கொடுத்து, என்னிடம் பேசினார்.” என்றான்.

மற்ற மூவரும், அவனைப் பார்த்து புன்னகைத்தனர்.

ஆண்கள் மகிழுந்தில் இருந்து இறங்கியதும் கட்டி இருந்த புடவையை கழட்டி, தனது புதைமிதியை அணிந்து கொண்டு, பூங்குழலி கீழே இறங்கினாள்.

அவளை பார்த்த சுதிரின் தம்பி, அவனின் காதில், “யாருனா இது? சேட்டு பையன் மாதிரி இருக்குது” என்றான்.

ராணியை வர்ணிப்பதா!’ என்ற எண்ணத்தில் சுதிர் அவனை முறைக்க, மாறவர்மசிம்மன், “சுதிர்” என்று அழைத்தான்.

சட்டென்று தனது தவறை புரிந்துக் கொண்ட சுதிர் இயல்பிற்கு திரும்பி, “கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லித் தானே, உன்னை வரச் சொன்னேன்!” என்றான்.

அவனும், “ஆமா.. ஆமா.. நான் வாயே திறக்கலை.. மன்னிச்சுருங்க, ராஜா.” என்றான்.

மாறவர்மசிம்மன் தலை அசைக்கவும், சுதிரும் தயாளனும் மலையேற்றத்திற்கு தோதுவான நான்கு பைகளை மகிழுந்தில் இருந்து இரு சக்கர வண்டிகளில் கட்டினர். சுதிரைத் தவிர மற்ற மூவரும் தலையில் தொப்பி அணிந்து கொண்டனர்.

அதன் பின் சுதிரின் தம்பி மகிழுந்தை சென்னை நோக்கிக் கிளப்ப, இவர்கள்  நால்வரும் இருசக்கர வண்டியில் கிளம்பினர். ஒரு வண்டியை சுதிர் ஓட்ட, மற்றொரு வண்டியை மாறவர்மசிம்மன் ஓட்டினான்.

புதையல் வேட்டை தொடங்கியது…………….

குழலின் இசை தொடரும்…

error: Content is protected !!